Monday, July 20, 2020

ஆட்டுப்புழுக்கை

ஆட்டுப்புழுக்கை (சிறுகதைகள் சீ2 – 48)
#ganeshamarkalam

பயணம் எனக்குப் பிடிக்கும். முன்னெ கிளம்பின ஊருக்கு எப்போடா போய்ச் சேருவோம்னு இருக்கும். பஸ்ஸில், ட்ரைனில் ஏறி உக்காந்ததும் டக்குன்னு ஊர் வந்துடணும். நினைப்பு போர வேகத்தில் வாகனங்கள் போகணும். இப்போ அப்படி இல்லை. பயணம்னா போயிண்டே இருக்கணும்னு தோண்றது.

பொயிண்டே இருக்கணும், போய்ச் சேரவேண்டிய இடம் வரவே கூடாது. போய்ச் சேர்ந்தவுடன் ஏற்படும் சந்தோஷத்தைவிட பயணிக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் நன்னா இருக்கு. அதான். முன்னேயும் சரி, இப்போவும் சரி பயணங்கள் அலுப்பு தட்டரதேயில்லை. ஏதாவது ஒரு காரணத்துக்காக.

எதுலே போனாலும் ஜன்னல் சீட்டுத்தான். கிடைக்கல்லைன்னா மாஞ்சு போவேன். அந்த சீட்டில் யார் இருந்தாலும் வம்புக்கிழுப்பேன். விட்டுக் கொடுக்க சொல்லுவேன். மாட்டேன்னா மனசுக்குள் பழிப்பேன். உதடு நகர்வதை வைத்து வெய்யரேன்னு தெரிஞ்சுடும். சில கொடாக்கண்டன்கள் அப்படியும் விட்டுத்தரமாட்டா. பலபேர் எதுக்கு இவன் வாயில் விழுந்து புறப்படணும்னு கொடுத்துடுவா. இப்போல்லாம் பயணம் காரில் தான்.

காரில் போரது தனி சுகம். நாமே ஓட்டினா அதிசுகம். ஜன்னல் சீட் கிடெச்சுடும். எதுத்தாப்புலேயும் பாத்துண்டே போலாம். ரியர்வ்யூ கண்ணாடியிலும் பாக்கலாம்.

இது என்ன பயணக் கட்டுரையான்னு, லைக் போடலைன்னா பழிப்பானோன்னு போட்டுட்டு கிளம்பிப் போயிடாதீங்கோ. கதை இப்போத்தான் ஆரம்பிக்கறது. அன்னைக்கு இப்படித்தான் எகாந்தமா கிளம்பி எங்கேயாவது போணும்னு காரை எடுத்துண்டு கிளம்பிட்டேன். எங்கே? 

கும்பகோணமான்னு கேக்கலாம். எப்படி அத்தனை கரெக்டா சொல்ரேள்? இங்கே கிளம்பினா அங்கேதான் போய் இவன் நிப்பான்னு. என்னைப் புரிஞ்சு வச்சிண்டிருக்கேள். நான் அந்த கணேஷ் கல்யாண் மாதிரி வழ வழ கொழ கொழன்னு இழுத்துண்டெல்லாம் எனக்கு எழுத தெரியாது. படிச்சு முடிச்சதும் புரியும்.

ஆத்தில் சேலத்துக்கு ஒரு சீமந்தம்னு போயிருக்கா. என்னையும் கூப்பிட்டா. வளைகாப்பு சீமந்தம்னு போக ஆரம்பிச்சா அப்புரம் புண்யாஜனம், ஆண்டு நிறைவு, அப்புரம் பூணக்கல்யாணம்னு வரும். கல்யாணத்துக்கு போயாச்சே. அது போதும். இவளுக்கு தங்கை பொண் சீமந்தம். தங்கையோட சம்பந்திப்பேரும் வாஞ்சையா கூப்பிட்டா, “நீங்க அவசியம் வரணும்”. எனக்கு அத்தனை வாஞ்சையாப் படலை. “நீ சேலம் போ, அப்படியே வேணும்னா கோயம்முத்துர் போய் உன் அப்பா அம்மாவையும் பாத்துட்டு வா, நான் இங்கே ஆத்தை பாத்துக்கரேன்.” அவளுக்கும் சரீன்னு பட்டது. எல்லாத்துக்கும் இவரும் கூடக்கூட கிளம்பினா பொறந்தாத்தில் ஆத்துக்காரர் மவுசு குறைஞ்சுடும்னு.

