Monday, July 20, 2020

திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

🙏நமஸ்காரம்    

29. திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)

மூலவர் : குடமாடு கூத்தன்
தாயார் : அம்ருத கடவல்லி
உற்சவர் கோபாலன் - சுதுர்புஜங்களுடன்
நாமாவளி : ஸ்ரீ அமிர்த கடவல்லி ஸமேத ஸ்ரீ குடமாடு கூத்தன் சுவாமியே நமஹ
தீர்த்தம் : கோடி தீர்த்தம், அம்ருத தீர்த்தம்
விமானம் : உச்சஸ்ருங்க விமானம்

வழித்தடம்:

நாங்கூரிலேயே அமைந்துள்ள திவ்ய தேசமாகும். சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல். அரிமேய விண்ணகரம் என்றால் அனைவருக்கும் தெரியாது. குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.

பாசுரம் & விளக்கம்:

வஞ்சனையால் வந்தவள் தனுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.
      - பெரிய திருமொழி (1246) 

ஹரி வந்து மேவியிருக்கும் (தங்கியிருக்கும்) விண்ணகரம் இதுதான் என்று திருமங்கை அறுதியிட்டுக் கூறுகிறார். மாமறையோர் மாமலர்கள் தூவி அஞ்சலித்து ஹரியே சரணம் என்று வணங்கும் விண்ணகர் என்று புகழ்கிறார். உள்ளத்துட கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரியென்ற - என்னும் ஆண்டாளின் திருப்பாவையை மங்கை மன்னன் குறிப்பால் உணர்த்துகிறார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம்.

பாசுரம் பதவுரை:

வஞ்சனையால் வந்தவள்தன் உயிர் உண்டு - கபட வேஷத்தோடு வந்தவளான பேய்சியினுடைய உயிரை ஹிஞ்சி யுண்டவனாயும்
வாய்த்த தயிர் உண்டு - கையிலகப்பட்ட தயிரையெல்லாம் உண்டவனாயும்
வெண்ணெய் அமுது உண்டு - வெண்ணெயை அமுது செய்தவனாயும்
வலிமிக்க கஞ்சன் உயிர் அது உண்டு - பலசாலியான கம்ஸனுடைய உயிரை அபஹரித்தவனாயும்
இ உலகு உண்ட - இவ்வுலகங்களையெல்லாம் (பிரளயக்கடல் கொள்ளாதபடி) அமுது செய்தவனாயுமுள்ள
காளை - யுவாவானவன் கருதும் இடம்
காவிரி - காவிரியாறானது
சந்து அகில் கனகம் ;உந்தி - சலதன மரங்களையும் அகில் மரங்களையும் ஸ்வர்ணங்களையும் தள்ளிக் கொண்டு வந்து  மஞ்ச உலவு பொதுழிலூடும் வயலூடும் வந்து வளம்கொடுப்ப - மேகமண்டலத்தளவும் ஓங்கின சோலைகளிலும் கழனிகளிலும் தபிரவேசித்து (அவற்றுக்குச்) செழிப்பையுண்டாக்கப் பெற்றதும்
மா மறையோர் மாமலர்கள் தூவி அங்கு அஞ்சலித்து - மஹா வைதிக ப்ராஹ்மணர்கள் சிறந்த புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கே கை கூப்பி நின்று
அரிசரண் என்று இறைஞ்சும் - ‘ஹரி’ உன் திருவடிகளை சரணம் என்று சொல்லி வணங்கப் பெற்றதுமான
அணிநாங்கூர் - திருநாங்கூரிலே
அரிமேய விண்ணகரம் - வணங்கு

ஸ்தல வரலாறு:

உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், “உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.  குடங்கள் எடுத்து ஆடுபவன் என்று குடையாகக் குன்றத்தை எடுத்து கோபலர்களையும் ஆவினங்களையும் காத்தருளின கோவர்த்தன நாதனே இங்கு எழுந்தருளியுள்ள 11 பெருமான்களுள் ஒருவராக இருப்பதால் அந்த கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த நிகழ்ச்சியே இங்கு மறைமுகமாக உணர்த்தப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.

சிறப்பு

சுவாமி கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும்படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக்கொண்டு வந்தவர் என்பதால் இவரை “குடமாடு கூத்தன்’என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர்புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார்.

திருமங்கையாழ்வார் இத்தலத்திற்குத் தாம் உகந்தருளின பாக்களில் 8 பாசுரங்களில் எம்பெருமான் தேவர்கட்காக அமிர்தம் கடைந்து அசுரர்களை வென்றதையும், மாவலியை அடக்கியதையும், இராவண சம்ஹாரத்தையும், பூதனையை மாய்த்ததையும் கூறி பகைவர்களை வெல்ல அருள் பாலிப்பவர் இவரே என்று தலைக்கட்டுகிறார்.

அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு “அரியமேய விண்ணகரம்’ என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடிமரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச்சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம்.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/TWx2Nt2I74Y

No comments:

Post a Comment