34. திருவாலி - திருநகரி
திருவாலி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாலியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
வழித்தடம்
சீர்காழியிலிருந்து தென் கிழக்கில் சுமார் 6 மைல் தூரத்தில் உள்ளது. திருவாலி தனியாகவும், திருநகரி தனியாகவும் உள்ளது. திருவாலியிலிருந்து திருநகரி சுமார் 4 கி.மீ. தொலைவு.
பாசுரம்:
தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.
- பெரியதிருமொழி (1198)
அழகிய பொறிகளை உடைய சிறிய வண்டே, நீ உன் துணையைப் பிரியாது பூக்களை விரித்து மதுவை நுகர்ந்து, மகரந்தத்தைச் சிதறிவிட்டு மலர்களை உழக்கித் திரிகின்றாயே, ஆனால் என்னைப்பார் என் நாயகனை விடுத்து தனிமையில் வாடுகின்றேன். ஏ வண்டே, உனக்குத்தான் பிரிவாற்றாமை என்பது என்னவென்று தெரியும், என் நாயகன் இருக்கும் இடத்தை நான் சொல்கிறேன். நீ போய் எனது நிலைமைகளை அவனுக்கு உணர்த்தி விடு. என் தலைவன் எங்கிருக்கிறான். தெரியுமா, எந்நேரமும் தீ அவியாது, வேத ஒலிகளால் சூழப்பட்ட திருவாலியில் இருக்கிறான். அவன்தான் ஏவரி வெஞ்சிலையான் என்று திருமங்கையாழ்வாரால் பாசுரம் பெற்ற இத்தலம்.
பாசுரம் பதவுரை:
தூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே - சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து
பூ விரிய மது நுகரும் - பூக்கள் விகஸிக்க, அவற்றிலுள்ள தேனைப் பானம் பண்ணுகிற
பொறி வாயி சிறுவண்டே - புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே
வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி - குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற
ஏ வரிவெம் சிலேயானுக்கு - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு
என் நிலைமை உரையாய் - என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக.
பாசுரம் விளக்க உரை
வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தனையால், ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்னுங் கருத்து முன்னிரண்ட்டிகளில் வெளிவரும். வண்டுகள் சிறகுகளே விரித்துக்கொண்டு மலரை மிதித்தேறி மதுவைப் பருகுதல் இயல்பாதலால் “தாவிரியமலருழக்கி” எனப்பட்டது. ‘தா’ என்றும் ‘தாவி’ என்றும் சிறகுக்குப் பெயர். உழக்கல் மிதித்தல், சிதிலமாக்குதல்.
முதலடியில் “தாவிரியும் மலருழக்கி” என்ற பாடமுண்டென்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினால் தெரிகின்றது; தூய்தாக விரியும் மலரை=நன்றாக அலர்ந்த மலரை என்றபடி. பொறிவாயி = புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு.
முன்னடிகளால், வண்டை விளித்து, இனிப் பின்னடிகளால் தனக்காகச் செய்யவேண்டுங்காரியத்தை நியனிக்கிறாள் பரகாலநாயகி. வயலாலி மணவாளனை நீ இங்கே அழைத்துக்கொண்டு வர வேண்டா; ‘இன்னாள்’ இன்னபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்’ என்று ஒரு சொல் அவன் செவியிலே விழவிட்டால் போதுமென்கிறாள்.
என்னிஹமையுரையாயே என்ற விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தின் அழகு காண்மின்;-“(உரையாயே.) கொடுவரவேண்டா; அறிவிக்குமித்தனையிறே இத்தலைக்கு வேண்டுவது; வருகை அவன் பணியே; வாராதொழியுமன்று ரக்ஷகனுக்குக் குறையாமே: நீங்களறி வித்தவநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டுத் தானே வாராநிற்கும்” என்று.
இவ்விரு ஸ்தலங்களும் தனித்தனியே இருந்தாலும் ஒரே ஸ்தலமாகத்தான் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. முதலில் திருவாலியைப் பற்றிக்காண்போம்.
