Tuesday, July 28, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 21

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்) பகுதி21.(By சுஜாதா&வெங்கடேசன்). (6381369319)
திருமூழிக்களத்தோட ஏழு திவ்ய தேசம் ஆச்சு. இங்கேருந்து எர்ணாக்குளம் போய் தங்கி அங்க சுத்திப்பாத்துட்டு அங்கேர்ந்து செங்கனாச்சேரி போய் திருக்கடித்தானம் சேவிக்கலாம்கறார். (எர்ணாக்குளம் படகு வீடு,பக்கத்துல பேய் விரட்டும் சோட்டாணிக்கரை பத்திலாம் இங்க எழுதினா வைஷ்ணவா சண்டைக்கு வந்து க்ரூப்ப விட்டு போய்டுவேள்.. பொழச்சுக்கெடந்தா கேரள  விஜயம்னு தனி கட்டுரை எழுதறோம்)
செங்கனாச்சேரி போய்சேர்ந்து ஒரு ரூம் போட்டு ரெஸ்ட் எடுத்துண்டு சாயங்காலம் ஒரு ஆட்டோல ஏறரோம். கேரளாவுல ஆட்டோ ரொம்ப சீப். ரொம்ப நாணயமானவங்க கூட. 28 /- மீட்டர் காட்டினா 30/- க்கு மீதி 2/-தர அப்பாவிங்க.  
8)திருக்கடித்தானம்....
கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். பொதுவாக இறைவனை வழிபடுவர்கள் நீண்ட நேரம் மெய்மறந்து மனமுருக பிரார்த்தனை செய்வதுண்டு. ஆனால் இந்த நவீன யுகத்தில் அதற்கெல்லாம் ஏது நேரம் என்று அலுத்துக் கொள்பவர்களே அதிகம். இவர்களுக்காகவே இந்த கோவில்..
இந்தக் கோவிலில் இறைவனை நீண்ட நேரம்வழிபடத் தேவையில்லை. தூய்மையான மனமுருக ஒரே ஒரு நொடி வழிபட்டால் போதும். நம் வேண்டுதல்கள் நிறைவேறும். (அதற்காக நீண்ட நேரம் வழிபடக்கூடாது என்று பொருள் அல்ல. தூய்மையான மனத்துடன் ஒரு நொடி வழிபட்டால் கூட போதுமானது என்பதை வலியுறுத்தும் தலம் இது).

சூரிய வம்சத்தை சேர்ந்த ருக்மாங்கதன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். இவனது நந்தவனத்தில் அரிய மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களை தேவர்கள் பறித்துச் சென்று பெருமாளுக்கு அணிவித்தனர். தினமும் மலர்கள் காணாமல் போனதை அறிந்த காவலர்கள் மன்னனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட மன்னன் மலர்களை பறிப்பவர்களைக் கைது செய்யும்படி உத்தரவிட்டான். மறுநாள் தேவர்கள் பூவைப் பறிக்க வந்த போது, காவலர்கள் தேவர்கள் எனத் தெரியாமல் கைது செய்து மன்னன் முன் நிறுத்தினர். உண்மையை அறிந்த மன்னன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுவித்தான். இருந்தாலும் மனிதர்களால் கைது செய்யப்பட்ட தேவர்கள் தங்கள் சக்தியை இழந்து வானுலகம் செல்ல இயலாமல் போனது. இதற்கு என்ன வழி என தேவர்களிடம் மன்னன் கேட்க, “நீ ஆண்டுதோறும் இருக்கும் ஏகாதசி விரத பலனை எங்களுக்கு அளித்தால் நாங்கள் வானுலகம் செல்ல முடியும்” எனத் தேவர்கள் கூறினர். இதைக்கேட்ட மன்னன் மகிழ்ச்சியுடன் தேவர்களை அழைத்துக்கொண்டு, இத்தலத்து பெருமாளின் முன்னிலையில் தனது ஏகாதசி விரதபலனை தேவர்களுக்குத் தானமாக அளித்தான். தேவர்களும் வானுலகம் சென்றனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தலத்தில் நடந்ததால் இத்தலத்திற்கு “திருக்கடித்தானம்” எனப் பெயர் வந்ததாக கூறுவர்
அடடா இப்படி ஒரு ஸ்தலத்தை முன்பே நாம் தரிசித்து இருந்தால் எப்போதோ நாம் தேவராக மாறி புண்ணிய லோகத்தை அடைந்து இருப்போமே'  என்ற ஆதங்கம் ஏற்படும்.

.இத்தலத்துப் பெருமாளை சகாதேவன் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் பிரதிஷ்டை செய்ய விக்ரகம் கிடைக்காமல் மனம் வருந்திய சகாதேவன், அக்கினிப்பிரவேசம் செய்ய முயன்றான். அப்போது அந்த இடத்தில் பெருமாளின் சிலை தோன்றி சகாதேவனின் துயர் துடைத்ததாம். இதன் காரணமாக இத்தலப் பெருமாள் “அற்புத நாராயணன்” என அழைக்கப்படுகிறார். இப்பகுதியில் சகாதேவன் கட்டிய கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரிகிறது.

வட்ட வடிவமான ஒரே கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். எனவே இக்கோயிலில் இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரம் உள்ளது. இது இத்தலத்தின் சிறப்பு. இதில் நரசிம்மரின் உருவத்தைப் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்ததாக கூறுவர். கருவறையின் தென்பகுதியில் தெற்கு நோக்கி தெட்சிணாமூர்த்தியும், விநாயகரும் அருள்பாலிக்கிறார்கள். இவர்களது சன்னதிக்கு கதவுகள் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள மரத்துவாரங்கள் வழியாகத்தான் இவர்களை தரிசிக்க முடியும். நரசிம்மருக்கு, அவரது உக்கிரத்தை குறைப்பதற்காக, பால் பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்குரிய ஒவ்வொரு பூஜையின் போதும் “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. இத்தலப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு மேலே உள்ள விமானம் புண்ணியகோடி விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளை ருக்மாங்கதன் மற்றும் தேவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இது தவிர இந்தக் கோவிலுக்கு இன்னும் ஏராளமான சிறப்புகள் உண்டு. சகாதேவனால் உருவாக்கப்பட்ட தலம் . இங்குள்ள மதில்கள் பூதங்கள் ஒரே நாளில் உருவாக்கியது, கோவிலின் முன்னும் பின்னுமாக இரட்டைக் கொடிமரம், இங்குள்ள் இறைவன் அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சக்தி பெறுதல், ஒரே கர்ப்பக் கிரகத்தில் பெருமாள் கிழக்குமுகமாகவும், நரசிம்மர் மேற்குமுகமாகவும் அருள் பாலிப்பது. கோவிலின் முகப்பில் லஞ்சம் வாங்கியன் என்ன கதியடைவான் என்பதைக் காட்டும்படி ஒரு கல்தூணில் இறந்த ஒரு மனிதரின் உடல் கிடத்தப்பட்டிருப்பது சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. அது இந்த கோவிலின் காவலாளியின் உடல். ஒரு முறை மன்னர் ஒருவர் இந்தக் கோவில்க்கு வந்த போது நடை சாத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காவலாளி மன்னரிடம் பணம் (லஞ்சம்) வாங்கிக் கொண்டு கோவில்நடையை திறந்து விட்டிருக்கிறான். மரபை மீறிய அந்தக் காவலாளி அந்தக் கணமே பிணமாகிப் போனான். இந்த நிகழ்ச்சியை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டவே அவன் உடல் கோவில் முன் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறவர்கள்,  பதவி கிடைக்காமல் அலைகிறவர்கள்,  வெகுநாட்களாக பாடுபடும் பதவியில் முன்னேற்றம் பெறாமல் துடிக்கிறார்கள்,  புண்ணியம் நிறைய செய்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆகியோர் அனைவரும் திருக்கடித்தானம் அற்புத நாராயணனின் கோயிலுக்குள் காலடி வைத்தால் போதும்.  கவலை எல்லாம் விலகும்.  நினைத்த காரியத்தை உடனே முடித்துவிடும் பாக்கியம் கிடைக்கும். 
படங்கள் 1)கழுமரத்தில் காவலாளி 2,3,4)கோயில் காட்சிகள் 
                       தொடரும்...




No comments:

Post a Comment