108 திவ்யதேசங்கள் - பதிவு 61 🌹🌹🌹
உலகைக் காக்கும் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு சேவையில் அருள்பாலிக்கும் அற்புதத் திவ்யதேசம்.
அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோவில் :-
திருநீர்மலை.
108 திவ்யதேசங்களில் நான்கு திவ்யதேசங்களை தரிசித்த பலன் ஒருங்கே கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம் இந்த திருத்தலம். திருமால் இத்தலத்தில் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
🌺🌺 நான்கு கோலங்கள் :-
நின்றான் - நீர்வண்ணன் - நின்ற திருக்கோலம்
கிடந்தான் - அரங்கநாதன் - சயனத் திருக்கோலம்
நடந்தான் - திரிவிக்கிரமன் - உலகளந்த திருக்கோலம்
திருமால் 108 திவ்யதேசங்களிலும் இந்த நான்கு திருக்கோலத்தில் மட்டுமே காட்சி கொடுக்கிறார். இத்தகு சிறப்பு வாய்ந்த காட்சியாக நான்கு மூர்த்திகளையும் ஒருங்கே காணக் கிடைப்பது புண்ணியம் நிறைந்த ஒன்றாகும்.
மூலவர்: நீர்வண்ணன்
தாயார்: அணிமாமலர் மங்கை தாயார்
உற்சவர்: நீர்வண்ணன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அணிமாமலர்மங்கை ஸமேத ஸ்ரீ நீர்வண்ணன் ஸ்வாமிநே நமஹ.
ஊர்: திருநீர்மலை, தோயாத்ரி.
🌺🌺 மலைக்கோவில் - கிடந்தான்:-
மூலவர்: அரங்கநாதர் சுவாமி
தாயார்: அரங்கநாயகி தாயார்
கோலம்: சயனத் திருக்கோலம்
திசை: தெற்கு
உற்சவர்: அரங்கநாதர் சுவாமி
🌺🌺 நடந்தான்:-
மூலவர்: திரிவிக்ரமன்
கோலம்: நடந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
🌺🌺 இருந்தான் :-
மூலவர்: சாந்த நரசிம்மர்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: தோயகிரி விமானம்
தீர்த்தம்: மணிகர்ணிகா தடாகம்
🌺🌺 திருநீர்மலை :-
திருநீர்மலை திருத்தலத்தில் மூலவர் "அருள்மிகு அரங்கநாதர்" மலையின் மீதும் உற்சவர் "அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள்" மலை அடிவாரத்திலும் எழுந்தருளியிருக்கிறார்கள். இங்கு அரங்கநாதர் சுவாமியே முதல் மூர்த்தியாக விளங்குகிறார்.
🌺🌺 தலவரலாறு:-
"பூலோக வைகுண்டம்" என்று போற்றப்படும் திருவரங்கம், அருள்மிகு அரங்கநாதர் சுவாமியை தரிசிக்க எண்ணிய "பிருகு முனிவர்" மற்றும் "மார்க்கண்டேய முனிவர்" நீர் சூழ்ந்த இம்மலையின் மீது நீண்ட காலம் தவம் செய்தனர்.
அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய திருமால் "போக சயனத்தில்" அருள்மிகு அரங்கநாதர் திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார்.
நீர் சூழ்ந்த மலை என்பதால் இவ்விடம் "நீர்மலை" என்றும், திருமால் வந்து அவதரித்த மலை என்பதால் "திருநீர்மலை" என்றும் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.
பழங்காலத்தில் இவ்வூர் தோயாசம், காண்டவனம், மலை தோயாத்ரி சேத்திரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது.
🌺🌺 அரங்கநாதர் தரிசனம்:-
அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மலை மீது தெற்கு முகம் நோக்கி கோவில் கொண்டு அருள்கிறார். அவர் காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இவர்களை சேவித்த வண்ணம் பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆலய முகப்பில் இருக்கின்றனர்.
திருமகளான இலட்சுமி தாயார் "அருள்மிகு அரங்கநாயகி தாயார்" என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி தனிச் சன்னதி கொண்டு அருள்கிறார்.
சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இம்மலையின் மீதுள்ள பெருமாளை தரிசிக்க நாம் 200 பபுபிகளைக் கடந்து செல்ல வேண்டும்.
🌺🌺 அருள்மிகு சாந்த நரசிம்மர் :-
இங்கு அருள்மிகு நரசிம்ம சுவாமி பால நரசிம்மராகக் காட்சி தந்து அருள்கிறார். அழகிய வடிவத்தில் வீற்றிருந்த கோலத்தில் (அமர்ந்த கோலத்தில்) கிழக்கு நோக்கி தனி சன்னிதியில் அருள்கின்றார்.
🌺🌺 அருள்மிகு திரிவிக்கிரமன்:-
அருள்மிகு திரிவிக்கிரமன் இடது காலை உயர்த்தி உலகத்தை அளக்கும் வாமன அவதாரத்தில் சேவை சாதிக்கிறார். அருள்மிகு திரிவிக்கிரமன் மிக கம்பீரமான தோற்றத்தில் கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதி கொண்டு அருள்கிறார்.
இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார் "நடந்தான்" என்று பாடுகிறார்.
🌺🌺 அருள்மிகு நீர்வண்ணன்:-
அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மலை அடிவாரத்தில் கிழக்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார்.
பெரும்பாலான கோவில்களில் கொடிமரம், பலிபீடம், கோபுரம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும்.
ஆனால் இங்கே கொடிமரமும், பலிபீடமும் இராஜகோபுரத்தை விட்டு சற்று விலகி தனியே அமையப் பெற்றுள்ளன. இராஜகோபுரத்திற்கு நேர் எதிரில் இராமபிரான் சன்னதி அமைந்துள்ளது.
அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் உடன் உறையும் இலட்சுமி பிராட்டிக்கு "அணிமாமலர் மங்கை தாயார்" என்பது திருநாமம். கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதியில் அருள்கின்றாள்.
🌺🌺 மங்களாசாசனம்:-
இங்கு பூதத்தாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 19 என 20 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளனர்.
"அன்றாயர் குலக்கொடி யோடனிமா மலர் மங்கை
யொடளப்பளாவி அவுணர்க்
கென்றானு மிரக்க மில்லாதவனுக் குறையு மிடமாவது,
இரும்பொழில் சூழ்
நன்றாய் புனல் நறையூர் திருவாலி குடந்தை
தடந்திகழ் கோவல் நகர்
நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம்
மாமலையாவது நீர்மலையே!!!"
- திருமங்கையாழ்வார்.
🌺🌺 சிறப்புகள் :-
பெருமாள் நின்றான், நடந்தான், இருந்தான், கிடந்தான் என்று நான்கு திருக்கோலத்தில் காட்சி தந்து அருளும் திவ்யதேசம்.
அரங்கநாதர் மலை மீதும், நீர்வண்ணன் அடிவாரத்திலும் காட்சி தந்து அருளும் திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி அணிமாமலர் மங்கை என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம் :-
தாம்பரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லாவரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் சென்றடைய போதிய போக்குவரத்து வசதிகள் உள்ளன.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோவில் - திருவிடவெந்தை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment