மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்) பகுதி20.
(By சுஜாதா&வெங்கடேசன்). (6381369319)
திருக்காட்கரையப்பனோட ஆறு திவ்யதேச தரிசனம் கிடைச்ச பாக்யத்தை நெனச்சும் இதே மாதிரி இன்னும் ஒரு நாளைக்குள்ள மத்த பெருமாளும் சேவை தரனுமேங்கற கவலையோட ஆல்வாய் திரும்பறோம். இவர் மட்டும் நதிக்கு அக்கறைக்கு போட்ல போய் ஒரு சிவன் கோயில்ல தரிசனம் பண்ண போயிட்டார். பக்கத்துல ஒரு ஓட்டல்ல எதையோ குண்டு குண்டா சாதத்தோட கொறிக்கறோம்.
கார்த்தால திரு மூழிக்களத்துல ஆறு ஓடறது. அங்கேயே போய் தீர்த்தமாடலாம்னு அழைச்சின்டு போறார்.
கோயிலை ஒட்டியே ஆறு ஓடறது. பாரதப்புழாதான். பிரபாகமா ஓடற ஆறுல ஸ்நானம் செய்வதும் அந்த ஃப்ரெஷ்னஸோட பெருமாள் சேவிக்கறதும் வாழ்க்கையில் எப்பவாவது கிடைத்தீலும் ஒவ்வொருவரும் அனைபவிக்க வேண்டிய ஒன்னு. இது தமிழ்நாட்டுல ஆறை ஒட்டி கோயில் இருந்தாலும் ஆறு நிறைய தண்ணீரோட நீராடற அனுபவம் கிடைப்பது இல்லை.
ஒரு முனிவர் ஆற்றில் நீராடியபோது, இராமர், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோரது விக்கிரகங்கள் கிடைத்தது. அன்றிரவு இவரது கனவில் தோன்றிய பகவான், இந்த விக்கிரகங்களை பாரதப்புழா ஆற்றின் கரையோர தலங்களில் பிரதிஷ்டை செய்யக் கூறினார். இத்தலங்கள் தான் திருச்சூர் மாவட்டம் திருப்பறையார் இராமர் கோயிலாகவும், இரிஞ்சாலக்குடாவில் பரதன் கோயிலாகவும், பாயமல்லில் சத்ருக்கன் கோயிலாகவும், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களத்தில் லெட்சுமணப்பெருமாள் கோயிலாகவும் அமைந்துள்ளது.
இராமாயணம் சம்பந்தப் பட்ட சில வரலாற்றுச் செய்திகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. குறிப்பாக பரதனுக்கு மிகப்பெரிய வரலாறும் மதிப்பும் உண்டு என்பதை திருமூழிக்களம் கோவிலில் காணலாம். பெருமாளின் திவ்ய தரிசனமும், அண்ணன், தம்பிகளுகிடையுள்ள பிரிவுகள் அரை நொடியும் நீங்கி விடும் என்பதற்கு உதாரண பூமியாகவும், திருமூழிக்களம் இன்றைக்கும் விளங்குகிறது.
. இங்குள்ள திருமால் கோயில்களில் பெருமாள் பெயரோடு கூடவே 'அப்பன்' என்று சேர்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு. மூலவர் திருமுழிக் காத்தான் அப்பன். ஸ்ரீ ஸிக்திநாதப் பெருமாள் என்ற பெயரும் உண்டு. நின்ற கோலத்தில் சாதிக்கிறார். தாயார் மதுரவேணி நாச்சியார். தீர்த்தம் பெருங்குளம். சங்க தீர்த்தம் சிற்றாறு. சௌந்தர்ய விமானம். ஹரிதமகரிஷிக்கு பெருமாள் திவ்ய தரிசனம் செய்த புண்ணிய ஸ்தலம்.
இந்தப் பெருமாளை லட்சுமணனாக எண்ணி வணங்குகிறார்கள். மிகவும் புகழ்பெற்ற ஹரித மகரிஷி இந்த தலத்தில் பல வருஷம் தவம் இருந்து, பெருமாளுடைய தரிசனம் கண்டார்! அப்போது அவர் ' அர்ணாச்சரம் தர்மங்களையும், ஐந்து காலங்களில் செய்யவேண்டிய அனுஷ்டானங்களையும் சொல்லித் தரும் ஸ்ரீ ஸுக்தி எனும் மொழியை இயற்றினாராம்! அதனால்தான் இங்குள்ள பெருமாளுக்கு, திருமொழி களதான் என்று பெயர் வந்தது. அதோடு இந்த புண்ணிய ஸ்தலம் திருமொழி களத்தான் என்று மாறியது.
இராமபிரானை அயோத்திக்கு திரும்ப அழைத்து போக வந்த பரதனை - லட்சுமணன் சந்தேகப்பட்டு கொல்ல நினைத்தான். பிறகு தான் தன் தவற்றை உணர்ந்தான். தனது தவறான எண்ணங்களில் பாவத்தை சம்பாதித்து விட்டதாக எண்ணி, லட்சுமணன் திருமூழிக்களத் தானிடம் அடிபணிந்தான். அப்பொழுது பரதனே இங்கு வந்து. லட்சுமணனை ஆலிங்கனம் செய்து கொண்ட சம்பவம் இங்குதான் நடந்தது! பரதனும் லக்ஷ்மணனும் சேர்ந்து இந்த ஊர் பெருமாளை வணங்கினார்கள் என்பது வரலாறு. திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் இந்த கோவிலுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.
பரிகாரம்
குடும்பத்திலுள்ள தகராறுகள் உடனடியாக விலகவும், பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேரவும், கோபத்தினால் செய்த தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்யவும் அது விசயமாக ஏற்பட்ட கசப்புணர்வு விலகவும், வேத பாடங்களை கற்று முன்னுக்கு வரவும், இறை பக்தி குறையாமல் இருக்கவும், சகலகலா பெருமைகளையும் அடையவும், இந்த திருமுழிக்களப் பெருமாளை தரிசனம் செய்வது அற்புதமான பலனை அளிக்கும்.
இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி: மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம்,பூர்ண நதி ஆகியன. விமானம்:சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
தொடரும்
No comments:
Post a Comment