ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் பகுதி 9
(By Venkatesan Varadharajan 6381369319)
ஶ்ரீகூர்மம்
இத்தலம் அமைய காரணம். ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணுப்ரியா திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். அதற்கு அவனது மனைவி தான் விரதம் என்று தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே! விரத பங்கம் ஒரு பக்கம்; பதி விருப்பத்தை நிறைவேற்றாத பாவம் ஒரு பக்கம். என்ன செய்வது? ‘மாதவா நீயே கதி’ என்று திருமாலை மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள். அப்போது திடீரென தம்பதியிடையே ஒரு நதி பிரவாகமாக ஓடியது.
அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், ‘‘மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்’’ என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாயிற்று. அத்தலம் ஸ்வேதபுரம் ஸ்ரீகூர்மம் எனப் பெயர் பெற்றது.
ஸ்வேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் கூர்மநாயகித் தாயாருடன் கூர்மநாதராக அருள்புரிகிறார். திருமுகத்தில் திருநாமம் வெள்ளித் தகட்டிலும் விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்று அதிரூப லாவண்யத்தோடு தரிசனமளிக்கிறார். பஞ்சலிங்க ஆத்மஸ்தலம் எனும் பெயரையும் இத்தலம் பெற்றது குறிப்பிடத்தக்கது
விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாகுளத்தை அடைந்து, அங்கிருந்து நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முதலில் இயற்கையாக, படிவுப்பாறையான, ஒரு ஆமையினையே விக்கிரகமாகக் கொண்டு வழிபட்டனர். பிரம்மா, கோபால யந்திரத்தைப் பதித்து, அவ்விக்கிரகத்தை ஸ்தாபித்ததாக உள்ளது. அதாவது, இது மந்திர-தந்திர-யந்திர வழிபாடு நடந்ததைக் காட்டுகிறது. இப்பகுதிகளில் ஆரம்பகால நூற்றாண்டுகளில் ஜைன-பௌத்தர்களின் ஆதிக்கம். இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் இருந்து வந்துள்ளது. சிவனை வழிபட்டவர்கள், இதனை குமரேஸ்வரர் என்றழைத்தனர்.
திருப்பதியில் மாயனின் மாயலீலைகள் புரிந்து நிலை நாட்டிய இராமானுஜரின் இத்தலத்து லீலைகளை பார்ப்போமா?
No comments:
Post a Comment