மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்) பகுதி22
.(By சுஜாதா&வெங்கடேசன்)(6381369319)
செங்கனாச்சேரி தரிசனம் முடிஞ்சு திருவல்லா பஸ் பிடிச்ச வர்றதுக்கு மணி ரெண்டாயிடறது. சன்னதி சாத்திடறா..ஆனாலும் வெளி பிராகரத்துல வினியோகம் நடந்துண்டிருக்கு. எல்லோருக்கும் நல்ல பசி.தரிசனம் பண்ணாம பிரசாதம் வாங்கிக்க கூடாதுன்னு நான் சொல்றேன். இவரோ வெளியில ஒரு நாயர் டீக்கடைதான் அங்க போய் பன்னும் டீயும்தான் இன்னிக்கு ஆகாரம். பெருமாளே நமக்காக தர திவ்யமான பிரசாதத்தை வேண்டாம்கறயான்னு குழப்பறார். சரின்னு சக்கரை பொங்கல் ததியன்னம் சாப்பிட்டு வெளியே வர்றோம். வெளிக்கதவையும் சாத்தி சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேலதான்னுடறா...வெளியே அழகா காத்தோட்டமா திண்ணை இருக்கு..லக்கேஜ வச்சுண்டு உக்காறரோம். இவரோட காலார நடப்போம்னு கோயில் பின்னாடி கேரள கிராமத்து இயற்கை அழகை ரசிக்கறோம்.
மணி 5.00 ஒவ்வொரு வாசலா திறக்க உள்ளே நுழையறோம். வாசலில்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருவல்லவாழ்– 689 101 (ஸ்ரீ வல்லப க்ஷேத்திரம்) பந்தனம் திட்டா மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 469 – 270 0191(மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்னு போட்டிருக்கு.
இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும்.
அப்பா முன்னாடியே ஸ்தல புராணம் புத்தகம் வாங்கி திண்ணையில படிச்சத சொல்றார்..
கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து இந்தக் கோயிலுக்கு வருவார். மறுநாள் துவதாசியன்று இந்தக் கோயிலில் வசிக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்வார். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் வசித்த தோலாகாசுரன் என்பவன், இந்த அம்மையாரைக் கோயிலுக்கு செல்லவிடாமல், மறைவாக இருந்து, அவருக்குத் தெரியாமல், துன்பம் விளைவித்தான். இதைப் பெருமாளிடம் அம்மையார் முறையிட்டார்.
ஒருமுறை அவர் காட்டு வழியே வரும்போது, பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன், ஏதோ ஒரு அசுர சக்தியுடன் போர் புரிவதைக் கண்டார். சற்று நேரத்தில் சப்தம் அடங்கி விட்டது. பிரம்மச்சாரியைக் காணவில்லை. அம்மையார் கோயிலுக்கு வந்தார். அங்கே, பெருமாள் காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனைப் போன்ற தோற்றத்தில் இருந்தார். தன்னைப் பாதுகாக்க, பெருமாளே நேரில் வந்து அசுரனுடன் போரிட்டதை அம்மையார் புரிந்து கொண்டார்.
கோயில் கருவறைக்கு பெண்கள் போகக்கூடாதுன்னு அப்பா படிச்சுட்டு என்னையும் அக்காவையும் துவஜஸ்தம்பம் கிட்ட உக்கார்ந்து ஸ்லோகம் சொல்ல சொல்லிட்டு இவரும் அப்பாவும் உள்ள போறா…
இனி இவர்…….
கோயிலுக்கு வரும் பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணிவதில்லை. பெருமாளும் இத்தலத்தில், அங்கவஸ்திரம் இல்லாமல் மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில், இலட்சுமி(திரு) நிரந்தரமாகக் குடியிருப்பதால், இவருக்கு “திருவாழ்மார்பன்” என்ற பெயர் ஏற்பட்டது. மற்ற தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் முக்கியம். இங்கோ, மார்பு தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.
இத்தலப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுரங்க கோல விமானம் எனப்படுகிறது. இந்த பெருமாளைக் கண்டாகர்ணன், சங்கரமங்கலத்தம்மையார் ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர்.கண்டாகர்ணன் என்பவன் முதலில் சிவபக்தனாக இருந்து, பிறகு சிவபெருமான் உபதேசித்தபடி பெருமாளின் அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான். அப்போது தன் செவியில் கிருஷ்ண நாமம் தவிர மற்ற எதுவும் விழாதிருக்க, தனது காதில் இரண்டு பொன்மணிகளை அணிந்து அது சப்திக்கும்படி அசைத்துக் கொண்டு தவம் செய்தான். பெருமாள் அவனுக்குக் காட்சி தந்து மோட்சம் அளித்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள்.
சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்தபோது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து, தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். அவள் அதைப் பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள். நாட்டியக் கலைஞர்கள் கோயிலிலேயே உள்ளனர். தினமும் இந்த நேர்ச்சை நடத்தப்படுகிறது. இந்த நடனக்குழுவிற்கு “கலாக்ஷேத்ரா” என்று பெயர்.
பாடியவர்கள்:
நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்
பெருமாள் தரிசனம் முடிந்து இவரும் அப்பாவும் வரா…
பெருமாளை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் நம்மாழ்வார் பாசுரம் நினைவுக்கு வரது. ….
காண்பது எஞ்ஞான்று கொலோ, விளையேன் கனிவாய் மடவீர் பாண்டுரல் வண்டினொடு பசுந்தென்றலுமாகி எங்கும் சேன் சினையோங்கு மரச் செழுங்கானல் திருவல்லவாழ் மான்குறள் கோலப் பிரான் மலர் தாமரைப் பாதங்களே.
நம்மாழ்வார் தன்னை பெண்ணாக பாவித்து…
கோவைக் கனி போன்ற வாயினையுடைய பெண்களே! எல்லாவிடங்களிலும் வண்டுகளினுடைய பாண்குரலும் இளந்தென்றலுமாக, மிக உயர்ந்திருக்கின்ற கிளைகளையுடைய மரங்கள் நெருங்கியிருக்கின்ற வளப்பம் பொருந்திய கானலையுடைய திருவல்லவாழ் என்ற திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாட்சிமை அமைந்த அழகிய பிரானாகிய வாமனனுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளை, வினையேன் காண்பது எந்நாளோ? என்கிறாள்….
எங்களுக்கும் அதே ஏமாற்றம்…..
படங்கள் 1)வாசலில் காத்திருப்பு 2),3,4,5,6 கோயில் படங்கள்
No comments:
Post a Comment