#ஓனக்கு_நா...#இருக்கேண்டா!
"சொம்பு மேல மாவிலை கொத்து"........என்ன பழம்-ன்னு கண்டுபிடி!..."
"தெரியாதே......."
"நீ....க்ராமத்ல இருந்தியோன்னோ? அதான், ஒனக்கு தெரிஞ்சிருக்காது. நானே இதுக்கு answer சொல்றேன்...... அன்னாஸிப்பழம்!......ஸெரி...இதைக் கண்டுபிடி.....பாக்கலாம்!......."ஜாடி மேல கொரங்கு!".....அப்டீன்னா என்ன?....."
"...ம்ம்ம்ம்...தெரியலியே..."
"முந்திரிப்பழண்டா!...ம்ம்...அடுத்தது...."அப்பன் சொறியன், ஆத்தா சடச்சி அவாளோட பிள்ளையோ, சக்கரக்கட்டி" என்னன்னு சொல்லு!..."
"தெரியும்.....பலாப்பழம்!.."
"பேஷ்! "பொட்டியை தெறந்தா...க்ருஷ்ணன் பொறந்தான்!"
"க்ருஷ்ணனா ?..."
"வேர்க்கடலை.!...ஸெரி...போறது, இதச் சொல்லு...."சொம்பு நெறைய கெம்புக்கல் [மாணிக்கம்]"
"தெரியல....."
"மாதுளம்பழம்....."
மேலே படித்த conversation, ஏதோ ரெண்டு கொழந்தைகள், ரெண்டு நண்பர்களுக்கிடையே நடந்த ஸம்பாஷணை மாதிரி இருக்கோ?
அப்படி நினைத்தால்.....ஏமாந்து போவோம்!
"ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கும்", குட்டிப்பையன் வேதபுரிக்கும் நடந்த அழகான, அன்பான விடுகதை ஸம்பாஷணை!
எட்டு வயஸு குழந்தையாக 'பெரியவாளே கதி!' என்று வந்த வேதபுரிக்கு, ஸமையல், படிப்பு, ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் ஒரு அம்மா குழந்தைக்கு சொல்லித் தருவது போல் சொல்லிக் குடுப்பார் இந்த மஹா அம்மா!
விளையாட்டாகவே ஞான, பக்தி, வைராக்யத்தை நமக்குள் ஊட்டிவிடும் ஞானமாதா, வேதபுரிக்கும் காய்-கனி வகைகள், வாழைப்பழத்தின் அத்தனை வகைகள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே ஊட்டிவிட்டார்!
ஸ்ரீமடத்தின் ஶாஸ்த்ரிகளை விட்டு, தன்னுடைய அருமையான ஶிஷ்யக் குழந்தைகளான, பாலு, ஸ்ரீகண்டன், சந்த்ரமௌலி, வேதபுரி எல்லாருக்கும், க்ரந்தங்கள், ஸ்லோகங்கள், ஸம்ஸ்க்ருதம் எல்லாவற்றையும் கற்றுக் குடுக்கச் செய்தார். நடுநடுவே தானும் 'க்ளாஸ்' எடுப்பார்.
"மாதா, பிதா, குரு, தெய்வம்...இதான் ஸெரியான மொறை. மாதாவுக்குத்தான் மொதல் எடம். அம்மா சொல்லித்தான் ஒரு கொழந்தைக்கு அப்பாவைத் தெரியும். உபநயனம் பண்றச்சே, காயத்ரி உபதேஸிக்கறப்போ, அப்போல்லாம்.....அப்பாவே குருவா இருக்கறது....[இப்போதெல்லாம் பண்ணி வைக்கும் வாத்யார்தான், அப்பாவுக்கும் சேர்த்து உபதேஸம் பண்ணுகிறார்] அப்பாதான் ஒரு குருகிட்ட அழைச்சிண்டு போறார். குரு-ங்கறவர் நல்ல பழக்கம், நல்ல அறிவுக்கான பாடம், ஸ்லோகம், பகவானோட சரித்ரங்கள், நல்லது, கெட்டது-ன்னு எல்லாத்தையும் சொல்லிக் குடுக்கறார்....."
"எனக்கு என்னோட மாதா, பிதா, குரு, தெய்வம்.....எல்லாமே நீங்கதான் உம்மாச்சி!..."
வேதபுரியின் வெள்ளை உள்ளத்தின், வெள்ளையான வார்த்தைகள், உம்மாச்சியின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
"நீ ஶாஸ்த்ரிகள்கிட்ட கத்துக்கற பாடங்கள் எல்லாத்தையும், எழுதிப் பாரு! ஏன்னா... "படிச்சதை எழுதிப் பாரு! மறக்காம இருக்கும்"ன்னு என்னோட குரு எனக்கு சொன்னதை, இப்போ நா.....ஒனக்கு சொல்றேன்...."
விடுகதை விளையாட்டில் அம்மா, ஶாஸ்த்ரிகளிடம் பாடம் படிக்க அனுப்பியதில் அப்பா, படித்ததை எழுதிப்பார்க்கச் சொன்னதில் குரு என்று அந்த தெய்வமே அத்தனையுமாக வேதபுரி மாமாவின் வாழ்வில் அத்தனை கூத்தும் அடித்திருக்கிறது!
வேதபுரியிடம் பெரியவா வர்ஷித்த அன்பைக் கண்டு, 'பெரியவா மேலுள்ள அன்பால் மட்டுமே' பொறாமை கொண்ட சிலர், வேதபுரியை த்வேஷித்து, அந்த குழந்தை உள்ளம் வருந்தும்படி நடத்தினார்கள்.
பெரியவாளிடம் அவர்களைப் பற்றி 'குற்றப்பத்திரிகை' வாஸிக்க இஷ்டமில்லாமல், அதே ஸமயம் மனஸ் மிகவும் நொந்து போய், அழுகையை அடக்கிக் கொள்ள வழியும் தெரியாமல், பெரியவாளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல், ஊருக்குச் சென்றுவிட்டான் வேதபுரி.
செல்லப்பிள்ளையைக் காணாமல், விஜாரித்தார்.
"வேதபுரி எங்கடா?..."
"ஊருக்கு போய்ட்டான்.....பெரியவா"
உடனேயே ஆளனுப்பி, ஊரிலிருந்த வேதபுரியைத் தன்னிடம் அழைத்துக் கொண்டார். தன் எதிரே கண்ணீரோடு நிற்கும் அந்த அப்பாவியைப் பார்த்தார். அவர் அறியாததா?
"ஒன்னை யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே! ஏண்டா? ஒனக்கு யாருமே இல்லேன்னு நெனச்சுட்டியா? ஒனக்கு நா.....இருக்கேண்டா!..கவலைப்படாத! எங்கூடவே இரு..."
பகவானே! இது என்ன ப்ரேமை! என்ன மாத்ரு வாத்ஸல்யம்!
compiled & penned by gowri sukumar
No comments:
Post a Comment