Friday, July 3, 2020

இன்டெர்வல் மொமென்ட்

இன்டெர்வல் மொமென்ட் (சிறுகதைகள் சீ2 – 86)
#ganeshamarkalam

சினிமாவுலே இன்டெர்வல் விடுவாளே ஒரு சுகானுபவம். சித்தே நின்னுட்டு மூச்சை சமநிலைப் படுத்தி மீண்டும் மலை ஏறராப்புலே. கதையும் ஒரு முக்கியமான கட்டத்தில் வந்து நின்னிருக்கும். இனிமேல் என்ன ஆகப்போரதோன்னு.

திருவையாத்தில் லீவுக்கு போயிருகரச்சே வாரம் ஒரு படம் மாத்துவான். ஒருநா மின்னாடி புதுப்படம் போஸ்டர் ஒட்டுவான். “என்ன போஸ்டர்னு பாத்துட்டு வாடா”ன்னு அனுப்புவா. அரைடிராயர். அது நழுவி விழுந்துடப் பிடாதுன்னு ரெண்டு வார் தோளில். சட்டை வேணும்னு தோணாது. கூச்சமா இருந்தா அந்த வார் பாச்சியை மூடராமாதிரி பிடிச்சிண்டே போயிட்டு வந்து என்ன படம்னு சொல்லுவேன். 

அட்வான்ஸ் புக்கிங்கெல்லாம் தேவையில்லை. 30பைசாவுக்கு தரை டிக்கெட் எத்தனை வேணும்னாலும் கிடைக்கும். இன்டெர்வெல் எப்போன்னு காத்துண்டிருப்பேன். ஆத்துலேந்து கொண்டு வந்த தூள் பக்கோடா இல்லைன்னா ரோஸ்ட் செஞ்சு நறுக்கி உப்புக்காரம் போட்டு வறுத்த பலாக்கொட்டை தருவா. அந்த வயசில் படம் புரியவும் புரியாது. இன்டெர்வல் மட்டும் சுகானுபவமா.

எல்லாருக்கும் எல்லாத்துக்கும் இன்டெர்வல் தேவை. பருப்புஞ்சாதம் மோர்குழம்பு குத்திண்டு, சாம்பாரும் வெத்தக்குழம்பும் ஆனப்புரம், ரசத்துக்கு முன்னாடி ஒரு மிழுங்கு தேர்த்தம் மாதிரி. ஸ்கூல் ஃபைனல் முடிச்சுட்டு காலேஜுக்கு போரத்துக்கு மின்னாடி மனசை லேசாவச்சிண்டு சுத்துவோமே அது. நல்ல வேலை அமைஞ்சதும் பொண்பாத்து கல்யாணம் செஞ்சுக்கலாம், நம்மளாலே ஒரு குடும்ப பாரம் தூக்க முடியும்னு தோணுமே அந்தப் பிராயம். குழந்தைகள் செட்டில் ஆகி அக்கடான்னு சொச்ச ஜீவன் எப்படியோன்னு நினைக்கரச்சே. இல்லை ரிடையரான மறுநா தூங்கி எழுந்து இனிமேல் எங்கேயும் டயத்துக்கு போய் கையெழுத்துப் போட வேண்டாம்னுட்டு புரண்டு படுத்துப்போமே அதுவும் இன்டெர்வல் மொமென்ட்தான்.

இன்டெர்வெல்லுக்கு மின்னாடி என்ன நடந்திருந்தாலும், இனிமேல் என்ன நடக்கும், அது என்னவா இருக்கும்னு தோணுமே! செஞ்சதையே இனிமேலும் செய்யரதுக்கு இன்டெர்வல் தேவையில்லை. வரப்போரது பத்தி எதிர்பார்ப்பு கிளம்பணும். அதான் அழகு.

சகஸ்னு ஆத்தில் கூப்பிடுவா. சகஸ்ரநாமம். கல்யாணம் ஆகலை. 4 கழுதை வயசாச்சுன்னு அப்பா திட்டுவர். படிப்பு வரலை, வேலை இல்லை. ஆனால் பாருங்கோ கர்நாடக சங்கீதத்தில் அத்தனை ஆசை. ராகங்களை சொல்லுவேன். பாட்டு சொன்னா இன்ன ராகம், தாளம்னு.  கர்னாடிக் ஹுந்துஸ்தானி என்ன வித்யாசம்னு கேளுங்கோ, விவரம் சொல்லி, பாடிக் காண்பிப்பேன். ரேடியோவில் யாராவது பாடினா டக்குன்னு யார்னு, எவரோட கீர்த்தனை சொல்லிடலாம். எங்கே கச்சேரின்னாலும் போயிடரது. டிக்கெட் இருக்கப்பிடாது. ஃப்ரீனா ஓகே.

