Wednesday, July 22, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 13

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி 13(6381369319)

இனி அவர் பார்வையில்….
இந்த மலை நாட்டுத்திருப்பதிகள் (ஆழ்வார் பாடல் பெற்ற தலங்கள்) (மொத்தம் 13 )செல்ல எளிய பயணத்திட்டம் ….13 ல் இரண்டு (திருப்பதி சாரம்,திருவட்டாறு )தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ..பின் அருகில் உள்ள திருவனந்தபுரம் மூன்றாவது. மற்ற 10 ல் திருநாவாய் கேரளத்தின் வடக்கே உச்சியில் உள்ளது. அதை தரிசிக்க திருவனந்தபுரம் -கோழிக்கோடு ரயிலில் சென்று குட்டீபுரம் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்டோம். இனி மீண்டும் தெற்கு நோக்கி பயணித்து முதலில் திருவித்துவக்கோடு..அருகில் குருவாயூர் (இது புகழ் பெற்ற ஸ்தலம் மட்டுமே. ஆழ்வார்கள் காலத்திற்கு பிந்தையது..
பின்னர் ஆல்வாய் அல்லது கொச்சி அருகில் தங்கி இரண்டு தலங்கள் 
செங்கனூர் அருகில் ஆறு தலங்கள். 
இப்படி நான்கு அல்லது ஐந்து இடங்களில் தங்கி தரிசிக்க திட்டம் போட்டால் எளிதாகும். 
நீங்கள் 10 பேருக்கு மேல் உள்ள குழு என்றால் நாகர் கோயில் அல்லது கன்னியாகுமரி சென்று முதல் மூன்று தலங்களை தரிசித்து பின்னர் அங்கிருந்து வேன் பேசி மூன்று நாட்களில் தரிசித்து திரும்பலாம்.. (1000 கிமீ போகவர)

முதலில் திரு வித்துவக்கோடு. 
70 களில் பதினொன்றாம் வகுப்பில் படித்தவர்களுக்கு தமிழ் பாடத்தில் இந்த குலசேகர ஆழ்வார் பாடல் நினைவு வரும்..
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.
திருநாவாயிலிருந்து மீண்டும் குட்டீபுரம் வந்து ட்ரெயின் பிடித்து பட்டாம்பி ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். ஆனால் திருவிச்சிக்கோடுனு திருமித்தக்கோடுனு சொன்னால்தான் இங்குள்ளவர்களுக்கு புரியும்.  
கோயில் வரலாறு...
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்தியப் பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காகக் கோயில் கட்டிச் சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்படுகிறது.

சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனி சன்னதி உள்ளது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தங்களது வன வாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கிப் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.  
  
வெகு காலத்திற்கு பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது.

நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்று, அங்கேயே தங்கி வெகுகாலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் வந்தது. இதைக்கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் கிளம்பும் போது, இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும், முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்த கோயிலை கண்டு, தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டு குளிக்கச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே, பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும், இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரை தரிசிக்கும் முன் இந்த சிவலிங்கத்தைத் தரிசித்து செல்லவேண்டும்.

கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் “ஐந்து தல மூர்த்தி தலம்” என அழைக்கின்றனர்.

காசிவிஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கபடுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பதமாசனி நாச்சியார். என்பதாகும். இதலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்வ காஞ்சன விமானம் அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர். கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச்சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜுனன் தவம் செய்த காட்சி, கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை மிகவும் அற்புதமாக உள்ளது

மனிதனாகப் பிறந்தால் தெரிந்தோ, தெரியாமலோ ஏதோ ஒரு பாவத்தை தினமும் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி செய்கின்ற பாவம் திடீரென்று ஒன்று சேர்ந்து நமது எதிர்காலத்தை கவிழ்த்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் பஞ்சபாண்டவர்கள் தவமிருந்து பெருமாளை வணங்கிய திருவித்துவக்கோடு புண்ணிய ஸ்தலத்திற்கு கண்டிப்பாக நாம் சென்று வருவது நல்லது.
பாரதப்புழா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இக் கோவில் காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 
                     தொடர்வது குருவாயூர்


No comments:

Post a Comment