களவாணி (சிறுகதைகள் சீ2 – 64)
#ganeshamarkalam
கல்யாணங்கள் சொர்கத்தில் நிச்சயமாகுமாம். ஆயிட்டுப்போகட்டும்.
காமேஸ்வரன். வயசு 29. IOBயில் வேலை. தாம்பரத்தில் அம்மாவோட இருக்கேன். கல்யாணம் ஆகலை. எதுக்கு சொல்ரேன்னா, கணேஷ் கல்யாண் எப்போவும் ரிடையர் ஆன, ஆடிப்போன கிழபோல்ட் கதாநாயகனை வச்சே கதையை நகத்துவான்னு சொல்ரா. அந்த பிம்பத்தை 2ஆம் பத்தியிலேயே உடெச்சு எறிஞ்சுடணும்னு.
தினம் எலெக்ட்ரிக் ட்ரைனில் ஃபோர்ட் ஸ்டேஷன் வரைக்கும் தேமேன்னு போவேன். 55 நிமிஷம். அங்கேந்து மின்ட் ஸ்ட்ரீட்டுக்கு நடை. ப்ரேன்ச் வாசல்கிட்டே போரச்சே அக்கடான்னு தோணும். இங்கேயே பெருங்களத்தூருக்கு மாத்திண்டு வந்துடுன்னு அம்மா சொல்ரா. IOB பெர்சனல் டிபார்ட்மென்டில் என் அம்மா சொல்பேச்சை கேக்கமாட்டா.
அது ஒண்ணுன்னா இப்போ எனக்கு கல்யாணம் திகையணும்னு இன்னொரு கவலை. அப்பா போனதுலேந்து அம்மாவுக்கு அப்பப்போ உடம்பு முடியாமப் போரது. என் அத்தை, திருவண்ணாமலையில் இருக்கா, “காமேஷுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து பண்ணிட்டையான்னா கூடமாட ஒத்தாசையா இருக்குமோனோ!” அதைச் சொல்லி வரன் தேடரதா, இல்லை என் படிப்பு, உத்யோகத்தை சொல்லி பொண்ணை வளைச்சுப் போட்டுட்டு அப்புரம் அம்மாவுக்கு ஒத்தாசைக்கு வச்சுண்டுடரதா?. இப்போ புள்ளையை வச்சுண்டு நாயா பேயா அலையரதும், பொண்ணைப் பெத்தவா கெத்தா பதில் சொல்லாம ஷாப்பிங்க் செய்யரதும்தான் நடக்கரது.
அம்மா அந்தக் காலத்து மனுஷி. பையன் கல்யாணத்துக்கு ரெடின்னு அக்கம் பக்கத்தில் சொல்லிட்டா ஜாதகமா வந்து குமியும்னு நினெச்சிண்டு மூணு வருஷமா உக்காந்திருக்கா. இப்போ சித்தே வயித்தில் புளி கரையற டேஸ்ட் தொண்டைக்கும் வந்திருக்கு. ராத்திரி இலையில் சாதம் போட்டுண்டே “ஏன்டா உனக்கு யாரையாவது தெரியுமா, பிடிக்கரதா”ன்னு நாசூக்கா விசாரிக்கரா. இல்லன்னுட்டேன். நிஜமாவே இல்லை. “எங்கிட்டே மறைக்காதேடா, காட் ப்ராமிஸா சொல்லு.” என் கையை எடுத்து தன் தலையில் வச்சா.
இப்போ எப்படி சாப்பிடரது? திரும்பவும் கையை அலம்பிண்டு வந்து உக்காந்தேன். பேச்சை மாத்தினாத்தான் சாப்பிட விடுவள்.
