Monday, July 20, 2020

இனிமேல் அப்பா

63. இனிமேல் அப்பா (சிசீ6) #ganeshamarkalam

சில செய்திகள் நாம கொஞ்சம்கூட எதிர்பாக்காதப்போதான் வரும். முக்கியமா ஆத்து மனுஷா யாராவது சிவப் பிராப்த்தி அடைஞ்சுட்டா என்ற செய்தி. வயசாச்சு, உடம்பு முடியலை, ஆஸ்பத்ரீலே ட்ரீட்மென்ட் ஆகிண்டிருக்குன்னா அத்தனை தாக்கத்தை தராது. என்னமோ இந்த வாரம் நடந்துடும்னு எதிர்பாத்தது இன்னிக்கே நடந்துடுத்துன்னு எடுத்துப்பம். அப்படி இல்லாம திடகாத்திரமா இருக்கான்னு நினைச்சவர் கிளம்பிப் போயாச்சுன்னா?

அதுவும் பாருங்கோ, செய்தி வரச்சே மணி மத்தியானம் 2. கமலம் ஃப்ரெண்ட்ஸோட கிளம்பி சிங்கப்பெருமாள் கோவில் போயிருக்கா. அங்கேந்து இன்னும் சில பெருமாளையும் பாத்துட்டு வர சாயங்காலம் ஆகிடும்னு சொன்னா. கார்த்தாலே 430க்கு டாடா சுமோ வந்துடுத்து. 8 பேர் இவளும் ஸ்நேகிதிகளும். கஸ்தூரி மாமிதான் லீடர். அத்தனை பேருக்கு அதில் இடம் எப்படீ? அப்படீன்னெல்லாம் கேக்கப் பிடாது. அடிக்கடி போரவாத்தான். 10பேர் பேசி வச்சிண்டு ரெண்டு எப்படியும் ட்ராப் ஆகிடும்னு. டேக்ஸி ட்ரைவர் இடம் பத்தாதுன்னு சொன்னான்னா அவனை லீடர்மாமி ஒரு முறைப்பா பாப்பா. சப்த நாடியும் அடங்கிப்போய் அவனோட சீட்டுலேயும் பாதி தந்துடுவான். இப்ப எந்தக் கோவிலில் இருக்காளோ? நடை சாத்தியிருப்பா. மரத்தடீலே உக்காந்திண்டிருப்பா. இல்லை டைட் ஏஸி போட்ட புடவைக் கடையோ! கான்டேக்ட் செஞ்சாகணும்

ஆத்துக்கு போனில் வந்த செய்தி அப்படி. கமலத்தோட தோப்பனார் காலமாகிட்டர். நன்னாத்தான் இருந்தர். வயசு 78. சட்டுன்னு நெஞ்சை வலிச்சதுன்னாராம், டாக்டருக்கு போன் செஞ்சுட்டு, பக்கத்தில் மருமான் இருக்கான் அவனை “காரெடுத்துண்டு வா”ன்ன்னு சொல்ரத்துக்குள் சரிஞ்சுட்டராம். மாமி ரெண்டு வருஷத்துக்கு மின்னாடியே போய்ச் சேர்ந்தாச்சு. இவர் தனியாத்தான் இருப்பேன், ஒரே பொண்ணானாலும் மாப்பிள்ளை தயவில் இருக்கப் பிடாதுன்னு திருச்சீலேயே இருந்துப்பேன்னு. ஆத்துக்கு வந்து சமைச்சு கொடுத்துட்டு போக ஒரு பிராம்ணப் பொண் ஒத்தாசைக்கு வச்சிண்டிருக்கர். பெரும்படி உதவிக்கு மருமான், ரெண்டு தெரு தள்ளீ. தினம் ஒருக்கா கமலத்தோட பெசுவர்.

என்னண்டை ரெம்பப் பிரியமா இருப்பர். ஒரே மாப்பிள்ளை என்பதைத் தவிற வேற ஏதோ ஒரு காரணம், அவர் விளக்கிச் சொன்னதில்லை. “எனக்கு ஒரு பிள்ளை பொறந்திருந்தா உன் ஆத்துக்காரர் மாதிரிதான் இருப்பர்.” கமலத்துகிட்டே ஒருக்கா சொன்னராம். இவளும் ஆனமுட்டும் வற்புருத்திப் பாத்துட்டு “உனக்கு தனியா இருக்கத்தான் ஆசைன்னா போய்க்கோ! பிள்ளை மாதிரீன்னு மெச்சிக்கராய்! வயசான காலத்தில் சேர்ந்து இருந்துட்டா என்ன குறைஞ்சு போயிடுவேள்?” ஒருக்கா போனில் சண்டை பிடிச்சா. “திருச்சி என்னடீ தூரக்கவா, கார் வச்சிண்டு வந்தா 5 மணி நேரத்தில் வந்துடலாம். உனக்கு அப்பாவ பாக்கத் தோணித்துன்னா கிளம்பி வந்துடு”. “ஏன் நீயும் வரதுதானே?” “என்னண்டை காரா இருக்கு. பஸ்ஸில் ட்ரெயினில் வரணும். யூரினரி பிர்ச்சனை உண்டு. பிரயாணத்தில் சட்டுன்னு உச்சா போகக் கொள்ள சௌரியப்படாது”.

ரெண்டு வருஷம் மின்னாடி நாங்க மதுரை, ராமேஸ்வரம் போனப்போ இவரையும் காரில் கூட்டிண்டம். அங்காங்கே நிறுத்திடுவேன். இவர் கஷ்டப்பட்டுண்டு சொல்ல மாட்டர்னு. “காசு நான்தான் கொடுப்பேன்”. பெட்ரோல் பங்கில் சண்டை பிடிச்சர். “பேசாம வரேளா இல்லை இங்கேயே இறக்கி விட்டூட்டு போயிடவா?” இவள் அதட்டினா. ஆனா பாருங்கோ மதுரை ஜேகே ரெசிடென்ஸீ காலி செஞ்சுண்டு திருச்சீக்கு திரும்பரப்போ சீக்கிரமே ரிசெப்ஷணுக்குப் போய் ரூம் சார்ஜுக்கு எல்லாருக்கும் சேர்த்து காசைக் கட்டீட்டு வந்து கொயட்டா உக்காந்துட்டர். நான் போய் செக்கவுட் செய்யரேன்னா, “ஆல்ரெடி பெய்ட் சார்.”னுட்டா. அப்படி என்ன மாமனார்தனம்? மாப்பிள்ளைக்கு சிலவு வைக்கப் பிடாதுன்னு?

இப்ப கமலத்தை கூப்பிட்டு விஷயத்தை சொல்லணும். வந்ததும் உடனே கிளம்பணும். அவள் கோவிலில் இருக்கப்போ சொல்ல வேண்டாம்னு பட்டது. அதிர்ந்து போவள். கலங்குவள். சொல்ரப்போ நான் பக்கத்தில் இருந்து என் வாயால் சொல்லி அவளை சமாளிக்கணும். கஸ்தூரி மாமியக் கூப்பிட்டேன். சித்தே சாமர்த்தியமா கையாளுவர். ஒரு நம்பிக்கைதான். நிறைய மடிசஞ்சிகள் கூடப் போயிருக்கா. செய்தி இப்படீன்னு தெரிஞ்சுண்டு இவளுக்கு தீட்டாச்சே ஒரே வண்டியில் கூட உக்காந்துண்டு எப்படி வரன்னும் ஆட்டம் காட்டுங்கள். “எனக்கு உடம்பு முடியலை, உடனே ஆத்துக்குப் போணம், கோவீலெல்லாம் பாத்தது போதும்.” கஸ்தூரி சாப்டுண்டிருந்தவாளை சீக்கிரம் சாப்பிட வச்சு கிளப்பிண்டு வந்துட்டா. காரியமெல்லாம் முடிஞ்சு ஊர் திரும்பினதும் சாஷ்டாங்கமா ஒரு நமஸ்காரம் செஞ்சுடணும்னு கஸ்தூரிக்குன்னு வச்சிண்டேன்.

ஆத்துக்கு வந்தவள், “இன்னும் ரெண்டு கோவில் போயிருப்பம், எங்க லீடருக்கு உடம்பு முடியாமப் போச்சு. வந்துட்டம்.” சொல்லிண்டே படியேறி வரா. வந்தவள் என்னப் பாத்ததும் என்னமோ சரியில்லைன்னு புரிஞ்சுக்கரா. உக்காந்துண்டதும் காபி போட்டுத் தரேன். “நீங்க ஏன் இதெல்லாம் செய்யரேள்?” “திருச்சீலேந்து போன் வந்ததுடீ. உங்கப்பா இப்ப இல்லை”. சிலதை டமால்னு போட்டு உடெச்சுடணும். அது புதை மணலில் விழுந்தாப்போல் மொள்ள சிங்க் ஆகிக்கும். உடம்பு சரியில்லையாம், வா போய்ப் பாக்கலாம்னு சொல்லலாம். என்ன அவசரம்னு அத்தை பையனுக்கு போன் போடுவள். பொய் சொன்னாதா ஆகிடும்.

