*`ஜாதகத்தினை அம்பாள் முன்வைத்து வழிபட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நிச்சயமாகும்
அதிசய பனைமலை ஆலயம் !'*
(பல இணையதள முகவரிகளில் படித்த தகவல்களை தொகுத்து நீண்ட பதிவாக இட்டுள்ளேன்.பொறுமையாக படிக்கவும்)
இந்த அதிசிய தலம் எங்கு உள்ளது,அதன் சிறப்புகள் என்ன? என்ற விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படி என்றால் இந்த அதிசிய தலம் நோக்கி நமது பயணத்தை தொடருவோம்!
அந்தத் தலம் பனைமலை என்றும் விழுப்புரம் - செஞ்சி சாலையில் உள்ளது என்றும் அது ஒரு மலைத்தலம். ஈசனின் லிங்கத்திருமேனி, குகைபோன்ற பாறை இடுக்குகளில் அருளும் அம்மன், பழைமை மாறாத ஆலயம் எனக்கேள்விபட்ட கணத்திலிருந்தே அவற்றை தரிசிக்கும் ஆர்வம் அதிகரித்தவண்ணம் இருந்தது.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்த பச்சை கம்பளி போன்ற வயல்வெளி. நெல்நடவு செய்யப்பட்டிருந்தது.
தூரத்தில் மலைத் தொடர் காட்சிகளும், அங்கிருந்து வீசும் குளிர்காற்றும் நம்மை வரவேற்கின்றன.
பனி பொழியும் காலமாக இருந்ததால், நடவுகளில் பனி ஒரு மகுடம் போல ஒட்டிக்கொண்டிருந்த காட்சி, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே நம்மைக் கொண்டு செல்கிறது. .
விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே உட்புறமாகச் செல்கிறது ஒரு சாலை.
அதில் சுமார் 9 கி.மீ கடந்து சென்றதும் பனைமலை மேல் உள்ள ஆலய தரிசனம் கிடைக்கிறது.
விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாக விளங்கும்சந்நிதி உள்ளது.
விநாயகரின் மகுடம், அங்குசம், பாசம் யாவும் சாய்வான மலையில் செதுக்கப்பட்டுள்ளதால் இவர் சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்றார்.
இந்த விநாயகர் தம் இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்துள்ள பாவனையில் திகழ்கிறார்.
அவரை வணங்கி வழிபட்டு, அருகிலிருக்கும் படிகளின் மீது ஏறத் தொடங்குவோம்.
பாறைகளைச் செதுக்கி படிகள் அமைத்துள்ளனர்.
மலையேறும் வழியில் ஆங்காங்கே சிறு சிறு சுனைகள்.
குன்றின் கிழக்கு திசையில் விவசாயநிலங்கள், வடகிழக்கு திசையில் பிரமாண்ட ஏரி.
அதன் பின்புலத்தில் மலைத் தொடர்கள் என இயற்கை அங்கு கண்ணுக்கு விருந்து படைக்கிறது.
இத்தகைய எழிலார்ந்த சூழலில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் மற்றும் கயிலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்ம பல்லவனே இந்த ஆலயத்தையும் எழுப்பியிருக்கிறான்.
இந்த ஆலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
ஆலயத்தின் பழைமை தெரியாமல் இன்றும் கம்பீரமாய்க் காட்சி தருகிறது ஆலயம்.
கோயில் அமைப்பு:
கோயிலின் தெற்கு மண்டபம் கம்பீரமாக வரவேற்கின்றது.
உண்ணாழி (கர்ப்பக்கிரகம்),
அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம்,
திருச்சுற்று மண்டபம், சிற்றாலயங்கள் என்று இக்கோயில் அமைந்திருக்கிறது.
தூண்கள் கீழ்ப்புறம் செவ்வக வடிவிலும், மேற்பகுதி சதுர வடிவிலும் இடைப்பகுதி சதுரம், பட்டைகள் கொண்டு நிற்கின்றன
ஆலயத்தின் வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஆலயத்தின் பிரமாண்டமான மகா மண்டபத்தில் 108 தூண்கள்.
அவை வெறும் தூண்கள் அல்ல. அத்தனையும் கலைப் பொக்கிஷங்கள்.
கவனத்தைக் கவர்கின்றன.
ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில்கிழக்கு, வடக்குப் பகுதிகளில் உள்ளன.
வடக்கே 18 தூண்களும் கிழக்கே 10 தூண்களும் மண்டபத்தைத் தாங்குகின்றன.
பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய மண்டபங்கள் இவை.
தூண்களில் விநாயகர், ரிஷபாருடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சுற்று மண்டபத்தின் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிப் பைரவர் சிலையும், மேற்கு நோக்கிச் சூரியன் சிலையும், நடுவில் நவகிரகங்கள் அமைந்த மேடையும் காணப்படுகின்றன.
நந்தி உள்ளன.
கொடி மரத்திற்குரிய துவாரம் மேல்தளத்தில் காணப்படுகின்றது
ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில், முன் மண்டபத்திலிருந்து தனித்துக் காணப்படுகிறது.
இறைவனைக் காண அர்த்தமண்டபம் நுழைவதற்கு ஏதுவாக, முன் மண்டபத்திலிருந்து இணைப்பாக நான்கு கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருக்கின்றன.
அஸ்த தாளாம்பிகை
இறைவனார் கோயில் தனித்தும் அதனைச் சுற்றி நீராழி மண்டப அமைப்பும் தென்படுகின்றன.
நீராழி, முன்மண்டபத்தைப் பிரித்துக் காட்டுகிறது.
அர்த்த மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நேராக கர்ப்பக்கிரகத்தில் மிகப் பெரிய,பதினாறு பட்டை வடிவச் சிவலிங்கத்தையும், ஆவுடையாரையும் தரிசிக்கலாம்.
மிக அழகிய, பளபளப்பான கரியநிறக் கருங்கல்லில் சிவலிங்கம். செதுக்கப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது
அர்த்த மண்டப பக்கச் சுவர்களில், வலது பக்கம் திருமால்-மகாலட்சுமி, இடது பக்கம் நான்முகன்-கலைமகளும் இரு தம்பதியரும் அமர்ந்த கோலத்தில் இறைவனின் பார்வையில் படுமாறு மிக நேர்த்தியாக சுவரில் செதுக்கப்பட்டு பொலிகின்றனர்
ஆலயத்தின் வடக்கு திசையில் இரண்டு லிங்கங்களும், தெற்கு திசையில் இரண்டு லிங்கங்களும், முருகன் சந்நிதிக்கு அருகில் ஒரு லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இந்த லிங்கத் திருமேனிகள் 16 பட்டைகள் கொண்ட தாரா லிங்கங்களாகக் காட்சி தருகின்றன.
இத்தகைய தாரா லிங்கங்களை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் என்கிறார்கள் அடியார்கள்.
மேலும் சற்று சிதிலமடைந்த நிலையில், வழக்கமான வடிவில் ஒரு லிங்கமும் இங்கு உள்ளது.
முழுக்க முழுக்க கருங்கற்களால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் சதுர வடிவக் கருவறையில் கிழக்கு நோக்கி அருள்மிகு தாளகிரீஸ்வரர் அஸ்த தாளாம்பிகை உடன் இங்கு அருள் பாலிக்கிறார்.
தாளகிரீஸ்வரரை வேண்டிக்கொண்டால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலையும், நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு உரிய தீர்வும் விரைவில் கிடைக்கும் என்கிறார்கள் அடியார்கள்.
அ/மி தாளகிரீஸ்வரர் காலையில் பச்சை நிறம் மாகவும் மாலையில் பொன் நிறமாகவும் மாறும் அதிசயத்தை இங்கு காணலாம்.
முற்காலங்களில் இப்பகுதி பனைமரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்.
`தாளம்' என்றால் பனை. பனை மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மலைமீது குடி கோயில்கொண்டுள்ள இறைவன் என்பதால், இவருக்கு தாளகிரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள் பக்தர்கள்.
ஆனால், இவ்வூரை மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன. அவை உருண்டைக் கற்களை குவித்து வைத்ததுபோல், ஒரே கல்லால் மிகவும் பருத்தும், பெரியதாகவும், உயர்ந்தும் காணப்படுவதால், இதனைப் ‘பணைமலை’ என்றே குறிப்பிடுகின்றனர்.