திருவாலி:
மூலவர் - அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்)
தாயார் - பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
உற்சவர் - திருவாலி நகராளன்
நாமாவளி - பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தீர்த்தம் - இலாக்ஷ்ண புஷ்கரணி
விமானம் - அஷ்டாச்சர விமானம்
நாமாவளி ஸ்ரீ அம்ருத கடவல்லீ ஸமேத வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ!!!
ஸ்தல வரலாறு:
ஒரு காலத்தில் ஆலி நாடு என்று ஒரு குறுநிலப் பகுதி மிகப் புகழ் வாய்ந்ததாக இருந்தது. பில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட ஆரண்யத்தை ஒட்டியதாக இப்பகுதி அமைந்திருந்தது.
திருமால் நரசிம்ம அவதாரம் செய்தபோது இரண்யனை வதம் செய்து சீற்றம் அடங்காமல் இருக்கக் கண்டு தேவர்களும் ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்படவேண்டும் என்று பிராட்டியை வேண்ட, பிராட்டி எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார். அமர்ந்த தேவியை எம்பெருமான் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதால் திருவாலி (திருவாகிய இலக்குமியை ஆலிங்கனம் செய்தமையால்) ஆயிற்று.
திருமங்கையாழ்வாருக்கு காலத்தால் முற்பட்ட குலசேகராழ்வார் ஆலி நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ என்று மங்களாசாசனம் செய்துள்ளதிலிருந்து இத்தலத்தின் தொன்மை விளங்கும்.
இந்த ஆலிநாட்டைத் தலைநகரமாகக் கொண்டுதான் திருமங்கை குறுநில வேந்தனாய்த் திகழ்ந்தார். எனவேதான் அவருக்கும் ஆலிநாடான் என்றும் பெயருண்டாயிற்று. திருமங்கையாழ்வார் ஆட்சி புரிந்ததற்கான மாடமாளிகைகளோ, அரண்மனைகளோ அவற்றின் ஆதாரச் சுவடுகளோ இப்போது இங்கு இல்லை. ஆழ்வார் தோட்டம் என்று ஒரு தோட்டமும், சிந்தனைக் கினியான் குட்டை என்று வழங்கப்படும் வயலுமே இப்போது திருவாலியில் உள்ள அடையாளங்களாகும். ஆனால் திருநகரியை ஒட்டி திருமங்கை பிறந்த குறையலூர் வரை பூமிக்குள் பண்டைக் கட்டிடங்களும் அரண்மனையும் புதைந்துள்ளதாகவும் சிற்சில இடங்களில் தோண்டும்போது கட்டிடங்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் தென்படுவதாகவும், இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறப்புக்கள:
1) திருமங்கையாழ்வாரின் தேவி குமுதவல்லி நாச்சியார் வளர்க்கப்பட்டஇடம்.
2) இத்தலத்திற்கு லட்சுமி நரசிம்ம ஷேத்ரம் என்று பெயர் லட்சுமி தேவியுடன் நரசிம்ம ரூபமாய் எழுந்தருளியிருப்பதால் இப்பெயருண்டாயிற்று. இதனையும் சேர்த்து இவ்விடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்ம ஷேத்திரங்கள் உண்டு. அவைகள் பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள் என்று இன்றும் வழங்கப்படுகின்றன.
குறையலூர் - உக்கிர நரசிம்மன்
மங்கை மடம் - வீர நரசிம்மன்
திருநகரி - யோக நரசிம்மன்
திருநகரி - ஹிரண்ய நரசிம்மன் (திருநகரியில் இரண்டு நரசிம்மர்கள் சன்னதிகள் உள்ளன)
திருவாலி - லட்சுமி நரசிம்மன்
3) திருமங்கைக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டுமென்று பிராட்டி எம்பெருமானுக்கு விடாது வேண்டுகோள் விடுக்க அவ்வாறாயின் திருவாலியில் தவஞ்செய்து கொண்டிருக்கும் பூர்ணமஹரிஷியின் புத்திரியாகப் போய் அவதாரஞ்செய் நான் வந்து திருமணக்கோலத்தில் உன்னை ஏற்றுக்கொள்ளும் போது திருமங்கைக்கு அருள் பாலிப்போம் என்றார். பூர்ண மஹரிஷி தவம் புரிந்தமையால் பூர்ண புரி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு.
4) எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்திற்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்து கொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட வேதராஜபுரம் என்ற இடத்தில் வரும்போது திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தை உபதேசம் செய்தார். எம்பெருமான் பத்ரியில் (பதிரகாசிரமத்தில்) தானே ஆச்சாரியனுமாய் தானே சீடனுமாய் நின்று திருமந்திர உபதேசம் செய்தார். அந்தக் குறைதீர ஸ்ரீபதரியின் நாராயணப் பெருமாளே ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமாளாக இங்கு எழுந்தருளி திருமங்கை மன்னனுக்கு திருமந்திர உபதேசம் செய்து அதற்கு எல்லை நிலமான அர்ச்சாவதாரங்களையும் காட்டிக்கொடுத்து திருமங்கை யாழ்வாரையும் ஆட்கொண்டார். எட்டிழையாய், மூன்று சரடாய், இருப்பதொரு மங்கள சூத்திரத்தை (ஓம் நமோ நாராயணா என்று 8 எழுத்தாக) ஓம், நமோ, நாராயணாய என்று மூன்று சரடாய் திருமங்கையாழ்வாருக்கு காட்டின இடமாகையால் இதனைத் திருமணங்கொல்லை என்று பெரியோர் அருளிச் செய்வர். இதன் பெருமையை மணவாள மாமுனிகளும் இதுவோ திருமணங்கொல்லை. இங்கேதான் வெட்டுங்கலியன் வாள் வலியால் வெறுட்டி நெடுமாலை எட்டெழுத்தும் தட்டிப் பறித்த இடம் என்று ஈடுபட்டு அனுபவிப்பர். இங்கு (வேதராஜபுரத்தில்) ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல் நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து திருவேடுபறி நடத்தி திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வேடுபறி மண்டபம் என்று வேடுபறி (எம்பெருமானிடம் திருமங்கை கொள்ளையிட்ட இடத்தில்) நடந்த இடத்தில் ஒரு மண்டபமும் உள்ளது. பத்ரிகாச்ரமத்துக்கு அடுத்தபடியாக எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இவ்விடத்து திருமந்திர உபதேசம் செய்ய எழுந்தருளியதால் இத்தலம் (திருவாலி) பத்ரிகாச்ரமத்துக்கு சமமானதாய்க் கருதப்படுகிறது..
திருநகரி:
மூலவர் - வேதராஜன் (வயலாலி மணவாளன்) வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுகம்.
தாயார் - அம்ருத வல்லி, அம்ருதகடவல்லி
உற்சவர் - வயலாளி மணவாளன், கல்யாண ரங்கநாதன்
நாமாவளி - ஸ்ரீ அம்ருதகடவல்லீ ஸமேத ஸ்ரீ வயலாளி மணவாளன் ஸ்வாமிநே நமஹ
தீர்த்தம் - இலாட்சன புட்கரணி
விமானம் - அட்டாச்சர விமானம்
திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
ஸ்தல வரலாறு:
கிரேதாயுகத்தில், பிரம்மாவின் 5வது புத்திரனான கர்த்தம பிரஜாபதி திருமாலின் ஸாயுஜ்யம் (மோட்சம்) வேண்டுமென இவ்விடத்து திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தார். இவருக்கு அருள்வதில் எம்பெருமான் அதிகமான காலதாமதம் காட்டவே பக்தனுக்கு விரைவில் காட்சி கொடுக்க வேண்டும் என்று பிராட்டி எம்பெருமானை வேண்ட, அவரோ அதற்குச் சற்றும் செவி சாய்க்காவண்ணம் மேலும் பொறுமை காட்டி நின்றார். இதைக் கண்டு சினந்த பிராட்டி (பக்தனுக்கு அருள்வதில் தான் கொண்டுள்ள பரிவு என்னும் தாய் மனோபாவத்தில்) வைகுண்டத்தை விட்டு