Sunday, July 26, 2020

மலை நாட்டுத்திருப்பதிகள் பகுதி18

மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).பகுதி18
(By சுஜாதா&வெங்கடேசன்). (6381369319)
குருவாயூர் தரிசனம் முடிஞ்சு திருச்சூர்ல எர்ணாக்குளம் பஸ் ஏறரோம். 
திருக்காட்கரை,திரு மூழிக்களம் ரெண்டும் பார்க்கணும்னா எர்ணாக்குளத்துல வசதியா தங்கிண்டு பக்கத்துல கொச்சி சுத்திப்பார்த்துட்டு படகு வீடு இயற்கை காட்சின்னு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கறது ஒருவகை..வழில ஆல்வாய்ங்கற சின்ன ஊர்ல எறங்கிண்டு பெருமாள மட்டும் சேவிக்கறது ஒரு வகைங்கறார். நாங்க பெருமாள் சேவிக்க வரும் போது ஊர்சுத்தல் வேண்டாம்கறோம். அவர் பணத்தை செலவு பண்ணாம சென்டிமெண்ட டச் பண்ணிட்டது குறித்து சந்தோஷப்படறார். 
ஆல்வாய்ல எறங்கிக்கறோம்.. இவர் தான் மட்டும் போய் ஒரு ரூம் புக் பண்ணின்டு வரார்..குளிச்சுட்டு எதோ ஒரு ஓட்டல்ல சாப்பிடறோம். தூங்கி ரெஸ்ட் எடுத்துண்டு சாயந்தரமா திருக்காட்கரை கிளம்பரோம்.  அங்கங்க விசாரிச்சு ஒரு பஸ் ஏறினதுல வெள்ளை கேட்ங்கற எடத்துல எறக்கி ஆட்டோ பிடிச்சு போகச்சொல்றான். இருட்ட ஆரம்பிக்கறது. கேரளாக்கோயில் 7 மணிக்கு சாத்திடுவாளே இனிமே ஒரு ஆட்டோ வந்து ஆட்டோ செலவு பண்ணணுமான்னு இவர் யோசிக்கறார். 
நல்லவேளையா ஒரு ஆட்டோக்காரன் பத்து நிமிஷத்துல கொண்டு விடறேங்கறான். அடுத்தநாள் திருமூழிக்களம் சேவித்து உடனே கிளம்பினாத்தான் இன்னும் ஒரு நாள்ல செங்கனூர் போய் மீதி ஆறு ஷேத்திரத்த சேவிக்க முடியும். கோயில் சாத்தினாலும் கோபுரத்தைப்பார்த்து கன்னத்துல போட்டுண்டு கிளம்பணும். உங்களை யாரு குருவாயூர்ல நாலு எபிசோட் எழுதற அளவுக்கு டயம் ஸ்பென்ட் பண்ண சொன்னா?  குருவாயூர் எப்ப வேணாலும் சேவை கெடைக்கும. மலைநாடு திருப்பதி அப்படியான்னு மிரட்டறார். அப்பா வேற மாப்பிள்ளை என்ன சொல்றாரோ செய்வோம் எதிர்த்து பேசாதேங்கறார். பெருமாள் சேவை கிடைக்கணுமேன்னு வேண்டிண்டே வரோம். 
சரியா 7.50 க்கு ஆட்டோல எறங்கறோம். நடைசாத்தறதுக்கு முன்னால அர்த்த ஜாம பூஜை நடந்துண்டு இருக்கு…
இனி இவர் சொல்வார்

எம்பெருமான் வாமன மூர்த்தியாகவும், திரிவிக்ரமனாகவும் சேவை சாதிப்பதால் ”வாமன க்ஷேத்திரம்”என்றும் ”திரிவிக்ரம மஹாக்ஷேத்திரம்” என்றும்  கபில முனிவர் தவம் செய்ததால் “கபில க்ஷேத்திரம்” என்றும்அழைக்கப்படும் திருக்காட்கரைதற்போது திருகாக்கர(ரை) என்றுஅறியப்படுகின்றது. இத்தலம்ஷொரனூர் – எர்ணாகுளம் இரயில்மார்க்கத்தில் இடைப்பள்ளி என்னும்புகைவண்டி நிலையத்திலிருந்துசுமார் 3கி.மீ தூரத்திலும்,  ஆலுவாதிருச்சூர் மார்க்கத்தில்இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார்12கி.மீ தூரத்திலும்அமைந்துள்ளது. எர்ணாகுளத்திற்கு அருகிலும் கொச்சி பல்கலைக் கழகத்திலிருந்து சுமார் 2கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. எனவே  ஆலூவாவிலிருந்தும்எர்ணாகுளத்திலிருந்தும் பேருந்துமூலம் இத்தலத்தை எளிதாகஅடையலாம்.

பொதுவாகவே கேரளா என்றால்எல்லாருக்கும் நினைவுக்கு வருவதுஓணம் பண்டிகை மற்றும் நேந்திரம்பழம்  ஆகும். அவை இரண்டுமே இத்தலத்துடன்  தொடர்புகொண்டவை. கேரளத்தில் மலையாள சிங்க மாதத்தில்(ஆவணி மாதம்) பத்து நாட்கள்மிகவும் சிறப்பாக ஓணம்பண்டிகைக்கொண்டாடப்படுகின்றது.பண்டிகையின் முக்கிய நாள் திருவோண நாள்.எம்பெருமானுக்குரிய நட்சத்திரமும் திருவோணம். எனவே பெரியாழ்வாரும் கண்ணனை” திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்றும் இன்று “நீபிறந்த திருவோணம் நீராட வாராய்”என்றெல்லாம் மங்களாசாசனம் செய்துள்ளார்.  அந்த திருவோணத்தோடுதொடர்புடையது இவ்வாலயம். ஓணம் மட்டும் அல்ல பெருமாளின்தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரமான  வாமன அவதாரத்துடன் தொடர்புடையது இந்த திவ்யதேசம்.

பிரகலாதனின் மகன் பலிச்சக்கரவர்த்தி அவர் நேர்மையாகவும்தர்மத்துடனும் அரசாட்சி செய்துவந்தார். ஆயினும் அவரதுஅகந்தையை அகற்ற அவர் யாகம்இந்த இடத்திற்குமாணிக்குறளனாக, வாமனமூர்த்தியாக வந்து மூவடி மண்யாசகம் கேட்டார். வந்திருப்பது யார்என்பதை அறிந்த சுக்கிராச்சாரியார்தானம் தரவேண்டாம் என்றுதடுத்தும் கேளாமல் மூன்றடிமண்ணை தானம் செய்தான். பிறகு எம்பெருமான் அம்பரம் மூடுறுத்துஓங்கி உம்பர் கோமானாக ஓரடியால் வானுலகையும்,ஓரடியால் பூவுலகையும் அளந்துமூன்றாவது அடி எங்கே? என்றுஓங்கி உலகளந்த உத்தமனாக,திரிவிக்கிரமனாக  நின்று கேட்கதன் தலையை மூன்றாவதுஅடிக்காக  அளித்தான்பலிச்சக்கரவர்த்தி. அவன்தலையில் தனது திருவடிகளைபொருத்தி அருள் பாலித்துபாதாளத்திற்குள் அவனை அழுத்திபாதாளத்திற்கு அரசனாகஇருக்கும்படி அனுகிரகத்தார்பெருமாள். அசுரனாயினும் உத்தமன் என்பதால் அவனுக்கும் தனது திருவடி தீட்சையை அளித்தார். அப்போதுவந்திருப்பதுப் பெருமாளேஎன்பதை உணர்ந்தபலிச்சக்கரவர்த்தி வேண்டிக் கொண்டபடி  ஆவணி மாததிருவோண நாளில் தன் நாட்டிற்குவந்து தன் பிரஜைகளைப் பார்த்துசெல்ல அனுமதி அளித்தார்.இவ்வாறு பலி சக்கரவர்த்திக்குஅனுக்கிரகம் செய்த நாள், அவர்தன் பிரஜகைகளைக் காண வரும்நாளே ஓணம் பண்டிகை நாள்.

பெருமாள் திரிவிக்ரமனாக சேவை சாதிக்கும் மற்ற திவ்ய தேசங்கள் ஓரடியால் உலகை அளந்த சீகாழி விண்ணகரம் (சோழ நாடு), இரண்டாவது அடியால் ஆகாயத்தை அளந்த  திருக்கோவலூர் (நடு நாடு), மூன்றாவது அடியால் பலிக்கு அருள் செய்தது திருஊரகம் (தொண்டை நாடு) ஆகும்.

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய்என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலை தென் காட்கரையென்னப்பன்
கார்முகில் வண்ணன் தன் கள்வம்அறிகிலேன்...என்று நம்மாழ்வார் சாதிக்கிறார். 