கோயில் மகாமண்டபத்தின் இடப்புறத்தில் கிழக்கு சந்நிதியில் முருகப்பெருமானும்
வடகிழக்குத் திசையில் தென்திசை நோக்கியவாறு தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அம்மன் திருவுரு காட்சியளிக்கின்றது.
அம்மனை ‘அஸ்த தாளாம்பிகை’ என்று போற்றுகிறார்கள்.
அம்மனின் மேற்கைகள் அங்குசத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளன.
அம்மன் திருமுகம் அன்றலர்ந்த தாமரைப் போலக் கோடி சூரியப் பிரகாசமாய் மின்னுகின்றது
இங்கு அன்னை ‘அஸ்த தாளாம்பிகை’ என்றும் ‘தாள கிரீஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறாள்.
திருமணமாகாதவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து தங்களின் ஜாதகத்தினை அம்பாள் முன்வைத்து வழிபட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நிச்சயமாகும் என்கிறார் இந்த ஆலயத்தின் அர்ச்சகர் காசி சிவாசார்யர்
மகா மண்டபத்தின் வாயிலில் விநாயகரும், ஆறுமுகனும் சந்நிதி கொண்டருள்கிறார்கள்.
இங்கு பைரவர், சனிபகவான், சூரிய பகவான், சந்திரபகவான் ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர்.
தனியாக ஒரு நவகிரக சந்நிதியும் இங்கு உள்ளது. .
சிறப்பு மிக்க குகை துர்கை சந்நிதி
ஆலய தரிசனம் முடிந்து கீழே இறங்கி வருகையில், வலப் புறமாகச் செல்லும் படிகளின் வழி இறங்கினால் சிறுகுகை போன்ற அமைப்பை அடையலாம்.
குகை நுழைவிலேயே பலிபீடம், யானை, சூலம் ஆகியவை காணப்படுகின்றன.
இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள்.
துர்க்கை அன்னை, தலையில் ராசகிரீடம் புனைந்து எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது.
வழக்கமாக எல்லா ஆலயங்களிலும் துர்கை சூலம் ஏந்தியிருப்பாள்.
ஆனால் இங்கோ அன்னையின் நான்காவது கரத்தில் தண்டமே காணப்படுகிறது.
இந்த அன்னை, தன் வலது காலைத் தரையில் ஊன்றியும், இடது காலை
அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள்.
காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாத சரமும் கொண்டிருக்கிறாள்.
அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது.
(இந்த அன்னையின் படம் கீழே!)
இந்த அன்னையின் திருமுகத்தில் வெற்றிப்புன்னகை தவழ்கிறது.
இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் நம் துன்பங்கள் எல்லாம் பறந்துஓடும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்த அன்னைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகுகாலத்தில் மட்டுமே பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த ராகுகால பூஜையில் கலந்துகொண்டு மூன்று வகையான எண்ணெய் கலந்து 11 விளக்குகள் ஏற்றி அன்னையை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது இங்கு வந்து தரிசனம் செய்யும் மக்களின் நம்பிக்கை.
இந்த துர்கை சந்நிதியில் வழிபட்டு குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்பதும் கண்கூடு” என்கிறார் காசி சிவாசார்யர்.
இந்தஆலயத்தின் காசி சிவாசார்யர் இந்த ஆலயத்இல் நடைபெற்று வரும் பூஜைகள், திருவிழாக்கள் பற்றி மேலும் கூறுகிற தகவல்கள் கீழே!
“தற்போது இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்து வருகிறது.
சிவராத்திரியன்று மட்டும் நாலு கால பூஜை நடைபெறும்.
இவை தவிர்த்து மாதம்தோறும் பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறும்.
காணும் பொங்கலன்று இங்கு நடைபெறும் பாரிவாட்டம் விசேஷமானது.
இந்த விழாவின்போது பனைமலை,பேட்டை, துத்திப்பட்டி, சித்திரசுவர், அனந்தபுரம், காந்தி நகர் எனச் சுற்றியுள்ள 6 ஊர்களுக்கும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளித் திரும்புவர்.
