Tuesday, July 21, 2020

திருக்கோளூர் பெண் பிள்ளை 79

(79) வாயில் கை இட்டேனோ எம்பாரைப் போலே !
“சாமி! இது எம்பாரின் கதை!” என்று ஆரம்பித்தாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜரும் மற்றவர்களும் புன்னகைத்தார்கள்.
எம்பாருடைய இயற்பெயர் கோவிந்தன். ராமானுஜரின் தாயாருடைய தங்கை பையன் ( சித்தி பையன், திருமலை நம்பிக்குத் தங்கை ). இவருக்கு ராமானுஜரிடம் மிகுந்த அன்புக்கொண்டவர். அவருக்கு எப்போதும் நிழலாக இருந்தார்.
ராமானுஜரும் கோவிந்தனும் காஞ்சியில் யாதவப் பிரகாசரிடம் சீடர்களாக இருந்தார்கள். ஒருமுறை யாதவப் பிரகாசர் கூறிய பொருள் தவறு என்று ராமானுஜர் சுட்டிக்காட்ட, யாதவப் பிரகாசர் ராமானுஜர் மீது மிகுந்த கோபம் கொண்டார். யாதவப் பிரகாசர் சீடர்களுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார். ராமானுஜரைக் கங்கையில் மூழ்கடித்து கொலை செய்யத் திட்டம் தீட்டினார்.
போகும் வழியில் குருவின் திட்டத்தைக் கோவிந்தன் அறிந்துகொண்டார். ராமானுஜரை எச்சரித்துத் தப்பிக்க வைத்தார். ராமானுஜர் தப்பி காஞ்சிக்கு வந்தார்.
குருவுடன் சென்ற கோவிந்தன் கங்கையில் நீராடும்போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. ”பார் உனக்குச் சிவலிங்கம் கிடைத்திருக்கிறது!” என்று கோவிந்தனுக்கு யாதவப் பிரகாசர் ‘சிவனே பரம்பொருள்’ என்று உபதேசம் செய்து அத்வைதியாக மாற்றி, கோவிந்தன் என்ற பெயரையும் ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்று மாற்றினார்.

காசியிலிருந்து திரும்பிய கோவிந்தன் திருமலை பக்கம் இருக்கும் காளஹஸ்திக்குச் சென்று அங்கே இருக்கும் சிவன் கோயிலில் தொண்டு செய்ய ஆரம்பித்தார். வைணவரான கோவிந்தன் இப்படித் தடம் மாறிச் சென்றுவிட்டாரே என்று அவருடைய மாமா திருமலை நம்பியும் ராமானுஜரும் வருந்தினார்.
ராமானுஜர் தன் மாமாவான திருமலை நம்பியிடம் கோவிந்தனைத் திரும்பவும் வைணவத்துக்கு அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருமலை நம்பி கோவிந்தன் இருக்கும் இடமான காளஹஸ்திக்குச் சென்றார். ஒரு நாள் காலைக் கோவிந்தன் சிவ பூஜைக்குப் பூப்பறித்துக்கொண்டு இருந்தார். கோவிந்தன் இருக்கும் இடத்துக்குப் பக்கம் ஒரு மரத்தடியில் தன் சீடர்களுடன் அமர்ந்து கொண்டார். கோவிந்தனுடைய காதில் விழும்படியாகத் திருமலை நம்பிகள் “பூவும், பூஜையும் திருமாலைத் தவிர வேறு யாருக்குத் தகும்?” என்று நம்மாழ்வாரின் பாசுரத்தை உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.
இதைக் கேட்ட கோவிந்தன். மெதுவாகத் தன் மாமா என்ன சொல்லுகிறார் என்று கேட்க ஆரம்பித்தார். நம்மாழ்வாரின் பாசுரத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பூப்பறிப்பதை நிறுத்தினார். திருமலை நம்பியின் காலில் விழுந்து மீண்டும் வைணவத்துக்குத் திரும்பினார். நம்பிகளுடன் திருமலைக்குச் சென்று அவருடன் திருவேங்கடவனுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்தார்.

இந்தச் சமயம் ராமானுஜர் திருமலைக்கு நம்பிகளிடம் ராமாயணம் கற்றுக்கொள்ள வந்தார். திருமலையில் ஓராண்டு தங்கி ராமாயணத்தின் விசேஷ அர்த்தங்களைக் கற்று வந்தார்.
ஒரு நாள் தோட்டத்தில் ஒரு காட்சியைக் கண்டு திடுக்கிட்டார். அங்கே கோவிந்தன் கையில் ஒரு பாம்பு இருந்தது. பாம்பின் வாயில் கையை விட்டார். விரலால் ஏதோ செய்தார். பிறகு பாம்பைக் கீழே விட்டார். பாம்பு புதரில் சென்று மறைந்தது. கோவிந்தன் நீராடக் குளத்துக்குச் சென்றார்.
ராமானுஜருக்கு கோவிந்தன் பாம்புடன் என்ன செய்தார் என்று புரியவில்லை. “கோவிந்தா ? பாம்புடன் என்ன செய்தாய் ?” என்று கேட்டார்.
கோவிந்தன் “தோட்டத்தில் பாம்பு ஒன்று வலியால் துடித்துக்கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தேன். பாம்பின் நாக்கில் ஒரு முள் தைத்திருந்தது. என் விரலால் அதை எடுத்துவிட்டு அதன் வலியைப் போக்கினேன்” என்றார்.

ராமானுஜர் “கோவிந்தா ! ’பாம்பை கண்டால் படையும் நடுங்கும்’ என்பர். பாம்பின் கண்டாலே அஞ்சுவார்கள். ஆனால் நீயோ பாம்பு கடித்து உயிர் போனாலும் பரவாயில்லை, ஆனால் அதன் வலி நீங்க வேண்டும் என்று அதன் வாய்க்குள் கையை விட்டு அதன் நாக்கில் விரலை வைத்து முள்ளை எடுத்திருக்கிறாய்! பிறர் துக்கம் கண்டு ஐயோ என்று மனம் இரங்கும் வைணவ குணம் உன்னிடம் நிறைத்திருக்கிறது” என்று வியந்து வாழ்த்தினார்.

“சாமி! நான் எம்பார் போல ஜீவராசிகளிடம் இரக்கம் காட்டினேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.
”பெண்ணே ! எம்பார் என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா ?” என்றார் ஒரு சிஷ்யர்.
”ராமானுஜர் கோவிந்தனுக்கு ”எம்பெருமானார்” என்ற தனது பெயரைச் சூட்டியபோது அதை மறுத்தார். அதனால் அந்தப் பெயரைச் சுருக்கி 'எம்பார்' என்ற சூட்டினார்” என்று பதில் சொன்னாள் அந்தக் குட்டிப் பெண்.
“குழந்தாய்! பல விஷயங்கள் தெரிந்திருக்கிறதே!” என்றார் ராமானுஜர் சிரித்துக்கொண்டு.
இன்னொரு சிஷ்யர் “பெண்ணே! எம்பார் ராமானுஜரின் நிழல்போல இருந்தவர். அவர் நிழல் சம்பந்தமாக ஒரு விளக்கம் சொன்னார் தெரியுமா ?” என்றார்
“அது என்ன சாமி ?” என்றாள் அந்தக் குட்டிப் பெண்
அந்தச் சிஷ்யர் சொல்ல ஆரம்பித்தார் ”பிள்ளாய்! ராமானுஜர் ஒரு முறை திருக்கோட்டியூருக்கு சென்றிருந்தார்.அந்தச் சமயம் திருவரங்கத்துக்கு சில வைஷ்ணவர்கள் விஜயம் செய்தார்கள்.
எம்பாரிடம் “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்று பெரியாழ்வார் கூறுகிறார் (அதாவது “நிழல்போலப் பாடவல்லவர்கள்” என்று பொருள்) நிழலைப் போல எதற்குப் பாட வேண்டும் ? பொருள் சரியாகப் பொருந்தவில்லை இதன் அர்த்தம் என்னவோ ? என்றார்கள்.


எம்பார் “இதற்கு ராமானுஜரிடம் தான் அர்த்தம் கேட்க வேண்டும். நானும் இதன் அர்த்தத்தை அவரிடம் கேட்டதில்லை. தற்சமயம் ராமானுஜர் திருக்கோட்டியூர் சென்றிருக்கிறார், அதனால் உடனே அவரிடம் கேட்டுச் சொல்ல முடியாது. தெரியாது என்று சொல்லி உங்களை எல்லாம் திரும்ப அனுப்புவதற்கும் மனமில்லை. ”சற்றி பொறுங்கள்” என்று உள்ளே சென்றார். சற்று நேரம் கழித்து, திரும்பி வந்து “பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்களைப் பாட வல்லவர்கள் பெருமாளுக்குச் சாயை ( நிழல் ) போல நெருங்கியிருக்கும் பேறு பெறுவார்கள்” என்று விஷேச அர்த்தத்தைக் கூறினார்.
சற்றுமுன் தெரியாது ராமானுஜரிடம் கேட்க வேண்டும் என்று கூறியவர் உள்ளே சென்று திரும்பியபின் இவ்வளவு அழகாக விளக்கம் கூறுகிறாரே என்று வந்தவர்களுக்கு ஒரே வியப்பு.
“உள்ளே என்ன மாயம் நிகழ்ந்தது ? எப்படி அர்த்தம் கிடைத்தது ?” என்று வந்தவர்கள் கேட்க அதற்கு எம்பார் ”உள்ளே சென்று ராமானுஜரின் பாதுகைகளை எடுத்து என்னுடைய தலைமீது வைத்து அவரின் திருவடிகளைத் தியானித்தேன். பாசுரத்தின் பொருள் ராமானுஜரின் அருளால் கிடைத்தது!” என்றார்
“அடடா ! என்ன ஒரு அற்புதமான விஷயம்” என்று அந்தப் பெண் வியந்தாள்.
“பிள்ளாய்! ராமானுஜரின் திருவடியைத் தியானித்தால் போதும், உற்ற தோழனாகத் தோள்கொடுப்பார்!” என்றார் ஒரு சிஷ்யர்
“தோள் காட்டிவந்தேனோ பட்டரைப் போலே!” என்றாள் அந்தச் சின்னப் பெண்
- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும்
Note: English version will be posted separately
Images from internet with thanks.

No comments:

Post a Comment