அவள் கிளம்பினப்புரம்தான் நம்மளும் இந்தப் பக்கமா பயணிச்சா என்னன்னு தோணித்து. ஆத்தை பாத்துக்கரேன்னு சொன்னது? அதுக்கு எதுத்தாத்து மாமா அப்பாயின்டட். பகலில் பாத்துப்பர், ராத்திரி எங்காத்து வராண்டவுலே வந்து படுத்துண்டுடுவர். சத்தம் கேட்டா ஏன்னு கேக்கரத்துக்கு ஒரு ஆள்.

கார் இப்போதான் செர்வீஸ் விட்டு கன கச்சிதமா இருந்தது. பெட்ரோல் சிலவுதான். இருந்தாலும் ஏகாந்தமா சர்ருன்னு ஹைவேயில் 100கிமீ ஸ்பீடில் போரச்சே வர ஆத்ம திருப்திக்கு கொடுத்துடலாம்னு டாங்கை நிரப்பிண்டேன். கும்பகோணத்தில் எங்கே தங்கரது, எத்தனை நாள் அப்படீன்னெல்லாம் யோசிக்கலை. அதான் சொன்னேனே, பயணம் முக்கியம், எங்கேன்னு இல்லை. கும்பகோணம் போலாம், அங்கேந்து வேர எங்கேயாவது. இல்லை திரும்பிடலாம். தங்கணும்னா ரூம் போட்டுக்கலாம். “மதனம் இன்” அப்படின்னு பைபாஸில் புதுசா கட்டிருக்கான் நிச்சயம் ரூம் கிடைக்கும். 

பயணம் நன்னாவே போச்சு. போனவாரம்தான் மழை ஆரம்பிச்சு, மேகமூட்டமா, தூரல் போட்டுண்டு, காரில் ஏஸி வேணுமா வேண்டாமான்னு எங்கூடவே தர்க்கம் பண்ணிண்டே விழுப்புரம் தாண்டியாச்சு. செங்குருச்சி டோல் தாண்டினதும் நிறைய டிபன் ஹோட்டல். அதில் ஒண்ணில் மெதுவடை ரெண்டு கொடுன்னு சாம்பார் தொட்டுண்டு சாப்பிட்டேன். திவ்யமா இருக்கவே இன்னும் ரெண்டு கொடுன்னு அன்னைக்கு காலை சிற்றுண்டி வடையாவே முழுங்கிட்டு ஒரு காபீயும் குடிச்சேன்.

பக்கத்து டேபிளில் 4 பேர், வெள்ளையும் சொள்ளையுமா. அவாளைப் பாத்தாலே ஸ்கார்ப்பியோவில் போரவா மாதிரி. சத்தமா பேசிண்டு. ஒருத்தன் “அப்புரம் அன்ன ஆச்சுடான்”னு கேக்கரான். இவன் “நேத்தைக்கு நல்ல வேட்டைடா, சத்தமே போடலை, கடைசீ வரைக்கும் மூஞ்சியில் ஒரு இனம்புரியாத வெறுப்பு மட்டும், மாட்டிண்டுட்டோம்னு, பொறுமையா செய்யரதை எல்லாம் பொறுத்துண்டு கடைசீலே இறங்கிப் போச்சு”. “அடுத்த தடவை என்னையும் கூட்டிண்டு போங்கடா!” கதையை வாயைப் பிளந்துண்டு கேட்டவன் “அப்போ எடுத்த வீடியோவை எனக்கும் அனுப்பு”ன்னுட்டு எல்லாருக்கும் அவனே பில் கட்டினான்.

கிளம்பலாம்னு கார் கிட்டே வந்தால், வறுத்த கடலை, வெள்ளரிப்பிஞ்சு, கொய்யாப்பழம்னு மொச்சுண்டா. பாவம் இவாளுக்கும் வியாபாரம் ஆகணுமோன்னோ, எல்லார்கிட்டேயும் ஒவ்வொரு பேக்கட் வாங்கிண்டேன். பிடிச்சா சாப்பிடரது இல்லைன்னா வழீலெ ஏழை பாழை வந்தா கொடுத்து புண்யத்தை தேடிக்கலாம்னு. இலந்தப்பழவடை மட்டும் யாருக்கும் தரப்பிடாது, நம்பளே தின்னுடணும்னு மசக்கை. ஆத்துக்காரி கூட வந்தால் “இதெல்லாம் மங்கு மங்குன்னு சாபிடரேள், நான் அரிசி உப்புமா பண்ணினா மட்டும் வேண்டாம்னா என்ன அர்த்தம்”பா. 

“நீ அரிசி உப்புமா செஞ்சு எடுத்துண்டு வா இங்கே கொண்டு வந்து இவாளுக்கெல்லாம் தரலாம்” இப்படி சொன்னது பொனதடவை நாங்க சுவாமிமலை போரச்சே. அதுக்கப்புரம் 1 வாரம் என்னோட பெசலை, கிட்டக்கேயே வர விடலை. அதுக்குத்தான் கொயட்டா இருந்துடறது. சர்காஸ்டிக்கா ஏதாவது கமென்ட் தோணித்துன்னா, அதை அப்படியே வாய்க்குள்ளேயே மென்னு முழிங்கிடறது. தனியாப் பயணிக்கரச்சே கார் ஓட்டிண்டே மனசுலே தோணினதை சத்தமா சொல்லலாம். 

காரை ஸ்டார்ட் செஞ்சவன் “நீ செஞ்ச அரிசி உப்புமாவை ம்யூசியத்தில்தான் வைக்கணும்” தைரியமா கத்திச் சொன்னேன். சென்னையிலா இருக்கோம்? உளுந்தூர்பேட்டைன்னா? இங்கேந்து சேலம் 130 கிமீதான். காதில் விழுந்திருக்குமோ? சித்தே பயமா இருந்தது. வாயை மூடிண்டு சிவனேன்னு இருக்கணும்.

கொஞ்சதூரம் போய் மங்களம்பேட்டை போர ரோடில் இடதுபக்கம் திரும்பி விருத்தாசலம் போகணும் அந்தத் திருப்பத்தில்தான் அவளைப் பாத்தேன். 18 வயசிருக்கும். தலையில் கட்டு. ரத்தக்காயம் மாதிரி.

சாதாரண பாவாடை தாவணி. அங்கங்கே கிழிஞ்சிருக்கு. கிராமத்து அழகு கட்டுக்குள் வச்சாலும் ததும்பித்து., கையில் ஒரு குட்டி ஆடு, அதை மேய்க்க ஒரு குச்சி, திருப்பத்தில் நின்னிண்டிருந்தா. இங்கே அதிகமா வண்டிகள் போகாது. உளுந்தூர்பேட்டை டு விருதாச்சலம் பஸ் வேர வழீலே போகும், அதைப் பிடிக்க இவள் 4 கிமீ நடக்கணும். நான் ,மெல்ல திரும்பறதைப் பாத்துட்டு கையை நீட்டினா. என்ன தோணித்தோ நானும் நிருத்தினேன்.

 “என்னை ஏத்திக்கரீங்களா?” குரலில் கெஞ்சல். “ஏத்திக்கரேன். எங்கே போகணும்?” “ரொம்ப தொலை போகணும்”. “அது சரி போகிர இடத்துக்கு பேர் இருக்குமே!” ஜோக்கடிச்சுட்டா மாதிரி சிரிச்சுக்கரேன். “தேவானன்சேரி” “சரியாப்போச்சு, அது எங்கே இருக்கு? நான் கும்பகோணம் போலாம்னு இருக்கேன்!” எனக்கே நான் போர இடம் இன்னும் தெளிவாகலைன்னு அவளுக்கு தோணீயிருக்கும். ஒரு மாதிரியா பார்த்தா. “தேவானன்சேரி கும்பகோணத்துக்கு முன்னே 8 கிமீட்டரில் இருக்கு, என்னை அதுவரைக்கும் அழைச்சிண்டு போக முடியுமா?” 

“சரி வா.” முன் கதவை திறக்கரேன். “நான் பின்னாடி உக்காந்துக்கரேன்” ஏறிக்கரா. அதுவும் சரிதான், கூடவே அந்த ஆட்டுக்குட்டியும் அவள் மடீலே. முன்னாடின்னா அதுக்கும் சேர்த்து சீட் பெல்ட் போடணும்.

அடிக்கடி காரில் போரவ மாதிரித்தான் இருந்தது அவள் தோரணை, கதவைத் தொறந்தது, ஏறிண்டு சாத்தினதும். சித்தே தூரம் போனதும் ஏஸியை கொஞ்சம் நல்லா வையுங்கன்னு வேர. “ஆட்டுக்குட்டிக்கு ஜலதோஷம் வந்துடும்”னு முணுமுணுத்துண்டே வச்சேன்.

வேகமெடுக்க ஆரம்பிக்கரச்சே “எங்கேந்து வரீங்க?” நான் சொல்ல அடுத்தது “எங்கே போரீங்க?” “கும்பகோணம்” சொன்னதும் “தீர்மானம் பண்ணிட்டீங்களா”ன்னு புத்திசாலித்தனமா கேட்டா பாருங்கோ! என்ன படிச்சிருக்காய்னு நான் கேக்க “+2 வரைக்கும் படிக்க வச்சாங்க, அப்புரம் வசதியில்லை” “இத்தனை துரம் ஆட்டை ஓட்டிண்டு வந்தாயா, நாம போற இடம் 60கிமீ இருக்குமே?” கிண்டலா கேட்டேன். “ஓ”ன்னு அழ ஆரம்பிச்சுட்டா. 

அடப்பாவமே அப்படி என்ன கேட்டுட்டேன், நல்லவேளை போர ரோட்டில் யாரும் இல்லை, ஒரு பொண் அழுதுண்டு பின் சீட்டில் வச்சுண்டு போனா என்ன நினைப்பா, ஏதாவது வம்பை விலைக்கு வாங்கிட்டேனோன்னு மனசு கிடெஞ்சு அடிச்சுக்க ஆரம்பிச்சது. யாருக்கோ முன்பின் தெரியாம உதவப்போய் போலீஸில் பிடிச்சிண்டுட்டா ஆத்துக்காரிக்கு என்ன பதில் சொல்ரது?

பயந்துபோய் திருதிருன்னு முழிக்கறதைப் பாத்துட்டு பரிதாபபட்டு அவளே அழுகையை நிறுத்த அப்பாடான்னு இருந்தது. “சொல்ல வேணாம்னா வேண்டாம், அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதே, செஞ்சாயானால், இங்கேயே ரோட்டோரத்தில் இறக்கி விட்டுடுவேன்” பயமுறுத்தினேன். “நான் இவ்வளவு தூரம் எப்படி வந்தேன்னு தெரிஞ்சே ஆகணுமா?” “ஆமாம் உங்கூர் எதுவோ சொன்னியே, தேவானன்சேரி, கும்பகோணத்துக்கிட்டே இருக்கு, ஆட்டை மேய்ச்சிண்டு இத்தனை தூரம் எப்படி வந்தாய்? அதான் கேட்டேன்.” “சொல்ரேன்”னு ஆரம்பிச்சா.

“என் பேர் காந்தம்மா. எங்கூரில் பலபேருக்கு அந்தப்பேர். என்னை +2 காந்தம்மான்னு கூப்பிடுவா. என் வயசில் நான் மட்டும்தான். ஒருநாள் என் அப்பா குடிச்சுட்டு வந்து வீட்டில் ஒரே ரகளை. அம்மா “நீ எங்கூட இருக்கவேண்டாம், போயிடு, குடிப்பழக்கம் நிப்பாட்டிட்டு வந்தா வா, இல்லைன்னா நீ செத்துட்டேன்னு நினச்சுக்கரேன்”னு தொரத்திவிட்டுட்டா. எனக்கு அப்பாவை பிடிக்கும். மின்னெல்லாம் நல்லாத்தான் தொழில் செஞ்சிண்டு இருந்தர், 2 வருஷமா இந்தப் பழக்கம் தொத்திண்டது. அம்மாவை எத்தனையோ கேட்டுப் பார்த்தேன், பொட்டப் பிளையை வச்சுகிட்டு குடிச்சா தப்பு. தானே திருந்தி வந்துடும்”னு சொல்லிச்சு. நடந்து 3 மாசம் இருக்கும்.

“நேத்து அம்மா வயலுக்கு போயிருகச்சே ஒரு ஆள் காரில் வந்து எங்கப்பாவுக்கு ஆக்ஸிடென்ட். விருதாசலம் ஆஸ்பத்திரியில் இருக்காரு உங்களை கூட்டிட்டு வரச்சொன்னார்னான். அம்மா இல்லையேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு, விவரத்தை ஒரு சீட்டில் எழுதி வச்சுட்டு அவசரமா கிளம்பிட்டேன். கார் விருதாசலம் தாண்டி இந்தப்பக்கமா போச்சு. சாயங்காலம் 7 ஆயிடுச்சு, நல்ல மழை. ஒரு இடத்தில் இன்னும் ரெண்டு பேர் காரில் ஏறிட்டானுவ. அப்பாவின் நண்பர்கள்னு சொன்னான். நம்பிட்டேன். ஆனால் அவிங்க ஆஸ்பத்திரிக்கே போகலை. எங்கிட்டே தகாத முறையில் நடந்தாய்ங்க. எல்லாம் முடிஞ்சதும் கார்லேந்து கீழே தள்ளி விட்டுட்டானுவ”. தலையில் அடி பட்டிருச்சு.

“கண்ணை தொரந்தா 10அடி தள்ளி ஒரு ஆடு அந்தப்பக்கமா போன மொட்டார் சைக்கிளில் அடிபட்டுக் கிடந்தது. மெல்ல எழுந்து அதையும் கையில் தூக்கி வச்சிண்டு என்னை கஷ்டபடுத்தினவங்களை இந்தப்பக்கமா வந்தா பிடிச்சுடணும்னு காத்திண்டிருக்கேன். அந்தக் கார் நல்லா ஞாபகம் இருக்கு”.

“அச்சச்சோ! ஆடப்பாவமே, நான் வேணும்னா டாக்டர்கிட்டே அப்புரம் போலீஸ்கிட்டே கூட்டிண்டு போரேன் கம்ப்ளைன்ட் கொடுக்கலாமா? இல்லை உங்கம்மாகிட்டே போலாமா?”ன்னு கேக்க, “போலீஸ் வேண்டாம், நானே அவிங்களை கண்டுபிடிச்சு போலீஸில் தரணும் இல்லைன்னா என் கையாலையே கொன்னு போடணும்னு இருக்கேன்”.

இப்போத்தான் விருத்தாசலம் தாண்டியிருக்கேன், வேகமா போனா 20 நிமிஷத்தில் தேவானன்சேரி வந்துடும் பத்திரமா இறக்கி விட்டுடணும். வழீலெ ஆண்டிமடம் சந்திப்பில் “எனக்கு சர்பத் வாங்கித்தரீயா”ன்னா காந்தம்மா. வண்டியை நிறுத்தி “ஏதாவது சாப்பிடாரையான்னு கேக்க, இல்லை சர்பத் போதும்”னுட்டா. பொவென்டோ குடிச்சிண்டே வந்தா. ஆட்டுக்குட்டி தேமேன்னு அவ மடீலே. 

சித்தே போனதும் “உங்கூர் வந்துட்டா மாதிரி  இருக்கு. எங்கே இறங்கணும்? கேட்டுண்டே திரும்பிப்பாத்தா பின் சீட்டில் காலி சர்பத் பாட்டில் மட்டும் வச்சிருக்கு. யாரையும் காணோம். 
பகீர்னுது. பயத்தில் என்ன செய்யரதுன்னு தெரியலை. என்ன தோணித்தோ பயணம் செஞ்சது போதும்னு வண்டியை ஒரு முட்டுச்சந்தில் கொடுத்து திருப்பி வந்த வழியே போக ஆரம்பிச்சேன். இனிமேல் தனியாவே போகக்கூடாதுன்னு பட்டது. நிச்சயமா ஆத்துக்காரிகிட்டே சொல்லாமல் பிடவேபிடாது.

பழையபடி ஹைவேயில் சேரும் இடத்தில் ட்ராஃபிக் ஜாம். எல்லா பஸ்ஸும் காரும் மொள்ள ஊர்ந்துண்டே போக, என்னன்னு கேட்டால் ஆக்ஸிடென்ட் சார்னான். நாலுபேர் ஸ்பாட்டுலேயே அவுட்டுன்னா. திருப்பத்தில் ஒரு கருப்பு ஸ்கார்பியோ எதிரே வந்த கன்டைனெர் லாரியில் மோதி அடையாளம் தெரியாமல் நசுங்கிக்கிடந்தது. அங்கேந்து நேர ஊருக்கு வந்து சேர்ந்தேன். 

எதுத்தாத்து மாமாவுக்கு ஆச்சர்யம். என்ன இன்னைக்கே வந்துட்டேள்னு விசாரிக்க ஆரம்பிச்சர். சொல்ரேன் மாமான்னுட்டு கேட்டைத் தொறந்து காரை நிறுத்தரேன்.

இறங்கரச்சே இன்னொரு தடவை பின்னாடி சீட்டில் யாரும் இல்லவே இல்லைன்னு ஊர்ஜிதப்படுத்திக்க  திரும்பினப்போதான் பார்த்தேன், சந்தன நிரத்தில் இருந்த சீட்டிலும் சித்தே கால் வைக்கர இடத்திலும் ஆட்டுப்புழுக்கை கிடக்கு.

No comments:

Post a Comment