Tuesday, July 21, 2020

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 9

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 9

[குருசரித்ர பாராயணம்]


“புது ஸ்வாமிகள்கிட்ட மட்டும் ஸம்மதம் வாங்கிண்டு, வேற யாருக்குமே சொல்லாம, எளையவர் என்ன பண்ணினார்னா….. அத்தனை தங்கக் காஸையும் மடில கட்டிண்டு, குதிரைல பொறப்ட்டார் !

எப்போ, எங்க, என்ன அவஸர கார்யம் மடத்துக்கு வருமோன்னு குதிரை ஸவாரியும் தெரிஞ்சு வெச்சிண்டிருந்தார்!

நேர….. கபிஸ்தலத்துக்கு போனார்…… தஞ்சாவூர் ஸீமைக்கே முக்யஸ்தரான மூப்பனார் அங்கதான் இருந்தார். செல்வ ஸம்ருத்தி, ஸமயப்பற்று, தர்ம பண்பு இதோட… எப்டி முதலீடு பண்ணினா, நல்ல பலன் கெடைக்கும்-ன்னு யோஜனை சொல்றதுலயும் கெட்டிக்காரரா இருந்ததால, எளையவர் நேரா மூப்பனார்கிட்ட போனார்.

தங்கிட்ட இருந்த, மீதி 17,000 ரூவா worth தங்கத்தை வெச்சுண்டு, ‘மடத்துக்கு, எப்பவுமே நல்ல வருவாய் இருக்கறா மாதிரி என்ன பண்ணலாம்?”ன்னு கேட்டார்.

மடத்து விஷயமா இந்த பெரியவர் [எளையவர்] வந்ததுல, மூப்பனாருக்கு ரொம்ப ஸந்தோஷம்! ரொம்ப நல்ல யோஜனையா ஒண்ணு சொன்னார்……

கும்மாணத்துக்கு வடகெழக்கா… அணக்குடிங்கற க்ராமம் இருக்கு. அதோட மிராஸ்தார் அணக்குடி பிள்ளை இருக்கார்….. நல்ல ஶைவ வேளாள குடும்பம்…. அந்த நாள்லயே அவருக்கு 1000 வேலி நெலம் இருந்துதாம்! அவர் தங்கத்தால ஆன ஏரைக் கட்டினத்துக்கு அப்றந்தான், அந்த ஸீமையோட மத்த பண்ணையார்கள்ளாம், அவாளோட நெலத்துக்கு ஏர் கட்டுவாளாம் !

அவரோடது, ஏதோ கொஞ்சம் நெலத்தை விக்கப்போறதா மூப்பனார்க்கு தெரிஞ்சுது.

“மடத்துக்கு-ன்னா, க்ரயத்தை கொறைச்சு, நல்ல வெளைநெலமா[விளைநிலம்] குடுப்பார். அந்த நெலத்தோட மாஸூலை [மகசூல்] விட ஒஸத்தியா, வேற எந்த மொதலீட்டுலயும் வராது” ன்னு மூப்பனார் சொன்னதும், எளையவருக்கு அது ரொம்ப ஸம்மதமா இருந்துது.

‘பாவம்! இத்தன பவுனை, தனியா முடிஞ்சுண்டு வந்திருக்காரே!’ன்னு, நன்னா அவருக்கு பந்தோபஸ்து பண்ணி, அணக்குடி பிள்ளைட்ட அனுப்பினார்.

காஸுன்னா….அத்தன ஜாக்ரதையா இருந்த எளையவர், ‘ஸரியான பாத்ரம்’ அப்டீன்னு ஒத்தர்கிட்ட நம்பிக்கை வெச்சுட்டார்ன்னா…நவநிதின்னாலும், அப்டியே…. ஒப்புக் குடுத்துடுவார்! அப்டித்தான், இப்போ அணக்குடி பிள்ளைட்ட அந்த பவுன் முடிப்பை அப்டியே போட்டுட்டார்!

பேரம், கீரம் எதுவும் பேசாத, “எவ்ளோவ் ஸீக்ரம் ஸௌகர்யப்படுமோ, எவ்ளோவ் நெலம் விக்ரயம் [விற்க] பண்ண முடியுமோ, அவ்ளோவ் நெலத்தை பண்ணிக் குடுங்கோ” ன்னு சொல்லிட்டு, ‘வந்த வேலை ஆச்சு’ன்னு ஒடனேயே கெளம்பிட்டார்.

எளையவரோட குணம்…. பிள்ளையை ரொம்ப ஆகர்ஷணம் பண்ணிடுத்து! [பின்ன! பெரியவாளோட தாத்தா ஆச்சே!] மடத்துக்கு-ன்னு ஒரு பங்குன்னா…..இவருக்கு-ன்னே இன்னொரு பங்கும் பண்ணணுன்னு தீர்மானம் பண்ணிண்டார்.

ஆச்சு! கொஞ்ச நாள்ளயே, கும்மாணத்துக்கு ஈஶான்யத்ல, ரெண்டே மைல்ல இருக்கற, கருப்பூர்ல இருந்த தன்னோட 40 வேலி நெலத்தை மடத்துக்கு ஶாஸனம் பண்ணிக் குடுத்தார்.

[பரம பக்தனான நந்தனுக்காக 40 வேலி நிலத்தை ஒரே இரவில் உழுது, கதிர் முத்திப் போக செய்த அந்த பரமேஶ்வராவதாரம் மறுபடி நிகழப் போவதற்கு, அதுவும் இளையவரான இந்த ஶ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகள் என்ற மஹாத்மாவின் வம்ஸத்தில் ஜனித்து, காஞ்சி காமகோடி பீடத்துக்கு அதிபதியாகவும் ஆகப் போவதின் முதல் தெய்வீ குறிப்போ?]

40 வேலின்னா…270 ஏக்கர்! அந்தக் காலத்ல, என்னதான் வெலை கொறைச்சுன்னாலும், நல்ல வெள்ளாமை இருக்கற 270 ஏக்கரை, 17000 ரூவாக்கு குடுத்தது, அணக்குடி பிள்ளையோட உதார மனஸை காட்றது!

இன்னிக்கும், நம்ம மடத்துக்கு income வரும் ஸொத்துக்கள்ள, maximum income தரது, கருப்பூர் நெலந்தான்!

மடத்துக்கு எப்பவுமே, பணபலம் ஜாஸ்தி கூடவே கூடாதுங்கற கட்சிதான் நான்! ஏன்னா…..அதை ஜாக்ரதை பண்றது, அப்றம் குட்டி போடப் பண்றது, அதுக்கான விசாரம், இதெல்லாம்….நாங்க செய்ய வேண்டிய ஆத்ம விசாரத்துக்கே பெரிய hindrance-ங்கறது என்னோட அபிப்ராயம். த்ரவ்ய பலம், ஆள்கட்டு எல்லாம் கொறச்சலா இருந்தாலே, ஒரு மடாதிபதி, தன்னோட தபோ பலத்தை வ்ருத்தி பண்ணிண்டு, அது த்வாரா, தர்ம பரிபாலனத்துக்கான ஶக்தியை அடையதுக்கு ஜாஸ்தி ஹேது இருக்கு.

ஆனாலும், யதோக்தமா பூஜை பண்றது, வித்வத் ஸதஸ் நடத்தி ஸம்பாவனை, ஸந்தர்ப்பணை, தீனஜன ஸம்ரக்ஷணை, தர்ம ப்ரசாரம்ன்னு….. மடத்துக்கு-ன்னு கடமைகள் இருக்கறதால, பணமும், ஆளும் ஓரளவு தேவைப்படத்தான் செய்யறது.

ஏதோ.. ‘கூ’ [coup], காவல்-ன்னு வேடிக்கையா ஆரம்பிச்சு, ஒரு லக்ஷ்யத்துக்காகவே தன்னோட வாணாள[வாழ்நாள்] பூரா அர்ப்பணம் பண்ணிண்ட நம்ம ஸ்ரீமடத்தோட ஒரு கிங்கரரைப் பத்தி சொல்ல முடிஞ்சுது.

ஸஹாதேவன்… ஸாக்ஷாத் க்ருஷ்ண பரமாத்மாவை பக்தியால கட்டிப் போட்டான். அவன மாதிரி ஞானம், பக்தி எதுவுமே தெரியாத யஶோதையும், வெறும் ஶுத்தமான அன்பு ஒண்ணாலேயே அவனை ஓரலோட கட்டிப் போட்டா…ன்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கோம். ஶிவாஜி மஹாராஜாவும், அந்த ‘ஹெஜீப்’ எளையவரும் ஸ்ரீமடத்தை arrest பண்ணினதையும் ஒரு தினுஸ்ல, அந்த பாகவதக் கதைகளோடேயே வெச்சு நெனைக்க தோண்றது !….”

மனஸை கொள்ளை கொள்ளும், அழகான புன்னகையோடு, பெரியவா தன் ஜன்ம-ஸன்யாஸகுரு பூர்வஜர்களின் கதையைச் சொல்லி முடித்தார்…..

நம்ம பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரத்தில், முதல் episode எழுத ஆரம்பித்த போது, பெரியவா அனுக்ரஹத்தால் வந்து விழுந்த அழகான வார்த்தைகளை, இந்த episode-ல் பெரியவா திருவாக்கினாலேயே அதை உறுதி செய்திருப்பது, நாம் அனைவரும் செய்த மஹா பாக்யமன்றி, வேறென்ன சொல்வது? [ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஶ்ரீ மஹா பாரதம், ஶ்ரீமத் பகவத்கீதை மாதிரி மஹா பெரியவாளுடைய திவ்யமான சரித்ரத்தை எத்தனை தடவை படித்தாலும் இப்போதுதான் முதல்முதலாக படிப்பது போல் புதிதாக, ஆனந்தமாக இருக்கும்]

நாம் கேட்கும், படிக்கும் பெரியவா சரித்ரமும் ஸ்ரீமத் பாகவதமே! இனி தனியாக வேறு என்ன ஸாதனை பண்ண வேண்டும்?

