Saturday, February 13, 2021

60 அமெரிக்க நாட்கள்

 என்னுடய டயரியின் இன்றைய பக்கங்கள்.                                                { 31 \ 2021 }
                                                             60 அமெரிக்க நாட்கள்
                                                                     < சுஜாதா >
எல்லோருமே அமெரிக்காவில் அறுபது நாட்கள் என்றுதான் தலைப்பிடுவார்கள். இவர் மட்டும் 60 அமெரிக்க நாட்கள் என்று பெயரிட்டுளார். அதுதான் சுஜாதா. சமீபத்தில் முக நூலில் அபி புக்ஸ் 15% விலை தள்ளுபடியில் கிடைக்கும் என்று அறிவித்த புத்தகப் பட்டியலில் என்னிடம் இல்லாத இரண்டு சுஜாதா புத்தகங்களையும் ந.முத்துகுமாரின் கிராமம் பெருநகரம் ஆகிய மூன்று புத்தகங்களையும் ₹ 280 ஐ கூகுள் பே மூலமாக செலுத்தி அங்கு ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பதினைந்து நாள் தாமதமாக இன்று வந்து சேர்ந்ததும் முதல் காரியமாக ஒரே மூச்சில் படித்து முடித்ததும் , உடனடியாக இந்தப் புத்தகம் பற்றி யாருடனாவது பகிரவேண்டும் என்ற உந்துதல் ( urge ) காரணமாக எழுதப்பட்டது.

அறுபது வருடங்களுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கேயே குடிஉரிமைப் பெற்று தங்கிவிட்ட என் அப்பாவின் கசின் முதல் இப்பொழுது அங்கே பணிபுரிந்து கொண்டிருக்கும் என் கசின்களின் மகன்கள், பெண்கள் வரை பலர் மூலமாக அமெரிக்காவைப் பற்றிய செய்திகளைக் கேட்டு வியந்து போயிருக்கின்றேன். சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற புத்தகத்தை பல முறை படித்து ஆமெரிக்க வாழ்க்கையை மானசீகமாய் வாழ்ந்து கூட பார்த்திருக்கிறேன்.ஆனால் இந்த புத்தகம் அமெரிக்காவைப் பற்றி மிக நுணுக்கமாக , அவருக்கே உரித்தான நகைச்சுவையோடு சொல்லப் பட்டுள்ளது. அதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் சில.

1. நான் அமெரிக்கா செல்வது இது ஐந்தாவது தடவை.பெருமைக்காக சொல்லவில்லை. அமெரிக்காவில் வத்த குழம்பு எங்கே கிடைக்கும் என்பது போன்ற நாக்கு தேடல்கள் இதில் இருக்காது என்ற சந்தோஷ சமாசாரத்தை தெரிவிக்கவே இத்தகவல்.

2. “நான் அடுத்த மாசம் அமெரிக்கா போறேன் சார். அப்படியா என் கசின் அமெரிக்காவில்தான் இருக்கின்றான்.கனெக்டிவ் கட்டில் ,கொஞ்சம் கை முறுக்கு, கொஞ்சம் ஊறுகாய் ,கடலை உருண்டை எடுத்து போறிங்கீர்களா? “ 
நான் செல்லும் இடம் கலிபோர்னியா. அவர் சொல்லும் இடம் கிழக்கு கடற்கரையில் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளது. அமெரிக்கா செல்பவர்கள் அட்லஸ் புத்தகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவையும் அந்த ராட்ஷச பிரதேசத்தையும் ஒப்பிட்டுக் கொள்வது நலம். மேலும் இது போன்ற ஐட்டங்கள் அமெரிக்காவில் எளிதில் கிடைக்கும் . லக்குபாய் பார்த்தா என்பவர் இது போன்ற ஊறுகாய்  விற்றே நரசிம்மராவ் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் அளவுக்கு உயர்ந்துவிட்டார் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம்.

