Wednesday, July 29, 2020

பு.பக்கங்கள்... (சுஜாதா- 1992)

பு.பக்கங்கள்... (சுஜாதா- 1992)

மதுரை, நெல்லை, நாகை பயணம் பற்றி..

ஒவ்வொரு முறையும் மதுரை செல்லும்போது புதிய காட்சி களைக் காட்டும் விந்தை வற்றாத நகரம். இம்முறை சென்றபோது தியாகராஜா கல்லூரியின் தலைவி திருமதி. ராதா தியாகராஜன் `கணையாழி’ படிக்கிறார் என்ற செய்தியிலிருந்து பல விந்தைகள் தொடர்ந்தன.

முதல் விந்தை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்! நேரத்தில் வந்து நேரத்தில் புறப்பட்டது!

பின் அக்கல்லூரி மாணவிகள் பாரலல் ப்ராஸஸிங் (Parallel Processing), ஆப்ஜெக்ட் ஓரியண்டட் ப்ரொக்ராம் (Object Oriented Programme) பற்றியும் சந்தேகம் கேட்டது அடுத்த விந்தை.

மதுரை எனும் விசித்திரக் குழப்பம். நான் சென்ற மீனாட்சி ஆலயத்தில் அன்று முஹூர்த்த தினம். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிய மண்டபத்தில் தூணுக்குத் தூண் திருமணங்கள் நடந்துகொண்டிருந்தன. அருகாமை கிராம மக்களின் எளிமையான திருமணங்கள். கண்களில் அறியாமையும் கண்ணீரும் கலந்திருக்க, அடுத்த வருஷம் உத்தரவாதமாக பிள்ளை பெறப்போகும் இளம் பெண்கள். அருகே பட்டு வேட்டி, சட்டை, நெற்றிக் குங்குமத்துடன் திருதிருவென விழிக்கும் மாப்பிள்ளைகள். தூணருகே சதா பேசிக்கொண்டிருக்கும் குடும்பப் பெண்கள். அம்பது ரூபாய் நோட்டுக்களை கவலையுடன் உதட்டில் உச்சரிப்புடன் எண்ணிக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள்.

பாண்டியர்கள் நாயக்கர் காலத்துச் சிற்பங்களில் சில தீவிர பக்தியால் அழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு வினாயக சிற்பத்தை யாரோ உப்பு வினாயகர் என்று புரளி கிளப்பிவிட, ஜனங்கள் அவரை உப்பால் வர்ஷித்து அதன் ரசாயனக் கொடுமைகளால் கரைந்து கொண்டிருக்கிறார். பத்ரகாளி, ஊர்தவ தாண்டவர் சிற்பங்களை வேண்டுதலுக்கு வெண்ணை உருண்டைகளால் அடித்து கோலிக்குண்டு சைஸில் அம்மைக் கொப்புளங்கள் போல், முழுக்க முழுக்க மறைத்து விட்டனர். எனக்குக் கவலையாக உள்ளது. அருகில் மஹாவிஷ்ணு தங்கையை சுந்தரேசுவரருக்குத் தரும் உலகப் பிரசித்தி பெற்ற சிற்பத்திற்கு இப்போதே காணிக்கையாக நெய் தடவத் துவங்கியுள்ளனர். கொஞ்ச நாளில் இதற்கும் வெண்ணை கோலி அடிப்பார்கள்!
***
நெல்லையில் நெல்லையப்பர் கோவிலுக்கு இந்த ஆபத்து இல்லை. அதன் ஆபத்து நிராகரிப்பு. ஏறக்குறைய மதுரை அளவு புராதனக் கோவிலாக இருந்தாலும் கூட்டமின்றி, வருவாயின்றி வாடுகிறது. நுழைவாசலில் அண்ணாந்து பார்த்தால் தெரியும் மரச் சிற்பங்கள் தென்னிந்தியாவிலேயே சிறந்தவை. உடனே கெமிக்கல் வார்னிஷ் கொடுத்து அவசரமாகக் காப்பாற்ற வேண்டும். உள்ளே கோவிலின் விஸ்தார அமைப்பு பிரமிக்க வைக்கிறது. ஆங்காங்கே தேவாரம் பாடும் சில நடுத்தர மற்றும் வயதான பெண்களைத் தவிர யாருமில்லை.

