Saturday, August 15, 2020

சா சா சா

சா சா சா (சிறுகதைகள் சீ2 – 92)
#ganeshamarkalam

அதிர்ஷ்டம் செஞ்சவள்னுதான் சொல்லணும். வியர்த்து கொட்டர சென்னையில் குளுகுளு டப்பாவுக்குள்ளே இருக்கேன்னா? ஆயிரம் விளக்கு மேற்கு வாலஸ் தோட்டத்தில் பிரபல ஐஸ்க்ரீம் பார்லரில்.

பெரீய கண்ணாடி பேழையில், முன் வரிசை. அடுக்கு மாதிரி செஞ்சு டைட்டா நிரப்பி வச்சாச்சு. நேத்துதான். எனக்கு பேர்கூட வச்சிருக்கா. சொன்னா நம்பமாட்டேள். சா சா சா. இப்படி ஒண்ணு இங்கே கிடைக்கும், இந்த பார்லரின் சிக்னெசர் டிலைட்னு ToIஇல் அட்வெர்டைஸ்மென்ட், முழுப்பக்கத்துக்கு. இன்னைக்கு நிறைய பேர் வருவா. எனக்கு பக்கத்துலே எப்போவும் விக்கர சாக்கலேட் ப்ரௌனீ, பைன் ஆப்பிள் பாஷண், பீன் ஆன் பங்கனபள்ளி, ஸ்ற்றாசியாஸ்டெல்லா, இப்படி. பக்கத்து அடுக்கில் சாகோலேட் ஷோர்பெத் என்னையே பாத்துண்டு. அவன் கண்ணே சரியில்லை.

எங்க பார்லரில் இங்கேயே சாப்பிடன்னு 12 டேபிள், ஒவ்வொண்ணுலேயும் 4 சேர். என் இடம் அப்படி: நடக்கரது எல்லாத்தையும் பாக்கலாம். சுவாரஸ்யமா இருக்கும்.

வரவா பலபேர் ஜோடியாத்தான். இல்லை வயசானவா பேரக்குழந்தைகளோட. அபூர்வமா நடுத்தர வயசுக்காரா, தம்பதிகளாய். சண்டே பெர்த்டே பார்டி நடந்தது. குழந்தைகள் கும்மாளம் அத்தனை ரம்மியமா. ஜோடியா வரவா நிறைய நேரம் உக்காந்துட்டுப் போவா. ரெண்டு மூணு ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா ஆர்டெர் செஞ்சு அதை எத்தனை மொள்ள சாப்பிட முடியுமோ அத்தனை. ஐஸ்க்ரீமுக்காக வந்தாளா, இல்லை தனிமையைத் தேடி பேஸிண்டிருந்துட்டு போலாம்னா? ரெண்டும்தான். தன்னோட ஆளுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தந்தா மடிஞ்சுடுவான்னு பேசிண்டா. மடியறதுன்னா என்ன? ஐஸ்க்ரீம் சேண்ட்விச் சொல்லித்து. புரிஞ்சதும் வெக்கமா போச்சு.

சீசன்லே கிடுகிடுன்னு தீர்ந்துடுவேன். திரும்பவும் ரொப்பிடுவான். அது என்ன சா சா சான்னு கேப்பேளே! மெனுவில் பாக்கலையா?. “53.8% Callebaut chocolate ice cream layered with dulce de leche.” திண்ணை மெம்பெர்ஸுக்கு விளக்கமா சொன்னாத்தான் இப்பெல்லாம் புரியறது. வயசாகிடுத்தோனோ! 

காலேபௌ பிரபலமான பெல்ஜியன் சாக்லேட். அதை 53.8% கலந்ததா சொல்லியிருக்கு. பாதின்னு வச்சுக்கோங்கோ. இதெல்லாம் திகிடுதத்தம். இன்னும் 3.8% கலக்கணும், செய்யமாட்டா. ரெண்டாவதா சொல்லியிருப்பது கேரமல். துல்ஸே தெ லெச்சே. இதை விதவிதமா சொல்லுவா. தெற்கு அமேரிக்காவில் ஸ்பேனிஷ் பேசரவா சொல்ராப்புலே சொன்னாதான் சரி. பால், சக்கரை, சித்தே பேகிங்க் சோடா சேர்த்து பாகா காய்ச்சினா ஆச்சு.

சாக்லேட் ஐஸ்க்ரீம் ஸ்கூப் மேலே வரிவரியா துல்ஸே தெ லெச்சே ஊத்தினா சா சா சா. இது என்ன பெரீய விஷயம்? சாப்பிட்டுப் பாத்தா தெரியும்.