3. பெரியாரை வியத்தலும் நலமே.என்கின்றது புறநானூறு. அமெரிக்காவில் அத்தனையையும் வியந்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

4.அமெரிக்கா செல்பவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
மாணவர்கள். ஜி.ஆர்.இ  டோபல் மார்கமாக செல்பவர்கள். இவர்களுக்கு அமெரிக்கா செல்லும்             அத்தனை வழிகளும் பனிரெண்டாம் வயதிலேயே அத்துப்படி.
மாமிகள்.தத்தம் பெண்களுக்கு பிரசவத்துக்கு செல்லும் ரசப்பொடி , சாம்பார் பொடி , கிராண்ட் 
ஸ்நாக்ஸ் தட்டை , அம்பிகா அப்பளம் , முறுக்கு மாமிகள் .
என்னைப் போன்ற  அறுபது நாள் ஆசாமிகள்.
கம்ப்யூட்டர் புரோக்ராம் எழுதச் செல்பவர்கள் பாடி ஷாப்பிங் என்கின்ற இந்த பெயரில்                செல்பவர்கள் . ( இவர்கள் ஏன் அங்கு செல்ல விரும்புகின்றார்கள்? இவர்கள் ஏன் அங்கு விரும்பப்படுகின்றார்கள் என்பதை சுஜாதா விளக்கமாய் எழுதுகிறார் ) 

5. எந்த குடும்பத்திலுமே ஒரு வெங்கட்டோ அல்லது சுரேஷோ அமெரிக்காவில் சாப்ட்வேரில் இருப்பார்கள். சாப்ட்வேர் என்பது ‘ தமிழ்’ என்பதைப்போல ஒரு பொதுவான வார்த்தை.

6. இவர்களை நான் ரெசிடென்ட் இந்தியன்ஸ் என்று சொல்வதைவிட நான் ரிடர்னிங் இந்தியன்ஸ் என்று சொல்லலாம்.   

7. அமெரிக்கா போகாமல் அமெரிக்காவை கொண்டுவரும் சாகசம் இப்பொழுது இண்டெர்னெட் மூலம் நடந்து வருகின்றது. நெட் ஒர்க் கம்யூட்டிங் மூலமாக உங்கள் டிவி பெட்டியை இணைத்துக் கொண்டால் இண்டெர்னெட் என்னும் ராக்‌ஷச இணைப்பில் தொத்திக் கொண்டு எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் பொருட்களையும் பார்த்து தேர்வு செய்ய முடியும். பெண் பார்க்க முடியும். உங்கள் இதயத்துடிப்பையும் எக்ஸ் ரேவையும் அனுப்பி வைத்து சிறந்த டாக்டர்களின் அபிப்ராயாத்தை பெற முடியும். ( இங்கு நெட் ஒர்க் கம்யூட்டிங் பற்றி விவரமாக எழுதியுள்ளார் )
8. விமானப் பயணம் பற்றி சுஜாதா.

விமானப் பயணம் ஆசாமியை முற்றிலுமாக கலைத்துவிட்டாலும் வினோதமான காட்சிகளுக்கு பஞ்சமில்லை. இரட்டைக் குழந்தைகளோடு தனியே பயணிக்கும் ஒரு பஞ்சாபி பெண். மாற்றி மாற்றி ஒரு குழந்தை அழுகின்றது. மற்றது அழுகையை வேடிக்கை பார்க்கின்றது. ஒரு அட்ச்சரம் ஆங்கிலம் தெரியாமல் எம்பார்கேஷன் கார்டை வெறித்துப் பார்க்கும் சீன கிழவன். The complete Book of Suicide என்னும் புத்தகத்தை மர்ம நாவல் போல படிக்கும் சீன பெண்.  புன்னகையோடு பதிலளித்து உடன் இறுகும் ஆறடி ஹோஸ்டஸ்...

9. மைக்ரோ சாப்ட். பில்கேட்ஸ் அமெரிக்க ஜனாதிபதியை விட சக்தி வாய்ந்தவர்கள்.எவ்வளவு பணக்காரர்? மைக்கேல் ஜார்டன் என்னும் கூடைப்பந்து ஆட்டக்காரர். ஒரு ஆட்டத்துக்கு மூன்று லட்சம் டாலர் பண்ணுகின்றார். முப்பது நிமிடங்கள் ஆடினால் மூன்று லட்சம் டாலர். ஒரு நிமிடத்துக்கு பத்தாயிரம் டாலர். ஒரு நாளைக்கு சராசரியாக 1,78, 100 டாலர் சம்பாதிக்கின்றார்.  அவர் சம்பாதிப்பதில் ஒரு டாலருக்கு ஒரு பைசா உங்களுக்குத் தந்தால் வருடத்துக்கு 63,000 டாலர் உங்களுக்கு கிடைத்து நிம்மதியாக வாழலாம். இவர் பில்கேட்ஸ் அளவுக்கு சம்பாதிக்க இன்னும் 270 வருடம் ஆகுமாம் ! இந்த மாதிரி கண்ட மேனிக்கு பணக்காரராகும் சாத்தியம் அமெரிக்காவில் மட்டுமே இருக்கிந்றது.

10. நம் நாட்டவர்  யாரும் பில்கேட்ஸ் அளவு பணம் சம்பாதிக்க முடியுமா என்பது சந்தேகமே.இவர்கள் குறிக்கோள் எல்லாமே வருஷத்துக்கு நாற்பதாயிரம் முதல் ஒரு லட்சம் சம்பாதிக்கும் கோஷ்ட்டியில்தான் இருக்கின்றார்கள்.டாக்டர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கின்றார்கள் . ஆனால் செலவு அதிகம். ( இன்சூரன்ஸ் ) அமெரிக்க இந்தியர்களின் குறிக்கோள் ஒரு வீடு, இரண்டு கார், அரை டஜன் கிரெடிட் கார்டுகள் , அமெரிக்காவில் பிறந்த ஒன்றிரெண்டு குழந்தைகள் . கொஞ்சகாலம் கம்பெனிக்கு உழைத்துவிட்டு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பித்து விடுவது. இங்கு பிறந்த குழந்தைகளுக்கு சொந்த நாட்டின் கதவுகள் பிறக்கும் பொழுதே மூடப்பட்டு விடுகின்றன. 

11. இந்திய பாக்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஐபிஎம் , ஆரகிள் போன்றவற்றில் உயர்பதவிகளில் இருப்பதை பார்க்க முடிகின்றது. பொதுவாக ஐபிஎம் ,எச்.பி போன்றவற்றில் இவர்களுக்கு ஒரு கண்ணாடி விட்டம் உள்ளது என்கின்றார்கள்.(Glass ceiling ) இதற்கு மேல் அவர்களால் உயர முடியாது. ஆசைப்படவும் முடியாது.  

12. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்க உச்சரிப்பில்தான் பேசுகின்றார்கள். இங்கே வந்தவுடன் தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொள்ளும் அவசரத்தில் இருக்கின்றார்கள். ஆனால் தோற்றம் எளிதில் காட்டி கொடுத்துவிடுகின்றது.

13. அமெரிக்காவின் குறுக்கே பறக்க ஆறு மணி நேரம் ஆகிறது. சான்ஸ்பிரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் வருவதற்குள் இரண்டு மணி நேரம் கடிகாரத்தை தள்ளி வைக்க வேண்டி இருக்கின்றது.

14.புதுப்பிக்கபட்ட சுதந்திர தேவி சிலைக்கு முன்னாள் அமெரிக்கா வந்ததற்கு சாட்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டேன். டைம்ஸ் பத்திரிக்கை எப்பொழுதும் போல குண்டாக இருக்கின்றது. தூக்கினால் இடுப்பு பிடித்து கொள்கின்றது வரும் செப்டம்பரில் இதற்கு நூறு வயது.அந்த சிறப்பு மலரில் தலாய் லாமா உட்பட 100 பேர் கட்டுரை எழுதுகின்றார்கள்! 

15. சராசரி அமெரிக்க பெண் என்பவள் எப்படி இருப்பாள் என்பதை டைம்ஸ் பத்திரிக்கை ஆராய்ச்சி செய்துள்ளது. அவள் பெயர் லோரி லுகாஸ்.வயது 35 இரண்டு முறை டிவோர்ஸ் ஆனவர். அமெரிக்காவின் புற நகர் பகுதியில் வசிப்பவர். இப்போது அடுத்த கல்யாணத்துக்கு முன்னேற்பாடாக தன் வருங்கால கணவருடன் , தன் பதிமூன்று வயது மகனுடன் வசிக்கின்றார். குடும்ப வருமாணம் ஆறாயிரம் டாலர். ( இவர்கள்தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவை நிர்ணயிப்பவர்களாய் இருக்கின்றார்கள் ) 

16. தேர்தலில் இவர்களது வாக்குச் சீட்டு எப்படி இருக்கும் என்ற சாம்பிள் கொடுத்தார்கள். முன் பக்கமும் பின் பக்கமும் நெருக்கமாக ஒரே சீட்டில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, செனட் காங்கிரஸ், சுப்ரீம் கோர்ட் நீதிபதி என பத்து பதவிகளுக்கான பெயர்கள் ஒரே ஒரு ஓட்டு சீட்டில் தேர்ந்து எடுக்கின்றார்கள். 

17. மற்றொரு முக்கியமான வசதி .உங்களுக்கு யாரையும் பிடிக்காமல் போனால் உங்களுக்கு பிடித்தமானவர் பெயரை எழுதி அவர்களுக்கு வாக்களிக்கலாம்.( அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரம்பாவுக்கு ஓட்டளிக்கலாம் என்று குறும்பாக குறிப்பிடும் சுஜாதா அதை சீரியஸாக எடுத்து கொண்டு ஒருவர் இவரை தொடர்பு கொள்ள , அவர்கள் அமெரிக்க பிரஜையாகவும் , தேர்தலுக்கு ஐம்பத்து ஆறு நாட்களுக்கு முன் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றார்.

18. அமெரிக்க டிவிகள் , ஜனாதிபதி தேர்தல்,விளம்பரங்கள் , கார்ப்பரேட் தந்திரங்கள் என்று பல விஷயங்களைப் பேசும் சுஜாதா கடைசியாக முடிவாக சில வார்த்தைகள் என்ற பகுதியினை மிக சிறப்பாக எழுதியுள்ளார். அமெரிக்காவில் வாழபோகும் ஆண்களும் பெண்களும் பெற்றது என்ன இழந்தது என்ன என்பதைப் படிக்கும் பொழுது மனம் வலிக்கின்றது. குறிப்பாக பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சிரமங்கள் என்ன எனபதைப் பற்றி சொல்லிவிட்டு புத்தகத்தின் கடைசி வரிகளாக
“உங்கள் கணவருக்கு திடீரென்று ஞானோதயம் வரலாம் . பேசாமல் இந்தியா திரும்பிவிட்டால் என்ன என்று. அந்த தப்பை மட்டும் செய்து விடாதீர்கள். காரணம் இத்தனை அவ்லங்களுக்கு இடையே பெண்ணாக பிறந்துவிட்ட உங்களுக்கு அமெரிக்க வாழ்வு ஒங்கிருப்பதை விட சிறப்பானதே”

எப்படி அமெரிக்கா பிரமாண்டமானதோ அப்படியே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷ்யங்களும்விசாலமானது. முழுதுமாய் சொன்ன திருப்தி எனக்கு இல்லை. முன்பே படித்தவர்களை மீண்டும் படிக்க செய்வது,  இதுவரை படிக்காதவர்கள் தேடிப்பிடித்து படிக்கவும் செய்ய என் சிறு முயற்சி இது.

உயிர்மெய் பதிப்பகம் வெளியிடு.விலை ₹65. தபால் செலவுதனி
அபி புக்சில் 15% தள்ளுபடியில் கிடைக்கும்.
சாரதி
29/01/2021.

No comments:

Post a Comment