செய்தி கேட்டு “ஐயோ”ன்னு என்னைப் பாக்கரா. பேச்சே வரலை. நெஞ்சில் கைய வச்சுண்டு, என்ன ஆச்சு? எப்போ, என்னவாம் ஏன் எங்கிட்டே சீக்கிரம் சொல்லலைன்னு கணை தொடுத்து வீசரா. பக்கத்தில் உக்காந்துண்டு ஆசுவாசப் படுத்தரேன். “செய்தி வந்ததும் கஸ்தூரி மாமிக்கு சொன்னேன்டீ. கூட்டிண்டு வந்துடுங்கோ, செய்தி நான் சொல்லி தெரிஞ்சிக்கட்டும்னு சொன்னேன். அதான் தனக்கு உட்மபு முடியலைன்னு சொல்லி சொச்ச ட்ரிப்பை கேன்சல் செஞ்சு வந்திருக்கா.” இவளுக்கு இன்னும் கோபம். “பொய் சொல்லியா அழைச்சிண்டு வருவா? உடனே நாம போணம்”. கண்ணில் நீர் தாரை தாரயா. சித்தே கழிச்சு “ஓ”ன்னு. நன்னா அழட்டும், அங்கே போய் அழாம செய்ய வேண்டியது நிறைய இருக்கும்.

இவள் அம்மா கிளம்பிப் போனப்போ கூடத்தான் இருந்தா. அந்த மரணம் சித்தே எதிர்பாத்ததுன்னு வச்சுக்கலாம். இவளுக்கு அப்பாதான் எல்லாம்னு சொல்லுவள். அடிக்கடி அப்பா பெருமை தாங்காது. சிலசமயம் அலுத்துப் போராப்போல் பேசுவள். நல்ல மனுஷர்தான். இந்த மரணம் இவளை எப்படி பாதிக்கும்னு தெரியும். கெஸ் செய்ய முடிஞ்சது. அதே சமயத்தில் ரெம்பவும் பாதிச்சுடப் பிடாது என்பதில் கவனமா இருந்தேன். அடிக்கடி அவள் முகத்தை எடை போட்டுண்டு இருக்கணும். “என்ன ஏன்னையே அட்டிக்கடி முறைச்சு பாத்துண்டு?” திட்டினா. பரவாயில்லை.

கமலம் ஆத்துக்கு வந்து சேர 5 ஆச்சு. இப்ப கிளம்பினா ராத்திரி 11க்குள் போயிடலாம். காரை பெட்ரோல் போட்டு ரெடியா வச்சுண்டுட்டேன். சின்ன பெட்டியில் ரெண்டு பேருக்கும் தேவையான துணிமணிகள். டெபிட் கார்ட், வழிச்சிலவுக்கு கேஷ். என் பொண் தில்லியில் அவளுக்கும் தாத்தா போயிட்ட விஷயத்தை சொல்லியாச்சு. அவளால் வரமுடியாது. ஃபாரீன் செர்வீஸில் இருக்கா. இந்தவாரம் ட்ரம்ப் வரார். ஏற்பாட்டில் பிஸியா இருப்பள். திருச்சீக்கு போன் போட்டு இவள் அத்தை பையனுக்கு “நாங்க வதுடுவம், கார்த்தாலே எல்லாத்துக்கும் சொல்லி வச்சுடுங்கோ!” நாலு மனுஷா வேணும். கமலத்துக்கு கூடப் பொறந்தவா கிடையாது. “நான் பாத்துக்கரேன். காரை மொள்ள ஓட்டிண்டு வாங்கோ!”