வர வாரம் மாமா பொண் சகுந்தலாவுக்கு அண்ணா நகரில் கல்யாணம். வந்து அழைச்சுட்டு போனா. ஒண்ணுவிட்ட மாமா, அம்மாவோட பெரியப்பா பையன். டாக்டருக்கு படிச்சுட்டு ப்ரேக்டிஸ் செய்யலாமா இல்லை இன்னும் படிக்கலாமான்னு அவர் பொண் யொசிக்கரச்சே இன்னொரு டாக்டர், அவளோட பாண்டிச்சேரி ஜிப்மரில் படிச்சவன், பொண் கேட்டு வந்தான். இவா ரெண்டு பெரும் சேர்ந்து சுத்தினது – மாமா மாமியைத்தவிர – மத்த எல்லோருக்கும் தெரியும்.
அம்மாவுக்கு அவளை எனக்குப் பாக்கணும்னு ஒரு நப்பாசை. என்னைவிட நல்ல படிப்பு, நல்ல 6 விரக்கடி உயரமும் கூட. பக்கத்தில் நிக்கணும்னா நான் ஹைஹீல்ஸ் போட்டுக்கணும்.
“கல்யாணத்துக்கு போலாமா?” “ஆமாண்டா, போணம், இல்லைன்னா சீனு கோவிச்சுப்பன்”. எனக்குத் தெரிஞ்சு வரலைன்னா நிச்சயம் கோவிச்சுக்கமாட்டா. இருந்தாலும் சனிக்கிழமை ஜான்வாசம், ரிசெப்ஷன், ஞாயித்துக்கிழமை முஹூர்த்தம். தங்கி நன்னா சாப்டுட்டுணும்னு ஆசை. 4 வருஷமா சொந்தத்தில் கல்யாணமே நடக்கலையா இல்லை நம்பளை யாரும் கூப்பிடலையான்னு டவுட். வந்ததை விடப்பிடாது.
சனி சாயங்காலம் 3 மணிக்கு போயாச்சு. எல்லோரும் உள்ளே ட்ரெஸ் மாத்திண்டிருந்ததால் யாரும் ஓடிவந்து வாங்கோ வாங்கோன்னு மருகலை.
இப்போல்லாம் அதெல்லாம் எதிர்பாக்கப்பிடாது. நன்னா ட்ரெஸ் செஞ்சுண்டு போனோமா, எதுத்தாப்புலே வரவாளைப்பாத்து லெசா சிரிச்சோமா, காலியாயிருக்கிர நாற்காலியில் உக்காந்தோமா, பந்தி ஸ்டார்டட்னா போய் வக்கணையா கொட்டிண்டோமா, கிளம்பினோமான்னு இருக்கணும். வடக்குலே பஞ்சாபி கல்யாணங்கள் அப்படித்தான். என்ன ஒண்ணு பராத் வரவரைக்கும் சப்பாடுக் கடை திறக்கமாட்டான். வந்துடுத்துன்னா உள்ளே போக வழி கிடைக்காது. அவாளுக்கு தமிழ் பிராம்ணா சளைச்சவா இல்லைன்னு ஆய்போச்சு.
உம்ம அதிஷ்டம் உமக்கு தெரிஞ்ச யாராவது கெஸ்டா வந்தா பேச்சுத்துணைக்கு ஆச்சு. இல்லைன்னா யுட்யூப் பாக்கலாம்.
அம்மா அண்ணா மன்னியை பாக்கணும்னு போனா. நான் அக்கடான்னு சேரில் சாய்ஞ்சு ஒரு நோட்டம் விட்டேன். அப்போதான் அவளைப் பார்த்தேன். 22 அல்லது 24 வயசிருக்கும், எடுப்பான மூக்கு, சந்திரன்போல முகம், எந்த ஆங்கிள்லே பாத்தாலும் அழகு, அசப்புலே பார்த்தவா எழுந்து நின்னு பாப்பா. எனக்கு முழுசா காட்சி தந்தாள். ஏன்னா சேர் மேலே ஏறிண்டு சுத்தி உக்காந்திண்டிருந்த 7 பெண்களை – தோழிகளா இருக்கணும், கையை பாவனை செஞ்சுண்டு சொற்பொழிவு நடத்திண்டிருக்கா. பெசரது காதில் விழலை. இவ என்னத்தையோ சொல்ல எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க ஒரு நாடகமே நடக்கரது. சித்தே போக சில ஆம்பிள்ளைகளும் வேடிக்கை பாக்கலாம்னு சேர்ந்துக்கரா.
அப்போதான் ஒரு சீனியர் சிடிஜென் மெள்ள வந்து என் பக்கத்தில் உக்காந்து என் தோளைத் தட்டி. “அங்கே என்ன நடந்தாரது?” இப்போதான் அவளில் லயிக்க ஆரம்பிக்கச்சே ஒரு பெருசு என்னை தொந்திரவு செய்யணுமோ?
திரும்பரேன். பழமுதிர் நிலையத்தில் ரொம்பப் பழுத்துடுத்துன்னா ஜூஸ் செக்ஷணுக்குன்னு எடுத்து வச்சிடுவாளே, அப்படி பழுத்த பழம். சில்க் சட்டை, கரைபோட்ட வேஷ்டி. காதில் செவுட்டு மஷீன். மூக்குக் கண்ணாடி. கையில் தடி. நெத்தி நிறைய குழச்சு இப்போத்தான் இட்டுண்டு சித்தே ஈரமா சித்தே பூத்தாப்புலே விபூதி. “தெரியலை மாமா, இங்கேந்து காதில் விழலை. அந்த பொண் ஏதோ சுவாரஸ்யமா சொல்ரா”. “கிட்டே போய் என்னன்னு கேட்டுண்டு வந்து சொல்லு”. அதுசரி. ஆனால் இவர்கிட்டேந்து தப்பிக்க நல்ல ஐடியா. எழுந்து போரேன். அவள் குரல் என் காதில் குப்பியில் முத்தை ரொப்பி குலுக்கினாப்புலே.
ஒருத்தி “டீ ரம்மியா” இன்னும் சொல்லுடி, அப்புரம் அன்ன ஆச்சு?” கேக்க இவள் தொடர. மின்னே ஒரு கல்யாணத்துக்கு இவள் போய் நலங்கு சமயத்தில் பண்ணின கலாட்டாக்களை சொல்ரான்னு புரிஞ்சது. நாளைக்கு ஃபங்க்ஷனில் என்ன செய்யலாம்னும் பிளான். சாந்தி முஹூர்த்த ரூமில் ஒளிஞ்சுக்கரத்துக்கு வாண்டுகளை தயார் செஞ்சாச்சாம்.
பேசிண்டேயிருந்தவள் என்னைப் பாக்க அவள் கண்கள் என்னில் லாக் ஆக, டக்குன்னு திருப்பிண்டா. சாயங்காலம் நிச்சயதார்த்தம், ரெண்டு தெரு ஜான்வாசம், ரிசெப்ஷன் மேடைன்னு போரப்போ வரப்போவும் நாங்க எதேச்சையா சந்திக்க ஒவ்வொரு தடவையும் விதவிதமா லுக்கு. பந்தியில் என் பக்கத்தில் செவுட்டு மெஷீன் மாமா வந்துட்டர். தேடிக் களைச்சுப்போய் திடீர்னு பாத்தாப்போல, “என்ன எங்கே போயிட்டேள்?” இலையை தண்ணீர் விட்டு துடைக்கர சாக்கில் சித்தே என் சட்டையிலும், சாரி சொல்வர்னு பார்த்தா கண்டுக்கவேயில்லை.
வச்ச ஸ்வீட், பாயசம், இதுகளை தன் இலையில் வச்சதும் “இந்தா நீ சாப்பிடு”ன்னு என் இலைக்கு கடத்த, பரிமாரினவன் “வேணாம்னா சொல்லுங்க பெரியவரே”ங்க “எனக்கு எல்லாம் வைக்கணும்”னு இவர் கடு கடுன்னு மூஞ்சியை வச்சிண்டு சொல்ல அவன் அரண்டு போயிட்டான். மரியாதைக்கு பேசலாம்னு அந்த பொண் நடத்திய சொற்பொழிவிலேந்து சில சென்சார் செஞ்சு மிச்சத்தை இவருக்கு விவரிச்சேன்.
எல்லாத்தையும் கேட்டுட்டு மெல்ல, “அந்த மாதிரி பொண்கள்தான் குடுத்தனம் செய்ய தோதுப்படுவா!” ஒரு போடு போட்டாரே பாக்கணும்! மாமா லேசுப்பட்டவரில்லை, இவரை தன் பக்கம் வச்சுண்டுட்டா நிறைய விஷயங்களை கத்துக்கலாம், நாளைக்கு பெச்சுத் துணைக்கும் ஆளாச்சுன்னு அறிமுகம் செஞ்சுண்டேன்.
நீ பொண்ணாமா, பிள்ளையாமான்னு கேட்டுத் தெரிஞ்சுண்டர். பேர் ராமாமிர்தம், ரிடயர்ட் கமெர்ஷியல் டேக்ஸ் ஆபீசர். “நீங்க பொண் வீடா?” “இந்த வயசில் அதெல்லாம் முக்கியமில்லை, எல்லாரும் காலில் விழுவா!”
சாப்டுட்டு ரெண்டு மாத்திரையை சட்டைப் பையிலேந்து எடுத்து போட்டுண்டு, “சீக்கிரமே முகூர்த்தம் நாளைக்கு, போய் தூங்கு, 5 மணிக்கு எழுப்பி விடரேன்”. கிளம்பினர். என்னை ஏன் அவர் எழுப்பணும்? சத்திரத்தில் கொடுத்த கருங்கல் தலகாணியை வச்சுண்டு எந்த ஃபேனுக்கு அடீலெ காத்து வரும்னு கண்டுபிடிச்சு தூங்கரச்சே மணி 1.
சத்திரங்களில் கார்த்தாலே வெளிக்குப்போய் குளிக்கரது ஒரு அனுபவம். ட்ரெஸ் போட்டுண்டு ஹாலில் உக்காந்தா ஊஞ்சல் முடிஞ்சு உள்ளே வரா டாக்டர் தம்பதியாகப் போரவா. ஒரு தாம்பாளம் நிறைய பூ எடுத்துண்டு எல்லா சுமங்கலிகளுக்கும் கொடுக்கலாம்னு ரம்யா ஒய்யாரமா. கையை நீட்டர மாமிகளை அவாய்ட் செஞ்சு மத்தவாளுக்கு கொடுக்கரா. கையை நீட்டினாவாளுக்கு லாஸ்ட். விவகாரமானவள்.
முன் வரிசையில் உக்காந்துக்கரேன். தாத்தா இத்தனை நாழி எங்கே இருந்தாரோ “காமேஸ்வரா, குட் மார்னிங்” சொல்லிண்டே பக்கத்தில். “நன்னா தூங்கினேளா?” “அதெல்லாம் நின்னுபோய் 3 வருஷம் ஆச்சு.” “வயசானா தூக்கம் வராதோ? இல்லைடா, தூக்கம் வரலைன்னா வயசாயிடுத்துன்னு அர்த்தம், டிபன் சாப்பிடப் போரச்சே என்னையும் அழைச்சிண்டு போ.”
திடீர்னு ஒரு சின்னப்போண் எங்கிட்டே வந்து “நீ காமேஸ்வரனா”ன்னு கேக்க “ஆமாம் இவன்தான்” பெரியவர் காட்டிக்கொடுக்க “இந்தாங்கோ லெட்டர்”ன்னு மடிச்ச வெள்ளைக் காகிதத்தை தந்துட்டு சிட்டாய் போயிடரா. “என்னடா இத்துனூண்டு பொன்ணு உனக்கு லவ் லெட்டெர் தரது?”. “ஐயோ மாமா அப்படியெல்லாம் இருக்காது”ன்னு பையில் வச்சுக்கரேன். “எடுத்து சத்தமா படிச்சு எனக்கும் சொல்லு!” விடமாட்டார்னு தெரியும். பிரிச்சேன். “என் பிரியமான காமேஸ்வரா”னு ஆரம்பிச்சு, என்னென்னமோ காதல் ததும்ப நிரப்பி கடைசீலே “என்னை கல்யாணம் செஞ்சுக்கரையா?” கேட்டுட்டு “உன்னையே விரும்பும் ரம்யா”ன்னு முடிஞ்சது.
கேட்டிண்டிருந்த பெரியவர் “யார் அந்த ரம்யா?”ங்க நான் திகைச்சுப்போய். நிச்சயமா ஏதோ விஷமத்தனம்தான். இதை நம்பி அவள்கிட்டே போய் குழஞ்சேன்னா கந்தலாயிடுவேன். இவரோ, “நான் ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கரேன், பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு” அந்த ரேஞ்சில் பெச ஆரம்பிச்சுட்டர்.
அதொட நிக்காம நேர என் அம்மாகிட்டே போய் அறிமுகப்படுத்திண்டு எதையோ குசுகுசுன்னு பெசரர். அம்மா மூஞ்சியில் அத்தனை சந்தோஷம். நேர எங்கிட்டே வரா. “ஒரு விஷயம் சொன்ன கோவிச்சுக்க மாட்டாயே?”
“ஒரு பொண் பார்த்தேன். நல்ல அழகுடா, படிப்பும் இருக்கு. நம்மடவா. உன்னைக் கேக்கரா. ஒரே ஒரு குறை, வலது கால் முழங்காலுக்கு கீழே கட்டை வச்சிருக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பைக் ஆக்ஸிடென்டில் அப்படி ஆச்சாம். எனக்கு பெரீசா தெரியலை. நீ சரீன்னா கூட்டிண்டுவர சொல்ரேன் இங்கேயே பாத்துடலாம்” யாரா இருக்கும்? இப்போ இந்த ரம்யா வேர லெட்டர் போட்டதை அம்மாகிட்டே சொல்லணுமான்னு குழப்பம்.
நான் மூக்குக்கண்ணாடி கேஸ். அதுவும் ஒரு குறைதானே. கட்டைக்கால் ஒண்ணும் பிர்ச்சனையில்லையோன்னு லேசா நினைக்கரச்சே. “மௌனம் சம்மதம்னு எடுத்துக்கோங்கோ.” பெரியவர் பெரீசா சிரிக்க, நான் சரீன்னு சொல்லிட்டதா எல்லோருக்கும், ஏன் எனக்குமே பட்டது.
முஹூர்த்தம் முடிஞ்சு சாப்பாடு ஆனதும் அக்கடான்னு உக்காந்திருக்கச்சே ரம்யாவே வரா. “காமேஷ் கோவிச்சுக்காதீங்கோ, லெட்டர் எழுதி உங்ககிட்டே அனுப்பிச்சது என் தாத்தா, நான் இல்லை. ஆனால் உங்களை எனக்கு பிடிச்சது. அதான் உங்கம்மா வந்து கேட்டதும் சரீன்னேன்”கரா.
கல்யாணங்கள் சொர்கத்தில் நிச்சயமாரதாம். இல்லை இல்லை, இன்னொரு கல்யாணத்தில். இப்படியும் வச்சுக்கலாம். கல்யாணங்கள் எங்கே நிச்சயிக்கப் படரதோ அந்த இடமே சொர்கமா மாறிடரது.
இத்தனையயும் அந்த கிழம்னா சாதிச்சிருக்கு! வரட்டும். களவாணி தாத்தா!
No comments:
Post a Comment