Wednesday, February 24, 2021

HbA1C என்றால் என்ன

 அறிவோம் நீரிழிவை

HbA1C என்றால் என்ன???

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 

பொதுவாக நீரிழிவு குறைபாடு இருப்பவர்களுக்கு காலை வெறும் வயிற்றில் (fasting ) ஒரு முறையும் 

பிறகு உணவு முடித்ததும் இரண்டு மணிநேரம் கழித்து ஒருமுறையும்(postprandial)  ரத்த பரிசோதனை செய்வது வழக்கம். 

ஆனால் இந்த இரு ரத்த பரிசோதனைகளையும் நீரிழிவு குறைபாடு உள்ளவர் எளிதில் ஏமாற்றலாம் 

எப்படி???

இந்த டெஸ்ட் எடுக்கும் நாளைக்கு முதல் நாள் இரவு மிகவும் குறைவாக உணவு உண்பது, பிறகு காலை உணவை குறைத்து உண்பது. அன்று மட்டும் தேனீருக்கு சர்க்கரை எடுக்காமல் இருப்பது போன்றவற்றை பல நீரிழிவு குறைபாடுள்ளவர்கள் செய்கிறார்கள்.

மருத்துவரை சந்திக்கையில் மட்டும் ரத்த சர்க்கரை அளவுகள் குறைவாக வர வேண்டும் என்பது போன்ற மாணவ- ஆசிரியர் மனப்பான்மையுடன் மருத்துவரை சந்திக்கின்றனர். 

அவர்கள் ஏமாற்றுவது மருத்துவரை என்று எண்ணிக்கொள்கின்றனர் ஆனால் அவர்கள் அவர்களையே தான் ஏமாற்றிக்கொள்கின்றனர்.

இந்த பிரச்சனையை சரிகட்ட கண்டறியப்பட்டதே HbA1C எனும் பரிசோதனை 

இதன் அடிப்படை என்ன???

நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 90- 120 நாட்கள் வாழக் கூடியவை.

அதாவது ஒருமுறை தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து அழியும் வரை 3 -4 மாதங்கள் இருக்கும்.

இதில் ஹீமோகுளோபின் எனும் புரதம் கலந்திருப்பது அனைவரும் அறிந்ததே. 

இந்த ஹீமோகுளோபின் தான் ஒருவருக்கு ரத்த சோகை இருக்கிறதா இல்லையா என்பதை அளவிட பயன்படுகிறது.

இந்த ஹீமோகுளோபின் நமது இதயம் மற்றும் நுரையீரலில்  இருந்து ஆக்சிஜனை மூளை மற்றும் பல உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.

இந்த ஹீமோகுளோபினில் ஒரு பகுதி - நமது ரத்தத்தில் உள்ள க்ளூகோசைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது 

இதை glycosylated  HEMOGLOBIN என்று அழைக்கிறோம். 

இந்த HbA1C ஐ கணக்கிடுவது மூலம் கடந்த மூன்று மாதங்கள் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் எப்படி இருந்தன? என்பதை அறிய முடிகிறது. 

இந்த மூன்று மாத காலத்தில் அவர் எவ்வளவு சிறப்பாக உணவு முறை கட்டுப்பாட்டைக் கடைபிடித்தார் என்பதையும் அறிய முடியும்  

ஆகவே நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் வருடம் மூன்று முறை HbA1C ஐ சோதனை செய்து பார்ப்பது நல்லது 

HbA1c பரிசோதனை செய்ய வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாளின் எந்தப்பகுதியிலும் கொடுக்கலாம். 

ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் லிட்மஸ் சோதனையாகவும் இது பயன்படுகிறது. 

குறை மாவு உணவு முறைக்குள் வருவதற்கு முன் பரிந்துரைக்கப்படும் பரிசோதனைகளுள் இந்த HbA1C இருக்கிறது. 

Hba1c அளவுகள் 

5.5க்குள் இருந்தால் நீரிழிவு இல்லை 

5.6 முதல் 6.5 இருந்தால் நீரிழிவுக்கு முந்தைய நிலை (Pre diabetes) 

6.6 க்கு மேல் நீரிழிவு  

7 க்குள் சிறந்த  கட்டுப்பாடு( பல ஆய்வு முடிவுகள் கூறுவது யாதெனில் A1c 7க்குள் வைத்திருக்கும் மக்களுக்கு நீரிழிவால் ஏற்படும் சிறு நாள மற்றும் பெரு நாள பாதிப்புகள் வருவதில்லை என்பதே. எனவே நமது   லட்சியம் A1cஐ ஏழுக்குள் வைத்திருப்பது என்பதாக இருத்தல் சிறந்தது.) 

7 முதல் 8 

உடனே நடவடிக்கை எடுத்து அதை குறைப்பது நல்லது 

8க்கு மேல் Hba1c இருப்பது 

நீரிழிவு நமது உடலுக்குள் வேண்டாத பல மாற்றங்களை உருவாக்கி நாளடைவில் பல பிரச்சனைகள் தோன்றிட வழிவகுக்கும்.  

எனது சிறு அனுபவத்தில் நான் காணும் ரிப்போர்ட்களில் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட பலரும் Pre diabetes / diabetes உடன் கண்டறியப்படுகின்றனர் 

இன்னும் பலர் Hba1c 10க்கு மேல் கண்டறியப்படுகின்றனர் 

தெற்காசியர்களின் மரபணு மற்றும் தானியங்கள் சார்ந்த  உணவு முறை 

பழக்கம் ஆகியவை நீரிழிவை சிகப்புக்கம்பளமிட்டு வரவேற்கின்றது.  

இதை கருத்தில் கொண்டு நீரிழிவு குறித்த நமது அறிவை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

நன்றி 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை

No comments:

Post a Comment