இவள் புழியப் புழிய அழுந்திண்டிருக்க பொட்டிய எடுத்துண்டு வரேன். “என்ன? எங்கப்பா போப்போரர்னு மின்னமே தெரியுமா? ஏற்பாட்டோட இருக்கேள்?” கத்தரா. “வா, இப்ப கிளம்பினா போதோடப் போயிடலாம், யாருக்கு என்ன தகவல் போணமோ சொல்லியாச்சு.” வீட்டை அவளே பூட்டிண்டு வந்து காரில் ஏறிண்டா. திருவான்மியூர்லேந்து வேளச்சேரி, அப்படியே தாம்பரம், அங்கேந்து திருச்சி ரோட்டைப் பிடிச்சு. பழைய கார்தான் இருந்தாலும் செல்ஃப் ட்ரைவிங்க். சல்லுன்னு. செங்கல்பட் தாண்டினா வேகம் பிடிக்கலாம். வழீலே சாப்பிட நிறுத்திக்கலாம். மிட்பாயின்ட் உளுந்தூர்பேட்டைகிட்டே. “எனக்கொண்ணும் வேண்டாம்!” “காபி குடீ”ன்னு கட்டாயப் படுத்தி. என்னமோ தெரியலை. என்னண்டை கோபமாவே வந்தா. அவள் இருக்கும் மனநிலயில் நான் ஒண்ணும் சொல்லிக்கலை.

“தூக்கம் வந்தா படுத்துக்கோ! பின் சீட்டில் நிறைய இடம். ஊர்கிட்டே போனதும் எழுப்பரேன்”. “உங்கப்பான்னா தூக்கம் வருமா? இப்ப நான் என்ன செய்ய? இப்படி அநாதயா போய்ட்டேனே?” 10கிமீ கழிச்சு “உங்களுக்கு என்ன தெரியும் எங்க அப்பா எப்படிப் பட்டவர்னு?” “நீயே சொல்லு. நல்ல மனுஷர்னு தெரியும். எங்கிட்டேயும் பிரியமாத்தானே இருப்பா. நம்ப கூடவே கடைசி காலங்களை வாழ்ந்திருக்கலாம், த்ருப்தியா இருந்திருக்கும்”. “எங்கம்மா திட்டினாலும் அப்பா என் பக்கம்தான். எனக்கு எதுன்னாலும் கேட்டதை வாங்கித் தந்துடுவா. எதாவது ஒண்ணுன்னா தவிச்சுப் போயிடுவர். ரெம்ப சிரமப்பட்டு எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சர். சின்ன வயசில் மடீலேயே போட்டுண்டு கிடப்பர். நானும் இறங்க மாட்டேன். நிறைய விஷயங்களை சொல்லித் தருவர். என் இஷ்டத்துக்கு படீன்னு சொன்னர். எனக்குத்தான் அவ்ளவா படிப்பேறலை”.

இவள் சொன்னது எல்லாம் நானும் என் பொண்ணுக்கு செஞ்சேன்னு நினைக்கரேன். ஒரு விஷயம் மட்டும் வித்யாசம் காயத்ரீ நன்னா படிச்சு IFS பாஸ் பண்ணி இப்ப நல்ல உத்யோகம், தில்லியில். அநேகமா அடுத்த வருஷம் போல் அம்பேசடரா எங்கேயாவது போவள். மாப்பிள்ளையும் IAS. தேராதுன்னில் ஸ்நேகம். 2 வயசு வித்யாசம். அவாளுக்கும் ஒரே பொண். அடிக்கடி மாத்தலாரதுன்னுட்டு செம பிளானிங்க். மாப்பிள்ளையும் அவர் பொண்ணை தூக்கிண்டா கீழே விட மாட்டர்.

மூணூ தலைமுறையா அப்பா பொண் உறவு ஒரே மாதிரி பரிமளிச்சது தெரியும். ஆனாலும் இந்த மாதிரி தருணத்தில் இவள் சொல்வது அத்தனை பொருத்தமாத்தான் பட்டது. இந்த அப்பா பெண் உறவு எத்தனை முறை சிலாகிச்சுப் பெசினாலும் தகும். குறிப்பா அந்த உறவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்போது. இடைவெளி இல்லாம வேகமா பல பருவங்களா வளர்ந்துண்டே வந்த இந்த இனிமையான உறவு திடீர்னு எதிர்பாராம பகவான் வச்சுட்ட அந்த பகீர் முற்றுப் புள்ளியில் இடிச்சு பவுன்ஸ் ஆகி பலவருஷங்களா நாம பெரீசா எடுத்துக்காம கடந்து வந்துட்ட அந்த முழுச் சமாச்சாரத்தை அனுபவுச்ச உறவின் நெறுக்கத்தை திடீர்னு நம்மை அறியாம நமக்கே ரீவைண்ட் பண்ணிக் காமிக்கும்.

