Wednesday, July 29, 2020

க.பெ. 2005... சுஜாதா..

க.பெ. 2005... சுஜாதா..

அதிரவைத்த கடிதங்கள்...

சுஹாசினி மணிரத்னம் எனது `இருகடிதங்கள்’ எனும் கதையைப் படித்துவிட்டு, ஒரு நாடகமாக பின்னணி இசையுடன் நடித்து / படித்துக் காட்ட விரும்பினார். சம்மதித்தேன். அதை ஒத்திகை பார்க்கும்போது இருந்த பெண்கள் ஆடியன்சில் அது பெரும் பரபரப்பை விளைவித்தது என்றும். எழுதிய என்னை அவர்கள் சந்திக்க விரும்பினார்கள் என்றும் சொன்னார். ஆனால் நான் அவசரமாக ஹைதராபாத் செல்வதாகச் சொல்லித் தப்பித்தேன்.

மணிரத்னத்துக்கும் இதைப் படித்துக்காட்டியுள்ளார். எப்போதும் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசும் மணி, உடனே எனக்கு போன் செய்து diabaolic (கொடூரமான சிந்தனை) என்று அதன் தாக்கத்தைச் சொன்னார். சுகாசினி இவ்வாரம் அமெரிக்கா போயுள்ளார் அங்கும் இதைத் தக்க சேர்மானங்களுடன் ஆங்கிலத்தில் படித்துக்காட்டப் போவதாகச் சொன்னார். அங்குள்ள இந்தியர்களிடம் இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று அனுமானிக்க முடியவில்லை.

`இரு கடிதங்கள்’ ஒரு தாய் தன் மகளுக்கு அடுத்தடுத்து எழுதும் இரு கடிதங்களின் வடிவில் எழுதப்பட்ட சிறுகதை. இதை கணையாழிக்கு முதலில் அனுப்பியபோது, கஸ்தூரி ரங்கன் இதைப் போடறேன். ஆனா.. என்ன ஆள்டா நீ?’ என்று அதட்டிவிட்டுத்தான் பிரசுரித்தார். தாய் ஒரு கெமிஸ்ட்ரி பேராசிரியை. அவள் மகள், தன் கணவன் பரஸ்திரீ வைத்திருப்பதையும் அவளை வீட்டுக்குக் கொண்டுவர முயற்சிப்பதையும் பற்றி வருத்தப்பட்டு எழுதிய இரு கடிதங்களுக்கு தாயின் பதில் கடிதங்கள் இதன் வடிவம். முதலில் சம்பிரதாய உபதேசம். இரண்டாவதில் அதிரடி உபதேசம்.

பரீக்க்ஷா குழுவினரும் சில ஆண்டுகளுக்கு முன் இதை `சரளா’ எனும் ஓரங்க நாடகத்துடன் சேர்த்து நாடகமாகச் செய்தனர். அசோகமித்திரன் அன்று `இதைப் பற்றி என்ன சொல்றதுன்னு தெரியலே’ என்று இடது கைப்பாராட்டு அளித்தார். இக்கதை என் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ தொகுப்பில் உள்ளது.

நாம் வாழும் ஆணாதிக்க சமுதாயத்தை ஓரளவுக்குச் சகித்துக் கொள்ளும் பெண்கள் தங்கள் மனைவி ஸ்தானம் பறிபோகிற நிலையில் எல்லைகளைத் தாண்டுவார்கள் எனும் கருத்தை வலியுத்தும் இக்கதை அதன் யதார்த்தத்தில் பொதிந்திருந்த பயங்கரத்தால் தான் பலரைச் சங்கடப் படுத்தியிருக்கிறது.

சுகாசினி ஒரு நல்ல வாசகி. ``தமிழ், தெலுங்குப் படங்களில் மிகவும் பிஸியாக இருந்த காலங்களில், ஷாட் முடிந்தவுடன் உங்கள் கதைகளை ஓரமாய் அமர்ந்துகொண்டு படித்து ரசித்து, எனக்குள் சிரித்துக் கொண்டிருப்பேன். மற்றவர்கள் ``அப்படி என்னதான் இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?’’ என்று கேட்பார்கள் என்பார்.

கணேஷ்-வஸந்த் தொடரை சன் டி.வி.க்காக அவர் செய்தபோது, `எதையும் ஒருமுறை’ போன்ற கதைகளை திறமையாகவே எடுத்திருந்தார். இன்றைய தொ.காட்சி இழுவைகளை பார்க்கையில் சுகாசினி செய்தது ஒரு நல்ல முயற்சி. அதே போல் தூர்தர்ஷனைல் செவன்த் சேனல் நாராயணன் தந்த ``ஸ்ரீரங்கத்து தேவதைகளும்,’ அருண்வீரப்பன் தந்த `என் இனிய இயந்திரா’ வும் ஓரளவுக்குச் சிதையாமலேயே வெளிவந்தன
                   ------------
இனி அடுத்த பகுதியைப் படிப்பவர்கள் சுஜாதா பற்றி வியந்து... பின் வருந்துவார்கள்.
                     -----------
`சண்டே எக்ஸ்பிரஸ்’ சுசீலா ரவீந்திரன், அதன் புதிய வடிவத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு சிறப்பிதழ் கொண்டுவரப் போவதாகவும் அதில் இனி வரும் 2010ம் தேதியிட்ட ஓரு கட்டுரையோ, கதையோ எழுதிக் கொடுக்கச் சொன்னார். நான் யோசித்துச் சொல்கிறேன் என்றேன். 2010 என்பது அருகிலும் இல்லை வெகு தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம்.. (அதாவது இன்னும் 5 வருடங்களுக்குப் பின்) அது பற்றி எழுதுவது `நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.

புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர்நீட்டினால் 2010ல் செல் போன்கள் இரட்டிப்பாகும். மக்கள் தொகை 118 கோடியாகும். போக்கு வரத்து அதிகமாகி அனைவரும் மாஸ்க் அணிவோம். சில வியாதிகள் வெல்லப்படும். எய்ட்ஸ் தடுப்பு கண்டுபிடிக்கப்படும். பெண்கள் வருடத்தில் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்; ஆண்கள் அதிகளவில் தலைமுடியை இழப்பார்கள். ஒரு பெரிய மதக்கலவரம் இந்தியாவில் வரும். ராகுல் பிரதமர் ஆவார். தமிழகத்தில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க. ஆட்சி நடக்கும். பாட்டே இல்லாத தமிழ்ப்படம் வரும்.

இர்ஃபான் பதான் அல்லது கைஃப் கேப்டனாக வருவார். டெண்டுல்கர், ட்ராவிட், சேவாக் யாரும் ஆட மாட்டார்கள். டால்மியாதான் கிரிக்கெட் சேர்மனாக இருப்பார். லாலுதான் பீகார் பிரதமர். சானியா மிர்சா விம்பிள்டன் அரையிறுதிகளிலும் வருவார். அல்லது திருமணம் செய்துகொள்வார். சினிமா தயாரிப்பாளர்களின் பிள்ளைகள் படம் எடுப்பார்கள். சென்செக்ஸ் (பங்குச் சந்தை) பத்தாயிரத்தைத் தாண்டும்; அலுவலகத்தில் செய்வது அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடியும்.

கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும். வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள், சிறுகதைகள் அறவே நீக்கப் பட்டு, முழுக்க முழுக்க பெண்கள் படங்களாக ஓரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும். செய்தித் தாள் படிப்பதற்கு காசும், பிஸ்கட்டும் இலவசமாகக் கொடுப்பார்கள்.

தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள். அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் மிச்சமிருக்கும். மற்றொரு சுனாமி வரும். ஒரு கடலோர நகரம் அழியும்.

முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம். புத்தகம் வெளியீடு, படிப்பு குறையும். விவாகரத்து அதிகரிக்கும். மனநோய் மருத்துவமனைகளில் இடம் போதாது.... இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சினை என்னவெனில், 2010ல் நான் பிழைத்திருந்து.. ``என்னய்யா... அப்படிச் சொன்னார் நடக்கவில்லையே?’’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்துக் குடிக்கக் காத்திருப்பார்கள்!

சுசீலாவுக்கு 2009 தேதியிட்ட டயரிக் குறிப்பு எழுதுவதாகத் தீர்மானித்தேன்.
***

(சே.... அதான் 70 சதம் நடந்து தொலைந்து விட்டதே... சொன்னபடி நீரும் பிழைக்காமல் போய்த் தொலைந்து விட்டீரே.. இதையும் எதற்கு ஐயா லிஸ்ட்டில் சேர்த்துத் தொலைத்தீர்...? சுய சாபமா?... எனது குமுறல்..அத்துடன்.. அனைவரும் மாஸ்க் அணிவோம்.....! ஆஹா.. (இந்த கோவிட்19 காலத்துக்கு) என்ன பொருத்தம்.. என்ன தீர்க்க தரிசனம்.. உடனே மீண்டு வாரும். ஒரு பாராட்டு மாலை வாங்கிக் கொண்டு மறுபடி உறக்கத்தை தொடரலாம்.)
-------------------------------------------------------------------------------------------------------------
’’விஞ்ஞானம், கேள்விகளாகக் கேட்டு தவித்துக் கொண்டிருக்கிறது!" - சுஜாதா #MissYouSujatha
சக்தி தமிழ்ச்செல்வன்
பல்சுவை
ஒரு பெயர், அதற்குப் பின்னால் நிரந்தரமாக ஓர் ஆச்சர்யக்குறி - சுஜாதா. இவர், தனது சுவாரஸ்யமான எழுத்துகள் வழியே இந்தத் தலைமுறை வாசகர்கள் பலரையும் தன்வசப்படுத்தியவர். சுவாரஸ்யமான நடை, ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இவைதாம் சுஜாதாவின் சாராம்சம். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100 நாவல்கள், அறிவியல் கட்டுரைகள், மேடை நாடகங்கள் எனப் பல்வேறு படைப்புகளைக் கொடுத்தவர். இலக்கியம் மட்டுமன்றி, தமிழ் சினிமாவின் பல்வேறு வெற்றிப் படங்களிலும் சுஜாதாவின் பங்களிப்பு உண்டு. 

சாதாரணமான ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு அதை தனது `அட' போடவைக்கும் எழுத்துநடையால் அற்புதமான ஓர் அனுபவத்தை வாசகனுக்குக் கடத்துபவர். சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங்கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் மிகப் பிரபலம். வாசகர்கள், தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் நிலையில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன.

அந்த அளவுக்கு அவரது எழுத்தின் மீது வாசகர்களுக்குத் தீராக்காதல் இருந்தது... இருக்கிறது. அவரது கதைகளைப்போலவே சுஜாதாவும் சுவாரஸ்யமான மனிதர்தான். தனது எழுத்துகளை, குறிப்பிட்ட ஒரு வகைமைக்குள் வைத்துக்கொண்டதில்லை அவர். அறிவியல் புனைவு கதைகள், த்ரில்லர் கதைகள் என எல்லா ஜானர்களிலும் தனது டிரேட்மார்க்கைப் பதித்தவர்.

அவர் தனது கதைகளில்கூட தனது குறும்பான நடையைச் செய்திருக்கிறார். `நைலான் கயிறு' என்ற அவரது முதல் நாவலில் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார்.

மெதுவாக ஐந்தாவது மாடிக்கு
    ற
        ங்
            கி
               னா
                      ன். 

இதுபோன்ற சுவாரஸ்யம்தான் அவரது பிரதானம். அவரது மற்றொரு சிறுகதையில் ஒரு கதாபாத்திரத்தை இப்படி அறிமுகப்படுத்துவார். `அவர் மிகவும் அப்புராணி. எந்த அளவுக்கு என்றால், பத்திரிகையில் வரும் செய்திகளையெல்லாம் உண்மை என நம்பக்கூடிய அளவுக்கு' என்று எழுதியிருப்பார். 

சுஜாதா, அறிவியல் மீது  தீராக்காதல் கொண்டவர். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் பி.இ. (மின்னணுவியல்) பயின்றார். விமானப் போக்குவரத்துத் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரேடார் ஆய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அங்கு பொது மேலாளராக உயர்ந்தார்.  இவரும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் வகுப்புத் தோழர்கள். 

சுஜாதாவின் திரைப்படப் பங்களிப்பு, பல படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. `முதல்வன்' படத்தில் பத்திரிகையாளரான அர்ஜுன், முதலமைச்சராக இருக்கும் ரகுவரனை நேர்காணல் செய்யும் அந்தக் காட்சி, சுஜாதாவின் மேதமைக்கு ஒரு சான்று. `ப்ரியா', `விக்ரம்', `ரோஜா', `இந்தியன்', `அந்நியன்', `கன்னத்தில் முத்தமிட்டால்', `எந்திரன்' எனப் பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `பாரதி' திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் சுஜாதாதான். `இந்தியன்' படத்தில் அவர் எழுதிய ஒரு வசனம் மிகப் பிரபலம்.  ``மத்த நாட்டுலயெல்லாம் கடமைய மீறுறதுக்குத்தான் லஞ்சம் வாங்குறாங்க. நம்ம நாட்டுலதான் கடமைய செய்றதுக்கே லஞ்சம் வாங்குறீங்க!"

``ஒன்றின்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது. நம்பிக்கை என்பது நங்கூரம்போல. நவீன விஞ்ஞானம், அதிகப்படியான கேள்விகள் கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது" சுஜாதா கூறிய வார்த்தைகள் இவை.

வெறுமனமே சுவாரஸ்யமான எழுத்துகளைத் தாண்டி, சுஜாதா எழுதிய மிக முக்கியமான சிறுகதை `நகரம்'. மதுரைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து தன் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மதுரை அரசு மருத்துமனைக்கு வரும் ஏழைத்தாயின் கதை அது. அந்தக் கதையில் நுணுக்கமான பல விஷயங்களைப் பதிவுசெய்திருப்பார் சுஜாதா. மருத்துவமனைக்கு எளியவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் வருகிறார்கள், நோய்மை குறித்து எந்த மாதிரியான பார்வை அவர்களுக்கு இருக்கிறது, உதவி செய்ய ஆள்கள் இருந்தும் அரசு மருத்துவமனையில் ஏற்படும் சிக்கல் என்ன... இப்படி அந்தக் கதையில் பல பரிமாணங்கள் விரியும். 

தனது 73-வது வயதில் 2008-ம் ஆண்டு சுஜாதா மறைந்தார். அப்போது நா.முத்துக்குமார் ஒரு கவிதை எழுதினார். `மரணம் என்ற கறுப்பு ஆடு, பல சமயங்களில் நமக்குப் பிடித்தமான ரோஜாக்களைத் தின்றுவிடுகிறது' என்று.

வீ மிஸ் யூ சுஜாதா!

No comments:

Post a Comment