Friday, July 31, 2020

திருப்பார்த்தன் பள்ளி

🙏  நமஸ்காரம்    

39   திருப்பார்த்தன் பள்ளி

மூலவர் - தாமரையாள் கேள்வன். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - தாமரை நாயகி
உற்சவர் - பார்த்தசாரதி
உற்சவர் தாயார் - ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்
நாமாவளி - ஸ்ரீ தாமரை நாயகீ ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் ஸ்வாமிநே நமஹ
தீர்த்தம் - கட்க புஷ்கரணி
விமானம் - நாராயண விமானம்

வழித்தடம்

சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். திருவெண்காட்டிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

பாசுரம்:

கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
        பெரிய திருமொழி  (1318) 

குவலயாபீடம் என்ற மத யானையின் தந்தங்களை முறித்த கண்ணன். காண்போரைக் கவரும் அழகும் குணமும் உடைய சீராளன். குவளை மலர் போன்றும், மேகம் போன்றும் வண்ணம் கொண்டவன் என் மன்னன் அவன். அவன் யானையைப் போன்றவன், வெண்மையான உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருநாங்கூர் திவ்ய தேசத்தில் அவன் தாமரையாள் கணவன் என்றும்,  பவழம் போல் சிவந்த வாயை உடைய என்னுடையப் பெண், பார்த்தன்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பாடுவாள் என்று பாசுரம் பாடியருளியுள்ளார்.

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பாசுரம் பதவுரை:

பவளம் வாயாள் என் மடந்தை - பவழம்போற் சிவந்த அதரத்தையுடையளான என் பெண்ணானவள்
கவளம் யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் - கபளம் கபளமாக உணவை யூட்டி மா மூட்டப்பட்ட (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தைகளை முறித்தொழித்த கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டும்
காமரு சீர் - ஆரைப்படத் தகுந்த அழகையுடைய
குவளை மேகம் அன்ன - கருநெய்தற் பூவென்ன காளமேக மென்ன இவற்றோடொத்த
மேனி கொண்ட - திருமேனியையுடைய
கோன் (என்றும்) - ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும்
என் ஆனை என்றும் - என்னுடைய யானை என்று சொல்லிக்கொண்டும்
தவளம் மாடம் நீடு நாங்கை - வெண்மையான மாடமாளிகைகளினால் நீண்டிருக்கிற திருநாங்கூரில் வாழ்கிற
தாமரையாள் கேள்வன் என்றும் - லக்ஷ்மீநாதன் என்று சொல்லிக் கொண்டும்
பார்த்தன் பள்ளி பாவொள் -. - பார்த்தன்பள்ளி யென்னுந் திருப்பதியைப் பாடா நின்றாள்

பாசுரம் விளக்க உரை: 

திருமங்கை யாழ்வாராகிற பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், பார்த்தன்பள்ளிப் பெருமானிடத்தில் தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியை வெளியிட வேண்டி மகளுடைய வாய்மொழிகள் இருக்கும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள்.

என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்கட்குத் தெரியுமா? கம்ஸன் தனது மதயானையைக் கொழுப்பேற்றி என் கணவனைக் கொல்லுமாறு அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்தான்; இவனோ சேற்றிலிருந்து கொடியை இழுப்பவன்போல அதன் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அதனை உயிர் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரன் காண்மின் என் கணவன் - என்கிறாள்.

அதற்குமேல் திருமேனி நிறத்தைப்பற்றிச் சொல்லத்தொடங்கி, குவளைப் பூப்போலும் காளமேகம்போலும் கறுத்துக் குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறமன்றோ என் கணவனது நிறம் - என்கிறாள்.  யானையை எத்தனை தடைவைப் பார்த்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அபூர்வ வஸ்துவாகியே ஆநந்தாவஹமாயிருப்பதுபோல, அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பன் என் கணவன் - என்கிறாள்.  அவனெழுந்தருளியிருக்கும் ராஜதானியின் சிறப்பும் பெயரும் உங்கட்குத் தெரியுமோ?  வெள்ளிய சாந்திட்டுப் பளபளவென்று விளங்குகின்ற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரிலே ஸ்ரீமானாய் விளங்குமவன் காண்மின் அவன் - என்கிறாள்.  இவ்வளவும் சொல்லிவிட்டுப் பார்த்தன்பள்ளித் திருப்பதியின் திருநாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டான் - என்று திருத்தாயார் கூறினளாயிற்று.

கவள யானை – யானையின் உணவுக்குக் கவளம் என்று பெயர்;  தீனிகளையிட்டு மதமூட்டப்பட்ட யானை என்றபடி, ‘காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ‘காமரு’ என விகாரப்பட்டது; ஆசையை விளைக்கின்ற என்றபடி.  தவளம் - தவளம் என்பது வடசொல்.

பார்த்தன்பள்ளி – பார்த்தனென்று அர்ஜுநனக்குப் பெயர்; அர்ஜுநனுக்காகப் பள்ளிகொண்ட திருக்கோலமாய் ஸேவைஸாதிக்குமிடமென்பது பற்றி இத்தலத்திற்கு இத்திருநாமமாயிற்றென்பர்.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு: 

இத்தலம் பற்றி பாத்ம புராணம் பேசுகிறது. அர்ஜூனன் இவ்விடத்திற்கு வந்தபோது அதிகமான தாக வேட்கை யுண்டாக இங்கே தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, அகத்தியர் கமண்டலத்தை நோக்க அதில் இருந்த நீரும் வற்றிப்போனது.  இவ்வாறு தண்ணீர் வற்றிப்போவதற்கு என்னவென்று அகத்தியர் ஆராய்ந்து ஞான திருஷ்டியில் இது கண்ணனுடைய வேலையென்று தெரிந்து கொண்டு, அர்ஜூனனை நோக்கி அர்ஜூனா நீ எப்போதும், எந்த உதவி வேண்டுமானாலும் உன் ஆபத்பாண்டவனான கண்ணனையல்லவா அழைக்க வேண்டும என்று கூற, அர்ஜூனனும் தன் தவறை உணர்ந்து உடனே கண்ணனை நினைக்க கண்ணன் அவ்விடத்தே வந்து கத்தி ஒன்றை அர்ஜூனனிடம்  கொடுத்தான்.  அக்கத்தியால் மண்ணைக் கீண்டிப் பூமியைப் பிளக்க உடனே அங்கு தூய கங்கை நீர் பெருகியது. தாகந்தீர்த்த விஜயன் கண்ணனால் இவ்விடத்து சிறிது ஞானோபதேசமும் பெற்றான்     பார்த்தனுக்காக உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.
பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு.

சிறப்பு:

வருணன் இவ்விடத்து திருமாலைக் குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.

உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள்பாலிக்கிறார்.

பார்த்தசாரதி என்ற பெயரில் திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள பெருமாள் இரண்டு கைகளுடன் வீரம் ததும்பும் முகத்துடன் உள்ளார். இங்கு சங்கு சக்கரங்களுடன் நான்கு புஜங்களுடன் சாந்தம் தவழும் வதனத்துடன் திகழ்கிறார்.

தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண்குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாககுண்டத்திலிருந்து காலைத்தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சிதருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/P6YKv5JXl3I

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/113014407165662/?sfnsn=wiwspmo&extid=tMvhZevfAYX8clQE

No comments:

Post a Comment