கமலத்தின் மனசுக்குள் அதுதான் நடந்திண்டிருக்கு. இதுக்கு உம் கொட்டிண்டே போணம், குறுக்கே பேசப் பிடாது. ஏதாவது சொல்லி அதை அனர்த்தமா பண்ணிட்டா இன்னும் கோவிச்சுப்பள். அவளும் அவமேல் அவள் அப்பா வச்சிருந்த அன்பு மட்டுமே லோகத்தில் சிறந்ததுன்னு ஃபீல் ஆகி திகைச்சு நின்னிண்டிருக்கும் தருணத்தில் கமலத்தை தனித்து விட்டுடணும். கணவனாவே இருந்தாலும் அதில் தலையிடப் பிடாதுன்னு நன்னா தெரியும் எனக்கு. துக்கம் என்பது ரெம்பவே ப்ரைவேட் ஃபீலிங்க்.
வழீயெல்லாம் அப்பா புராணம். நினைச்சுக்கரேன். நானும் தயங்காம வியந்து பாத்த நல்ல மனுஷர் இப்போ இல்லைன்னது எனக்கும் தொண்டைய அடைச்சதே! ஒரு டோலில் கார் கண்ணாடீலே தூசின்னுட்டு வண்டிய ஹைவே ஓரமா நிறுத்திட்டு இறங்கி தொடைக்கராப்போல் தொடச்சுட்டு நானும் முகம் கழுவிண்டேன். அதோட என் கண்ணில் துளிர்த்த கண்ணீரும் அலம்பி விடப்பட்டது. கமலம் பாத்துடக் கூடாதுன்னு கவனமா. நம்ம துக்கத்தை அப்பரமா காரியம் முடிஞ்சு 15ந கழிச்சுக் கூட அவிழ்த்து விட்டுக்கலாம். இப்ப இவ துக்கத்துக்கு வடிகால் அமைச்சுத் தரணும். வேகமா வெளிக் கொணரணும். அதை அதன் போக்கில் விடணும். அது கோபமா வெளிப்பட்டாலும் சரி.

திருச்சிக்கு வந்தம். தில்லைநகரில் அவர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் வாசலில் ஜனம். கார்த்தாலே 6 மணிக்கே எல்லாம் ஆரம்பிச்சுடலாம்னு சொன்னா. இவளை அவள் அப்பாவோட தனியா விட்டூட்டு 30 நிமிஷம் கழிச்சு நானும் போய் பக்கத்தில் நின்னுண்டேன். ஓரளவுக்கு கம்போஸ் ஆகிட்டா. என் தோளில் சாஞ்சுண்டா. கோவம் கரைஞ்சு போயிருந்தது. நடந்ததும் நடந்து முடிஞ்சதையும் உள்வாங்கிண்டு தன்னை தேத்திண்டுட்டாப்போல் தெரிஞ்சா. எடுத்துண்டு போரப்போ கடைசீயா ஒரு பெரீய துக்கம் வெடிச்சுண்டு வந்ததை அவள் தெகிரியமா அடக்கிண்டதை நான் மட்டுமே உணர முடிஞ்சது.

எல்லாக் காரியங்களையும் காவேரிக் கரையில் முடிச்சிண்டு இன்னைக்கு திருவான்மியூருக்கு திரும்பி வந்திண்டிருக்கம். உளுந்தூர்பேட்டைகிட்டே வந்ததும் சொல்ரா, “வாங்கோ சாப்பிடலாம். லோலோன்னு எங்கப்பாவுக்கு புள்ள மாதிரி இருந்து எல்லாம் செஞ்சிருக்கேள். சரியாச் சாப்பிடாம முகம் வாடிக் கிடக்கு. சாப்டம். அங்கேந்து விழுப்புரம் 32கிமீதான். ஒரு இடத்தில் காரை ஓரமா நிறுத்தச் சொல்லீட்டு தோளில் சாஞ்சுக்கரா. பெரீசா புளிய மரம். நல்ல நிழல்.
“இத்தனை வருஷமா எனக்காக நிறைய செஞ்சிருக்கேள். எங்க அப்பா மாதிரி பாத்துப் பாத்து. சிலசமையம் எங்கப்பாவை விட பாசமா. இனிமேல் நீங்க எனக்கு அப்பாவும்கூட”. கேக்காமலேயே எனக்கு அப்பப்போ தாயுமாவும் இருப்பவளுக்கு அவளே வாய்விட்டு கேட்டப்பரம்கூட தகப்பனா இருக்கலைன்னா தப்பில்லையோ! சரீன்னுட்டேன்.

கணவன்தான். 35 வருஷப் பதவி. அதைவிட உசத்தியான்னா இன்னொண்ணு பார்ட்-டைமா பாத்துக்கோன்னு தந்திருக்கா!

No comments:

Post a Comment