Friday, July 31, 2020

மலைநாட்டுத்திருப்பதிகள் பகுதி 23

மலைநாட்டுத்திருப்பதிகள்(கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி23
(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி22
திருவல்லவாழ்மார்பனை சேவிக்காவிட்டாலும் துவஜஸ்தம்பத்த சேவிச்சுட்டு ஒன்பது மலை நாட்டு திவ்ய தேசங்களை சேவிச்ச திருப்தி வரது.  இன்னும் நாலு எங்கே எப்போன்னு கேக்கறோம். நாலும் இங்கேர்ந்து 30 கிமீ சுத்தளவுளதான். இன்னிக்கு இந்த ஊர்லயே தங்கிட்டு நாளைக்கு கார்த்தால ஒரு ஆட்டோ பேசி போகலாம்கிறார். ஆனா சரியான ரூம் கிடைக்கல. அவரே மேப் பார்த்துட்டு செங்கனூர் பக்கத்துலதான். அங்க போய் ரூம் போட்டா அந்த ஊர்லயே இருக்கற தர்மர் ஷேத்திரம் சேவிச்சுடலாம். ஏற்கனவே சகாதேவன் ஷேத்திரம் திருக்கடித்தானம் ஆச்சு. நாளைக்கு பீமன் அர்ச்சுனன் தொடர்பான ஷேத்திரம் சேவிச்சுட்டா பிரயாணம் முடிஞ்சுடும்கறார். இன்னிக்கு சாயங்காலமும் டயத்தை வேஸ்ட் பண்ணாம பெருமாள் சேவை ஏற்பாடு செய்யற எங்காத்துக்காரர் சமத்தை நெனச்சு சந்தோஷமா இருக்கு. 
செங்கனூர்ல ரூம் கெடைக்கறது. 
ஆனா செங்கனூர் வந்த உடனே இந்த ஊர் பகவதி அம்மன் பிரசித்தம்..இன்னிக்கு சேவிச்சுடுவோம். நாளைக்கு ஒரே நாள்ல நாலு பெருமாளையும் சேவிக்கலாம்கறார். பரண்யாசம் பண்ணின்டதால (நாராயணனை அன்றி புற தெய்வம் தொழாத வைணவ சன்னியாசம்)அப்பாவும் அக்காவும்்வரலேன்னுடறா..
நான் மட்டும் கெளம்பி போறேன்.  
இக்கோவில் செங்கன்னூர் மகாதேவர் கோவில் என்றும், செங்கன்னூர் பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய மகாதேவர் சன்னிதியும், சன்னிதியின் பின்புறம் மேற்கு நோக்கிய பகவதியம்மன் சன்னிதியும் உள்ளன.

அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. 

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும்.
இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.
இக்கோயிலில் 
திருவல்லாவில் ஆண்கள் மட்டும் தரிசிக்கும் பெருமாள் கோயில் மாதிரி செங்கனூர் பகவதியை குறிப்பிட்ட நாட்களில் பெண்களின் கண்காணிப்பில் தரிசனம் செய்கிறார்கள் என்பதை கேள்விப்படும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. 
மறுநாள் கார்த்தால நாலு கோயிலுக்கும் ஒரு ஆட்டோக்காரரை ஏற்பாடு செய்து முதலில் உள்ளூர் திருச்செங்குன்றூர் கோயிலை அடையறோம். 
அப்பா வழக்கப்படி ஸ்தல வரலாறு புஸ்தகம் வாங்கி படிச்சி சொல்றார்.  

தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் மகாவிஷ்ணு காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.

மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.

அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.

உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.

கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.

மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.

தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.(படம் செங்கனூர் பகவதி அம்மன் கோயில்)
      கதை தொடரும்…..
(இலவச பிராமண திருமண தகவல் பதிவிட 6381369319 என்ற எண்ணிற்கு மாட்ரிமோனி என வாட்சப் மெசேஜ் அனுப்புக)

No comments:

Post a Comment