Wednesday, February 24, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 79 தோதாத்ரிநாதன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 79 🌹🌹🌹


எல்லாத் திருக்கோவிலிலும் ஒரு சுயம்பு மூர்த்தியைத் தான் நாம் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு 11 சுயம்பு மூர்த்திகள் காட்சி தந்து அருள்கிறார்கள்.

இத்தகைய அற்புதமான திருக்கோலத்தை இங்கு மட்டுமே நாம் தரிசிக்க முடியும். தரிசிக்க செல்லலாமா?

அருள்மிகு தோதாத்ரிநாதன் திருக்கோவில்:-
திருவரமங்கை (என்ற) வானமாமலை
மூலவர்: தோதாத்ரிநாதன்
தாயார்: ஸ்ரீவரமங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி
உற்சவர்: தெய்வநாயகன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: நந்தவர்தன விமானம்
தீர்த்தம்: இந்திர, சேற்றுத்தாமரை தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்

நாமாவளி: ஸ்ரீ ஸ்ரீவரமங்கை நாச்சியார் ஸமேத ஸ்ரீ தோதாத்ரி தெய்வநாயாகாய

ஊர்: நாங்குநேரி, வானமாமலை

🌺🌺 நாங்குநேரி :-

திவ்ய நாத மூர்த்தியாம் திருமால், தனது திருமார்பில் திருமகள் தாயாருக்காக இடமளித்தார். அத்தகைய மகத்தான வரம் பெற்ற அன்னை, திருவரமங்கை என்ற திருநாமத்தில் இத்தலத்தில் குடிகொண்டுள்ளார்.

தாயாரின் திருநாமத்திலேயே இத்தலம் "திருவரமங்கை" என பெயர் பெற்று விளங்குகிறது.

இத்தலத்திற்கு வானமாமலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அக்காலத்தில் இவ்விடம் வனங்களும், மலைகளும், சூழ்ந்த பகுதியாக இருந்ததனால் "வானமாமலை" எனப் பெயர் பெற்று அதுவே பிற்காலத்தில் வானமாமலை என்ற ஆனதாகக் கூறப்படுகிறது.

மேலும், இவ்வூருக்கு நாங்குநேரி என்ற பெயரும் உண்டு. அக்காலத்தில் இவ்வூரைச் சுற்றிலும், நான்கு ஏரிகள் இருந்ததாகவும், அதனால் "நான்கு ஏரி"எனப்பெயர் பெற்று அதுவே பிற்காலத்தில் "நாங்குநேரி" என்று ஆனதாகக் கூறப்படுகிறது.

🌺🌺 தலவரலாறு :-

கிருதயுகத்தில் தட்ச பிரஜாபதி என்பவருக்கு கதறு, வினதை என்று பெயர் கொண்ட இரண்டு மகள்கள் இருந்தனர். இவ்விருவரையும் கஸ்யப முனிவர் மணந்து கொண்டார்.

ஒருநாள் கஸ்யபர் தனது சிருஸ்டியால் பிள்ளை வரம் கொடுக்க வந்த போது உங்களுக்கு எத்தகைய பிள்ளைகள் வேண்டும் என்று கேட்டார்.

ஆனால் ஒரு நிபந்தனை, முட்டையிட்டு தான் குஞ்சு பொரிக்க வேண்டும் என்றார். அதற்கு கதறு, ஏராளமான பிள்ளைகள் வேண்டும் என்றாள்.

உடனே பாம்புகள் பிள்ளையாக பிறக்கும்படி வரமளித்தார். அவ்வாறு ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்கோடகன் போன்ற ஏராளமான பாம்புகளைப் பெற்றாள்.

பின்பு வினதையிடம் கேட்ட போது, விவேகமுள்ள பிள்ளைகள் இரண்டு இருந்தால் போதும் என்றாள். உடனே இரண்டு முட்டைகளை தருகிறார். பேர் சொல்லும் பிள்ளையாக பிறப்பார்கள், ஆனால் முட்டை பொரிக்கும் வரை அமைதி காக்க வேண்டும் என்று கூறி சென்றார்.

