Saturday, February 13, 2021

ஜப்பான் மருமகள் - சுஜாதா

 *ஜப்பான் மருமகள்  - சுஜாதா                 *                
(சுஜாதாட்ஸ் புத்தகத்திலிருந்து)
==================
(சுஜாதாட்ஸ் புத்தகத்தில் வாத்தியார் இந்தப் பத்திக்கு வைத்த பெயர் - ஆச்சரியமான கதை - போன முறை இதை இங்கு பகிர்ந்தபோது 'கதை' என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால், அதிலுள்ள மற்ற விஷயங்களை மனதில் கொள்ளாமல் ஒரு சிலர் இதை கதை என்றே எடுத்துக்கொண்டு விட்டார்கள்).  அதற்காகத்தான் இந்த முறை வேறு தலைப்பில்  அதைக் கொடுத்துள்ளேன். 

இது கதையல்ல. நிஜத்தில் நடந்தது என்று புரிந்துகொண்டால்  சரி -* ராம் ஸ்ரீதர் *

==================
என் இரண்டாவது மகன் ஜப்பான் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும். இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள் என்று பலர் என் மனைவியை கேட்டார்கள். அவள் எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது…. அந்தப் பெண் அவளை அன்பாகத்தான் பராமரிக்கிறாள்…. அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். அதுதான் முக்கியம்.

ஜப்பான் மருமகள் எனக்கு மற்றொரு தகுதியை கொடுத்திருக்கிறாள் என்பதை அப்போது உணர்ந்தோம். ஒரு நாள் டெலிபோனில் வினோதமான தமிழில் ஒருவர் பேசினார், “ என் பெயர் ஃபுகோவா ஜூனிச்சி. நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். நான் ஒரு ஜப்பானியன்” என்றார்.வெட்டி வெட்டி பேசினாலும் தமிழ் திருத்தமானதாக இருந்தது. இலக்கண சுத்தமாக கற்றுக்கொண்ட தமிழ். இளம் ஜூனிச்சி என்னைப் பார்க்க வந்தார். சிவப்பாக உயரமான தோற்றம். "வணக்கம்" என்று துவங்கி, தயங்கித் தயங்கி யோசித்து யோசித்து ஒரு ஆச்சரியமான கதை சொன்னார்.

அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கழகத்திற்கு ஆராய்ச்சிக்கு ஜப்பானிய மானியத் தொகையில் வந்திருக்கிறார். அங்கே ஒரு வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருக்கிறார். அந்த வீட்டுச் சொந்தக்காரரின் பெண் அவருக்கு சாப்பாடு முதலிய பண்டங்கள் கொண்டுவந்து தரும்போது நட்பு உருவாகி, காதலாகி இப்போது அவள் போட்டோவை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மணந்தால் அவளைத் தான் மணப்பேன் என்று வைராக்கியமாக இருந்தார். பெண்ணின் பக்கத்தில் இருந்து - குறிப்பாக பெற்றோர் - சம்மந்தமே இல்லை. அவர்கள் சமூகம் இதை ஒப்புக் கொள்ளாது. இதுதான் சிக்கல்.

“ சரி நான் என்ன செய்ய முடியும்?” என்றேன். “நீங்கள் ஜப்பானிய பெண்ணை தங்கள் மகன் மணப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்…. எப்படி மனம் மாறினீர்கள்?”

“அன்புள்ள நண்பரே, நாங்கள் இந்த மாதிரி மாறுதல்களை சுலபமாக அங்கீகரித்து விட்டோம். ஆனால் அந்தப் பெண்ணின் இனத்தார் அப்படி இல்லை. ஓடிப்போவது, திருட்டுக் கல்யாணம் அது இது என்று எந்த சமாச்சாரமும் வைத்துக் கொள்ளாதீர்கள். பெற்றோர் சம்மதம் இல்லாமல் செய்து கொள்ளாதீர்கள். அவர்கள் ரொம்ப கோபம் உள்ளவர்கள். உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். அவசரப்பட்டு எதுவும் செய்யாதீர்கள்” கவனமாக கேட்டுக் கொண்டு விடைபெற்றுப் புறப்பட்டார்.

அதன்பின் அவன் செய்ததை ஜப்பானியர்கள் தான் நினைத்துப் பார்க்க முடியும்.ஜப்பான் சென்று தன் தந்தையை அழைத்து வந்து பெண்ணின் பெற்றோருடன் பேச வைத்தார். பேசவைத்தார் என்பதைவிட பார்க்க வைத்தார் என்பதே பொருத்தம். அவருக்கு ஒரு அட்சரம் இங்கிலீஷ் தெரியாது. ஜப்பான் பாஷைதான். பெண்ணின் பெற்றோருக்கு ஜப்பானிய மொழி தெரியாது. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு இருந்தார்களா என்று தெரியவில்லை.

ஜூனிச்சி அசத்திய தமிழ், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலிருந்து பலரை மத்தியஸ்தத்துக்கு அழைத்துச் சென்று அவருடைய காதலின் உண்மையை பெற்றோரிடம் சொல்ல வைத்து மெல்ல மெல்ல, “ இந்தப் பையன் நிஜமாகவே நம் மகள் பால் அன்பு வைத்திருக்கிறான். பிடிவாதமாக இருக்கிறான்” என்று பெற்றோர் கண்டறிந்து அவர்கள் கல்மனம் கரைய ஒன்றரை வருடம் ஆயிற்று. 

கடைசியில் கல்யாணத்துக்கு சம்மதித்தார்கள். ஜூனிச்சி தாட்சாயினியை மணந்தார்.ஜப்பான் போவதற்கு முன் எங்களை வந்து சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். 

நான் ஜப்பானிய மொழியில் தமிழைக் கற்றுத் தரும் ஏசியன் இன்ஸ்டிட்யூட் புத்தகத்தை பரிசாக கொடுத்தேன். மனைவி வெள்ளியில் ஏதோ கொடுத்தாள்.

ஜப்பானிலிருந்து அந்தப் பெண் ஒரு சுவாரசியமான கடிதம் எழுதி இருந்தாள்.“ ஜப்பானில் விருந்தினரை வரவேற்கும் போதும், விடைபெறும் போதும் பயன்படுத்தும் சொற்கள் மிகவும் மதிப்பிற்குரியனவாக உள்ளன. மிகவும் அருமையான முறையில் தன்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.”இந்தப் பண்பாடுதான் ஜூனிச்சியின் அசாத்திய பொறுமையின் அடிப்படை.

விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளம் கடைசியில் கேட்குமே; அதுபோல ஒரு கேள்வி. இந்த காதல் கதையில் Man of the Match யார்?
என் விடை, அந்தத் தகப்பன் தான். 

மகனின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு, தயக்கமில்லாமல் பாஷை புரியாத தேசத்துக்கு வந்து, தஞ்சையில் அந்த நடுக்கூடத்தில் பொறுமையாக உட்கார்ந்து கொண்டு புன்னகை மட்டுமே செய்த அந்த தந்தை தான்.
======================
சுஜாதா, அவருடைய முதல் மகன் மற்றும் இரண்டாவது மகன், ஜப்பானிய மருமகள் மற்றும் பேரக் குழந்தையுடன்..

No comments:

Post a Comment