சௌம்யா லீவுன்னா ஒரு தத்தியை கவுன்டரில் பொடுவா. பேர் லாவண்யா, ஸ்டைலா ட்ரெஸ் செஞ்சுக்கும். துப்பட்டாவை அடிக்கடி தளர்த்தி விட்டுண்டு தன்கிட்டே மட்டும்தான் இருக்குங்கிரா மாதிரி. அது சா சா சா கேக்கரவாளுக்கு கப்பில் குச்சி ஸ்பூனை எடுத்து புத்தியில்லாம குத்தி வைக்கும். அப்படி செய்யவேப் பிடாது. தட்டில் கப் பக்கத்தில் ஸ்டயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூன்தான் வைக்கணும். இல்லைன்னா என்னோட சிக்னெசர் டேஸ்டே போயிடும்.

அன்னைக்கு லாவண்யாவுக்கும் பார்லர் முதலாளிக்கும் சண்டைன்னா சண்டை. நாங்க இருப்பது அப்போலோ ஆஸ்பத்திரி பக்கத்துலே. அங்கே வரவா நிறையபேர் இங்கே வருவா. பேஷன்டை பார்த்துட்டு மனசில் ஏற்படர கனத்தை குறைச்சுக்க. முட்டுச்சந்தில் பெரீய இடமா கிடெச்சதுன்னு இங்கே. எங்க பார்லருக்கு ஒருக்கா வந்தவா திரும்ப திரும்ப வரதை பார்த்திருக்கேன். அப்படி ரெகுலரா வர கஸ்டமருக்கு கேட்டதை விட்டுட்டு இவள் வேர ஒண்ணை தந்திருக்கா. இல்லாத ஒரு டாப்பிங்கை மேலே தூவி.

ஐஸ்க்ரீம் வியாபாரம் மீட்டா பான் மாதிரி இல்லை. எல்லாத்துலேயும் கொஞ்சம் அள்ளித் தூவரத்துக்கு.
பான் வாங்கரவா என்னத்தை வச்சு மடிச்சுத்தரணும்னு பாப்பா. டப்பா டப்பாவா வச்சிண்டு ஒவ்வொன்ணா தொறந்து போடுவான். அப்புரம் அடீலேந்து ஒரு டப்பாவில் குல்கந்து வச்சிருப்பான் அதையும் வெழுமூண ஒரு ஸ்பூன். இங்கே அப்படி கிடையாது. பேரைச் சொன்னா அதில் இன்னது இப்படித்தான் போடணும்னு இருக்கு. சா சா சாவில் கேரமெல்லை முதலில் போட்டு அதுக்கு மேலே ஐஸ்க்ரீம் ஸ்கூப் போட்டா அது நான் இல்லையாக்கும். 

கஸ்டமர் கம்ளைன்ட் செஞ்சுடனும்னே உக்காந்திருந்து அவர் வந்ததும் திட்டிட்டுப் போனான். வந்தா வழக்கமா 300ரூக்கு திம்பன். இனிமேல் வரமாட்டான். லாவன்யா நன்னா விசவு வாங்கிண்டா. “இப்படியே செஞ்சாயானா டேபிள் துடைக்கத்தான் லாயக்கு”. 

அன்னைக்கு வழக்கமா வரவா தவிற புதுசா ஒரு ஜோடி எங்கிட்டக்க இருக்கர டேபிளில் உக்காந்துண்டா. ஜோடிப் பொருத்தம் ஜோர். பையன் பேர் ராஜேஷ். அவள் சௌந்தர்யா. பெயருக்கேற்ற சௌந்தர்யம், சர்வ லக்ஷணமும் பார்த்தேன். அவனும் சோடையில்லை. பைக்குலே வந்திருக்கணும். கையில் ஹெல்மெட்.

என்ன வேணும்னு கேக்கரான். சொல்ரத்துக்கே டயம் எடுத்துண்டா. ரொம்ப நாழி யோசிச்சுட்டு “நீ எது வாங்கித்தந்தாலும் சரீ.” மெனு கார்டை வச்சிண்டு ஆராய்ச்சி. என்ன ஐஸ்க்ரீம்னு புரியாம – புரிஞ்சுக்கணும்னா ஆங்கிலம் மட்டும் பத்தாது, மின்னமே சொன்னாப்புலே  ஸ்பேனிஷ், ஃப்ரென்ச் இத்தாலியன் எல்லாம் வேணும். ட்யூடியில் சௌம்யா. டவுட் கேட்டா சொல்லுவா. 