சென்னை மியூசிக் சீசன்னு கொண்டாட்டமா இருக்கும். அதில் மத்தியானம் வரைக்கும் ஃப்ரீ. எல்லா சபாவுக்கும் போயிடரது. ஓசியில் வர நிறைய பேரைத் தெரியும். அப்பா சிலவுக்கு தர பணத்தை சேமிச்சு சபா கான்டீனில் சாப்டுட்றது. ஆத்துக்கு பொடிநடையா போயிடரது. வேர ஒன்ணுலேயும் நாட்டம் இல்லைன்னாலும் சங்கீதத்துலே சித்தே இருக்கேன்னு சந்தோஷம்னு அப்பா சொல்லுவர்.

இந்த வருஷம் சங்கீத சீசனில் பூந்து விளையாடணும். ஃப்ரெண்ட் மணிகண்டன், “ஏண்டா இப்படி செஞ்சா என்ன?”. “எப்படி?” “உனக்கோ சங்கீதத்தை பத்தி ஞானம் இருக்கு, நீ ஏன் வளர்ந்து வரும் இசைக் கலைஞர்களைப் பத்தி, அவா பாட்டை கேட்டுட்டு அதை விமர்ஸனம் செஞ்சு பத்திரிகைக்கு அனுப்பப் பிடாது?” “பிழையில்லாம எழுத வராதே! எழுதினாலும் யார் அதை காசு கொடுத்து வாங்கிப் போடுவா? பிரபல பத்திரிகைகளுக்கு எழுத ஏற்கனவே விமர்ஸகா இருப்பாளே!”.

“நீ எழுது நாம பத்திரிகையைத் தேடலாம். இந்த வருஷம் ஸ்டார்ட், அடுத்த வருஷம் களை கட்டும்.” சரீன்னு பட்டது. “நான் வாயால் சொல்ரேன் நீ எழுதித் தருவியா?” “ஓகே”னான்.

விமர்ஸனம் எழுதரவன், சீசன் டிக்கெட் தாங்கோன்னா தரமாட்டா. புதுசா பாடரவாளை டார்கெட் செஞ்சா முதல் பாதியில்தான் பாடரா. அதுக்கு டிக்கெட் கிடையாது. அதை மட்டும் கவர் செய்யலாம்னு. மணி சொன்னா மாதிரி கையில் ஒரு நோட்பேடும் பேனாவுமா. ஆத்துக்கு வந்து கேட்டதை பிசகில்லாம நினைச்சுப் பாத்து நன்னா இருந்ததா இல்லையான்னு எழுதணும்.

11மணிக்கு மியூசிக் அகடெமீயில் காதம்பரீன்னு 24 வயசு, உபன்யாசம்.. பாடிண்டே கதை. அனுமனின் பராக்கிரமங்கள் பத்தி மேர்கோள் காட்டி ராகத்தொட பாட்டு. பக்கவாத்தியமும் பிரபலம் இல்லை. பொண் நன்னாவே செஞ்சதை நான் சிலாகிச்சு எழுதியாச்சு. அதை ஈமெயிலில் ஹிந்துவுக்கு அனுப்பிச்சுட்டு அடுத்த கச்சேரிக்கு வந்தேன். ஒரு வாரத்தில், கதாகாலக்ஷேபம், பஜனை, ரெண்டு வாய்ப்பாட்டு, ஒரு வயலின்னு போயிட்டு வந்து விமர்சனம் செஞ்சாச்சு. பஜனைக்கும் விமர்ஸனமா? கேக்கப் பிடாது. போனதுக்குத்தான் எழுத முடியும்.

நான் விமர்சித்தது எல்லாரையும் பாராட்டித்தான். வளர்ந்து வரவாளை உத்வேகம் கொடுத்து இன்னும் நன்னா பண்ண வைக்கணும்னு. 

அப்பா ஒருநா மணிக்கு நான் ஏதோ சொல்ரதையும் அவன் டைப் அடிக்கரதையும் பாத்துட்டு “என்னடா நடக்கரது”ன்னு வந்து படிச்சுப் பார்த்தர். “பேஷ் பேஷ்.” முதுகை தட்டிட்டுப் போனர். நானே கச்சேரி செஞ்சு ஆடியன்ஸ் கை தட்டினாப்புலே இருந்தது. ஒரு ஐடியாவும் தந்தர். “சபாவில் சௌக்கர்யம், அரேஞ்ச்மென்ட், கான்டீன் பத்தியும் கலந்து எழுது”. எழுதினதை அந்த சபாவுக்கும் அனுப்பினா என்னன்னு.

சீசன் களை கட்டி ரெண்டாம் வாரம். “ஏண்டா, நீ ஏன் கச்சேரி செய்யரவா சிலரை பேட்டி செஞ்சு ஒரு ஹ்யூமன் இன்டரெஸ்ட் ஸ்டோரி பண்ணப் பிடாது?” உசுப்பிவிடன்னே சிலர் இருப்பா. எனக்கு மணி. “அதெல்லாம் வேண்டாம்டா! பாடரவா கிட்டக்கே போய் பெசரது எப்படீன்னு தெரியலை, எனக்கு அவா பேட்டி தரணும்னு என்ன அவசியம்?” 

சித்தே இருன்னுட்டு பேரும் அட்ரெஸ்ஸும் போட்டு “சங்கீத விமர்ஸகர், ஃப்ரீலான்ஸ் ஜோர்னலிஸ்டு”ன்னு 50 விஸிடிங்க் கார்ட் செஞ்சு தந்தான். “இதை கொடு. பேசுவா”.

12 வயசிருக்கும் கார்த்திகேயன்னு வயலின் வாசிச்சான். நாரத கான சபாவில். ஹாலில் எண்ணி 22 பேர். அவனோட ஆத்துலேந்தே 10 பேர். நான் முன்வரிசையில். நன்னாவே வாசிச்சது குழந்தை. ஒவ்வொண்ணு முடிஞ்சதும் நான் கை தட்ட மத்தவா சேர்ந்துண்டா. கச்சேரி ஆனதும் அவன் அப்பா அம்மா வந்து “நன்னா ரசிச்சுப் பாராட்டினேள், குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுங்கோ”ன்னுட்டா. கைகாலேல்லாம் உதற ஆரம்பிச்சது. சித்தே நரை விழுந்துட்டது உண்மை. அதுக்காக?

கார்டை லாவகமா எடுத்து அவாகிட்டே தந்தேன். படிச்சுட்டு எந்த பத்திரிகையில் வரும்னு கேக்க, இன்னும் முடிவு செய்யலைன்னு சாமர்த்தியமா மணி சொன்னாப் போல மழுப்பினேன். பேட்டின்னதும் பேஷான்னு சொல்ல அதுவும் நடந்தது. நான் அவனோட பெசரச்சே இவா இங்கேந்தும் அங்கேந்தும் போடோ எடுக்கரதும், இவனை அதையும் பத்தி மாமாகிட்டெ சொல்லு, இதைப்பத்தி சொல்லுன்னு ஹிம்சை செஞ்சிண்டு இருந்தா. எனக்கோ இவனுக்கு சங்கீதத்திலெப்படி ஆர்வம் வந்ததுன்னும், இன்னும் என்ன பண்ணப் போரான், ஸ்கூல் படிப்பையும் இதையும் எப்படி மேனேஜ் செய்யரான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. எனக்கு ஸ்கூலே வரலை, இவன் எப்படின்னு ஆதங்கமும்.

ஆத்துக்கு வந்து நோட்ஸை பாத்து எழுதி என்ன செய்யணுமோ செஞ்சாச்சு.

சீசன் முடியர தறுணத்தில் கிருஷ்ணகான சபாவில் அஞ்சனா சோமசேகர் வாய்ப்பாட்டு. போலாம்னு கிளம்பரச்சே சபாவுலேந்தே போன். அட, நாம அதுக்குள்ள ஃபேமஸ் ஆகிட்டோமா? “நீங்க இன்னைக்கு கார்த்தாலே ப்ரொக்ராமை கவர் செய்ய முடியுமா?” சபா செக்ரடெரி கேக்க, “அங்கேதான் வந்திண்டிருக்கேன்!” டக்குன்னு சொல்லிட்டேன். அவாளுக்கு சப்புன்னு போயிருக்குமோன்னு தோணித்து. சித்தே பிகு பண்ணியிருக்கணும். சங்கீத விமர்சகன் தொழில் நெளிவு சுளிவெல்லாம் தெரியலை. 

சுதாரிச்சிண்டு “சித்தே நாழிதான் இருப்பேன், முன்னாடி ரோவில் சீட் போடுங்கோ, பாட்டு நன்னா இல்லைன்னா மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸிலேந்து போன் மேல போன் வரது, அங்கே கிளம்பிடுவேன்.” ஒரு போடு போட்டேன்.

போனதும்தான் தெரிஞ்சது இவா ஸீட்டே போட்டு வைக்கலைன்னு. மொத்தம் 5 பேர்தான் ரசிகா. கடைசீ ரோவில் கான்டீன் எம்ப்ளாயீஸ், கூட்டிப்பெருக்கரவான்னு சின்ன கும்பல். அஞ்சனா அத்தனை பதவிசா, சிம்பிளா ட்ரெஸ் பண்ணிண்டு, தலைப்பை நன்னா போத்திண்டு, தானே தம்பூராவை மீட்டிண்டு இப்போதான் பாட ஆரம்பிக்கரா. 

இங்கே உக்காந்துண்டு வாதாபிலே இருக்கர கணபதியை இவள் வணங்கராளாம். ஏன் உஸ்மான் ரொடிலேயே பிள்ளையார் இருக்காரே அவர் என்ன தப்பு செஞ்சர்? ஹம்ஸத்வனி மாதிரி இருந்ததே தவிர அதுதான்னு சொல்லிட முடியாது. அப்புரம் ரகுவம்ச சுதா. தேவலை. மிருதங்கம் வாசிச்சவர் ஏதோ அவசரத்தில். இவள் சிரமப்பட்டா. கேக்கரதும் அதுக்கு எழுதரதுமா இருக்கச்சே பக்கத்தில் ஒருத்தர் உக்காந்துக்கரர்.

“நமஸ்காரம். சௌக்கியமா? நான்தான் போன் செஞ்சேன். வந்ததுக்கு தாங்க்ஸ்” “நன்னா பாடரா, சாரீரம் நன்னா இருக்கு, சித்தே மிடில் ஏஜ்ஜோ, மின்னாடி சபாக்களில் பாத்ததில்லையே!” “சார், இதுதான் அரங்கேற்றம் மாதிரி, சேர்மனுக்கு வேண்டப்பட்டவா, நல்ல ரிவ்யூ தந்தா நன்னா இருக்கும். சபாவும் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கும். பாத்துக்கோங்கோ, வரேன்.” எழுந்து போனர். 

பாராட்டி எழுதினா எனக்கு சன்மானம் உண்டான்னு கேக்கணும்னு தோணித்து.

வேர எங்கேயும் போக அவசியம் இல்லாததால், இங்கேயே. சொஃபா நன்னா கம்ஃபெர்டபிளா வேர. கச்சேரி முடிஞ்சதும் நானும் ஒரு டஜன் பேர் கை தட்டி பாராட்டினோம். கான்டீனுக்கு போரச்சே மிருதங்கம் வாசிச்சவர் “மேடம் பெசணும்னு சொல்ரா, சித்தே டயம் ஒதுக்க முடியுமா?” “சரி”. பேட்டி கிடெச்சா உபயோகப்படுமே.

கான்டீனில் என் டேபிளுக்கு அஞ்சனா சோமசேகர் வந்தா. எதுத்தாப்புல இத்தனை கிட்டக்க அழகா, புதுக்கருக்கு அழியாமன்னு சொல்லுவாளே அப்படி. “உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டுருக்கேன், உங்க விமார்சனம் படிச்சிருக்கேன்”. எங்கே படிச்சான்னு சொன்னா நாமும் படிக்கலாமேன்னு தோணித்து. சும்மா இல்லாம “நன்னா பாடினேள் திவ்யமா இருந்தது. இப்போல்லாம் சினிமாவில் பாடியிருந்தாத்தான் கூட்டம் வரது”ன்னு சொல்லிட்டு “உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!”

“என்ன எழுதப் போரேள்”? டக்குன்னு கேட்டுட்டா. “கவலைப் படாதீங்கோ நான் பாத்துக்கரேன். நிறை குறை தராசில் வச்சு எழுதுவேன். எல்லாரும் நன்னா பாடணும் சங்கீத சேவை செஞ்சுண்டே இருக்கணும்னு ஆசை.” 

“ஒருநா ஆத்துக்கு வாங்கோ, கோட்டூர்புரம் தான் ஜாகை”. கார்ட் கொடுத்தா. “வரேனே, சோமசேகர் என்ன பண்ரர்?” “அது என் அப்பா பேர். இன்னும் கல்யாணம் ஆகலை. அப்பா இப்போ இல்லை, நான் தனியாத்தான் இருக்கேன். அம்மாவோட.”

இதுவரைக்கும் செய்யாததை செஞ்சேன். ஆத்துக்கு போய் விமர்சனம் எழுதினவன் அதை இவளுக்கு அனுப்பி “நீங்க படிச்சுப் பாத்ததும் பத்திரிகைக்கு அனுப்பலாம்னு இருக்கேன், திருத்தணும்னா செஞ்சுக்கலாம், உங்காத்தில் நேரில் மீட் செஞ்சு ஃபைனல் செய்யலாம்”னு மெயில் போட்டேன்.

40 வயசாச்சு, ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாம, அப்பாகிட்டே சிலவுக்கு வாங்கி ஊரைச் சுத்திண்டிருந்தவன் வாழ்க்கையில் ஒரு இன்டெர்வல் மொமென்ட் வந்தது.

No comments:

Post a Comment