பூவுலகு வந்து இவ்விடத்து அமைந்திருந்த ஒரு அழகிய தாமரைப் பொய்கையில் ஒரு அழகிய தாமரை மலருக்குள் தன்னை மறைத்துக் கொள்ள திருமகள் இல்லாத வைகுந்தம் பொலிவு குன்றியது. திருமால் திருமகளைத் தேடி எங்கும் அலைந்து காணாமல் இவ்விடம் வந்து சேர்ந்தார். லட்சுமிக்குத் தாமரை மிகவும் உவப்பாதலால் ஒரு வேளை இங்கு மறைந்திருக்கலாமென்று தாமரைகளை உற்று நோக்கினார். எல்லாத் தாமரைகளும் இதழ் விரிக்காது ஒரே மாதிரி மொட்டாக இருக்கக்கண்ட எம்பெருமான் தனது வலது கண்ணை மூடி இடது கண்ணைத் திறந்தார். (திருமாலின் வலது கண் சூரியன் இடது கண் சந்திரனல்லவா) எல்லா தாமரைகளும் சந்திரன் வந்துவிட்டது. சந்திர ஒளி வந்துவிட்டது என்று எண்ணி அலர்ந்துவிட்டது. அதில் ஒரேயொரு தாமரை மட்டும் மலராது நிற்க இதில்தான் ஸ்ரீ இருக்க வேண்டுமென நினைத்த எம்பெருமான் ஓடி வந்து தாமரை புஷ்பத்திற்குள் இருந்த ஸ்ரீயை ஆலிங்கனம் செய்துகொண்டார். எனவே இது ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. தமிழில் திருநகரியானது. (ஏற்கனவே ஒரு ஆலிங்கனம் நடந்ததும் இவ்விடத்தில்தான் (திருவாலியில்) எனவே இரண்டும் சேர்ந்து வரலாற்றுப் பின்னணியில் ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி என்றாயிற்று.
இத்திருக்கோலத்தைக் கண்ட கர்த்தம ப்ராஜாபதி இதுதான் தருணம் என்று இருவரையும் விடாதே பற்றிக்கொண்டு மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் ப்ரம்ம புத்திரனை நோக்கி உனக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்றும், அருளி வேறுயாதாகிலும் வேண்டிக்கொள் என்று சொல்ல, இதே திருக்கோலத்தில் இங்கேயே எழுந்தருளியிருக்குமாறு வேண்ட அஷ்டாச்சர விமானத்துடன் எழுந்தருளினார். திரேதாயுகத்தில் இவரே உபரி ஸர வஸு என்னும் மன்னனாக பிறந்தார். (வசு என்பது பெயர். ஸரம் - என்றால் அலைதல் உபரியென்றால் ஆகாய மார்க்கம். ஆகாய சஞ்சாரம் செய்பவர் என்பது பொருள்). இவர் மிகச்சிறந்த தபஸ்வியாகவும், கடுமையான பக்தனாகவும், பெரிய பராக்ரமசாலியாகவும் விளங்கி தேவர்களுக்காக இந்திரனுக்கு போரில் உதவி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்து இந்திரனிடமிருந்து தர்சனம் என்னும் சக்தியினையும், அங்கஜம் என்னும் தோள்வளையினையும் பரிசாகப் பெற்றார். இவர். ஒரு சமயம் விமானத்தில் பறந்து வரும்போது இந்த ஸ்ரீபுரிக்கு மேலாக வரும்போது மேற்கொண்டு செல்லமுடியாமல் விமானம் தடைபட்டு நிற்க இவ்விடத்தின் மகிமையினையும், விமானம் பறக்காது தடைபட்டமைக்கான காரணத்தையும் அறியுமாற்றான் இவ்விடத்திலேயே திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்யலாயினார். எம்பெருமான் பிரத்யட்சமானதும் இவருக்குப் பூர்வ ஜென்மம் புலப்படவே, எம்பெருமானைப் பலவாறு போற்றித் துதித்து முக்தியளிக்க வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில் கிடைக்கும் என்று கூறி மறைந்தார். இதன் பிறகு உபரி ஸர வசு இக்கோவிலுக்கு பல கைங்கர்யங்களை செய்து நெடுங்காலம் இங்கு தங்கியிருந்து சென்றார்.
துவாபுரயுகத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் ககூஸ்தபட்டினம் என்னும் நாட்டையாண்ட வஜ்ரகோஷன் என்னும் மன்னனுக்குப் புத்திரப் பேறில்லை. இவருக்குச் சங்க பாலன் என்னும் ஒரு மந்திரி இருந்தார். அவருக்கு வைரமேகன், நிதிபாலன் என்ற இரண்டு புத்திரர்கள் இருந்தனர். வஜ்ரகோஷன் தனக்குப் புத்திரனில்லாமையால் சங்க பாலனின் முதல் புத்திரன் வைரமேகனை நாட்டின் இளவரசனாக்கி, நிதிபாலனை மந்திரியாக்கினான். இவ்விதம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்புகளைத் தமது புதல்வர்கள் ஏற்றுக் கொண்டபடியால் சங்கபாலன் திக்விஜயம் மேற்கொண்டான். திக் விஜயத்தின் போது இந்த லட்சுமி புரியாகிய வில்வாரண்ய மகாத்மியத்தைக் கேள்விப்பட்டு இங்கு தங்கி இவ்விடத்தே மஹாரிஷிகளை வைத்து பெரிய யாகம் செய்ய, யாகத்தின் அவிர்ப்பாகத்தை ஏற்க திருமால் நேரில் தோன்ற சங்கபாலன் தனக்கு (ஸாயுஜ்யம்) மோட்சம் வேண்டுமென்று கேட்க அது கலியுகத்தில்தான் என்று எம்பெருமான் கூற அவ்வாறாயாயின் இதே கோலத்தில் எம்பெருமான் இங்கு நித்யவாஸம் செய்ய வேண்டுமென்றும் இவ்விடத்தில் ஊரும், நாடும், நகரமும் உண்டாக வேண்டும் என்று பிரார்த்திக்க, அவ்வாறே ஆகட்டும் என்று கூறி கூப்பிடு தூரத்தில் கடல் இருந்தமையால் எம்பெருமான் மேற்கு நோக்கி நின்றருளினார்.
இந்த கலியுகத்தில் திருநகரிக்கு அருகாமையில் உள்ள குறையலூரில் சோழனின் ஆளுகைக்குட்பட்ட சேனைத் தலைவனுக்கு ஒரு புத்திரன் பிறந்தார். இவரது திருமேனி நீலவண்ணமாயிருந்ததால் இவருக்கு நீலமேகன் (நீலன்) என்றே பெயரிட்டழைத்தனர். இளம் வயதில் காமவேட்கையில் ஈடுபட்டுத் திரியும் திரிலோலராக இருந்து வருங்காலையில், திருவெள்ளக்குளத்தில் அப்சரஸாக வந்து திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைக் கேள்விபட்டு அவரைத் திருமணம் செய்து தரச் சொல்லி கேட்க, குமுதவல்லியோ திருவிலச்சினை பெற்று துவாதச திருநாமங்கள் அணிந்த பாகவதனுக்கேத்தான் வாழ்க்கைப்பட முடியும் என்று சொல்ல, அவ்விதமே பரமபாகவதனாக மாறி வர, இவரை நோக்கிய குமுதவல்லி எனக்கு ஒரு விரதமுண்டு, அதாவது ஒரு வருட காலத்திற்கு தினமும் ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கட்கு அன்னதானம் (ததியாரதனம்) செய்ய வேண்டுமென்றும் இவ்விதம் முடிந்த பின்னரே நான் தங்களுக்கு பத்தினியாக முடியும் என்று கூற நீலமேகனும் அதற்கியைந்து ததியாரதனத்தின் பொருட்டு பொருள் எல்லாஞ்செலவு செய்து கப்பம் கட்ட பணமில்லாதபோது சோழனால் நறையூரில் (நாச்சியார் கோவிலில்) சிறை வைக்கப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வாரும், மாதனம் தருகிறோம் என்று சொல்லி அவ்வண்ணமே வேகவதி நதிக்கரையில் தனம் கண்டெடுத்து மன்னனுக்கு கப்பம் கட்டிவிட்டு, மீண்டும் ததியாரதனம் செய்து வரும்போது மீண்டும் பொருளின்றிப் போகவே, வழிப்பறியில் இறங்கலானார். இந்நிலையில் வைகுண்டத்தில், தனது பக்தன் படும்பாட்டைக் கண்டு மனமிரங்கி பிராட்டி எம்பெருமானை நோக்கி நீலனுக்கு உடனே அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்க, சரி