பக்தர்கள் பலரும் ‘ஓம் நமசிவாய’ என 108 துண்டு சீட்டுகளில் எழுதி அதை மாலையாகத் தொடுத்து ஈசனுக்கு சாத்தி வழிபடுகிறார்கள்.
இவ்வாறு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தை பற்றி கல்வெட்டுகள் சொல்லும் செய்தி...
இங்கு பிரதான ஆலயத்திலும் துர்கை யின் சந்நிதியிலும் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.
இதுகுறித்துக் கல்வெட்டு ஆய்வாளர் ரமேஷ் கூறியுள்ளதாவது.
“இந்தக் கோயிலில் காணக்கிடைக்கும் கல்வெட்டுகளின் மூலம் இந்த ஆலயம் இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அறியமுடிகிறது.
இயற்கையாக அமைந்த குகையில், துர்கையின் சிற்பத்தைத் தனி பலகையில் வடித்து உள்ளே பிரதிஷ்டை செய்துள்ளனர்.
துர்கையின் சிற்பம் தாய் பாறையில் வடிக்கப்படவில்லை.
இங்குள்ள கல்வெட்டில் இரண்டாம் நரசிம்ம பல்லவனுடைய இயற்பெயர்களான ராஜசிம்மன், ரணஜயன், சித்திரக்கார்முகன், சிவனைத் தன் தலையில் சூடியவன் ஆகியவை பல்லவர்கால கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன.
இந்தக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வடிவம் தெளிவாகவும், பறவைகளை போன்ற வடிவிலும் பொறிக்கப் பட்டுள்ளன.
இங்குள்ள விநாயகர் சிற்பம் மட்டும் பிற்காலத்தைச் சேர்ந்தது.
தாளகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்கால கிரந்த எழுத்து வடிவிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
‘பரத்வாஜர், அஸ்வத்தாமன் வழிவந்த வம்சாவழியினர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள தாரா லிங்கங்கள் ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ந்த ரக கறுப்புக் கற்களினால் செய்யப்பட்டவை” என்கிறார் ரமேஷ்.
சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் புராதனப் பெருமைகளில் ஒன்று, இங்கு காணப் படும் 1,300 ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த ஓவியம்.
ஆலயத்தின் வடமேற்கில் காணப்படும் அழகும் நுட்பமும் வாய்ந்த இந்த ஓவியத்தில் எழில்மிகு சோமாஸ்கந்தர் காட்சிகொடுக்கிறார்.
காலத்தின் தொன்மை காரணமாக ஓவியம் சற்று அழிந்திருந்தபோதிலும் அதன் அழகும் கலையும் நம்மைக் கவர்கின்றன.
சிவபெருமான் நடனமாட, பார்வதிதேவி அதைக் காண்பதுபோல ஓவியத்தில் காணப்படுகிறது.
இந்த ஓவியம் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை போன்ற வண்ணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்லவர்காலச் சுவர் ஓவியம் என்பது மிகவும் அரிதான ஒன்று.
அதனால்தான் இந்திய தொல்லியல்துறை இதை தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.
வாய்ப்புக்கிடைக்கும்போது, நீங்களும் பனைமலை சென்று வாருங்கள்.
அருள்மிகு தாளகிரீஸ்வரரின் திருவருள் ஸித்திக்கும். அம்பிகையின் அருளால் உங்களின் எதிர்காலம் சிறக்கும்.
நீண்ட காலமாக திருமணம் நடைபெறால் திருமணத்தடை உள்ளவர்கள் கட்டாயம் இந்த ஆலயத்திற்கு சென்று தங்களது ஜாதகத்தை தாளகிரீஸ்வரி அன்னையின் பாதத்தில்
வைத்து மனதார வழிபட்டு மூன்று மாதங்களுக்குள் திருமணத்தை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆலயத்திற்கு எப்படிச் செல்வது?:
விழுப்புரம் - செஞ்சி சாலையில், மாத்தூர் வழியே 9 கி.மீ பயணித்தால் பனமலை தாளகிரீஸ்வரர் கோயிலை அடையலாம்.
பேருந்து வசதிகள் உண்டு (தொடர்புக்கு: காசி சிவாசார்யர் - 80568 63301).
No comments:
Post a Comment