Friday, August 21, 2020

இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா

இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டு வரவேண்டியதுதானே!"

ஒரு கணவன்-மனைவி காஞ்சிபுரம் சென்று பெரியவாளை பார்க்கக் கிளம்பினர். பஸ் ஏறும் முன், கணவன் தான் போய் பெரியவாளுக்குப் பிடித்த மலைப்பழம் வாங்கிண்டு வரேன்னு ஒரு பக்கம் போனார் .பஸ் கிளம்பும் நேரம் வரை சென்றவர் வந்த பாடில்லை.

கண்டக்டர் காத்திருக்க மாட்டேன் என்று விசில் கொடுத்துவிட்டார். நல்ல வேளையாக போனவர் ஓடிவந்து பஸ்ஸைப் பிடித்து விட்டார்.

உட்கார்ந்த கணவனை மனைவி "நன்னா போனேள்!" என்று தொடங்கி கோபித்துக் கொண்டார்."நல்ல பழமா கிடைக்கணுமேன்னு தேடிண்டு போனேன். நாழியாயிடுத்து!" என்று சமாதானம் செய்கிறார்

"ஆமாம் ! இதைத்தான் பெரியவா சாப்பிடப்போறாரா! ஏதோ கிடைத்ததை வாங்கிண்டுவரவேண்டியதுதானே!" என்று கூறினார்.

காஞ்சி மடத்தில் ஒரே கூட்டம்.அருகே போக முடியவில்லை. பழம் நசுங்கிவிடும் என்று தட்டோடு தலை மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு ஒருவர் நிற்பதைப் பெரியவா பார்த்து விடுகிறார்.

"அவரை முதலில் கிட்டே வரச்சொல்லு!" என்கிறார்.

மலைப்பழம் வாங்கி வந்தவர்தான் அவர் என்று சொல்லவும் வேண்டுமோ?

எனக்குப் பிடித்த மலைப்பழம் வாங்கி வந்திருக்கயோ?" என்று சந்தோஷமாக வாங்கிக்கொண்டு உடனே ஒரு பழத்தை உரித்துச் சாப்பிட்டார்.பின்னர் அந்த அம்மாவை ஒரு பார்வை பார்த்தார் .குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க அவர் அழவே ஆரம்பித்து விட்டார்.

அவரோ (பெரியவாள்) இன்னொரு பழத்தை அந்த அம்மாவுக்கே பிரசாதமாகக் கொடுத்தார்.

கணவனை விட்டுவிட்டு மனைவிக்கு ஏன் கொடுத்தார் என்றால், அதுதான் பெரியவா. பெரியவாளுக்குப் பிடிக்குமே என்று பழத்துக்காக அலைந்து வசவு வாங்கிக் கொண்ட உண்மை பக்தர் கணவன்.மனைவி சற்று மேம்போக்காக இருந்தவர்.

பெரியவா பிரசாதம் அவரையும் பக்தர் கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

ஜய ஜய சங்கர*
ஹர ஹர சங்கர

No comments:

Post a Comment