Sunday, February 21, 2021

பதார்த்தங்கள்

 நேற்று ஒரு திருமணத்தில் கலந்து கொண்டேன். வாழை இலை போட்ட சாப்பாடு. பல வண்ணங்களில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டு, பரிமாற்றப்பட்ட சாப்பாடு. இறுதியில், சாதமும், தயிரும் பரிமாறப்பட்டது. அப்பொழுதுதான் கவனித்தேன். என் அருகில் இருந்தவர் சாதத்தையும், தயிரையும் பிசைந்து கொண்டே, பரிமாறுபவரிடம் இரண்டு அப்பளம் கேட்டார். அப்படி வந்த அப்பளத்தை நொறுக்கி, தயிர் சாதத்தில் கலந்து உண்ண ஆரம்பித்தார்!

திருமண சமயல்காரர்களில் சிலர், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் இவைகளில் அப்பளத்தைப் பொரித்துப்போட்டு பார்த்திருக்கிறேன். ஆனல், இந்த தயிர் சாதம்+அப்பளம் காம்பினேஷன் புதுமையாக இருந்தது. 

ஆந்திரா குண்டூர், விஜயவாடா மக்கள், மாம்பழ சீசனில் இரண்டு கிலோ வெயிட் உள்ள ஒரு மாம்பழத்துடன் ஹோட்டல் சாப்பாட்டிற்கு விழைவார்கள். கெட்டிக் தயிரை சாதத்தில் கொட்டி, பிசைந்து,  மாம்பழத்தை ஒரு கடி கடித்து, ஒரு பிடி தயிர் சாதத்தை வாயில் தள்ளி, மிக்ஸ்ஸிங் வாயிலேயே செய்து, மிக்ஸ்ஸிங் நேரத்தை மிச்சப்படுத்துவார்கள். ஆந்திராவிற்கு மேலே சென்று விட்டால், தயிருக்கும், சாவலுக்கும் (சாதம்) டைவர்ஸ் ஆகிவிடும். No connection at all. மேலும், ஹோட்டலில் வைக்கும் தயிரில் சர்க்கரையை சேர்த்து, இன்ஸ்டன்ட் லசியாக மாற்றி, ஸ்பூனில் எடுத்து ருசிப்பார்கள்.

என் நண்பன் இரண்டு, மூன்று இட்லிகளை மிளகாய் பொடி, சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டு விட்டு, கடைசி இட்லியை தயிரில் தோய்த்து உண்பான். இது ஒரு காம்பினேஷன். மி.பொடியின் மேல் ஜீனி சக்கரையைத் தூவி, இரு துருவங்களுக்கும் வெள்ளை இட்லி  சமாதானப் புறா விடுபவர்களும் உண்டு. சென்னையின் சிறப்பு : இட்லி, வடகறி . இதுவரை அந்த .ரிஸ்கை நான் எடுத்ததில்லை. மேலும், இப்பொழுது சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இந்த  ஐட்டம் மிஸ்ஸிங்.

இட்லியைப் பொருத்தமட்டில், அதற்கான ஸைட்டிஷ் பலப்பல. என்னைப் பொருத்தவரை முதலில் நிற்பது மிளாகாய்ப் பொடி பிளஸ் நல்லெண்ணை காம்பினேஷன். அதுவும் காரம் சிறிது தூக்கலாக இருக்க வேண்டும். மி. பொடியை நல்லெண்ணையில் போட்டு குழப்பி, அந்த குழம்பல்?   கெட்டியாகவும் இல்லாமலும், அதே சமயம் எண்ணை அதிகம் வழியாமலும் இருக்க வேண்டும். இட்லியை விண்டு, அந்தக் குழம்பலில் சிறிது அழுத்தி தோய்த்து, இட்லித் துண்டு எண்ணையை உறிஞ்வதற்கு சிறிது அவகாசம் அளித்தால், உள்ளே எண்ணையை உட்கொண்டு, வெளியே சிவப்பு மி. பொடி கண் சிமிட்ட, வாயில் இட்டால், ஆகா!  ஆகா !    இதற்கு இட்லி மொழுக்கென்று இருக்கக் கூடாது. மேலே,  பொரு, பொரு வென்று இருக்க வேண்டும்.  அப்பொழுதான் இட்லி எண்ணையை ஸ்பான்ச் போல் உறிஞ்சும்.அடுத்த என் சாய்ஸ் சாம்பார் தான்., கும்பகோணம் கொத்சு, கடப்பா கிடைக்காதபட்சத்தில் . மூன்றாவகத்தான்  தேங்காய் சட்னியைச் சொல்வேன். அதுவும், பச்சை மிளகாய் காரம் கூடுதலாக, ஆனால் தண்ணீராக இருக்க வேண்டும். கும்பகோணம் காஃபி கிளப்களில், இட்லிக்கு தண்ணி சட்னி, தோசைக்கு கெட்டி சட்னி .

தோசையைப் பொருத்தமட்டில், முறுவல் (கும்மோணம் பாஷையில் முருகல்) தோசை தான் என் சாய்ஸ். அதற்கு உகந்தது சாம்பார். முறுகின வில்லல் ஒன்றை எடுத்து, சாம்பாரில், முழுவதையும் முக்காமல், மேலோடு சாம்பாரை ஒத்தி எடுத்து, வாயில் இட்டால், மொறுமொறுப்பு குறையால், சாம்பார், அதுவும் சின்ன வெங்காய சாம்பாராக இருந்து விட்டால், வெங்காய மணமும், பருப்பின் சுவையும் சேர்ந்து, வாயில் கரையும் போது, நம்மை மெய் மறக்கக் செய்யும். எங்கள் ஊரில், நிறைய நபர்கள் சட்னியுடன், சாம்பாரையும் சேர்த்து இந்த முறுவல் தோசையைச் சாப்பிடுவதும் உண்டு.

ஆந்திராவில் தோசையை அட்டு என்று அழைப்பார்கள். முதல் முதல் ஆந்திராவில் ஹோட்டல் நுழைபவர்கள் ஜாக்கிரதையாக தோசை ஆர்டர் செய்ய வேண்டும். இங்கு அட்டு வேறு, ரோஸ்ட் வேறு. அட்டு என்று நீங்கள் கேட்டால், நம்ம ஊரு பிளைன் தோசை/சாதா தோசை இரண்டாக மடிக்கப்பட்டு வரும். ஆனால், தோசையை, அதாவது அட்டுவை ஓபன் செய்தால் ஒரு அங்குலத்திற்கு உள்ளே அரைத்த வரமிளாகாயை உட்பக்கம் முழுவதும் கனமான கோட்டிங் செய்து வைத்திருப்பார்கள். காரத்தைக் கண்டு காத தூரம் ஓடுபவர்கள் இது தெரியாமல், விண்டு போட்டீர்கள் என்றால், விண்ணுக்கும், மண்ணுக்கும் குதிக்க வேண்டியதுதான். இங்கு முக்கியமான விஷயம் ஒன்று சொல்ல வேண்டும். ரோஸ்ட் / முருவல் வேறு, பேப்பர் ரோஸ்ட் வேறு. விவரம் தெரிந்த தோசை பிரியர்களிடம் விவரமாகத் தெரிந்து கொள்ளவும்.

தோசையில் பல வகைகள் இருந்தாலும் முருகலுக்கு அடுத்தபடி, ரவா தோசைதான். 

அவள்,  ஆயிரம் கண்ணுடையாள்,அருமையான சுவை கொடுப்பாள், மெல்லியத்தோலுடையாள், தொண்டைக்கு இதமளிப்பாள். 

எதனுடனும் கலந்திடுவாள், ஏற்றமிகு உணவாவாள்.

எண்ணத் தேவையில்லை, தின்னச் சுவை குறையவில்லை. 

அடுத்து .....

"ஹலோ அங்க என்ன செல்லை நோண்டின்டு? வாங்க, வந்து டிபனை சாப்பிட்டுப் போங்க. நிறைய வேலை இருக்கு.  உங்க பேவரிட் இட்லி, கொத்சு இன்னக்கி, " எப்பப் பார்த்தாலும், செல்லுவும், கையுமா.

செல்லமாக, என் மனைவி தான் அடுப்பங்கரையிலிருந்து. 

இன்னும் பொங்கல், பூரி, வடை, சப்பாத்தி, பரோட்டா குருமா எவ்வளவு ஐட்டம் பத்தி எழுதலாம்னா, ஸாரி, ஹோம் மினிஸ்டர் ஆர்டர் மீற முடியாது. , இன்னொரு சமயம் பேசுவமா ? BYE

P.S.ரவா தோசை கவிதை (?) எவரிடமிருந்தும் சுட்டதில்லை; நானே வார்த்தது.

No comments:

Post a Comment