இவன் மெனுவை வாங்கிக்க, இவன் கண் என்ன விலைன்னு போட்டிருப்பதில் மேய்ஞ்சது. சிலதின் விலை பாத்துட்டு இவன் மூஞ்சி போரதை இங்கேந்தே பாக்க சகிக்கலை. ஒரு நிமிஷம் வேர எங்கேயாவது போலாமான்னு யோசிக்கரான்னு பட்டது. கடைசீலே ரெண்டு ஐஸ்க்ரீம் சேன்ட்விச், மாங்கோ மில்க் ஷேக்கும்னு சொல்லிட்டு, “ஷேக் அப்புரமா தந்தாப்போரும்”.

இங்கேல்லாம் கேட்டதை உடனே செர்வ் செஞ்சுடப்பிடாது. அப்புரம் ரெண்டாம் தடவை வரமாட்டா. சித்தே நாசூக்கா டிலே செஞ்சு தரணும். யாருமே கடையில் இல்லைன்னாலும். அப்போதான் இதுகள் சித்தே சல்லாபிக்க டயம் கொடுத்தாப்புலே ஆகும். இருந்தாத்தானே இன்னும் வாங்குவா? கையேந்தி பவனா என்ன “சீக்கிரம் சாப்டுட்டு தட்டைக்கொடு அடுத்தவனுக்கு போடணுமா வேண்டாமா”ன்னு கேக்க?

ஆர்டர் செஞ்சது வரப்போ வரட்டும்னு ஒருத்தரை ஒருத்தர் காதலா பாத்துண்டா. “நாம முதல்ல மீட் செஞ்ச இடம் ஞாபகமிருக்கா?” இவ கேக்கரா. அவன், “இல்லாம! 13 மார்ச், தேர்ஸ்டே, 8 மாசம் முன்னாடி, பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவிலில். கரெக்டா?” பெருமிதத்தோட அவள் கையைப் பிடிச்சுக்கரான். இவள் ஃபீலிங்க்ஸோட தலையை “ஆமாம்”னு ஆட்ட அங்கே ஒரு சின்ன உணர்ச்சி பரிமாற்றம் நடந்தது. ஐஸ்க்ரீம் சாண்ட்விச் கொண்டுபோய் வச்சாச்சு.

“உன் வேலை எப்படி போயிண்டிருக்கு?” “வேலை முட்டி எடுக்கரது. பாஸ் கடுப்பேத்தரான். எக்ஸ்ட்ரா அவர்ஸ் செய்ய வேண்டியிருக்கு. அப்ரைசல் வேர அடுத்தமாசம். நல்லவேளை நீ ஐடீயில் மாட்டிக்கலை. தர சம்பளத்துக்கு 3மடங்கு பிழிஞ்சு எடுத்துடுவா”. இவள் “நேத்து என்ன நடந்தது தெரியுமா”ன்னு கேக்க, “சொல்லு”ன்னு ஆர்வமா குனிஞ்சு உக்காந்துக்கரான்.

டேபிளுக்கடீலே இவா முழங்கால் ஒட்டிக்கரது. ரவுண்ட் டேபிளில் இதெல்லாம் அழகா சாத்தியம். “நேத்து ஒரு ஃபங்க்ஷன். கல்யாண ரிசெப்ஷன். எங்க கம்பேனிதான் இவென்ட் மானேஜ்மென்ட். நாங்க 3 லேடீஸ். வாசல்ல ஒரு டாட்டூ போடரவனை உக்காரவச்சு குழந்தைகள் பெரியவான்னு ட்ரீட். டெம்பொரரிதான். நானும் ப்ரைடோட மெஹந்தி போட்டுண்டேன்.” காமிக்கரா. சிவந்த கரங்களில் இன்ட்ரிகேட் டிசைன். அதை பாக்கிர சாக்கில் அவள் கையைப் பிடிச்சு கிட்டே இழுத்து வச்சிண்டு அவ எதிர்பாக்காதபோது டக்குன்னு தன் உதட்டை அவள் உள்ளங்கையில் பதிச்சுட்டான். 

அவளுக்கு கையை வெடுக்குன்னு இழுத்துக்கணும்னு தோண அதே சமயத்தில் கொடுத்த கைகளை அவன்கிட்டேயே இருக்கட்டும்னும். அவனே வேண்டா விருப்பா விட, ரெண்டு பேரும் சாண்ட்விச் தீத்துட்டு ஷேக் சொல்லலாமான்னு யோசிக்க, இவள் மெனுவை திரும்ப எடுத்து சா சா சா வேணூம்கரா. அவன் உடனே “ஷேக்கை கான்சல் செஞ்சுட்டு சா சா சா வாங்கி ஷேர்?”

