Sunday, July 26, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி 19

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்)பகுதி19
(By சுஜாதா&வெங்கடேசன்) (6381369319)
திருக்காட்கரைகோவில் அமைப்பு :
மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப் படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.

இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன.

இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலைகள் உண்டு. 

இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேத்திரம் பழங்களையே படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது.

முப்பெருங்கடவுள் மரம் :

திருக்காட்கரையப்பன் கோவில் பிரகாரச் சுற்றில், பெரிய அளவிலான அரச மரம் ஒன்று உள்ளது. இதனை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கின்றனர். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து, முப்பெருங்கடவுளாக வணங்கி வருகின்றனர். இம்மரத்தடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர். 

பிரம்மராட்சசன் சன்னிதி :

ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.

இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன் புறுத்தினர்.

இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்மராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.

மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்மராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன. 

இறைவனால் தோன்றிய வாழை :

விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வாழை சரியாக விளையாததால், திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் பட வேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தன் நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்க்க, புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேந்திரம் வாழை மரம்’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். 

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
              தொடர்வது    திருமூழிக்களம்

No comments:

Post a Comment