Wednesday, February 24, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 75 அனந்த பத்மநாபன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 75 🌹🌹🌹

கோவிலின் கர்ப்பக்கிரகத்தில், உலகாளும் பரந்தாமன் மகாவிஷ்ணு அனந்தன் அல்லது ஆதிசேஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் அற்புதத் திவ்யதேசம்!!!

முகம் தனியாகவும், உடல் தனியாகவும், திருவடி தனியாகவும் என மூன்று வாயில்கள் வழியாக இறைவன் காட்சி கொடுக்கும் அற்புதமான திவ்யதேசம்!!!

அந்த அனந்தபத்மநாபன் அருளைப் பெற்று மகிழ்ந்திட வாருங்கள், பரந்தாமனைக் கண்குளிர நாமும் தரிசிக்கலாம்.

அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோவில் :-
திருவனந்தபுரம்.
மூலவர்: அனந்தபத்மநாபன்
தாயார்: ஸ்ரீ ஹரி லக்ஷ்மி
உற்சவர்: அனந்தபத்மநாபன்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: ஹேமகூட விமானம்
தீர்த்தம்: மத்ஸ்ய, பத்மா, வரஹா தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ ஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அனந்தபத்மநாபாய நமஹ
ஊர்: திருவனந்தபுரம்

🌺🌺 தலவரலாறு:-

வில்வமங்களத்து சுவாமிகள் என்பவர், பரமபதநாதனான நாராயணனை, தினமும் மனம் குளிர வழிபாடு செய்து வந்தார். ஆயினும் அவரது இயல்புகளில் தவறு இருப்பதைக் கண்ட திருமால், அதை அவருக்கு உணர்த்த வேண்டும் என எண்ணினார்.

ஒருநாள் சிறுவன் போல் வடிவம் கொண்டு சுவாமிகளின் வழிபாட்டில் இடையூறு செய்தார். சுவாமிகளின் மீது ஏறி விளையாடுவதும், அர்ச்சனைக்குரிய பொருட்களை நாசம் செய்வதும், பாத்திரங்களில் சிறுநீர் கழிப்பதும் என கோகுலத்தில் மாயக்கண்ணனாக தான் செய்த லீலைகளையெல்லாம் செய்தார்.

ஒருநாள் கண்ணனின் லீலைகளை சகிக்க முடியாத சுவாமிகள் கோபத்தில், "உண்ணீ (சின்னக் கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு" எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார்.

அப்போது சிறுவனாக வந்த இறைவன் "பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை, அது உங்களிடம் உள்ளதா?" என்பதை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் பக்குவப்பட்ட பின்பு அனந்தன் காடு சென்று இறைவனைக் காணுங்கள் என்று கூறி மறைந்தார்.

திகைத்துப் போன சுவாமிகள், வந்தவர் சிறுவன் அல்ல, பரமபத நாதனான அந்த பரந்தாமனே!! என்பதை உணர்ந்தார்.

தன் தவறை உணர்ந்த சுவாமிகள் அனந்தன் காடு எங்கே உள்ளது என்பதைத் தேடி அலைந்தார். பலநாள் திரிந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயினும் பகவானைக் காணும் ஆவலில் பல நாள் அலைந்து, பசி தாகம் எல்லாவற்றையும் கடந்து முன்னேறினார்.

ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு இலுப்பை மரத்தின் நிலலில் அமர்ந்தார். "இறைவனைக் காணும் நிலைக்கு தான் இன்னும் பக்குவப்படவில்லையோ!!" என வருந்தினார்.

இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ??? அதற்கு நம்மிடம் சக்தி இல்லையே எனக் கருதி உயிர் விடத் துணிந்தார். உடனே அவர் பக்திக்கு மனமிறங்கினார் அந்த பரந்தாமனாகிய மாதவன்.

இலுப்பை மரமே இறைவனாக சர்ப்பத்தின் மீது அனந்த சயனத் திருக்கோலத்தில் மிக பிரம்மாண்டமான திருமேனியாகக் காட்சி தந்து அருளினார்.

பிரம்மாண்டமானத் திருமேனியாகக் காட்சி தந்ததால், பரந்தாமனின் முழுமையான திருமேனி இந்த வில்வமங்கலத்து சுவாமிகளின் கண்ணுக்குப் புலப்படவில்லை.

ஆதலால் முகம் தனியாகவும், உடல் தனியாகவும், திருவடியை தனியாகவும் சேவித்து ஆனந்தம் கொண்டார் முனிவர். இவ்வாறே மூன்று வாயில்கள் வழியாகவே இன்றளவும் காட்சி தந்து அருள்கிறார் இந்த அனந்தபத்மநாபன் பெருமாள்.

🌺🌺 ஆலயம் கண்ட அனந்தன்:-

பாம்புப் படுக்கையின் மீது பரந்தாமன் பள்ளி கொண்டிருப்பதைக் கண்ட பக்தரான வில்வமங்களத்து சுவாமிகள் பேரானந்தத்துடன் வணங்கினார். பின்னர் திருவிதாங்கூர் மன்னர் சேரமானுக்குத் தகவல் தெரிவித்தார்.

மன்னர் எட்டு மடங்களில் உள்ள பிராமணர்களை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டிற்கு வந்து வழிபட்டார். அவ்விடத்தில் மரத்தால் ஆன மூர்த்திக்கு கோயில் அமைக்க ஏற்பாடு செய்தார்.

அங்கு அனந்தன் என்ற காட்டில் ஆனந்த சயனக் கோலத்தில் காட்சி தந்த பரந்தாமன் என்பதால் இத்தல இறைவனுக்கு "அனந்த பத்மநாபன் சுவாமி" என்பது திருநாமம்.

🌺🌺 சிவன் அடியார் சேரமான் நாயனார்:-

சிவன் அடியாரான, 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான் நாயனார் முதன் முதலில் இத்திருக்கோவிலை அமைத்து, வழிபாட்டு முறைகளுக்கும், திருவிழாக்களுக்கும், ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாக ஓலைச்சுவடிகள் மூலம் அறிய முடிகிறது.

இறைவனின் திருமார்பில் இடம் கொண்ட திருமகள் தாயாருக்கு இத்தலத்தில் ஸ்ரீ ஹரி லட்சுமி என்பது திருநாமம்.

🌺🌺 மூலவர் தரிசனம்:-

கி.பி 1673 முதல் 1677 வரை இக்கோவில் வழிபாடின்றி அடைக்கப்பட்டிருந்தது. 1686 ஆம் ஆண்டு இக்கோவிலில் நடந்த தீ விபத்தில் மூலவிக்ரகம் உட்பட கோவிலின் பெரும்பகுதி பழுதுற்றது.

கி.பி 1729 ஆம் ஆண்டு ராஜாமார்த்தாண்ட வர்மாவினால் புதுப்பிக்கப்பட்டு 12000 சாளக்கிராமத்தினாலும், "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையினாலும் புதிதாக ஒரு மூலவர் திருமேனி நிறுவப்பட்டது. 18 அடி நீளத்தில், திருக்கரத்தால் சிவலிங்கத்தைத் தடவிய நிலையில் நாபியில் பிரம்மாவோடு மூன்று வாயில் வழியாகக் காட்சி தந்து அருள்கிறார். அன்று அமைக்கப்பட்ட அனந்த சயன மூர்த்தியையே நாம் இன்றளவிலும் வழிபட்டு வருகிறோம்.

🍁🍁 கோவில் அமைப்பு:-

🌺 பத்மநாபசாமி கோவிலின் கோபுரம் 100 அடி உயரத்துடன், ஏழு வரிசைகளைக் கொண்டுள்ளது.

🍀 இந்த கோவில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றி சிறிது மற்றும் பெரிதாக 9 கோட்டைகள் உள்ளன.

🌷 கோவிலின் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன.

🌼 கோவிலுக்குள் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில், 5 அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும், ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன.

🌸 இந்துக்கள் வழிபடுவதற்கு இக்கோவில் வளாகத்தில் மேலும் பல நடைகள் உள்ளன, குறிப்பாக ஸ்ரீ நரசிம்ஹர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீஐயப்பர், ஸ்ரீகணேஷர் மற்றும் ஸ்ரீஹனுமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதற்கான தனிப்பட்ட நடைகள் உள்ளன. மேலும், கோவிலைப் பாதுகாக்கும் க்ஷேத்திர பாலகர்களுக்கான நடை, விஸ்வக்சேனருக்கு என்று ஒரு நடை, மற்றும் கருடரை சேவிப்பதற்கும் நடைகள் உள்ளன.

🌺🌺 கோவில் கருவறை:-

🌷 கோவிலின் கர்ப்பக்கிரகத்தில், அய்யன் மகாவிஷ்ணு அனந்தன் அல்லது ஆதிசேஷன் என வணங்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது, ஈசனின் இடது கையில் தாமரை மலரின் இதமான நறுமணத்தை மிகவும் ஆனந்தமாக சுவாசிப்பது போல நமக்குத் தோன்றுகிறது. மகாவிஷ்ணுவின் இரு தேவிகளான ஸ்ரீதேவி மற்றும் மூதேவி அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்க, பிரம்மதேவன் மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை நாம் காணலாம்.

🌺🌺 கடுசர்க்கரை கலவை:-

ஆரம்பத்தில் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட மூலவிக்கிரகம் தீப்பிடித்தது என்று சொன்னேன் அல்லவா??? அதன் பின் "சுடுசர்க்கரை யோகம்" என்னும் கலவையால் உருவாக்கப்பட்டது. அது என்ன சுடுசர்க்கரை கலவை?? பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா!!!

12 ஆயிரம் சாளக்கிரம கற்களை (இறைவன் நாராயணனின் வடிவமான கல்) இனைத்து இச்சிலை உருவாக்கப்பட்டது.

இது ஒரு அபூர்வ சிலையாகும். அதையே நாம் இப்போது தரிசனம் செய்கிறோம். அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாப சுவாமி விக்ரகம் 18 அடி நீளம் உடையது. உடல் முழுவதும் தங்கத்தகட்டால் பொதியப்பட்டிருக்கிறது.

🌸 வாடிய மலர்களை நீக்குதல் :-

🌷 மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன, விக்ரகத்தின் மீது படிந்திருக்கும் காட்டு சர்க்கரை யோகத்தை அழிக்காமல் பாதுகாப்பதற்கே இவ்வாறு செய்கிறார்கள்.

🌷 கோவிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும். எனவே அதனை "ஒற்றைக்கல் மண்டபம்" என்றும் அழைப்பதுண்டு. இறைவரின் தரிசனம் கிடைப்பதற்கும் மற்றும் இறைவனை பூஜை செய்து வழிபடுவதற்கும், நாம் ஒற்றைக்கல் மண்டபத்தின் மீது ஏறவேண்டும்.

🌷 இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் வீற்றிருக்கும் இறைவனின் அடி பணிந்து வணங்கும் நமஸ்கரித்தல் என்ற முறைமைக்கான அதிகாரம் திருவாங்கூர் மகாராஜாவுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மகா விஷ்ணுவின் விக்ரகம் இந்த ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து அருள் பாலிப்பதால், இந்த கல்லின் மீது வந்து யார் இறைவனை நமஸ்கரித்து வணங்கினாலும், அல்லது அந்த மண்டபத்தில் வைத்த எந்த பொருளானாலும், இறைவனின் சொந்தமாகக் கருதப்படுகிறது.

🌺🌺 மங்களாசாசனம்:-

இத்தலத்தை நம்மாழ்வார் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்.

"கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே!!!"

- நம்மாழ்வார்.

🌺🌺 வழித்தடம்:-

திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

அருள்மிகு அனந்த பத்மநாபன் சுவாமி திருவடிகளே சரணம்.

அருள்மிகு ஸ்ரீ ஹரி லட்சுமி தாயார் திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில்:-

திருவெஃகா திவ்யதேசத்தைப் போலவே பெருமாள் மாறிக் கிடந்த திருக்கோலம் கொண்ட, அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் - திருவட்டாறு திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

"ஓம் நமோ நாராயணாய நம:!!!"

No comments:

Post a Comment