இவள் “சரீ”ங்க, “ஆர்டெர் கான்செல் செய்வாளா தெரியலையே”ன்னு சௌம்யாவை கூப்பிட. “இன்னும் ஷேக் பண்ணலை யூ கேன் சேஞ்சு!” இவள் பச்சைக்கொடி காட்ட. இவன் ஆர்டெர் செஞ்சுட்டு “ரெண்டு ஸ்பூன்”னு குறிப்பிட்டு சொல்ல நமுட்டுச்சிரிப்பு சிரிச்சிண்டே வரா. சௌம்யாவுக்கும் பாய்ஃப்ரெண்ட் இருப்பானோ? கையில் முத்தம் வைப்பானா?

வந்தவள் கண்ணாடிப் பேழையை தொறந்து நான் இருந்த அடுக்குக்குள் கைவிட்டு 3 ஸ்கூப் எடுத்து பெரீய கப்பில் வைக்கரா. தனியா கிண்ணத்தில் வார்மா துல்ஸே தெ லெச்சே வச்சிருக்கு. அதை போர் செய்யர கரண்டீலே எடுத்து அழகா என் மேல் வட்ட வட்டமா டிசைன் போடரா. என்ன நினைச்சாளொ, கொஞ்சம் ஜாஸ்தியாவே. எடுத்துண்டு போய் ரெண்டு ஸ்பூனோட அவா டேபிள்லே வச்சுட்டு வரா. “எஞ்சாய் யுவர் சாய்ஸ்”.

சித்தே நேரம் என்னையும் அவனையும் மாத்தி மாத்தி பாத்த சௌந்தர்யா, “உன்கிட்டே ஒண்ணு சொல்லணும்.” சொல்லுன்னு ராஜேஷ் ஒரு ஸ்பூனில் என்னை ஸ்கூப் செஞ்சு அவள் உதட்டுக்கு கிட்டே கொண்டு போய், அவள் வாயை ஆசையா தொறக்கரச்சே தன் வாயில் போட்டுண்டுடரான். “சாரி சாரீ”ன்னுட்டு இந்தான்னு அவளுக்கும் தரான். “சொல்லு என்னமோ சொல்லணும்னியே!” 

“ஐ ஏம் ப்ரெக்னென்ட், த்ரீ மந்த்ஸ். நேத்து கன்ஃபெர்ம் ஆகிடுத்து. சீக்கிரம் நாம கல்யாணம் செஞ்சுக்கணும். ஏதாவது செய். என்னை ஏமாத்திட மாட்டாயே?”

அடுத்த ஸ்பூனை எடுத்தவன் அதை அப்படியே திருப்பி வச்சுட, முகம் பேயரைஞ்சா மாதிரி. “நான்தான் அவசரப்பட்டா நீயாவது வேண்டாம்னு சொல்லப் பிடாதா? புரொடெக்ஷன் இல்லாமலே எல்லாம் நடந்துபோச்சு. ரெண்டு தடவை. சே! இப்போ வந்து சொல்ர! கல்யாணமெல்லாம் முடியாது. எந்த டாக்டர் கிட்டே போனாய்? அங்கேயே போ, ஹெல்ப் செய்வா.” 

அதிர்ந்து போரா அவள். சௌந்தர்யம் எங்கே காணாமப் போச்சு? “நீயும் வரையா? எனக்கு பயமா இருக்கு.” “சரி அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டு கூப்பிடு. நல்ல மூடில் இருக்கலாம்னு வந்தா இப்படி கெடுத்துட்டேயே!” பர்ஸை தொறந்து டக்குன்னு பில்லை கட்டினான். 

“எனக்கு முக்கியமான வேலை இருக்கு, போயே ஆகணும். நீ இதை சாப்டுட்டு ஓலாவுலே போயிக்கோ.” கிளம்பிட்டான். அம்போன்னு விட்டுட்டு போனவனை கழுத்தை வளைச்சு பாத்தவள் சித்தே கழிச்சு என் பக்கம் திரும்பரச்சே கண்களில் நீர் கோத்துண்டு. கண்ணீரோட என்னை பாத்தா பெல்ஜியம் சாக்லேட்டும் ஸ்பேனிஷ் காரமெல்லும் அளைஞ்சுவிட்டா மாதிரி தெரிஞ்சிருக்கும். அதான் என்னை தொடவேயில்லை.

அவள் கண் கரைஞ்சா மாதிரி நானும் கப்பில் யாரும் சீண்டாம உருகிப்போனேன். நிசப்தமா ஆகிப்போன ஐஸ்க்ரீம் பார்லருக்குள்ள ஏதோ பாத்திரம் கழுவரப்போ கை நழுவி கீழே விழர சத்தம் மட்டும் திடீர்னு கொடூரமா கேட்டது.

No comments:

Post a Comment