என்று ஒப்புக் கொண்டு, திருமகளை பூர்ண மஹரிஷியின் புத்திரியாக வளரக் கட்டளையிட்டு திருமணப் பருவம் வந்துள்ளபோது ஆலிநகருக்கு மணவாளனாக வந்து திருமணம் முடித்து பொற்குவியல்களுடன் திருநகரி நோக்கிச் சென்று கொண்டிருக்க ஏதோ பெரிய திருமணக் கோஷ்டி செல்வதைக் கேள்வியுற்று திருமங்கை வேதராஜ புரத்திற்கே வந்து எம்பெருமானை வழி மறித்து பொருட்களைக் கொள்கையிட்டு அதை ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்க முயன்றபோது, தன் சக்தி முழுவதும் பிரயோகித்ததில், தூக்க முடியாமல் போக, இவன் ஏதோ மந்திரம் போட்டுவிட்டான் என்று தன் வாளினை உருவி, இம்மூட்டையைத் தூக்க முடியாமல் போனதற்கான மந்திரத்தை எனக்கு கூறு என்று கேட்க, வா சொல்கிறேன் என்று அழைத்து நீலமேகனின் செவிகளில் அஷ்டாச்சர மந்திரத்தைக் (எட்டெழுத்து மந்திரத்தை) கூற அவருக்கு ஞானமும் பூர்வ ஜென்மமும் புலப்பட திருமங்கை ஆழ்வாராகி (குமுதவல்லி என்னும் மங்கையால் எம்பெருமானின் பக்தியில் ஆழ்ந்தமையால் மங்கையாழ்வாரானார்) திக்விஜயம் மேற்கொண்டு, திவ்ய தேசங்களைச் சேவித்து மங்களாசாசனம் செய்து இறுதியில் திருக்குறுங்குடி சென்று திருவரசு எய்தினார்.
வயலாலி மணவாளனும், திருமகளும் பக்தனின் பொருட்டு இவ்விரண்டு ஸ்தலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டமையால் திருமங்கையின் வரலாறும் இவ்விரண்டு திவ்யதேசங்களுடன் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக திருவாலி திருநகரி ஆயிற்று.
.சிறப்பு:
திருஞான சம்பந்தரை வாதில் வென்று அவரிடம் பெற்ற வேலோடு ஒரு வேடனைப் போல் திருமங்கை இங்கு காட்சியளிப்பது காணத் தெவிட்டாத பேரழகாகும்.
திருமங்கையாழ்வார் திருக்குறுங்குடியிலிருந்தபோது தம்மைப் போலவே ஒரு பிம்பம் (தங்கத்தால் விக்ரகம்) செய்து தான் அப்பிம்பத்தின் நேரில் நின்று கொண்டு வா என்று அழைக்க, அப்பிம்பம் நடந்து வர அதனைக் கட்டித் தழுவி தம் சக்தி முழுவதையும், அப்பிம்பத்தில் செலுத்திவிட்டு அதன் பிறகே திருமங்கையாழ்வார் திருவரசு (மோட்சம்) எய்தினார் இப்பிம்பம்தான் இப்போது திருநகரியில் வைக்கப்பட்டு நித்ய பூஜைகளும் நடைபெறுகின்றன.
திருமங்கையாழ்வாரால் பூஜிக்கப்பட்ட சிந்தனைக்கினியான் என்னும் விக்ரகம் இராமானுஜர் காலத்தில் திருக்குறுங்குடியிலிருந்து கொண்டுவரப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிந்தனைக்கினியானின் திருவாரதனத்திற்கு நந்தவனமாக இருந்த பகுதி இப்போதும் சிந்தனைக்கினியான் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது
.
குமுதவல்லியாரின் கோரிக்கைப்படி ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குத் தினந்தோறும் ததியாரதனம் செய்த இடம் இன்றும் மங்கை மடம் என்றே அழைக்கப்படுகிறது. திருக்குறையலூரிலிருந்து வெகு அருகாமையில் உள்ளது இந்த மங்கை மடம். எந்நேரமும் போக்குவரவு வசதி மிக்க இடமாகத் திகழ்கிறது.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/EWXoqZDRCzc
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment