மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி 12 (6381369319)
எப்படியோ ராத்திரி முழுக்க தூங்காம நாவாய் முகுந்தன சேவிக்க போறோம்கற பக்தி வேகத்துல கஷ்டம் தெரியல. கார்த்தால 5.00 மணிக்கு குட்டீபுரம் ஸ்டேஷன் வந்து எறங்கறோம். ஷ்டேஷன்ல வெய்ட்டிங் ரூம்ல கொஞ்சம் எளப்பாறிட்டு வெளிய வரோம். பக்கத்துல பஸ்ஸ்டாண்டுக்கு போறோம். அப்பா காபி வேணும்கறார். நாவாய் பஸ் போயிடும்னு பஸ்ல ஏத்தி விடறார்.
அரை மணியில லக்கேஜோட போய் எறங்கறோம். அக்கா அங்க ஒரு எடத்துல 100/- க்கு லக்கேஜ பாத்துக்கறதா எழுதியிருக்கு வைக்கலாமாங்கறா..அதெல்லாம் வேண்டாம் பாரதப்பழால நீங்க தீர்த்தமாடுங்கோ நான் லக்கேஜ் பாத்துக்கறேன் ..பெருமாள சேவிச்சுட்டு அடுத்ததா திருவித்துவக்கோடு போனம். இங்க தங்க போறதில்லைங்கறார்.
பாரதப்புழா...
கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய நதியாக திகழ்ந்து வரும் பாரதப்புழா நதி, நிலா என்ற மற்றொரு பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நதி மலபார் மாவட்டத்தின் தனித்துவமான கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக முக்கிய பங்காற்றி வருகிறது. இதைப்பற்றி பிராந்திய எழுத்தாளர்கள் நிறைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
209 கிலோமீட்டர் நீளம் நீண்டு செல்லும் பாரதப்புழா நதி வெறும் நீரை மட்டும் கடத்திச் செல்லவில்லை, கலாச்சாரத்தையும், பார்மபரியத்தையும் சுமந்து செல்கிறது. இதன் நீர்ப்பிரவாகம் கோடையில் வற்றிப் போனாலும், மழைக் காலத்தில் நதியோரத்தில் பசுமை படர்ந்திருக்க வெள்ளமென பாரதப்புழா நதி சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும். இருந்தாலும் பாரதப்புழா நதியின் பேரழகை ரசிப்பதற்கு மழை, வெயில் என்று எந்த பாரபட்சமும் கிடையாது.
ஆன்மீகமும் அழகும் இணைந்த பாரதப்புழால ட்ரெயினில் வந்த அலுப்பு தீர தீர்த்தமாடறோம். கரையில அப்பாவும் இவரும் கேரள செண்டை மேளத்தை அமர்க்களமாக அடித்து நொறுக்குவதை வேடிக்கை பார்த்துண்டு இருக்கா...
திருநாவாய் கோயில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. 6,000 வருட பழைமை வாய்ந்தது. மலையாள திருப்பதிகளில் இங்கு மட்டுமே தாயார் சந்நிதி உள்ளது.
நவயோகிகள் இந்தத் தலத்தில் ஒவ்வொருவராக ஒரு விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். முதல் எட்டு யோகிகள் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்கள் மாயமாக மறைந்து விட்டன.
ஒன்பதாவது யோகி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து சந்நிதியை மூடி விட்டு மூன்றாம் நாள் திறந்து பார்த்தபோது விக்கிரகம் பூமிக்குள் அழுந்திக் கொண்டிருந்ததைக் கண்டார்.
அப்போதுதான் மற்ற எட்டு விக்கிரகங்களும் பூமிக்குள் அழுந்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர் பெருமாளிடம் அந்த நிலையிலேயே சேவை சாதிக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாள் அவர் கோரிக்கையை ஏற்று அப்படியே நிலை கொண்டார். இப்போதும் மூலவர் முழங்கால்கள் வரை பூமிக்குள் அழுந்திய நிலையில்தான் இருக்கிறாராம்.
