அம்மி (which season is this?)
#ganeshamarkalam
எல்லாராத்துலேயும் மின்னே கொண்டாடுவா. தலேல தூக்கி வச்சுக்காத குறையா, வீடு மாத்திப் போரச்சே என்னையும் ஸ்ரத்தையா கூடவே அழைச்சிண்டு போயி எல்லாம் நடந்தது. இப்போ சீண்டரதில்லை. இருந்தா ஒரு ஓரமா, தோட்டத்தில் கேட்பாரில்லாம.
துவையலோ, சட்னீயோ வெழுமூண வரலைன்னா பொழிச்சு விடுவா. காசை வாங்கிண்டு ஒருத்தன் இறும்பு உளியாலே குத்துவான். இப்போ அதெல்லாம் இல்லை. கூடவே இருந்த குழவியும் எங்கேன்னு தெரியலை. எல்லாம் நேரம். அந்த சுமீத்காரன் மிக்ஸீ செஞ்சான், அப்புரம் ப்ரீதி அது இதுன்னு என்னை இருக்கர இடம் தெரியாம அடிச்சிடுத்து. எங்களை தெரியாத சமுதாயம்னா இப்போ! அதுக்கு பெண்களெல்லாம் நன்னா கஷ்டப்படரா. முழங்கைக்கு மேலே சதை அசிங்கமா தொங்கரது. வித விதமா ரவிக்கை மாட்டிண்டு வளையலை அடிக்கிண்டா அச்சா? கைச்சதை? நன்னா வேணும்.
மாமிக்கு ரெண்டு பொண், ஒரு மாட்டுப்பொண். இவா யாரும் உடம்பு வணங்கி வேலை செய்யமாட்டா. விதவிதமா மெஷீன். புக்காத்துக்கு போன பொண்கள் அப்பாகிட்டே கேட்டு பதவிசா வாங்கிண்டு போயிடுத்துகள். அப்பார்ட்மென்டில். அம்மி, கல்லுரல் வச்சு தேய்ச்சா கீழ் போர்ஷன்காரா சண்டைக்கு வருவா. மாட்டுப்பொண் அவளே ஃபூட் ஃபேக்டரின்னு ஒரு கர்மத்தை கொண்டு வந்துடுத்து. அதான் மாமி என்னை தோட்டத்தில் போட்டுட்டா.
சின்னவளாய் இவள் வாக்கப்பட்டு வந்தப்போ என்னை ஆசையா தடவி குளிப்பாட்டுவள். சுட்ட பெங்களூர் கத்திரிக்காய் துவயல்னாலும் என் மேல் வச்சுத்தான் நசுக்குவள். அப்புரம் விதம் விதமா சட்னீ வகையராக்கள். மாட்டுப்பொண் கிட்டே ஜம்பமா சொன்னா “அம்மீயில் செஞ்சா அதன் டேஸ்டே தனீ”. அப்போ செய்யரதுதானே? அவளை சொல்லி குத்தம் இல்லை. வயசாயிடுத்தோன்னோ. குழவியை தூக்கவே முடியலை. கடைசீயா அரைச்சது கொத்தமல்லி சட்னீ. நன்னா ஞாபகம், அரைச்சிண்டே நெஞ்சை என்னவோ பண்ரது அரைச்சவரைக்கும் போதும்னு டபராவில் வழிச்சு அலம்பி விடாமயே எழுந்து போயிட்டா. ஒட்டிண்டிருந்தது வாசனை கூடவே பலநாள் இருந்ததே!
வைரத்தோடு மாதிரி வழி வழியா பல ஜெனெரேஷனுக்கு உதவினோம். நன்னி கெட்ட ஜன்மங்கள்! பேப்பர்காரன் என்ன செய்யப்போரான்னு கவலை. பழைய பேப்பர்காரன், சரோஜா மாமியை கேட்டான், “இந்த அம்மிக்கல் தரீங்களாம்மா?”. என்ன தருவாய்னு கேட்டுட்டு பிச்சாத்து 50 ரூபாய்க்கு கொடுத்தா. என்னை எடுக்கரச்சே குழவியையும் வேணும்னு கேக்க, வாக்குவாதம். அப்புரம் தந்தா.
எடுத்துண்டு போனவன், மத்ததை கபாடிக்காரங்கிட்டே வித்துட்டு என்னை மீன்வண்டியில் வச்சு நேரே திருவான்மியூர்கிட்டே புதுசா கட்டின கல்யாண மண்டபத்தில் 200ரூ வித்துட்டன். கொண்டுபோய் சமையல் பண்ர இடத்தில் வைப்பானு பார்த்தா முஹூர்த்தம் நடக்கர மண்டபத்து மேடைக்கு பக்கத்துலே செவுத்தோரமா வச்சா. என்ன, இங்கே உக்காந்து தேங்காய் சட்னீ அரைப்பாளான்னா இல்லையாம். கல்யாணத்தில் அம்மி மிதிக்கவாம்.
“பேஷ், பேஷ்!” அப்படீங்கரதா, “சரியாப்போச்சு”ங்கரதா? எங்களை மிதிச்சு அருந்ததியை காமிக்காம கல்யாணம் இல்லையாம். ஜாலின்னு நினெச்சவனுக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைச்சது.
நாளைக்கு முஹூர்த்தம். அலங்காரம் ஆகிண்டிருக்கு. கான்ட்ராக்ட் எடுத்துண்டவன் மேடைக்கு கிட்டக்க அவனோட வேலை செய்யரவாளுக்கு சொல்லிண்டிருக்கான். “ரிசெப்ஷன் 300பேர் முஹூர்த்தத்துக்கு 500பேர்னு அட்வான்ஸ் வாங்கியாச்சு. ஒரு குறையும் இருக்கப்பிடாது. முக்கியமானவா யார்னு காட்டரேன், அவாளை கவனிச்சிண்டாகணும் சந்தேகம் இருந்தா இப்பவே நிவர்த்தி செஞ்சுக்கோங்கோ. அப்புரம் அது இதுன்னு பிடாது”. “தாலி கட்டினதும் ஜூஸ் கொடுப்பாளே, எத்தனை கப் தயார் செஞ்சுக்கணும்?” “100 போதும். சின்ன பேப்பர் கப் இருக்கு எடுத்து வச்சுக்கோ. தாலி கட்டினதும் அவசரப்படாம முக்கா கப் ரொப்பி மெல்ல எடுத்துண்டு வரணும். ரெண்டு வரிசை காமிசாப்போதும். வயசானவா சக்கரைன்னு வேண்டாம்பா. வாண்டுகள் இன்னொண்ணு கேக்கும். கண்டுக்க வேண்டாம்”.
“500 பேர் வருவான்னேள்?” “ஆமா, வருவா? எல்லாருக்கும் கொடுத்தா கட்டுப்படியாகுமா? முஹூர்த்தம் 930க்கு முடிஞ்சுடும். ஆபீஸுக்கு போரவா சாப்பிட வந்துடுவா. ஜூஸ் குடிச்சா பசியை அடைக்காதா? சத்திரத்துலேயே கூட்டிப் பெருக்கன்னு ஆள் இருக்கா. அதில் ஒருத்தரை ஜூஸ் தந்துண்டே போரச்சே பின்னாடியே காலி கப்பை நசுக்கிடாம கலெக்ட் செஞ்சுண்டே வரச்சொல்லுங்கோ. பின்னாடி உபயோகமாகும்.”
கேட்ட எனக்கே அதிர்ச்சியா இருக்கே, சிலவு பண்ணி கல்யாணம் பண்ரவாளுக்கு எப்படி இருக்கும்? சுப காரியங்கள் நடக்கர இடத்தில் இப்படி
ஒரு மாமாவும் மாமியும் மேடையில் காலைத் தொங்கப் போட்டுண்டு பேஸிண்டிருக்கா. மாமி என்மேல் கால் வச்சுன்னா ஏறினா. ஞாபகம் இருக்கே! “ஏன்னா? நம்ம பொண் கல்யாணத்தையும் இந்த மண்டபத்தில் வச்சுண்டா?”. “வச்சுக்கலாம், அப்புரம் நீயும் நானும் என்னத்தை சாப்பிடரது?”. “ஆமாம் வாயில் ஒரு நல்ல வார்த்தை வராதே. எத்தனை க்ராண்டா இருக்கு பாருங்கோ!” “ஆமாண்டீ, நாமெல்லாம் அழைச்சா அடெண்ட் செஞ்சுட்டு வரதோட வச்சுக்கணும். இதுக்கெல்லாம் ஆசைப்படவே கூடாது. ஒருநா வாடகை என்ன தெரியுமோ? கேட்டா மயங்கி விழுவாய்.”
“எங்கப்பா நமக்கும் நன்னாதானே கல்யாணம் செஞ்சு வச்சர். மறந்துட்டேளா?”. “ஞாபகம் இருக்குடீ. நீ அம்மி மிதிச்சதும், நான் மெட்டி மாட்டினதும். அப்போ பிடிச்ச காலை இன்னும் விடலை.” “அதுசரீ, விட்டா ரொம்பத்தான்” “தெரியுமா, இன்னைக்கு நீ திரும்பவும் அம்மியை மிதிச்சாயாக்கும்”. “அப்படியா, எப்போ? நீங்க பாத்தேளா?” “ஆமா, இப்போ கால் வச்சு ஏறினாயே, அது அம்மீதான்”. “அச்சச்சோ!”. “பரவாயில்லை புதுசா இன்னொரு மெட்டி மாட்டிட்டா ஆச்சு”
கஷ்டத்துலேயும் ஹாஸ்யமா பேசிண்டு நல்ல மனுஷாளா தெரிஞ்சா. இவா பொண்ணு கல்யாணம் நன்னா நடக்கணும்னு வாழ்த்தினேன்.
முஹூர்த்தம் நடக்கரது. தாலி கட்டப்போரா. மேடையிலேயே கூட்டம் அலை மோதரது. பொண் அவ அப்பா மடீலே. வீடியோவில் விழணும்னு சிலது பொண்ணோட அம்மாவையே நெறுங்கவிடலை. கீழேந்தே வெடிக்கை, என் வேளை வரலை. சப்தபதிம்போது கூப்பிடுவா. என் மேல் ஒரு வாண்டு ஏறி நின்னுண்டு. “அத்தனை பெரீய அக்கா அவா அப்பா மடீலே உக்காந்திருக்கா, எதுக்குன்னு பாத்துண்டு. நன்னா காலை பதியவச்சுக்காம என் நுணீலே, சாஞ்சேன்னா குழந்தைக்கு அடின்னா படும்? குழந்தை பாத்து முடியரவரைக்கும் ஆடாம நின்னேன்.
சித்தே போக அம்மி எங்கேன்னு சாஸ்த்ரிகள் கேக்கரர். அவர் மண்டபத்துக்கு புதுசு. நான் இங்கே இருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். சின்ன சாஸ்த்ரிகள் கான்ட்ராக்ட் காரனை சைகை செய்ய அவன் புரிஞ்சிண்டு ஒரு ஆளை அனுப்பி என்னை மேடைலே வைக்கச் சொல்ரான். நானோ சட்னி அறைக்க பிறந்தவன். நல்ல கனம். என் மேல் கால் வச்சு மெட்டி போட்டுண்ட பொண்கள் எல்லாம் தீர்காயுசா, நல்ல திடமான மனசோட குடித்தனம் செய்யரான்னு கேள்விப்பட்டேன். என்னை தூக்கி புரட்டி வைக்க தெம்பு வேணும்.
வந்தவன் எப்படியோ வச்சுட்டு அக்கடான்னு மூச்சை விட்டான். சாஸ்த்ரிகளுக்கு கோபம். அக்னிக்கு வடக்கே வைக்கணும், இவனுக்கு வடக்கு எங்கேன்னு தெரியலை. சமாளிச்சு வச்சாச்சு. குழந்தை காலெல்லாம் மறுதாணி பூசி, அழகா, செக்கச்செவேர்னு. புடவை பார்டர் அத்தனை அழகு. இங்கேந்து தலைப்பை பாக்கமுடியலை. அதுவும் கிராண்டாத்தான் இருக்கணும். கால் வச்சதும் லேசா சிலிர்த்துக்கரேன். பிள்ளையாண்டன் அதிர்ஷ்டம் செஞ்சவன். இவளை நன்னா வச்சு காப்பாத்தணும்னு பிரார்த்தனை செஞ்சுக்கரேன். அவளே வேலைக்கு போராளாம். அநேகமா இவனைவிட அவதான் நன்னா சம்பாதிப்பள். அவனை இவள் காப்பாத்துவாள்.
அப்போ அவன் காலைன்னா என்மேல் வச்சிருக்கணும். காலம் மாறிப்போச்சு, அம்மியை மட்டும் பொண்ணை மிதிக்க சொல்ரா.
கிரஹப்பிரவேசம் ஆகிண்டிருக்கு. பாவனையா சத்திரத்துலேயே பிள்ளையாத்து ரூமுக்கு தம்பதிகள் போரதும் இவாளும் பர்த்திக்கு விடாம அங்கேபோய் கிஃப்ட் வாங்கிண்டுடணும்னு போறதும் தமாஷ். என்னை சுவத்தோரத்தில் எடுத்து வச்சுட்டா. சாஸ்த்ரிகள்லாம் தக்ஷிணை வாங்கிண்டு சாமானை கட்டி வச்சுட்டு சாப்பாட்டுக்கு கிளம்பரா. கடைசீ முஹூர்த்தமாம், பேசிண்டா. இனிமேல் கார்த்தி பொறந்தாத்தான் உண்டு. மழை பெய்யாம இருக்கணும். அதுக்கு மாப்பிள்ளை பையன்கள் பச்சையா அரிசி சாப்பிடாம இருக்கணும். எத்தனை இருக்கு? தலையே சுத்தரது.
சாப்பாட்டுக்கடை முடிஞ்சு எல்லோரும் அக்கடான்னு அங்கங்கே கிடக்க, மணி 2. நலங்கு வச்சுக்கணுமா இல்லையான்னு விவாதம். பொண்ணாத்து ரூமுலேந்து மாப்பிள்ளையாத்து ரூமுக்கு குறுக்கேயும் நெடுக்கேயும் சிலர். பொண்ணோட அப்பாவும் அம்மாவும் எங்கிட்டே வந்து நின்னுண்டு சுத்தி முத்தி பார்த்துட்டு பேசிக்கரா.
“என்னன்னா? இப்போ என்ன செய்யரது? கார்த்தாலை கிளம்பிடுவாளே. அதுக்குள்ளே ஏற்பாடு செய்யணுமே! என்ன பிளான் வச்சிருக்கேள்?” “ஆமாண்டி, இப்போ கேள். நம்மால முடியாது, பெரீய இடம்னு அப்பவே சொன்னேன். பொண்ணுக்கு பையன் பிடிச்சுப்போச்சு, இதையே முடிக்கணும்னு ஆகாசத்துக்கும் பூமிக்குமாய் குதிச்சாய். என்ன பண்ரதுன்னு நீதான் சொல்லணும். எங்கிட்டே பிளான் இல்லை. மண்டபம், சாப்பாட்டுச் சிலவுன்னே இழுத்துடுத்து. சாயங்காலம் செட்டில் செய்யணும். வெறும் அட்வான்ஸ்தான் தந்திருக்கு. இப்போ 25 பவுனுக்கு எங்கே போரது? ப்யூடி பார்லர்லேந்து வந்து ஃபேஷன் நகைகளை 4 மணிக்கு கழட்டிண்டு போயிடுவா.”
அப்போன்னு பாத்து இவா நின்னிண்டிருக்கரதை கவனிச்ச இவரோட புது சம்பந்தி மாமா மண்டபத்து கோடீலே இருந்தவர் கிட்டக்க வரர். அவர் வரதைப் பாத்துட்டு “சித்தே பேசாம இருடீ”ன்னு இவர் சைகை காமிக்க, வந்தவரைப் பார்த்து பெரீசா சிரிச்சுண்டே, “கல்யாணம் திருப்தியா நடந்ததா சம்பந்தீ”ன்னு இவர் கேக்க, “பேஷா இருந்தது, எல்லாரையும் நன்னா கவனிச்சிண்டேள், சாப்பாடும் சமையலும் பிரமாதம். எங்கூர்லேந்து வந்தவா ரொம்ப சிலாக்கியமா பேசினா. ஒரு குறையும் வைக்கலை.” அந்த அளவுக்கு சந்தோஷப்பட்டுண்ட இவா, இன்னும் என்னத்தை இவரோட பேசரதுன்னு தெரியாம கொயட்டா நின்னா. ஆனால் அவர் எதிர்பாக்காம இவர் கையைப் பிடிச்சிண்டு சொல்ல ஆரம்பிக்கரர்.
“மாமா, நீங்க என்னைவிட வயசில் மூத்தவர். உங்காத்துப் பொண் இப்போ எங்காத்துப் பொண். அன்னைக்கு ஏதோ பேசரச்சே சம்பிரதாயத்துக்கு நீங்க கேக்க, 75 பவுன் போட்டு வைரத்தோடும் செஞ்சுடுங்கோனு எங்காத்து மாமி சொன்னா. நீங்க செஞ்சது வரைக்கும் போதும். எல்லாரும் சந்தோஷமா நம்ம உறவை கொண்டாடுவோம். எதையும் நினெச்சு மனசை வருத்திக்க வேண்டாம். என் மாட்டுப் பொண்ணுக்கு என்ன வேணுமோ அதை நான் வாங்கிக் கொடுத்துக்கரேன். வாங்கோ இந்த நலங்கு மட்டும் வச்சுண்டுடலாம், தமாஷா இருக்கும்”னுட்டு போரர்.
நான் வெறும் u அம்மிக்கல்தான். ஆனால் நானும் அன்னைக்கு நெகிழ்துன்னா போயிட்டேன்!
No comments:
Post a Comment