பொருள்: கரிய மேக நிறம் கொண்ட என் அப்பனான எம்பெருமான் அழகு நிரம்பிய சோலைகளுக்குள்  திருக்காட்கரையில் எழுந்தருளியுள்ளான்.  அவன் என்னுள் புகுந்து வஞ்சித்த விதத்தை  நான் அறியவில்லை.  அவன் தலைவனும்  நான் அடியவனுமாக  முறையிலே காரியங்களைச் செய்ய  வேண்டுமென்று  என் மனத்தை இசைவித்த பிறகு  அவன் என் நெஞ்சிற் புகுந்தான்.  இப்படி வஞ்சனையாகப் புகுந்த பின் தன் குணங்களிலே  என்னை ஈடுபடுத்தி நீராகும்படி செய்து விட்டான். என் தலைவனாக உள்ள அவன் என்னைக் காப்பாற்ற வேண்டியிருக்க , மாறாக என் உயிரையே அழித்தான். அதனை அனுபவித்தான். அது வஞ்சனை இல்லையா? அடிமை கொள்ள என்று புகுந்து தன் படிகளைக் காட்டி எல்லாவற்றையும் கொள்ளை கொண்ட தன்மைகளை நினைக்க முடியாதவனாக இருக்கின்றேன் என்கிறார். 
மூலவர் : வாமனர்,  என்றழைப்படுகின்றார்.சங்குசக்கரம், கதை, பத்மம் தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் நின்ற கோலம். மாபலிக்கு காட்சி கொடுத்த அதே கோலம். அப்பன்என்றும் மலையாளத்தில்அழைக்கப்படுகின்றார்.நம்மாழ்வாரும் காட்கரையப்பன் என்றே மங்களாசாசனம் செய்துள்ளார்.
தாயார்: பெருஞ்செல்வநாயகி.வாத்ஸல்ய வல்லி.
தீர்த்தம்:  கபில தீர்த்தம்.
விமானம் : புஷ்கல விமானம்.
பிரத்யக்ஷம்: கபில முனிவர்.
இத்தலத்தில் ஒணம் பண்டிகைமிகவும் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. பத்துநாட்கள் உற்சவம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரத்தில்சேவை சாதிக்கின்றார் பெருமாள். திருவோணாத்தன்றுகேரளாவிற்கே உரித்தான “ஓணசதய” என்னும் ஓண விருந்தைசாதி மத பேதமில்லாமல்ஆயிரக்கணக்கானோர் பிரசாதமாகஉண்டு மகிழ்கின்றனர். அன்றையதினம் உற்சவ நிறைவான ஆறாட்டுஎனப்படும் தீர்த்தவாரியும்நடைபெறுகின்றது.

கபிலமுனிவர் தவம் செய்த தலம்திருக்காட்கரை. கபிலர்மஹாவிஷ்ணுவின் ஒருஅவதாரமாகவும்கருதப்படுகின்றார். தனதுதாயாகிய தேவஹூதிக்கு ஞானத்தை போதித்தவர் இவர். கங்கை இப்பூவுலகில் பாய காரணமாவார். அந்த வரலாறு இதோ, சாகரன் என்னும் அரசன் அஸ்வமேத யாகம் செய்ய குதிரையை அனுப்பினான் அவனுடைய குமாரர்கள் அறுபதினாயிரம் பேர் குதிரையுடன் சென்றனர். இந்திரன் கபடமாக குதிரையை கவர்ந்து சென்று பாதாளத்தில் கபில முனிவர் தவம் செய்து கொண்டிருந்த இடத்தில் கட்டி விட்டு சென்று விட்டான். குதிரையை காணாமல் தேடிய சாகரர்கள் பாதாளத்தில் கபில முனிவரின் அருகில் குதிரையை கண்டனர். முனிவர்தான் குதிரையை கவர்ந்து விட்டார் என்று எண்ணி சாகரர்கள் முனிவரின் நிஷ்டையை கலைத்தனர். எனவேஅவர்  சாகரர்களை எரித்துசாம்பலாக்க, தன் மூதாதையர்கள்முக்தி அடைய பாகீரதன் தவம்செய்து கங்கையை பூலோகத்திற்குகொண்டு வந்தான். இது கங்கை பூலோகத்திற்கு வந்த வரலாறு.   இவ்வளவு சிறப்புகள் கொண்ட கபிலர் வேண்டிக் கொண்டதற்கிணங்க அன்று பலி சக்கரவர்த்திக்கு சேவைச் சாதித்த வண்ணம்  பெருமாள் இங்கு கோவில் கொண்டதாக ஐதீகம். இத்தலத்தின் தீர்த்தமும் கபில தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. இத்தீர்த்தத்தைத்தான் கெண்டியில் எடுத்து பலிச்சக்கரவர்த்தி வாமன மூர்திக்கு மூன்றடி மண்ணை தாரை வார்த்துத் தந்தாராம்.  
                    தொடர்வது இத்தலத்தால் நேந்திரம் வாழை வந்த வரலாறு…

No comments:

Post a Comment