அவதாரபுருஷர்கள் தங்களுடைய தெய்வீக ஶக்திகளை மறைத்துக் கொண்டுதான் நமக்கு நடுவில் ஒண்ணுமே தெரியாதது போல் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், எப்போதுமே நம்மை “ஏமாற்ற” முடியுமா?

பெல்காம் அருகில் உள்ள ஹீரே பாக்வாடி என்ற சிறிய ஊரிலிருப்பவர் சிதம்பர் குல்கர்னி. பெரியவாளிடம் அப்படியொரு பக்தி! வர்ஷத்தில் எப்படியோ ஸமாளித்து, ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்து, பெரியவாளை தர்ஶனம் செய்துவிட்டு, “தத்தாத்ரேய சரித்ரம்” என்னும் குரு சரித்ரத்தை ஸப்தாஹமாக பாராயணம் பண்ணிவிட்டு, பெரியவாளிடம் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு ஊருக்குப் போவார்.

அப்படி, ஒரு முறை, குல்கர்னி தன் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்து, குரு சரித்ர பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார். அந்த ஸமயத்தில், மற்றொரு பக்தரும் அங்கு வந்தார். அவரை ஶ்ரீ மடத்தில் யாரும் அதிகம் பார்த்ததில்லை. யாரென்று கூட தெரியாது. பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு,

“பெரியவா க்ருபைனால…குரு சரித்ர பாராயணம் நடந்துண்டிருக்கு…”

“இதுவரைக்கும்…..எத்தன தடவை பாராயணம் பண்ணியிருக்கே?…”

“72 தடவை ஆய்டுத்து…பெரியவா! இப்போ 73-வது பண்ணிண்டிருக்கேன்…..”

பக்கத்தில் நின்றிருந்த பாரிஷதர், இந்த பக்தரும் ‘தத்தாத்ரேய சரித்ரம்’ பாராயணம் பண்ணுகிறார் போல! என்று நினைத்தார்.

“ஏண்டா!…இவன்…..எந்த குரு சரித்ரம் பாராயணம் பண்றான்-னு ஒனக்கு தெரியுமோ?…”

“தத்தாத்ரேய சரித்ரமா….பெரியவா?…”

“நம்ப….ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் எழுதின, ‘பெரியவா சரித்ரத்தை’த்தான், இவன் தெனோமும் பாராயணம் பண்ணிண்டு வரான்! இதுவரைக்கும் 72 தரம் பாராயணம் பண்ணியாச்சு! 73-வது தரம்… பாராயணம் பண்ணிண்டிருக்கான்.! தெரியுமோ?… இவனுக்கு, பிள்ளையார் சதுர்த்தி, ஜன்மாஷ்டமி, நவராத்ரி, ராம நவமி-ன்னு எல்லா நாள்ளயும், என்னோட படத்துக்குத்தான் பூஜை பண்ணுவான்! இவனுக்கு…….என்னத் தவிர வேற யாரும் தெய்வம் இல்ல!….”

நாமே நம் வாயால், “நான் இதைச் செய்கிறேன்; அதைச் செய்கிறேன்” என்று நாம் செய்யும் கிஞ்சித் ஆன்மீக ஸாதனைகளை, அப்யாஸங்களை, எத்தனை கோடி பேருக்கு சொல்லிக் கொண்டிருந்தாலும், அந்த கோடி பேரும், நம்மை மிகவும் பூஜ்யதா பாவத்துடன் மதித்தாலும், பார்த்தாலும், அதனால் என்ன ப்ரயோஜனம்?

பகவானே தன் வாயால்…..”இந்த பக்தன்/பக்தை….எனக்கு இஷ்டமானதை செய்கிறான்/செய்கிறாள்” என்று சொல்வதை கேட்கும் ஒரு க்ஷணம் போறுமே! மோக்ஷம் கூட, ரெண்டாம் பக்ஷமாகி விடுமே!

பாரிஷதருக்கோ….இப்பேர்ப்பட்ட பகவான், தன் வாக்கினாலேயே “என்னுடைய பக்தன்!” என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் பாக்யம் செய்த, அந்த அமரிக்கையான பக்தரின் பேர், ஊர் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல், பிடரியைப் பிடித்துத் தள்ளியது!

பகவானின் மாயா விலாஸத்தில், அல்ப தூஸிகளான நம்மால் என்ன செய்ய முடியும்? தன் யோகமாயையால், அந்த பாரிஷதரின் ‘ஆவலில்‘ மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, அவரை வேறு ஏதோ கார்யத்தை சொல்லி, அங்கிருந்து நகர்ந்து போகச் செய்துவிட்டார்!

ப்ரதோஷம் மாமா, நெய்வேலி மஹாலிங்கம் மாமா, எஸையனூர் பாட்டி….இன்னும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்படி, பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட பக்தர்களில், சிலரை மட்டுந்தான் நமக்கு தெரியும். ஆனால், வெளியில் எந்த ஆரவாரமும் இல்லாமல், லோகத்துக்கு தெரியாமல் எத்தனையோ, அத்யந்த பக்தர்கள், பெரியவாளுக்கு என்றுமே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment