இன்றைய திருநாவாய் பயணக்கட்டுரை பதிவில் இடம் பெற்ற மாப்பிள்ளை கலகம் பற்றிய விளக்கம்
மாப்பிள்ளைக் கலகம்”
1921-ஆம் வருடம் தென்னிந்தியாவின் கேரளத்தில் அமைந்திருக்கும் மலபார் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள், அங்கு வாழ்ந்த அப்பாவி இந்துக்களுக்கு எதிராக இழைத்த கொடூரங்கள் எண்ணிப்பார்க்கவே இயலாத வகையில் படுபயங்கரமானவை. மதச் சகிப்புத்தன்மை இயல்பாகக் கொண்ட இந்துக்கள் மத்தியில், 629-ஆம் வருடம் மலபார் கரையில் குடியேறிய அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்த இந்துப் பெண்களை மணந்தார்கள். பின்னர் அங்கிருந்த தாழ்த்தப்பட்ட இந்துக்களை மதம் மாற்றினார்கள். அந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பல்கிப் பெருகியது.
இஸ்லாமிய சூஃபிக்களின் தூண்டுதல்களின் பேரில் அந்த முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும், அப்போது மலபாரின் சில பகுதிகளை ஆண்ட போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி “ஜிகாத்” செய்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஜிகாத் செய்வதினை தங்களின் மதக் கடமையாகவும், ஜிகாதின் போது இறந்து போவதால் தங்களுக்கு சுவனம் கிட்டும் என்னும் மூட நம்பிக்கையாலும் காஃபிர்களான இந்து மற்றும் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக வன்முறையை தொடர்ந்து செய்து வந்தார்கள். 1836-ஆம் வருடத்திலிருந்து 1919-ஆம் வருடம் வரைக்கும் ஏறக்குறைய முப்பத்தி இரண்டு முறைகள் இந்த ஜிகாதித் தாக்குதல்கள் பெரும் வெறியுடன் நடத்தப்பட்டன.
இதன் உச்சமாக 1921-ஆம் வருடம் மலபாரி முஸ்லிம்கள் (மாப்பிள்ளை அல்லது மாப்ளா என மலையாளத்தில் அழைக்கப்பட்டவர்கள்) அங்கிருந்த அப்பாவி இந்துக்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் கொலைவெறித் தாக்குதலை நடத்த ஆரம்பித்தார்கள். அதுவே “மாப்பிள்ளைக் கலகம்” அல்லது “Mopla Rebellion” என இன்றைக்கு வரலாற்றில் அறியப்படுகிற வன்முறைக் கலகம்.
இந்தக் கலகத்தை இரண்டு முஸ்லிம் அமைப்புகள் முன்னின்று நடத்தின. ஒன்று, குட்டம்-இ-காபா (Khuddam-i-Kaba), இரண்டாவது மத்திய கிலாஃபத் கமிட்டி (Central Khilafat Committee). இந்த இரண்டு இயக்கங்களின் முக்கிய நோக்கம் எல்லா முஸ்லிம் நாடுகளையும் இணைத்து ஒரு இஸ்லாமிய காலிஃபேட் (Pan-Islami Caliphate) அமைப்பது.
இதனைக் குறித்து கூற விழையும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள், “பிரிட்டிஷ்காரர்களால் ஆளப்படும் இந்தியா தாருல்-ஹார்ப் (Darul-Harb) ஆனதால், முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்துப் போரிட வேண்டும். அவ்வாறு போரிடாவிட்டால் அவர்கள் ஹிஜாரத்தை (முஸ்லிம்கள் வாழும் நிலப்பகுதியில் இருந்து வெளியே) செய்ய வேண்டும் எனவும் இந்த இயக்கங்கள் மலபாரி முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்தன.”
இந்தக் கலவரம் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரானதாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் வாழும் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் எவரும் இல்லாததால், அவர்களின் வன்முறை அப்பாவி இந்துக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. காலம் காலமாக தங்களுடன் வாழ்ந்த தங்களின் அண்டை வீட்டார்களான இந்துக்கள் மீது செய்யப்பட்ட, எண்ணிப் பார்க்கவே இயலாத, காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைக் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் இவ்வாறு எழுதுகிறார் –
“மாப்ளாக்களின் கையில் சிக்கிய இந்துக்கள் கொடூரமான முடிவைச் சந்தித்தார்கள். படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள், இந்துக் கோவில்களின் மீதான தாக்குதல்கள், பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவினைச் சிதைத்தல், கொள்ளை, தீ வைத்தல், பொது இடங்களை இடித்துத் தகர்த்தல்…. என வன் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். சுருங்கச் சொன்னால் மனிதர்கள் அறிந்த எல்லாவிதமான காட்டுமிராண்டித்தனமான செயல்களும் இந்துக்களுக்கு முஸ்லிம் மாப்ளாக்களால் செய்யப்பட்டது. இன்றுவரை அங்கு எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதோ அல்லது எத்தனை பேர்கள் காயம் பட்டார்கள் என்பதே அறியப்படவில்லை. என் நோக்கில் அவ்வாறு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகமாக இருக்கும் என்பதே என்னுடைய கணிப்பு.”
Moplah Revolt
1925: Mopla Prisoners go to trial at Calicut (Courtesy: Wikimedia)
1901-ஆம் வருடத்திலிருந்து 1943-ஆம் வருடம் வரை இந்தியாவில் வாழ்ந்த பிரிட்டிஷ்காரரான ஜெ.ஜெ. பன்னிங்கா (J.J. Banningaa) இந்த பயங்கரங்கள் குறித்து மேற்குலகிற்கு அறிவித்த முதல் ஐரோப்பியராவார். இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விசாரித்து நீதி வழங்கிய மூன்று ஜட்ஜ்கள் கொண்ட பெஞ்ச், இதற்குக் காரணமான முக்கிய குற்றாவாளிகளை விசாரித்தது பற்றிப் பின்வருமாறு பதிகிறார் ஜெ.ஜெ. பன்னிங்கா,
“கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக மாப்ளாக்கள் திடீர், திடீரென இதுபோன்ற கொலைவெறி வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய மதவெறியே இதன் அடிப்படை. காஃபிர்களைக் கொன்றால் உடனடியாக சுவனம் கிடைக்கும் எனத் தொடர்ந்து வெறியூட்டப்பட்டு வந்த முஸ்லிம்கள் அதனை முழுமையாக நம்பி நடப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு வெறியூட்டப்படும் நாட்களில் கூட்டமாகக் வெளிக்கிளம்பும் மாப்ளாக்கள், கண்ணில் படும் எந்தவொரு இந்துவையும், அவர் யாராக இருந்தாலும், கொல்வதற்குத் தயங்காதவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களின் இந்தக் கொலைபாதகச் செயல்கள் குறித்து எந்தவிதமான குற்ற உணர்வும் அவர்களிடையே இருந்ததில்லை”
மாப்ளாக்களின் கொலைவெறித் தாண்டவத்தை விளக்கும் ஜெ.ஜெ. பன்னிங்கா,
“…அங்கிருந்த கிணறுகள் இந்துக்களின் வெட்டிச் சிதைக்கப்பட்ட உடல்களால் நிறைந்திருந்தன; கர்ப்பிணி இந்துப் பெண்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டார்கள்; இந்துத் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகள் அவர்களின் கண் முன்னேயே கொல்லப்பட்டார்கள்; அப்பெண்களின் கணவர்களும், தந்தையரும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். தங்களின் மனைவி, மகள்களின் கண்களின் முன்னேயே அவர்களை நெருப்பு வைத்துக் கொன்றார்கள் மாப்ளாக்கள். இந்து இளம்பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள். வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நூற்றுக்க்கும் அதிகமான இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. கால் நடைகள், முக்கியமாக பசுக்கள் கொல்லப்பட்டு அவற்றின் குடல்கள் உருவி எடுக்கப்பட்டு, இந்துக் கோவில் தெய்வங்களின் கழுத்தில் மாலைகளாக இடப்பட்டன…..”
குறைந்தது பத்தாயிரம் இந்துக்கள் மாப்ளாக்களால் கொல்லப் பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கிறார் இன்னொரு வரலாற்றாசிரியரான ராபின்சன்.
கிலாஃபத் இயக்கத்தை ஆதரிக்கும் மகாத்மா காந்தி, “மாப்ளாக்களை இந்திய நாட்டின் மிக வீரமுள்ளவர்களாகவும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களாகவும்” சித்தரிப்பதுடன், மாப்ளாக்களின் வன்முறையைக் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
இதனைக் குறித்து யங்-இந்தியாவில் எழுதும் மகாத்மா, “நான் கல்கத்தாவில் இருக்கையில் எனக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் மூன்றே மூன்று கட்டாய மதமாற்றங்கள்தான் இந்தக் கலவரத்தால் நிகழ்ந்ததாக அறிந்தேன்….இந்தச் செயல்கள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எந்தவிதத்திலும் பாதிக்காது” என்கிறார்.
ஆனால், உண்மையோ இதற்கு நேரெதிரானது. கிலாஃபத்தின் போது கணக்கிலடங்காத மிக ஏராளமான எண்ணிக்கையில் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மகாத்மாவிற்கு அவருடைய அரசியல் நிர்பந்தங்கள் இருந்திருக்கலாம் என்பதுடன் இதனை இங்கு நிறுத்திக் கொள்வோம்.
No comments:
Post a Comment