🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 62 🌹🌹🌹
ஸ்ரீதேவியான மகாலட்சுமி வைகுண்ட வாசனின் இடப்பக்க மார்பில் வாசம் செய்யக்கூடிய ஒரே திவ்யதேசம்.
வருடத்தில் 365 நாட்களும் (ஆண்டில் எல்லா நாட்களும்) திருமணம் நடைபெறும் சிறப்பான திவ்யதேசம்.
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோவில் :-
மூலவர்: லட்சுமி வராகப் பெருமாள்
தாயார்: கோமளவல்லி நாச்சியார்
உற்சவர்: நித்ய கல்யாணப் பெருமாள்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: கல்யாண விமானம்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்
நாமாவளி : ஸ்ரீ கோமலவல்லீ ஸமேத ஸ்ரீ நித்யகல்யாணாய நமஹ
ஊர்: திருவிடந்தை
🌺🌺 திருவிடந்தை:-
"வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு" என்று பெரியாழ்வார் போற்றிப் பாடியுள்ளார். அத்தகைய திருமகளை வலப்பக்கம் தாங்காமல் இடப்பக்கம் தாங்கி நிற்கும் ஒரே தலம் என்பதால் இத்தலம் அமைவிடத்திற்கு "திருஇடவெந்தை" (திரு + இட + எந்தை) என்று பெயர். காலப்போக்கில் அப்பெயர் மருவி திருவிடந்தை என்றானது.
🌺🌺 தலவரலாறு:-
சரஸ்வதி நதிக்கரையில் "குனி" என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரு கன்னிப்பெண் பணிவிடை செய்து வந்தாள். முனிவரின் காலத்திற்குப் பின் முதுமை அடைந்த அந்தப்பெண் தனக்கு முக்தி வேண்டி கடுந்தவம் செய்தாள்.
அதைக்கண்ட நாரதர் திருமண வாழ்வில் ஈடுபட்டு கன்னித்தன்மை நீங்கினால் தான் முக்தி அடைய முடியும் என்று அறிவுரை கூறினார்.
உடனே அப்பெண் வயது முதிர்ந்த காரணத்தால், தானாகவே வந்து யார் அவள் கரத்தைப் பற்றுகிறார்களோ, அவரையே திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்தாள்.
"காலவர்" என்ற முனிவர், அப்பெண் முதுமையானவள் என்றாலும் தெய்வீக அம்சம் கொண்டிருந்ததால் அவளையே திருமணம் செய்து கொண்டார்.
முனிவருக்கு, இறையருளால் ஒரே வருடத்தில் 360 பெண் குழந்தைகளைப் பெற்றுத் தந்துவிட்டு அவரது மனைவி முக்தி அடைந்தாள்.
அத்தனைப் பெண் குழந்தைகளை வைத்து காப்பாற்ற சிரமப்பட்ட முனிவர் இறுதியில் திருவிடந்தை வந்தார். இங்கு அருள்பாலிக்கும் அருள்மிகு வராக மூர்த்தியை வணங்கி கடுமையாகப் பிரார்த்தனை செய்தார்.
முனிவரின் பக்திக்கு மனமிறங்கிய பெருமாள் தானே மாப்பிள்ளையாக உருவெடுத்து தினம் ஒரு கன்னிகை வீதம் 360 நாட்களும் திருமணம் செய்து கொண்டார்.
பெருமாள் நித்தம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் "நித்ய கல்யாண பெருமாள்" என்ற திருநாமம் பெற்றார்.
தினந்தோறும் திருமணம் செய்து கொண்ட பெருமாள் கடைசி தினத்தில் 360 மனைவிகளையும் ஒரே பெண்ணாக மாற்றி தன் இடதுபக்க திருத்தொடையில் வைத்துக் கொண்டு வராகப் பெருமாளாகவே இன்றளவும் காட்சி தருகிறார்.
அவ்வாறாக 360 பெண்களும் ஒருவராக மாறிய நங்கைக்கு "அகிலவல்லித்தாயார்" என்பது திருநாமம். 360 பெண்களில் முதல் பெண்ணிற்கு கோமளவல்லி என்ற பெயர் இருந்ததால், இத்தலத்தில் தனிச்சன்னதி கொண்டுள்ள தாயாருக்கு "கோமளவல்லித் தாயார்" என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.
🌺🌺 வராஹ ரூபம் :-
திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸூமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டு தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர்.
அரக்கர்களுக்காக தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க பெருமாளைக் குறித்து இத்தலத்தில் தவமிருந்தான்.
தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராஹ ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.
அதனால் இங்குள்ள பெருமாள் வராக அவதாரத்தில் நமக்கும் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
🌺🌺 பெருமாள் ஒருவரே நாயகன் :-
இத்தலத்தை திருமங்கையாழ்வாரும், மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். நித்தய கல்யாணப் பெருமாளாக அருள்பாலிக்கும் இத்தல பெருமாளின் தாடையில் ஒரு பொட்டு இருக்கிறது.
திருஷ்டிப்பொட்டு போல இயற்கையாக அமைந்துள்ளது சிறப்பு. 360 கன்னியர்களை ஒரே பெண்ணாகச் செய்தமையால் அகிலவல்லி நாச்சியார், 360 கன்னிகையரில் முதல் கன்னிகைக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதன் அடிப்படையில் "நாமெல்லாம் நாயகி, பெருமாள் ஒருவரே நாயகன்" என்பதன் அடிப்படையில் இக்கோவிலின் தத்துவம் அமைந்துள்ளது.
இங்குள்ள பெருமாள் ஒரு திருவடியை பூமியிலும், மற்றொன்றை ஆதிசேஷன் மற்றும் அவரது மனைவியின் மீதும் தலை வைத்துக்கொண்டும், அகிலவல்லித் தாயாரை இடது தொடையில் தாங்கிக் கொண்டும் வராக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இத்தல பெருமானை மார்க்கண்டேயர் தரிசனம் செய்துள்ளார்.
🌺🌺 மங்களாசாசனம்:-
"திவளும் வெண்மதி போல் திருமகத் தரிவை
அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசை விடளால் குவளையங்
கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள்
நயந்திருந்த இவளை உன்
மணத்தா லென் நினைந்திருந்தாய் இடவெந்தை
யெந்தை பிரானே!!"
என திருமங்கையாழ்வார் 13 பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார்.
🌺🌺 சிறப்புகள் :-
வராக மூர்த்தியை முதல் மூர்த்தியாகக் கொண்டுள்ள திவ்யதேசம்.
நித்தம் ஒரு திருமணம் செய்கின்ற பெருமாள் நமக்காக அருளும் திவ்யதேசம்.
திருமகள் பிராட்டி கோமளவல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
திருமங்கையாழ்வார் 13 பாசுரம் பாடியருளிய திவ்யதேசம்.
🌺🌺 வழித்தடம்:-
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மாமல்லபுரம், பாண்டிச்சேரி (ECR Road) செல்லும் அனைத்து பேருந்துகளும் திருவிடந்தை வழியாகவே செல்லும்.
அருள்மிகு அகிலவல்லித்தாயார் திருவடிகளே சரணம்.
அருள்மிகு நித்யகல்யாணப் பெருமாள் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கோமளவல்லித்தாயார் திருவடிகளே சரணம்.
🌺🌺 நாளைய பதிவில்:-
அருள்மிகு தலசயனப் பெருமாள் திருக்கோவில் - திருக்கடல்மல்லை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.
"ஓம் நமோ நாராயணாய நம:!!!"
No comments:
Post a Comment