🙏 நமஸ்காரம்
38 திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்)
மூலவர் - அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன் (கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்)
தாயார் - அலர்மேல் மங்கை
உற்சவர் - சீனிவாசன்
தாயார் உற்சவர் பத்மாவதித் தாயார் பூவார் திருமகள்
நாமாவளி - ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ கண்ணநாராயணாய நமஹ
விமானம் - தத்வத்யோதக விமானம்
தீர்த்தம் - திருவெள்ளக்குளம்
வழித்தடம்:
சீர்காழி தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரம்
பாசுரம்:
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய், நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே, எல்லா இடரும் கெடுமா றருளாயே
பெரிய திருமொழி (1313)
திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்
பாசுரம் பதவுரை:
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே!
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவானே - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!
செல்வா - செல்வனே!
எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய் - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும்.
ஸ்தல வரலாறு:
சூரிய வம்சத்தில் துந்துமாரன் என்ற மன்னனுக்குச் சுவேதன் என்றொரு புத்திரன் இருந்தான். அவனுக்கு ஒன்பதாவது வயதில் "மரணகண்டம்" என்று சாஸ்திர வாதிகளால் அறிந்ததும், அதற்கு பிராயச்சித்தம் காண தன்குல குருவான வசிட்டரை அணுகினார் மன்னன். அரசன் தன் மகனைக் காப்பாற்ற வசிஷ்ட முனிவரிடம் வேண்டினார். அதற்கு முனிவர் பெருமாளை வேண்டி தவமிருந்தால், மூவுலகையும் காக்கும் "ஸ்ரீமந்நாராயணன்" மகனையும் காத்தருள்வார் என்றார்.. வசிஷ்டர் கூறியபடி சுவேதன் இங்குள்ள புட்கரணியில் நீராடி வசிஷ்டர் கூறிய “நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை’ சீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள், சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது” என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று
சிறப்பு:
திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத் தான் “அண்ணா’ என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை “அண்ணா’ என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு “அண்ணன்’ ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் “அண்ணன் பெருமாள்’ என்றும் இத்தலம் “அண்ணன் கோயில்’ என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் “சீனிவாசன்’, தாயாரின் திருநாமம் “அலர்மேல்மங்கை’. திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்.
இத்திருத்தலத்தைத் 'தென் திருப்பதி' என்றும் அழைப்பர். இங்கே திருப்பதி போல் தலைமுடி காணிக்கை செலுத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கல்யாணமும் நடத்திக் கொள்கின்றனர்.
இங்குள்ள ஸ்வேத புஷ்கரணியில் உள்ள குமுத மலர்களைக் கொய்து செல்ல தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத் தளபதியாக விளங்கிய திருமங்கை மன்னன் இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து “திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் “திருமங்கை ஆழ்வார்’ என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருமலையில் ஸ்ரீனிவாசப் பெருமாள் தனித்து நிற்கிறார். அந்தக் குறையைப்போக்கிக் கொள்ள இங்கு அலர் மேல் மங்கைத் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். இது ஒரு சிறப்பம்சமாகும்.
திருமலையைப் போன்றே இங்கும் பிரம்மோத்ஸ்வம் புரட்டாசி மாதமே நடைபெறுகிறது.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/YWlc5HNUCWw
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/111726120627824/?sfnsn=wiwspmo&extid=oIMlL7B1EESdsLlu
No comments:
Post a Comment