நவயோகிஸ்தலம் என்பது மருவி நாவாய் என்று பெயர் வந்திருக்கலாம். இந்தப் பிறவிக்கடலை நாம் கடக்கப் பெருமாள் நாவாயாக இருந்து உதவுகிறார் என்ற பொருளிலும் திருநாவாய் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
பாரதப்புழா நதியில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூக்களைப் பறித்து கஜேந்திரன் பெருமாளுக்கு பூஜை செய்து வந்தான். ஒரு சமயம் கஜேந்திரன் பூக்களைப் பறிப்பதற்கு முன்பே மகாலக்ஷ்மி அவற்றைப் பறித்துப் பெருமாளுக்கு பூஜை செய்யத் துவங்கினார்.
பூக்கள் கிடைக்காததால் கஜேந்திரன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் மகாலட்சுமியிடம் கஜேந்திரனைப் பூப்பறிக்க விட்டு அவன் அளிக்கும் பூக்களை மகாலக்ஷ்மியும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இங்கே பெருமாளும் தாயாரும் பெற்றோர்களாகவும், கஜேந்திரன் புதல்வனாகவும் இருப்பதாக ஒரு ஐதீகம் உண்டு,
காசியில் நடப்பதை போல இத்தலத்தில் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுக்கிறார்கள். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
கேரளக் கோவில்களில் மூலவரை அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஒரு உயரமான பீடத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்க, ஒருவர் மட்டுமே குனிந்து போகக்கூடிய அளவில்தான் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. கர்ப்பக்கிருகத்துக்கு வெளியே படிக்கட்டுக்குக் கீழே நின்றுதான் நாம் தரிசனம் செய்ய வேண்டும்.
கோயிலுக்குள் விளக்கு வெளிச்சத்தில் குட்டியான நாவாய் முகுந்தன் புன்சிரிப்புடன், சந்தன அலங்காரத்தில் அழகுற விளங்குகிறார். கோயில் நம்பூதிரி பிரசாதம் தர, அதை வாங்கிக்கொண்டு, மகாலட்சுமியைத் தரிசித்தோம். பிறகு, திரும்பவும் நாவாய் முகுந்தனைத் தரிசித்து சிலிர்த்தோம். நாங்கள் சென்ற நேரம், கோயிலுக்குள் ஒரு சில பக்தர்களே இருந்தனர். அதனால் அமைதியாக, நின்று நிதானமாய்சேவித்தோம்
இருட்டான கர்ப்பக்கிருகத்தில் எண்ணெய் தீபங்களின் ஒளியில் பெருமாளின் திருவுருவம் ஓரளவுக்குத்தான் கண்ணுக்குப் புலப்படும். ஆரத்தி காட்டும்போது கூட இதே நிலைதான். குருவாயூர் உட்படப் பல கோவில்களிலும் இப்படித்தான். பரம்பொருளை முழுவதும் நம்மால் அறிய முடியாது என்ற உண்மையை நிலைநாட்டும் வகையிலேயே கேரள ஆலயங்கள் அமைந்திருப்பதாகக் கொள்ளலாம்.
மூலவர் - நாவாய் முகுந்தன். நான்கு கைகளுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். முகுந்தன் என்ற சொல்லுக்கு மோட்சத்தாய் அளிப்பவன் என்று பொருள் உண்டு.
தாயார் - மலர்மங்கை நாச்சியார். இங்கே தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு. தாயார் சந்நிதி பெருமாள் சந்நிதிக்கு இடப்புறம் உள்ளது. கேரளக் கோயில்களில் தாயாருக்குத் தனி சந்நிதி என்பது அபூர்வம். பெரும்பாலான கோவில்களில் பெருமாளின் திருமார்பில் உறையும் தாயார்தான் ஒவ்வொரு கோவிலிலும் தனிப்பட்ட பெயர் சொல்லிக் குறிப்பிடப்படுவார்.
விமானம் - வேத விமானம்
தீர்த்தம் - செங்கமல ஸரஸ். கோவிலை ஒட்டியே ஓடும் பாரதப்புழாதான் இந்தக் கோவில் தீர்த்தமாக விளங்குகிறது.
இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
பாசுரத்தை மனதில் நினைத்து வெளியே வர்றோம்.
படங்கள் திரு நாவாய்1)அப்பாவுடன் நானும் அக்காவும்..
நாளை திருவித்துவக்கோடு

No comments:
Post a Comment