Wednesday, July 29, 2020

பாபநாசம்

பாபநாசம் (season 1?) #ganeshamarkalam

பாங்க் உத்யோகத்தில் சில நியதிகள், கொஞ்ச வருஷம் பிற்பட்ட இடங்களில் வேலை செஞ்சே ஆகணும்னு. நல்ல வேளை எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. இந்த போஸ்டிங்க் போட்டப்போ சரின்னுட்டேன். போனப்புரம் தப்பு செஞ்சுட்டோமோன்னு தோணித்து.
பாபநாசம் லோவர்டாமில் எங்க பிரான்ச். போய்ச் சேர்ந்தப்போ இவ்வளவு ரம்மியமான இடமான்னு தோணித்து. சனி, ஞாயிறு அல்லது விடுமுறையோ வந்தால் கழிப்பது பிரம்மப்ரயத்தனம். ஊரில் ஒண்ணுமேயில்லை. 

கீழே 300மீ படிலே இறங்கிப்போனா பவர் ஹவுஸ். அதில் வேலை செய்யரவாளுக்கு இங்கே குவாடர்ஸ். அவாளுக்குன்னு சில வசதிகள். இந்த வழியா அப்பர்டாம் போக ஒருநாளைக்கு 1 ட்ரிப் மட்டுமே வரும் பஸ்ஸுக்காக ஒரு நிறுத்தம், அதைச்சுத்தி சில கூரைவேய்ந்த டீக்கடைகள், ஒரு போஸ்ட் ஆபீஸ், என்னோட வங்கி, அப்புரம் காட்டுப்பாதை. ஒரே பொழுதுபோக்கு EB காலனி மைதானத்தில் இருக்கும் ஒலிபெருக்கி. அதில் சாயங்காலம் ஆனா ரேடியோ கேக்கலாம்.

நான் பிரம்மாச்சாரியா, பேங்குக்குன்னு எடுத்துண்ட வாடகை வீட்டுக்கு பின்னாடியே ஒரு போர்ஷனில் ஜாகை. இன்னும் சினேகிதாள் ஆம்படலை. அதிகம் பேர் பேங்குக்கும் வரதில்லை. ரெண்டுமாசம் ஆச்சு. மூட் இருந்தால் சமைச்சுப்பேன், இல்லைன்ன டீக்கடையில் இட்லி வடை கிடைக்கும். அதை தின்னு, வாழைப்பழம் முழுங்கிட்டு தூங்கிடவேண்டியதுதான். சொல்லும்படியா நடந்த விஷயம்?
ஒரு ஞாயித்துக்கிழமை அந்த படிகளில் பவர்ஹவுஸ் வரைக்கும் போயிடரதுன்னு தீர்மானமா இறங்கிப்போயிட்டேன். அங்கே போனதும், “இது ரெஸ்ட்ரிக்டெட் ஏரியா, ஏன் வந்தாய்”னு கேட்டான். அப்புரம் நான் யார்னு தெரிஞ்சிண்டு உள்ளே அழைச்சிண்டு போய் எஞ்சினீயர்கிட்டே அறிமுகம் ஆச்சு. அவரும் உக்காரச்சொல்லி காபி வாங்கிக்கொடுத்தார். “நீங்க எப்போ வேணும்னாலும் வாங்கோ ஆனா பாத்துவாங்கோ இங்கே புலி நடமாட்டம் இருக்கு”ன்னுட்டர். அதைக்கேட்டுட்டு நான் ஏன் போகப்போரேன்! 

படீலே இறங்காம வலதுகைப்பக்கம் போனால் காட்டுப்பாதை அகஸ்தியர் ஃபால்ஸ்னு ஒரு மிக அழகான பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு கொண்டுபோய் விடும். “அங்கேயும் துணையில்லாம போகவேண்டாம் ஆபத்து, வழுக்கினா கீழே டவுனில் உங்க எலும்பைத்தான் அள்ளணும்”னுட்டா.
“மேலே உள்ள டாமிலேந்து தண்ணி திறந்துவிட்டா அது ஆத்தில் வரும், அப்போ ஆத்தங்கரைக்கு போலாம், அருவிகிட்டே வேண்டாம்”னு பாக்கிரவா எல்லாம் அட்வைஸ்.
இன்னொரு விஷயம் நடந்தது, “8கிமீ தூரத்தில் முண்டந்துரைகிட்டெக்க வனப்பேச்சி அம்மன் கோவிலில் திருவிழா ஜோரா நடக்கும்”னு டீக்கடைக்காரன் அழைச்சிண்டு போனான். பேங்க் மூடினப்புரம் வெள்ளிக்கிழமை 6 மணிக்கு கிளம்பி நடந்து போய் அங்கே 8 மணிக்கு உத்ஸவம் பாத்தோம். கரகாட்டம், நையாண்டிமேளம்னு ராத்திரி பூரா களைகட்டித்து. இந்த வனாந்திரத்தில் இத்தனை பேரான்னு கூட்டம் கூடித்து. அதிகாலை 3 மணிக்கு அங்கேந்து திரும்பவும் நடந்தே கூட்டமா வந்தோம். எங்களைப் பாத்த எல்லா புலியும் ஒளிஞ்சிண்டிருக்கும். ஆகக்கூடி இந்த 2 மாசத்தில் எனக்கு இடம் பழகித்து.
ஒரு ஞாயித்துக்கிழமை நாமும் தைரியமா ட்ரெக்கிங்க் ஒண்ணு போராளே அப்படிப் போகலாம்னு கிளம்பினேன், தனியா. மலைமேல் ஓடிவரும் தாமிரபரணி ஆத்தை கிட்டெக்கலேந்து பாத்துடணும்னு ஆசை. தண்ணி அவ்வளவா இல்லை, ஏன்னா எல்லாத்தையும் அப்பர்டாமில் நிருத்திவச்சு கொஞ்சமா விடுவா. அதுவும் நல்லது, கொயட்டா ஒரு இடம் கிடெச்சா குளிக்கலாமேன்னு நப்பாசை. கையில் துண்டும், சோப்பும், பசிச்சா சாப்பிட டீக்கடையில் வடையும் இட்லியும் கட்டிண்டு ஏற்பாட்டோட கிளம்பியாச்சு. 

வந்த இடம் அழகு. தெளிந்த நீர் ஓட்டம் அங்கேயும் இங்கேயுமா பாறைக்கிடையில், பல இடங்களில் ஆழம் தெரியலை. முதல்தடவை விஷப்பரீக்ஷை வேண்டாம்னு ஒரு நல்ல வாகான பாறையில் உக்காந்துண்டு ரசிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் அவளைப்பாத்தேன்.
இவளுக்கு 22 இருக்கும். கருப்புதான், ஆனால் கொள்ளை அழகு. கூட நடுத்தர வயது பெண்கள் ரெண்டுபேர். குளிக்க வந்துருக்கா. பக்கத்தில் உள்ள கிராமத்துக்காரின்னு நன்னாவே புரிஞ்சது. நான் உக்காந்துண்டு இருந்த பாறையிலேந்து அவா குளிக்கிர இடம் தெரிஞ்சது. ஆனா அவாளுக்கு என்னை மறைக்கும். 

எப்பவும் இங்கேதான் வரவா மாதிரி சுவாதீனமா அரட்டை அடிச்சிண்டே குடங்களை கீழே வச்சுட்டு துணிகளை களைய ஆரம்பிக்கரா. இப்போ என்ன செய்யரது? எழுந்து போயிடணுமா? இல்லை இவாளை நோட்டம் விடலாமான்னு மனசு அலைபாஞ்சது. திரும்பப்போய் என்ன வெட்டி முறிக்கப்போறேன்? ஒண்ணும் இல்லை. வச்சிருந்த புஸ்தகங்களை ரெண்டுவாட்டி படிச்சாச்சு. வாரப்பத்திரிகை வர இன்னும் ரெண்டுநாள் பாக்கி. நான் வந்ததோ வனாந்திரத்தில் நடை பழக. நாம கேக்காமலே இலவசமா ஆங்கிலப்படம் பாக்கலாம்கிரப்போ இருந்துட்டு சாவகாசமா போகலாம்னு என்னை மீறி முடிவெடுத்துட்டு அப்படியே சான்ஜுக்கரேன்.
தப்புத்தான். ஒருதடவை தப்பில்லைன்னு சமாதானப்படுத்திக்கரேன். நாளைக்கு வேர ஊருக்கு மாத்தலாகிப் போய்ட்டா இது கிடைக்காது. இப்படி நிறைய சப்பைக்கட்டு கிடைச்சது.
யாருமே இல்லாத இடம், குளிக்கிர இவாளை மீன்சாதிகள்தான் பாக்கமுடியும்னு தேர்ந்தெடுத்து வந்து குளிக்கர இடத்திலேயும் அவிழ்த்த புடவையை தூக்கிப்போட்டுட்டு சட்டுன்னு, கண் இமைக்கிர நொடியில் அந்த பாவாடையை தூக்கிக்கட்டிண்டுதான் தண்ணீரில் இறங்கரா. பெண்களுக்கே உள்ள கவனம், தற்காப்பு. அதிலும் அந்த இளம்பெண் மத்தவாளை விட்டு கொஞ்சதூரம் தள்ளி ஆத்தில் நீந்திப்போர காட்சி அவ்வளவு ஹிதமா பட்டது. இயற்கை இவளை அள்ளிண்டு தன்னோட ஒண்ணா பாவித்து அழைச்சிண்டு போராப்புலேயும் இனிமேல் இவள் திரும்பி கரை ஏறினா ரெண்டு மடங்கு கூடுதல் சௌந்தர்யத்தோட திருப்பிக்கொடுக்கும்னு தோணித்து. 

மத்தவா தங்களுக்குள் ஏதோ வம்பு அளந்துண்டு அவுத்துப்போட்ட புடவையை இவளோடதையும் சேர்த்து துவைக்கரா. கொஞ்ச நேரத்தில் இவளும் கரைகிட்டேவந்து இவா மேல தண்ணியை அள்ளி வீசரா. இது தினம் நடக்கும் விளையாட்டோ? அப்போதான் மேகம் கலைஞ்சு, மரத்துக்கு நடுவுலேந்து சூரிய ஒளி இவா மேலே தெளிக்க. அப்போ அந்த இடமே ரவி வர்மா ஓவியம்போல மாறினதை பாத்தேன்.
இவளின் பட்டாம்பூச்சி தோரணையும், விலகிப்போர துணியை பொருட்படுத்தாத துள்ளலும், துணி விலகின இடத்தில் ஒளிக்கற்று பூந்து விளையாடினதையும், இங்கேந்து எல்லாம் ஸ்பஷ்டமா தென்பட்ட விதமும், இருப்பதை நிச்சயமா இருக்குன்னும், சரியா தெரியாததையும் அதுவாக இருக்குமோன்னு சந்தேகப்பட வைத்ததையும் வைத்து பாட்டே எழுதலாம். 

கொஞ்ச நேரம் கழிச்சு அவா எல்லோரும் குளிச்சு முடிச்சு கரையேறி ஈரமான துணிகளை செடிகளில் போட்டோ அல்லது தாங்களே இழுத்துப்பிடிச்சிண்டோ நிக்கரா. ஒருத்தர் கண்ணில் இன்னொருவர் தேகம் படாம காயப்போட்ட புடவையை மறைப்புக்கு வச்சிண்டு நின்னாலும், இப்படி ஒருத்தன் பாத்திண்டிருப்பேன்னு பிரஞ்கையே இல்லாம, உடம்பில் தொத்திண்ட நீர் துளிகள் ஒவ்வொண்ணா காத்தில் கரைய எனக்குமட்டும் காமிச்சுண்டு! துணி காயரவரைக்கும் நின்னுண்டே, இங்கே கொட்டிக்க்டக்க கல்மிஷமில்லாத ஏகாந்தத்தை அனுபவிச்சிட்டு அப்புரம் காய்ந்த புடவையை உடம்பில் சுத்திண்டும் குடத்தில் தண்ணியை ரொப்பிண்டு போரா.
எனக்கு ராத்திரி தூக்கம் போச்சு. பேங்கில் பணத்தை என்ணுவதில் தப்பு நடக்க ஆரம்பிச்சது, கவனக்குறைவால். அடிக்கடி மோட்டுவளையை பாத்துண்டு மேலே சுத்தர ஃபேன் கிட்ட அந்த காட்சிகள் வந்து நின்னுட்டு போயிண்டு இப்படி 5 நாள் கழிஞ்சது. 

வந்ததே பாருங்கோ அடுத்த ஞாயித்துக்கிழமை, துண்டையும் சோப்பையும் எடுத்துண்டு டயத்துக்கு அங்கே போயாச்சு. அதே மாதிரி நடதைப்பதும் அதே மனக்கிலேசங்களுடன், கிளுகிளுப்புகளுடன் குலாவிவிட்டு திரும்பரேன். 

டீக்கடைக்காரன், “சார், ஞாயித்துக்கிழமை வந்தா பார்செல் கட்டிண்டு எங்கே போரேள்”னு கேட்டுட்டான். “ஆத்தங்கரைக்கு”ன்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டு அவனது அடுத்த கேள்விக்கு நிக்காம நகருவேன். கொஞ்சதூரம் போய் திரும்பிப்பாப்பேன், ஒருவேளை பின்னாடியே உளவு பாக்க வரானோன்னு கவலையில். நான் பார்ப்பது, எனக்கு காணக்கிடைப்பது எனக்கு மட்டும் சொந்தம்னு எண்ணம். இது நான் கேட்டு திரும்ப வந்த கனவு, வரப்போல்லாம் புதுசா, புது விளக்கங்களுடன், புது அர்த்தங்களுடன், புது வர்ணஜாலங்களுடன், எனக்கு மட்டும்தான்.
நான் இவா குளிக்கரதை அப்பட்டமா பாத்துண்டு உக்காந்திருக்கேன்னு அவாளுக்கு தெரியுமா? தெரிஞ்சிண்டே சில விஷமங்களை பண்ரான்னு சிலசமயம் தோணும். அதுக்கு சாத்தியமில்லைன்னு உடனே மனசு சொல்லும். நகரத்து பெண்கள்னா கொஞ்சம் சாத்தியமிருக்கு. இந்த மலைகிராமத்து மக்கள் கள்ளம் கபடம் தெரியாம இருக்கிரவா. தெரிஞ்சா நிச்சயம் கிராமத்தில் சொல்லி என்னை ஒரு வழி பண்ணிடுவான்னும் புரிஞ்சது. ஆனா இவா நான் இருக்கும் பக்கம் பாத்து மாட்டிண்டேன்னா சொல்வதர்கு ஏதாவது யோசிச்சு வச்சுக்கணும்னு நினேச்சுப்பேன். அதே சமயத்தில் இதை நிறுத்திடணும்னும் தோணும். இந்த பழக்கம் விகாரப்பட்டு விபரீதமா ஆயிடும்னு மனசு எச்சரிக்கும். இதையெல்லாம் மீறி என்னை அறியாம என் கால்கள் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அங்கே போயிடும். சில சமயம் சாதாரண வார நாட்களிலும் ஒருநாள் லீவு போட்டுட்டு போய் பாக்கப்பிடாதான்னு கேட்கும். 

நான் விரும்பும் அந்த இளம் பெண் தினமும் குளிக்க வரமாட்டாளா என்ன?
இப்படி போயிண்டிருகச்சே ஒருநாளைக்கு பேங்கில் ஆடிட் எல்லாத்தையும் தயாரா வச்சுக்கவும்னு தகவல் வந்தது. அதுமட்டும் இல்லை, வரப்போரவா இந்த இடத்துக்கு புதுசு, அவாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செஞ்சு கொடுக்கவும்னும் ரெக்குவெஸ்ட் பண்ணியிருந்தா. அவா விருப்பப்பட்டா பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கும் அப்புரம் குத்தாலத்துக்கும் அழைச்சிண்டு போகும்படி. திருநெல்வேலி, திருச்செந்தூர், சங்கரன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் போகலாம், நானும் பாத்தாப்புலே இருக்கும். குத்தாலத்தில் இப்போ சீசன் இல்லைன்னு சொல்லிடலாம். 

ஆனா இவாளோட ஞாயித்துக்கிழமை சுத்தப்போயிட்டா ஆத்தங்கரை விஸிட்? கவலைப்பட்டேன். விசாரிக்க கிளம்பரேன், ஊரில் சிலபேரை பாத்துகேட்டால் பஸ்ரூட் அல்லது ஒரு ஜீப் அரேஞ்ச் பண்ணிக்கொடுப்பாளான்னு.
அன்னைக்கு பஸ் நிறுத்தத்தில் கொஞ்சம் பேர் காத்திண்டிருக்கா. நானும் கொஞ்சநாழி யோஸிச்சிட்டு ரோடை கிராஸ் செஞ்சு EB காலோனிக்கு போய் எஞ்சினீயரை பாக்கலாம்னு ரெண்டு அடி எடுத்து வைக்கரேன். வச்சதுதான் தெரியும். என்னை ஒரு வளைக்கரம் தடுத்து பின்னாடி இழுத்தது. இழுத்த வேகத்திலேயே என் கையை இருக்கிப்பிடித்து என்னை அங்கே இங்கே நகர முடியாம பிடித்தது. ஏன்னு என்னை கடந்து சென்ற பேரூந்தும் அது சரக்குன்னு கொஞ்சம் தள்ளி நின்னதையும், உள்ளேந்து எனக்கு கிடைத்த வசவும் விளக்கம் சொன்னது. 

யார் என்னை மயிரிழையில் காப்பாத்தினான்னு பாத்தா அதே இளம் பெண், யாரை நான் வாரா வாரம் அவளுக்கு தெரியாம முழுசா பாத்துண்டு தப்பு செஞ்சுண்டு இருந்தேனோ அவள். கருப்பு வதனத்தில் சாயம் வெளிறின புடவை, நெத்தியில் பளீரென சிவப்பு பொட்டு, மஞ்சள் அப்பிய முகம், மலர்ந்த கண்களும் அதனுள் என்னை பரிதாபமாக பாத்த, அடிபடாமல் தப்புவித்த பெருமிதத்துடன் கூடிய நகையும் தெரிந்தது.
அந்த சமயத்தில் அவ்வளவு அருகாமையில் அவள் முழு தேகம் தென்பட்டாலும் அவள் முகத்துக்கு கீழே எள்ளளவும் பாக்கணும்னு தோணாமல் அந்த கடாக்ஷம் என்னை கட்டிப்போட்டது. “ரொம்ப தாங்க்ஸ்”னு வாய் குழறி, கையிரண்டும் என்னை அறியாமல் அவளை நோக்கி கும்பிட்டன. “பாத்துப்போங்க சார்”னு சொல்லிட்டு ஒரு க்ஷணத்தில் காணாமப்போனாள்.
சில நிமிடங்கள் அங்கேயே ஸ்தம்பித்து நின்னவன் வந்த வேலையை மறந்து வீட்டுக்கு திரும்பி வரேன். ஆடிட்டர் வரலைன்னும் மாத்துத்தேதி பின்னர் அறிவிப்போம்னும் தகவல் காத்திருந்தது. 

அதுக்கப்புரம் வந்த ஞாயிற்றுகிழமைகளை வீட்டிலேயே பழைய ஆனந்தவிகடனிலும் தினத்தந்தியிலும் சிலவழித்தேன்னும் ஆத்தங்கரைக்கு போகலைன்னும் நான் சொல்லித்தான் தெரியணுமா?

No comments:

Post a Comment