(81) துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே !
“சாமி! இது வில்லிபுத்தூர் பகவர் என்பவர்பற்றிய கதை!” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.
“குழந்தாய்! புதுமையான பெயராக இருக்கிறதே” என்றார் ஒரு சிஷ்யர்.
"ஆம் சாமி!” என்று அந்தப் பெண் தொடர்ந்தாள்.
திருவயிந்திபுரத்தில் ’வில்லிபுத்தூர் பகவர்’ என்றவர் வாழ்ந்து வந்தார். இவருக்குப் பெரியாழ்வார், ஆண்டாள் மீது பேரன்பு. அதனால் வில்லிபுத்தூர் என்ற ஊர்ப் பெயரைச் சேர்த்து ‘வில்லிபுத்தூர் பகவர்’ என்று வைத்துக்கொண்டார். அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிறந்த வைணவர். தினமும் ஊரில் இருக்கும் ’கெடில நதிக்கு’ சென்று நீராடுவார்.
அந்த ஊரில் அந்தணர் எல்லோரும் ஒரு படித்துறையில் நீராடுவார்கள். ஆனால் வில்லிபுத்தூர் பகவர் அவர்களோடு சேராமல் அதற்கு எதிர்புறம் உள்ள படித்துறையில் நீராடுவார்.
ஒரு நாள் அந்தணர் குழுவில் ஒருவர் “அந்தணர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வருகிறோம். ஒரே படித்துறையில் நீராடுகிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வருகிறீர்கள். ஆனால் வேறொரு படித்துறையில் நீராடுகிறீரே ? ஏன் ?” என்று கேட்டுவிட்டார். அதற்குப் பகவர் “நீங்கள் வேறு குலம், நான் வேறு குலம்!” என்றார்.
”என்ன பகவரே நாம் எல்லோரும் அந்தணர்கள், பிராமணர்கள். ஆனால் நீர் குலம் வேறு என்று சொல்லுகிறீர்களே !” என்றார் ஆச்சரியமாக.
அதற்குப் பகவர் “நீங்கள் வர்ண தர்மிகள்! தினமும் வர்ணத் தர்மம் படி, சாஸ்திரம் கூறியபடி தர்ப்பையை கையில் இடுக்கிக்கொண்டு, நித்திய கர்மானுஷ்டங்களை, சந்தியாவந்தனம், யாகம் யக்கியம் போன்றவற்றை செய்பவர்கள்” என்றார்.

கேள்விகேட்டவர் விடவில்லை “பகவரே! நீரும் இதை எல்லாம் தவறாமல் செய்கிறீர்களே! நாங்கள் செய்வதற்கும் நீங்கள் செய்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லையே!” என்றார்
பகவர் சிரித்துக்கொண்டு “ஆம் நானும் செய்கிறேன். ஆனால் இந்த நித்திய கர்மானுஷ்டங்களை பெருமாளுக்குச் செய்யும் கைங்கரியமாக அன்றோ நான் செய்கிறேன். நீங்களோ நான் அந்தணர் என்ற வர்ணத் தர்மப்படி இதைச் செய்கிறேன் என எண்ணத்தில் செய்கிறீர்கள். செய்யவில்லை என்றால் பாவம் என்று பயந்துகொண்டு செய்கிறீர்கள்” என்றார்.
“சாமி! நான் பகவரைப் போலக் கைங்கரியத்தின் பெருமையை அறியவில்லையே! அவரைப் போல மற்றவர்களிடமிருந்து வேறுபட்டேனா ? என் துறை வேறு என்று கூறினேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்.
”பெண்ணே! பகவர் என்றால் என்ன ? இந்தப் பெயரை நான் இதுவரை கேட்டதில்லையே!” என்றார் ஒரு சிஷ்யர்.
”பகவத்கீதையை அருளிய பகவானை, கண்ணனை வழிபடும் பக்தர் என்று பொருள்” என்றாள்.
ராமானுஜர் “என்னைப் போல வைணவத் துறவிகளை ‘முக்கோல் பகவர்’ என்று கூறுவர். பெரியாழ்வார் கூட இந்தச் சொல்லை உபயோகித்துள்ளார் தெரியுமா ?” என்றார்
எல்லோரும் ஆச்சரியத்துடன் ராமானுஜரைப் பார்த்தார்கள்.
ராமானுஜர் தொடர்ந்தார் “
’பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே’ என்கிறார் பெரியாழ்வார்.
“சாமி ! பக்தர்களுக்கும் பவார்களுக்கும் என்ன வித்தியாசம் ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்
“பெண்ணே! பகவர்கள் என்பவர்கள் பகவானுக்கு அடிமைப்பட்டவர்களைக் குறிக்கும். ’வில்லிபுத்தூர் பகவரும்’ பகவானுக்கு அடிமைப்பட்டவர் அதனால் அவரைப் பகவர் என்கிறோம். இங்கே பகவான் என்றால் அது திருமாலே!” என்றார்
“சாமி! மற்ற தேவதைகளை வணங்கும் துறவிகளும் இருக்கிறார்களே அவர்களும் பகவர்களா ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.
“பெண்ணே! கோயில் என்றால் திருவரங்கம் என்பது போலப் பகவான் என்றால் அது திருமாலையே குறிக்கும். கீதையில் ’ஸ்ரீ கிருஷ்ண உவாச’ என்று வருவதில்லையே! ’ஸ்ரீ பகவான் உவாச’ என்று தானே வருகிறது!
அதனால் பகவான் என்றால் அது கண்ணனையே குறிக்கும். மற்ற தேவதைகளை வழிபடுபவர்களை அந்தத் தேவதையின் பக்தர்கள் என்று கூறுகிறோம். உதாரணமாகச் சிவனை வழிபடுபவர்களைச் சிவ பக்தர்கள் என்று கூறுகிறோம். திருமாலை வழிபடுபவர்களை மட்டும் தான் ‘பாகவதர்கள்’ என்று பகவான் சம்பந்தமாகக் கூறுகிறோம். கண்ணனின் கதைகள் என்று கூறாமல் பாகவதம் என்கிறோம் அல்லவா ?” என்றார்
“தெளிவாகச் சொன்னீர்கள்” என்றாள் அந்தப் பெண்குட்டி
ராமானுஜர் “நம்மாழ்வாரும் பகவரைப் பற்றிக் கூறியிருக்கிறார்” என்றார்
”ஓ! அப்படியா அதையும் சொல்லுங்கள் சாமி!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

ராமானுஜர் “பிள்ளாய்! நம்மாழ்வார் ‘விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன்’ என்கிறார். ஒரு தாய் தன் பெண்ணைப் பற்றிக் புலம்பும் பாசுரம். பகவர்களை - அதாவது பகவனுக்கு அடிமைப்பட்ட துறவிகளை என் பெண் கண்டால் அவர்களைத் திருமால் என்கிறாள். கரிய மேகங்களைக் கண்டால் கண்ணன் என்கிறாள்’ என்று தன் மகள் நிலையைக் கூறுகிறாள்” என்றார்.
ராமானுஜர் தொடர்ந்தார் “குழந்தாய்! இங்கே நம்மாழ்வார் பகாவானுக்கு அடிமைப்பட்டவர்களை பகவர்கள் என்று குறிப்பிடுகிறார். அடிமைப்பட்ட என்ற வார்த்தை முக்கியம். ’ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்” என்கிறார் நம்மாழ்வார்.
அடிமைத்தனமாகச் செய்யும் தொண்டுகளை நான் செய்கிறேன் என்று நினைத்தாலோ, அல்லது நான் செய்வதுதான் பெரியது என்று நினைத்தாலோ, மற்றவர்கள் சரியாகச் செய்யவில்லை என்று நினைத்தாலோ ? குறிப்பிட்ட வர்ணத்தவர்கள் செய்யும் தொண்டு தான் உயர்ந்தது என்று நினைத்தாலோ சண்டை தான் வரும்” என்றார் ராமானுஜர்.
அப்போது அந்தப் பெண் “சாமி! எங்க கிராமத்தில் ஒரு கதை சொல்லுவார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தாள்.
ஒரு கிழவிக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடந்தது. வீட்டுக்கு வந்த இரண்டு மருமகளுக்கும் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற போட்டி வந்தது. அதனால் மாமியாரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். ஒரு நாள் மாமியாருக்குக் கால் வலி வந்தது. காலைப் பிடித்துப் பிடித்துவிடுவதில் இருவருக்கும் சண்டை. மாமியார் சண்டை போடாதீர்கள். ஆளுக்கு ஒரு காலைப் பிடித்துவிடுங்கள் என்றாள்.
முதல் மருமகள் வலது காலையும், இரண்டாவது மருமகள் இடது காலையும் பிடித்துவிட தொடங்கினார்கள். அப்போது ஒரு பூச்சி பறந்து வந்து இடது காலில் உட்கார்ந்தது. இடது காலுக்குச் சொந்தக்காரியான இரண்டாவது மருமகள் அதைக் கையால் தட்டி விட்டாள். அப்போது பூச்சி பறந்து வலது கால் பக்கம் சென்றபோது அவளுடைய கை வலது கால்மீது பட்டது. முதல் மருமகளுக்குக் கோபம் வந்தது. எப்படி எனக்குச் சொந்தமான கால்மீது உன் கைப்படலாம் என்று பக்கத்தில் இருந்த உலக்கையை எடுத்து இடது காலில் அடித்தாள்!” என்றாள் அந்தப் பெண் சிரித்துக்கொண்டே.
“பிள்ளாய்! அருமையான கருத்தைக் கதையாகச் சொன்னாய். தொண்டு செய்யும்போது பெருமாள் முகம் மலர்கிறதா என்று பார்த்துச் செய்ய வேண்டும். பக்கத்தில் இருப்பவர் முகத்தைப் பார்க்கக் கூடாது. பெருமாள் முகத்தைப் பார்த்தால் சம்பத்து, பக்கத்தில் இருப்பவர் முகத்தைப் பார்த்தால் ஆபத்து! இதனால் கைங்கரியத்தில் கோஷ்டி பூசலுக்கு தான் வழி வகுக்கும்” என்றார்
“இயந்திரத்தனமாகச் செய்தால் அது காரியம், பெருமாள் ஆனந்தத்துக்கு என்று நினைத்துச் செய்தால் கைங்கரியம். சரியா சாமி ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்.

ராமானுஜர் “மிகச் சரி! பகவர் இயந்திரத்தனமாகச் செய்பவர்களிடமிருந்து வேறு துறைக்குச் சென்றதற்கு அது தான் காரணம். இதைத் தான் ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று திருப்பாவை கடைசியில் பெருமளிடம் வேண்டுகிறாள்.
பெண்ணே! இதுவரை நீ கூறியதை எல்லாம் மகிழ்ச்சியுடன் கேட்டேன். இவ்வளவு ஞானத்துடன் பேசும் நீ ஏன் ஊரைவிட்டுப் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாய் ?” என்றார் ராமானுஜர்.
அந்தப் பெண் என்ன கூறினாள் ? - நாளை !
- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும் - இன்னும் ஒரு நாளைக்கு!
Note: English version will be posted separately
Images from internet with thanks.
No comments:
Post a Comment