நீர் ததும்பும் குளங்களை அணைத்துக் கொண்டிருக்கும் பச்சை வயல்கள் சூழ்ந்த நெல்லை நகரின், எங்கு பார்த்தாலும் தென்படும் பெயருக்கு உரிய ஆர்.எம்.கே. விசுவநாதனை `நெல்லையின் நல்லி’ என்கிறார்கள். இளைஞர்; இலக்கிய ஆர்வமுள்ளவர். மனோன்மணீயம் சுந்தரனார் (எம்.எஸ்.) பல்கலைக் கழகத்து மாணவர்கள் கணிப்பொறி இயலில் செமினார் நடத்த உதவுகிறார். எம்.எஸ்சி., எம்.சி.ஏ. மாணவர்கள் வசதிகளும், ஆசிரியர்களுமின்றி அல்லல்படுகிறார்கள். ஆர்வம் ஒன்றுதான் இந்த கணிப்பொறி ஏகலைவர்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.
**
நாகப்பட்டினத்துக்குப் போகும் வழியில் நீடாமங்கலம் – திருவாரூர் வரை காவேரி உடன் அழைத்துச் செல்கிறது. திருச்சிக்கு ஜெயலலிதா வந்த பாக்கியத்தால் இரண்டு நாட்களில் நல்ல மழை பெய்தது என்று மேடையில் சொல்கிறார்களாம். (அனைத்து அரசியல் கூட்டங்களிலும் ஆளும் கட்சிப் பேச்சாளர்கள் சென்னை நோக்கிக் கும்பிட்டுவிட்டுத்தான் துவங்குகிறார்களாம்!) எது எப்படியோ காவிரியில் நீர் ததும்ப கரையெல்லாம் பசுமை. நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிநேகமாக ஆக்கிரமித்த ஈர நெல் வாசனை.

திருவாரூக்குப் பின் காவேரி அவ்வபோது கண்ணாமூச்சி காட்டி மறைகிறது. `உன் கண்ணில் நீர் வழிந்தால்’’ என்பதை `ஊட்டியில் ரஜினி’ என்று பேர் மாற்றி டெண்ட் கொட்டகையில் ஓட்டுகிறார்கள்.

நாகை துரைசாமி நாடார் – மரகதவல்லி அம்மாள் ஏ.டி.எம். பெண்கள் கல்லூரியில் மாடி ஏறும்போது நிசப்தமாக இருந்தது. என்ன ஒரு 10.. 15 பேர் காத்திருப்பார்கள் என எண்ணி ஹாலுக்குள் நுழைந்தால் 900 மாணவிகள்! மிக மிக ஒழுங்காக, அமைதியாக, ஆர்வமாக என் பேச்சைக் கேட்டனர். முதலில் கேள்விகள் கேட்க தயங்கிவிட்டு பின் முதல் பெண் கொடுத்த தைரியத்தில் பலர் முன் வந்தார்கள்.

காதலில் நம்பிக்கை இருக்கிறதா... எழுத்தால் சமுதாயத்தை எப்படி மாற்றுவது..? போன்ற சம்பிரதாயமான கேள்விகளுக்கிடையில், ``பிரம்மம் என்றால் என்ன?’’

பின் கல்லூரிப் பத்திரிகையில் அப்பெண்கள் எழுதிய கவிதைகள் சில கணையாழி தரத்துக்கு இருந்தன.

    பிள்ளையைச் சிங்காரித்து
   பள்ளிக்கு 
   அனுப்புகிறாள் தாய்
   புதிய கல்விக்கல்ல
   மதிய உணவுக்கு!

இப்பெண்களை நல்ல சூழலில் போதிக்கும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷாநவாஸ் அப்துல் காதர் அவர்களைப் பாராட்டவேண்டும்.

துறைமுகத்தில் ஒரே ஒரு கப்பல் மிளகுக்கும், வெங்காயத்துக்கும் காத்திருக்கிறது. நாகூர் வேளாங்கண்ணிக்கு விந்தைகளையும் சிகிச்சைகளையும் விரும்பி நம்பி வரும் கூட்டத்துடன் இப்போது நரிமணம் எண்ணைக்காக வருபவர்களும் சேர்ந்திருந்தாலும், முனிசிபல் சுத்தம் இன்றி தெருக்களின் குறுக்கே ஓடும் சாக்கடைகள்.

இத்துடன் சுமார் 20 மைல் தொலைவில் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் நின்ற திருக்கோலம். நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கை போன்றவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாடல்கள் பாடிய ஸ்தலம். குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டுக்கள் கொண்ட இப்புராதன கோயில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்டது. ``அம்மாவசைக்கு கைத்தல சேவைக்கு வந்தேள்னா பொங்கல்  பேஷா இருக்கும்; அர்த்தஜாமத்தில் முனையத்தரையன் பொங்கல் உண்டு’’ என்று நாக்காசை காட்டினாலும் தங்க முடியாமல் கம்பன் எக்ஸ்பிரஸ் பிடித்து வந்துவிட்டேன். அய்யங்கார் கோயில்களில் இது விசேஷம். ஆழ்வார் பாசுரத்தில் தின்னுவதற்கு ஏதாவது வர்ணனை இருந்தால், சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவதில்லை. அக்கார அடிசில், புளியோதரை என்று தின்றே தீர்க்கும் கோஷ்டி!

தஞ்சை, தென்பாண்டி நாடுகளில் ஆங்காங்கே சிறு சிறு கும்பல்களாக வாழ்கிறார்கள். சீக்கிரமே மறையப் போகிறார்கள். உடன் ஏதாவது செய்யாவிடில் ஒரு Extinct Species ஆகிவிடுவார்கள்.
                  ____

No comments:

Post a Comment