500 ஆண்டுகள் காத்திருந்தும் முட்டை பொரியவில்லை. பொறுமையை ஒழந்த வினதை அவசரத்தில் ஒரு முட்டையை உடைத்தாள். பலவந்தமாக பிரசவித்த பிள்ளை, கால் ஊனமான நிலையில் வந்தது.

உடனே அப்பிள்ளை "அவசரத்தில் என்னை ஈன்று என்னை குறைமகன் ஆக்கியதால் நீ அடிமையாக வாழக் கடவது", என்று சபித்தது.

பிள்ளையைப் பார்க்கும் ஆவலில், தாய்மை உணர்வின் காரணமாகவே இவ்வாறு செய்ததாக கூறி கதறி அழுதாள். அப்போது உண்மையை உணர்ந்த அப்பிள்ளை இரண்டாவது முட்டை பொரியும் வரை பொறுத்திருக்கும்படி வேண்டியது.

மேலும், அப்பிள்ளை அடிமைத் தலையில் இருந்து விடுவிக்கும் என்று சாப விமோசனம் அளித்தது. ஊனமுள்ள அப்பிள்ளைக்கு அருணன் என்று பெயர் வைத்தனர். அவன் ஊனமானவன் ஆயினும், வலிமையுள்ளவன் என்பதால் சூரிய பகவானின் தேர் ஓட்டுகின்ற சாரதியாக பிரம்மா நியமித்தார். இந்த அருணனே சூரிய பகவானின் சாரதி ஆவார். இதன் காரணமாகவே இன்றும் சூரிய உதயத்திற்கு பிறகு அருணோதயம் வருகிறது என்பர்.

அடுத்த முட்டை பொரிக்க அதிலிருந்து கருடன் உதித்தான். அத்தகைய மகத்துவம் வாய்ந்த வலிமை பொருந்திய கருடனையே திருமால் தனது வாகனமாகக் கொண்டுள்ளார்.

இறைவனுக்கு வாகனமாகும் பாக்கியத்தை இத்தலத்தில் தான் கருடன் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

🌺🌺 ஒன்பது பேர் காட்சி:-

ஒவ்வொரு தலத்திலும் ஒரு மூலவமூர்த்தி மட்டுமே இருப்பார். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் தோதாத்ரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேர்கள் காட்சி தருகின்றனர்.

🌺🌺 சிறப்புகள்:-

மூலவர் தோதாத்ரிநாதன், ஸ்ரீ தேவி, பூமிதேவி, சூரியன், சந்திரன், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை என ஒன்பது பேர்களுடன் காட்சி தரும் திருத்தலம்.

திருமகள் பிராட்டி வரமங்கை தாயார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் அற்புதத் திவ்யதேசம்.

நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.

🌺🌺 11 சுயம்பு மூர்த்திகள்:-

ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் மூலஸ்தானத்திலுள்ள ஒன்பது பேரும், அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 பேரும் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.

பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோவில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசனம் பண்ணலாம்.

ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும். இந்த எண்ணெயை ஒரு கிணற்றில் ஊற்றி வைப்பார்கள். தோல்வியாதி உள்ளவர்கள், இந்த எண்ணெயை உடலில் தேய்த்து, சில சொட்டுகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

🌺🌺 திருப்பதியில் இருந்து வந்த தாயார்:-

இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் இருந்து தான் வந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீ வரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் தாயார் தோன்றி, "இவள் நாங்குநேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள்", எனக் கூறியதால் இத்தலத்திற்கு வந்துவிட்டாள் தாயார்.

மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது.

🌺🌺 மங்களாசாசனம்:-

நம்மாழ்வார் 11 பாசுரங்கள் இத்தல பெருமாளை பாடியருளியுள்ளார்.

"ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
என்றும் என்னையாளுடை வான
நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம்
பொழில் தண்சீரிவர
மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே
அடியேன் தொழ வந்தருளே!!!"

🌺🌺 வழித்தடம் :-

திருநெல்வேலியிருந்து திருக்குறுங்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன.

அருள்மிகு தெய்வநாயகன் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு வரமங்கை தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

நாளைய பதிவு முதல் நவதிருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது நவகிரகங்களுக்குரிய திருத்தலங்களில், முதலாவதான திருத்தலம் அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோவில் - திரு ஸ்ரீவைகுண்டம் திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment