Tuesday, July 21, 2020

திருக்கோளூர் பெண் பிள்ளை 80

(80) தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே !
“சாமி! மீண்டும் பட்டரின் கதை இது!” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜரும் சிஷ்யர்களும் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.
திருவரங்கத்தில் நம்பெருமாள் புறப்பாட்டின்போது கூட்டத்தை விலக்குவதற்கு மான் தோல் பட்டையால் தரையில் அடித்துக்கொண்டே செல்வார்கள். அப்படி அடிக்கும்போது சவுக்கால் அடிப்பது போலச் சத்தம் வரும். அந்த ஓசையைக் கேட்டு நம்பெருமாளுக்குக் கூட்டம் வழி விடும். இப்படிப் பட்டையால் அடிக்கும் தொண்டர்களை ‘கோயில் மகாஜனம்’ என்று அழைப்பார்கள்.



ஒரு சமயம் திருவரங்கத்தில் நம்பெருமாளைச் சேவிக்கப் பட்டர் அங்கே வந்தார். உள்ளம் உருகிச் சேவித்துக்கொண்டு அங்கே நின்றார். நம்பெருமாள் புறப்படும் சமயம் ஆகிவிட்டதால், கூட்டத்தை விளக்குவதற்குப் பட்டையால் தரையில் ஓங்கித் தட்டி இன்னொரு முறை தட்ட முற்படும்போது அது பட்டரின் தோளில் தெரியாமல் பட்டுவிட்டது.
பட்டர் ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த பட்டரின் சிஷ்யர்கள் பட்டையடிப்பவரை “எப்படிப் பட்டர் மீது படும்படியாக மட்டை அடிக்கலாம் ?” என்று கடிந்து பேசினார்கள்.
பட்டர் தன் சிஷ்யர்களைத் தடுத்து “இவர்கள் நம்பெருமாளுக்கு மகத்தான தொண்டு செய்பவர்கள். அவர்கள் செய்ததில் தவறு ஏதுமில்லை. அந்தப் பட்டை என் தோளில் பட்டதால் என்ன குறைவு ஏற்பட்டது ? ஒன்றுமில்லை” என்று தன் சிஷ்யர்களைச் சமாதானப்படுத்தி மட்டை அடிப்பவர்களைப் பார்த்துப் பட்டர் “உங்கள் தொண்டை நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் தோல் பட்டை என் ஒரு தோளில் பட்டது ‘யாம்பெறும் சம்மானம்' என்று ஆண்டாள் கூறிய சம்மானம். ஒரு தோளில் பட்டவுடனேயே இன்னொரு தோளையும் காட்டியிருக்க வேண்டும். தோளில் சங்கோடு சக்கரம் பொறித்துக்கொள்வது தானே முறை. இன்னொரு தோளையும் காட்டுகிறேன். அதிலும் நீங்கள் சாதிக்க வேண்டும். அப்போதே இன்னொரு தோளைக் காட்டாதது என்னுடைய தவறு. அதற்கு வருந்துகிறேன். ” என்று அவர்களை வணங்கினார்.
கோயில் மகாஜனம் வெட்கி தலைகுனிந்து பட்டரிடம் மன்னிப்பு கேட்டு முரட்டுத்தனமாக இனி அடிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.



“சாமி ! மற்றவர் குற்றத்தையும் தன் குற்றமாக ஏற்று பொறுமையைக் காட்டிய சிறந்த வைணவ குணம் பட்டரிடம் இருந்தது. அது என்னிடம் இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்.
ராமானுஜர் “பெண்ணே! இந்தக் கதையைக் கேட்டால் எனக்கு ஆண்டாள் திருப்பாவையின் முக்கியமான பாசுரம் நடுவில் இருக்கும் ‘எல்லே இளங்கிளியே’ என்ற இந்தப் பாசுரம் தான் நினைவுக்கு வருகிறது!” என்றார்.
“அப்படியா சாமி ? ஏன் என்று எனக்குச் சொல்லுங்களேன்” என்றாள் அந்தப் பெண்
”குழந்தாய்! ஒரு வைஷ்ணவன் மற்றவர்களின் தவறுகளையும் தன் மீது போட்டுக் கொண்டு பரஸ்பர நீச பாவத்துடன் இருக்க வேண்டும். இந்த மிக உயர்ந்த வைஷ்ணவக் ‌குணத்தை ஆண்டாள் ‘நானே தான் ஆயிடுக’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள்” என்றார்
“அருமை சாமி! உங்கள் விளக்கத்திற்கு!” என்றாள்.
அப்போது ஒரு சிஷ்யர் “பிள்ளாய்! எனக்குப் பிள்ளை உறங்காவில்லி தாசர் கதை நினைவுக்கு வருகிறது” என்று சொல்ல ஆரம்பித்தார்.



ராமானுஜர் காவிரிக்கு நீராடச் செல்லும்போது முதலியாண்டான் கையைப் பிடித்துக்கொண்டு செல்வார். நீராடிவிட்டுத் திரும்பும்போது பிள்ளை உறங்காவில்லிதாஸர் கையைப் பிடித்துக்கொண்டு வருவார். இது சில சீடர்களுக்குப் பிடிக்கவில்லை. ராமானுஜர் அவர்களுக்குத் தாசரின் மேன்மையை கூற எண்ணினார். தன் சீடர்களிடம் “மடத்தின் செலவுக்குப் பணம் வேண்டியுள்ளது உறங்காவில்லி இல்லாத சமயமாகப் பார்த்து அவன் மனைவி பொனாச்சியார் தூங்கிக்கொண்டு இருக்கும்போது அவளை அறியாமல் நகைகளை அபகரித்துக் கொண்டு வாருங்கள்” என்றார்.
ஆசாரியன் சொன்னால் தப்பாகாது என்று அன்று இரவுச் சீடர்கள் உறங்காவில்லி தாசர் வீட்டுக்குச் சென்றனர். அங்கே பொன்னாச்சியார் தூங்கிக்கொண்டு இருக்கச் சீடர்கள் நகைகளைக் கழட்டினார்கள்.



உறக்கம் விழித்த பொன்னாச்சியார் ராமானுஜரின் அடியார்கள் எடுக்கிறார்கள், எடுத்துக்கொள்ளட்டும் என்று தூங்குவது போலப் பாசாங்கு செய்தார். சீடர்களும் ஒரு பக்க நகைகளை எடுத்துக்கொண்டார்கள்.
பொன்னாச்சியார் மறுபக்க நகைகளையும் எடுத்துக்கொள்ளட்டும் என்று புரண்டு படுக்க முற்பட்டபோது அவள் கண்விழித்துவிட்டாள் என்று எண்ணி சீடர்கள் ஓட்டமாக ஓடி உடையவர்களிடம் தாங்கள் அபகரித்த நகைகளைக் கொடுத்து நடந்தவற்றைச் சொன்னார்கள்.



சீடர்களிடம் உறங்காவில்லி தாசர் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பினார். சீடர்கள் சென்றபோது அங்கே பொன்னாச்சியார் நடந்தவற்றை தாசரிடம் விவரித்துக்கொண்டு இருந்தார் அதற்குப் பிள்ளை உறங்காவில்லி தாசர் ’ஐயோ பாகவத அபசாரம் செய்துவிட்டோமே!” என்று புலம்பினார். ’ராமானுஜ அடியார்கள் ஏன் கழட்ட வேண்டும் ? நகைகளை நீ அல்லவா கழற்றி கொடுத்திருக்க வேண்டும் ?’ என்று கடிந்துகொண்டு நகையை மூட்டையாகக் கட்டிக்கொண்டு உடையவரைப் பார்க்க விரைந்தார்.



உடையவர் மடத்துக்கு வந்த தாசர் தம்பதிகள் ’வைஷ்ணவ அடியர்கள் பாதி நகைகளைத்தான் கழற்றி எடுத்துக்கொள்ள முடிந்தது. அதற்குள் இவள் புரண்டு படுத்துக்கொண்டதால் மீதியை எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார்கள். இதை அவர்களிடம் சம்ர்பிக்க வேண்டும். எங்களுக்குப் பாகவத அபசாரத்துக்காக என்ன தண்டனை வேண்டும் என்றாலும் கொடுங்கள்’ என்று கண்கலங்கி காலில் விழுந்தார்கள்” என்று சிஷ்யர் சொன்னார்.
“என்ன சொல்வது என்றே தெரியவில்லை சாமி!” என்று கண்கலங்கினாள் அந்தக் குட்டிப் பெண்.
ராமானுஜர் “ராமன் காட்டுக்குப் போவதற்கு நான் காரணமாக இருந்தால் எனக்கு இந்தப் பாவங்கள் எல்லாம் வந்து சேரட்டும் என்று பரதன் தனக்குத் தானே சாபமிட்டுக்கொண்டான். இதை நாம் கற்றுக்கொண்டால் எந்தச் சண்டை சச்சரவும் இருக்காது. யமுனை கருப்பாக இருந்தாலும் ‘தூய பெரு நீர் யமுனை துறைவனை’ என்று கண்ணன் சம்பந்தத்தால் அது தூய்மை அடைகிறது. அதுபோல வர்ணம் எதுவாக இருந்தாலும் பாகவதன் இருக்கும் இடம் தூய்மை அடைகிறது!” என்றார்
உடனே அந்தப் பெண் “துறை வேறு செய்தேனோ பாகவரைப் போலே!” என்றாள்.
- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும்
Note: English version will be posted separately
Images from internet with thanks.

No comments:

Post a Comment