Saturday, July 25, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 17

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).பகுதி 17
(By சுஜாதா&வெங்கடேசன்)( 6381369319)

நாராயணீயம் என்றால் குருவாயூரும் குருவாயூர் என்றால் நாராயணீயமும் நினைவு வருமே. 
                           ஸ்ரீ நாராயணீயம் , ஸ்ரீநாராயணீயமும் நாராயண பட்டத்ரியும்

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன், மேப்பத்தூர் என்ற ஊரில் பிறந்த நாராயண பட்டத்ரி அவர்களால் இயற்றப்பட்ட ஸ்லோகங்கள். ஸ்ரீ நாராயணீயம் என்ற . அற்புதமான, அழகான தொகுப்பு. ஸ்ரீமத் பாகவத ஸாராம்சம்.

 பட்டத்ரி, தனது தந்தையிடத்திலும், அச்சுத பிஷாரடி என்ற குருவிடத்திலும் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் போன்ற சாஸ்திரங்களைக் கற்றார்.

 அச்சுத பிஷாரடி வாத ரோகத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படுவதைக் கண்ட பட்டத்ரி, குரு தக்ஷிணையாக, அந்த வாத ரோகத்தை முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

 உடனே, வாத ரோகம், பட்டத்ரியைப் பீடித்து அதனால் மிகவும் அவதிப்பட்டார்.

 பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை.

 துஞ்சத்தெழுத்தச்சன் என்பவர் கவிஞர், பக்தர், ஜோசியர். அவர், பட்டத்ரியை குருவாயூருக்குச் சென்று “நாவிலே மச்சம் தொட்டு உண்” என்று பணித்தார்.

 அறிவற்றவர்களாய் இருந்தால், மீனை உண்ணச் சொல்கிறார் என்று நினைத்திருப்பார்கள். 

ஆனால், பட்டத்ரிக்கு மச்சாவதாரம் தொடங்கி பகவானை வர்ணிக்கச் சொல்கிறார் என்று புரிந்தது. 

உடனேயே, குருவாயூர் சென்று அங்குள்ள புண்யதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, சன்னிதியிலேயே அமர்ந்து, அவன் பெருமையைக் காவ்யமாக எழுத ஆரம்பித்தார்.

 அந்தக் காவ்யமே “ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன.

 100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன. சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன.

ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பாராம்.

 குருவாயூரப்பன் “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவாராம்.

 ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் "ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்" என்ற வரிகளை நோக்கும்பொழுது, நாராயண பட்டத்ரி தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறார் என்று தெரிகிறது. 

"என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற அவருடைய விசாலமான எண்ணம் தெரிய வருகிறது.

 இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும்.

 கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி.  நாராயணீயத்தில் பக்தியே பிரதானம்.  

ஆகையால், இதைப் படிக்கும்போது  பகவத் தியானமே  சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வருகிறது.

இந்த தெய்வீக நூல் கவிநயமான வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து சமஸ்கிருத மொழியில் வழங்கியுள்ளார். இதை படிக்கும் போது ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா உங்கள் முன் இருப்பதாய் தோன்றும். 
இதை எழுதி முடித்ததும், அவருடைய வாதரோகம் நீங்கிவிட்டது. ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய சரிதத்தைக் கூறுவதாலும், நாராயண பட்டத்ரி என்பவர் இயற்றியதாலும் , நாராயணீயம் என்று பெயர் பெற்றது.

நாராயணீயம் படித்தாலோ, பாராயணம் செய்தாலோ, சிரவணம் செய்தாலோ ஐஸ்வர்யம் கூடும், கொடிய ரோகம் நிவர்த்தியடையும், கிரக பீடை நீங்கும். காலசர்ப்ப தோஷ நிவர்த்தி, வாதரோக நிவர்த்தி, உத்யோக உயர்வு, சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்யம் முதலியன கிடைக்கும், ராஸக்ரீடை, ருக்மிணி கல்யாணம் தசகங்களைப் படித்தால் ஆண்-பெண் இருபாலருக்கும் விவாகம் கூடிவரும் என்று எத்தனையோ பலன்களைச் சொல்கிறது பலஸ்ருதி.

தினமும் நாராயணீயம் ஒரு ஸ்லோகமாவது பாராயணம் செய்தால் நமது, பிரச்னைகள் , இன்னல்கள், மன அழுத்தம் குறைந்து , நிம்மதியையும், நீண்ட ஆயுளையும், உடல் நலத்தையும் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பட்டத்ரி, ஸ்ரீ நாராயணீயத்தை நிறைவு செய்த நாளான கார்த்திகை 28ம் நாள், நாராயணீய தினமாகக் கொண்டாடப்படுகிறது..

ஹிந்துக்கள் அல்லாதோர் இக்கோயிலில் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் ஏனைய பிரிவினர் கோயிலுக்கு வெளியில் சுற்றிப்பார்ப்பதற்கு தடையேதுமில்லை.
குருவாயூரப்பன் கோயில் வளாகத்துக்கு வெளியே நிறைய கடைகள் அமைந்துள்ளன. இவற்றில் பூஜைக்கு தேவையான ஊதுவத்திகள், அகல் விளக்குகள், தேங்காய் மற்றும் பூ ஆகியவை விற்கப்படுகின்றன.
விளையாட்டுப்பொருட்கள், பழமைப்பொருட்கள், மின்சார உபகரணங்கள், துணிவகைகள், புகைப்படங்கள் மற்றும் திண்பண்டங்கள் போன்றவையும் இந்த கடைத்தெருவில் விற்கப்படுகின்றன.
ஒரு சில கடைகளில் தையல் வேலைப்பாடு கொண்ட கைவினைப்பொருட்கள், கேரள பாரம்பரிய உடைகள், பாரம்பரிய நகைகள் மற்றும் துணி ஓவியங்கள் போன்றவையும் விற்கப்படுகின்றன. இந்த கடைகளில் எது வாங்கினாலும் அதிரடியாக பேரம் பேசி வாங்குவது அவசியம். இல்லையெனில் அதிக விலை கொடுக்க நேரும்.
இந்த கடைகள் தவிர இந்த பிரசித்தமான கோயிலின் கிழக்கு வாசலுக்கு அருகே ஏராளமான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளும் பக்தர்களின் வசதிக்காக அமைந்துள்ளன. கோயிலை ஒட்டியுள்ள கடைகள் மற்றும் ஹோட்டல் விடுதிகள் இரவிலும் திறந்திருப்பதால் எந்த நேரமும் இவற்றுக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.
குருவாயூரில் பயணிகளுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைந்துள்ளன. இஸ்கான் எனப்படும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மையம் மற்றும் மாம்மியூர் மஹாதேவா கோயில் இரண்டும் பார்க்க வேண்டிய இதர ஆன்மீக அம்சங்களாகும்.
பார்த்தசாரதி கோயில், சாமுண்டேசுவரி கோயில், சோவல்லூர் சிவன் கோயில், ஹரிகன்யகா கோயில் மற்றும் வெங்கடாசலபதி கோயில் போன்றவையும் தரிசிக்க வேண்டிய இதர கோயில்களாகும்.
இவற்றோடு பாலயூர் சர்ச் எனப்படும் தேவாலயமும் புகழ் பெற்ற ஒன்றாக அறியப்படுகிறது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயம் பயணிகள் மத்தியில் பரவலாக ரசிக்கப்படுகிறது.
புன்னத்தூர் கோட்டா எனுமிடத்தில் உள்ள ஒரு யானைகள் காப்பகமும் முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மேலும் குருவாயூரில் உள்ள சோவள்ளூர் கடற்கரைப்பகுதியில் அமைதியான இயற்கைச்சூழலையும் தூய காற்றையும் ரசித்துஅனுபவிக்கலாம்.
தேவஸ்வோம் மியூசியம் எனும் அருங்காட்சியகமும் இங்கு பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு முக்கிய் இடமாகும். இன்ஸ்டிடியூட் ஆஃப் மியூரல் பெயிண்டிங் எனும் ஓவியக்கல்லூரியும் இங்குள்ளது. இந்த கல்லூரியில் சுவரோவியங்கள், ஓவியக்கலை அம்சங்கள் மற்றும் சிற்பக்கலை போன்றவற்றில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது.
குருவாயூரில் பல கோலாகலமான திருவிழாக்கள் வண்ணமயமான சடங்குகளுடன் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. குருவாயூர் உத்சவம் எனப்படும் பத்து நாள் திருவிழா இங்கு கும்ப மாதத்தில் நடத்தப்படுகிறது.
கேரள புதுவருட பிறப்பான விஷு திருநாளும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புதுவருடப்பிறப்பு குருவாயூரில் மங்களகரமான விஷயமாக கருதப்படுகிறது. எனவே விஷுத் திருநாள் நிகழும் ஏப்ரல் மாத மத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூருக்கு விஜயம் செய்கின்றனர்.
அஷ்டமி ரோஹிணி எனும் மற்றொரு திருநாளும் இங்கு விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இது ஷீகிருஷ்ணர் அவதரித்த நாளாக அறியப்படுகிறது. இந்நாளை ஜன்மாஷ்டமி என்றும் குறிப்பிடுவதுண்டு.
இவை தவிர, மண்டலம், குசேலர் தினம், செம்பை இசைத்திருவிழா, ஏகாதசித்திருநாள், வைஷ்கா மற்றும் நாராயணீயத்திருநாள் போன்ற திருவிழாக்களும் குருவாயூரில் கொண்டாடப்படுகின்றன.
                      தொடர்வது ஐந்தாவது திவ்ய தேசம்     திருக்காட்கரை.

No comments:

Post a Comment