Tuesday, August 18, 2020

மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 28

மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 28

[ஸ்வாமிநாதனுக்கு பரமகுருவின் நயன தீக்ஷை, வெத்தலை, அம்பாளின் ஞானப்பால், கன்யாகுரிச்சி, சங்கிலி திருட்டு, பிள்ளையார் சிலை வேணும், பாமதியும் பரிமளமும், மாமரம் காய்க்கணும், ஶ்ரீ முரளீதர ஸ்வாமிகள், ஸ்ருங்கேரி ஶ்ரீ சந்த்ரஶேகர பாரதி ஸ்வாமிகள், மந்த்ராலயம் போகணும்]


1906-ல் ஸ்ரீ காமகோடி பீடத்தின் 66-வது ஆச்சார்யாளான ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திண்டிவனம் தாலுக்காவிலுள்ள பெருமுக்கல் என்னும் க்ராமத்தில் சாதுர்மாஸ்ய வ்ரதம் அநுஷ்டித்தார். நான்கு மாஸங்கள் அங்கு தங்கி, பெருமுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தையே தெய்வீகமயமாக்கினார்.

திந்திடிவனம்…என்பதுதான் திண்டிவனம் என்றானது. திந்திடி வனம் என்றால் புளியமரக் காடு. இந்த புளியங்காட்டிலிருந்துதான், கற்பகவ்ருக்ஷமான பாலன் ஸ்வாமிநாதனை கண்டெடுத்தார்!

Tamarind-ன் மூலச்சொல் திந்திடி….

திண்டிவனத்தில் இருந்த ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள், பெரியவாளை தர்ஶனம் செய்ய, குடும்ப ஸஹிதம் பெருமுக்கல் சென்றார்.

[இதோ! பெற்றுக்கொள்ளுங்கள் தங்களுடைய ஸன்யாஸ வாரிஸான தங்கள் பேரனை! என்று ஸ்வாமிகளிடம் ‘தத்தம்’ செய்ய]

அப்போது ஸ்வாமிகள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வரரையும், மஹா த்ரிபுர  ஸுந்தரியையும் ஆராதனை செய்து கொண்டிருந்த ஸமயம். பூஜை நடந்து கொண்டிருந்தது. ஸ்வாமியையும், அம்பாளையும் பனித்த கண்களால் பார்த்து பார்த்து பூரித்து, அவர்களுடைய அனுக்ரஹத் தேனை அருந்திக் கொண்டிருந்த ஸ்வாமிகள், அங்கிருந்த பக்தர்கள் மேல் அந்த அம்ருத தாரையை அள்ளித் தெளிக்க திரும்பியவரின் பார்வையில், அதே ஸ்வாமியும் அம்பிகையும் ஒன்றான திருக்கோலத்தில், ஸ்வாமிநாதன் என்ற பன்னண்டு வயஸ் பாலகன் தென்பட்டுவிட்டான்!…..

அவ்வளவுதான்! தன் திருநயனங்களில் அதுவரை தேக்கி வைத்திருந்த அத்தனை அம்ருத தாரையையும் அந்தக் குழந்தை மேல் அப்படியே வர்ஷித்துவிட்டார்!

நடக்கவிருக்கும் மஹோன்னதமான பீடாதிபத்யத்துக்கு, இது ‘அங்குரார்ப்பணம்’ என்பதை யாருமே அறியாதபடி, அவ்வளவு எளிமையாக ஸ்வாமிநாதனுக்கு அமோஹ வைபவமாக நடந்து விட்டது…… பரமகுருவின் நயன தீக்ஷை!

 image image
பூஜை முடிந்து ஸ்வாமிகள், ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகளிடம் பேசினார். அப்பாவின் பக்கத்தில் நின்று கொண்டு, ‘குறுகுறு’வென்று ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமிநாதனை அழைத்துப் பேசினார்.

அதன்பின் ஸ்வாமிநாதனிடம் மட்டுமே ஜாஸ்தி பேசிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் அங்கேயே தங்கியதால், ஸ்வாமிநாதனை பல தடவை தனியாக அழைத்துப் பேசினார் அந்த ஜகதாச்சார்யன்…!

“எனக்கு பரமகுருவைப் பாத்தப்போ, மத்த மனுஷ்யாளை பாக்கறாப்ல இல்ல…! ரொம்ப பெருஸ்..ஸா ஒத்தர்-ங்கற feeling உண்டாச்சு! அதுமட்ல, யார்கிட்டயும் உண்டாகாத மர்யாதை உண்டாச்சு…! மஹான்கள், ஞானிகள்-னு ஸ்வாமியோடயே.. வெச்சு நெனக்கறா மாதிரி, அதுவரைக்கும் கதைகள், புராணங்கள்ளதான் கேட்ருந்தது. ட்ராமால பாத்துருந்தது. இப்பத்தான்… அப்டி ஒத்தரை நேர்லயே பாக்கறோம்னு தோணித்து! கதை கேட்டப்பவும், ட்ராமா பாத்தப்பவும் உண்டாகாத ஒரு மர்யாதையும் உண்டாச்சு!….

அந்த மர்யாதை ஒரு பக்கம், அதோட, என்னமோ ஒரு ப்ரியம்! அவர் அவ்ளோ….. பெரிய்யவர்! நா… எவ்ளோ சின்னவன்-னாலுங்கூட, “இந்த மஹான் நமக்கு ரொம்…ப வேணுங்கப்பட்டவர்”-னு ஒரு feeling…! ஏதோ தர்ஶனத்துக்கு வந்தோம்-போனோம்-ன்னு இல்லாம, அவரோடவே இருந்துடறதுக்கு மனஸு ரெடி-யாயிடுத்து! அப்டி ஒரு ப்ரியம்!…..”

இப்போது நாம் பெரியவாளோடயே இருந்துட மாட்டோமா? என்று ஏங்குகிறோம். ஆனால் அப்பேர்ப்பட்ட பெரியவாளையே ஆகர்ஷிச்ச அவரோட பரமகுரு, எப்படி இருந்திருக்கணும்!

பெரியவா என்று இன்று….. அவரை இந்த லோகமே கொண்டாடி வணங்குவதற்கு, அவர் எத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் என்பதற்கு சில ஸம்பவங்களை ரஸிப்போம்….

மதுரை ஸேதுபதி ஹைஸ்கூலில் பெரியவா முகாம்.

பெரியவாளை தர்ஶனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தார்கள். பெரியவா அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில், ஒரே ஒரு வெற்றிலை தரையில் கிடந்தது. அது பெரியவா கண்களுக்கு மட்டும் வெறும் வெத்து இலையாகப் படாமல், உயிர் இலையாகப் பட்டது! பகவத் ஸ்ருஷ்டியில் ஒரு சின்ன வஸ்து கூட மாபெரும் கார்யத்தை செய்யும் ஶக்தி படைத்தது.

“இந்தா…. அங்க கெடக்கு பாரு! அந்த வெத்தலைய எடுத்து பத்ரமா வெச்சுக்கோ!”

பாரிஷதர் தன் வேஷ்டி மடிப்பில் அந்த வெற்றிலைக்கு இடம் கொடுத்தார்.

“வெத்தலை மங்கல த்ரவ்யம்-ங்கறதால கால்ல மிதிபடாம இருக்கணும்-னு சொல்லுவா…. ஸரிதான்! ஆனா…. பத்ரப்படுத்தி வெக்கறதுக்கு ஏன் சொன்னா?……”

குழம்பின பாரிஷதருக்கு, பெரியவாளின் ஒவ்வொரு சொல்லும் அழகான அர்த்தங்களோடு உருப் பெறும் என்பது கொஞ்ச நாழியிலேயே ப்ரத்யக்ஷமாகத் தெரிந்தது!.

தர்ஶனத்துக்காக அலைமோதிக் கொண்டிருந்த கூட்டத்தில், எங்கோ ஒரு கோடியில், ஒரு பெண் ரொம்ப ஶ்ரமப்பட்டு பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள்!

தானாகவே நகரவில்லை! கூட்டத்தால் நகர்த்தப்பட்டாள். எல்லோரையும் முண்டியடித்து தள்ளிக் கொண்டு அவளால் முன்னேற முடியவில்லை. ஆனால், பெரியவாளை எப்படியாவது தர்ஶித்து விடவேண்டும் என்ற பக்தி பூர்வமான ஏக்கம் இருந்தது.

பெரியவா சட்டென்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு நடக்க ஆரம்பித்ததும், சட்டென்று எல்லோரும் அவருக்கு வழி விட்டு விலகினார்கள்.

பெரியவா நேராக அந்த பெண்ணின் முன்னால் போய் நின்றார்.

வெத்தலை ஶிஷ்யரிடம் ஏதோ ஸமிக்ஞை !

“என்னம்மா? எந்த ஊர்? ஒம்பேரென்ன?”

பாரிஷதர் கேட்டார்.

“…..சின்னப் பொண்ணுங்க….”

“ஒம்பேரென்ன?”

“பேர்தாங்க….. சின்ன பொண்ணு”

பெரியவா கையை உயர்த்தி சின்னப் பொண்ணை special-ஆக ஆஸிர்வதித்தார். தன்னருகில் இருந்த பாரிஷதரைப் பார்த்தார்…..

அவர் உடனே தன் வேஷ்டி மடிப்பில் பத்ரமாக சுருட்டி வைத்திருந்த வெற்றிலையை எடுத்து அவளிடம் கொடுத்தார். அவள் உடனே வாயில் போட்டு மென்று தின்றாள்.

இரு கைகளையும் கூப்பி, கண்ணீரோடு நெஞ்சார்ந்த நன்றியோடும் பார்த்துக் கொண்டிருந்தாள்…… திரும்பி செல்லும் பெரியவா என்னும் “தாயாரை“..!

அந்த பெண்ணுக்கு மட்டும் special-ஆக ஏன் வெற்றிலை?

சின்னப் பொண்ணு, நிறைமாத கர்ப்பிணி ! பெரியவாளை எப்படியாவது தர்ஶனம் பண்ணிவிடவேண்டும் என்ற தாபம்! வந்து விட்டாள். ஆனால், அந்த பெருங்கூட்டத்தில் அவளுக்கு மூச்சு விட காற்று பற்றாமல், மூச்சு முட்டி, வாந்தி வரும்போல் ஆகிவிட்டது…! வெளியேற மனஸும் இல்லை; வழியும் இல்லை!

யாரிடம் சொல்வது?

‘கடவுளே! பெரியவா….. இந்தப் பிரட்டல் போகணும்னா…. ஒரே ஒரு வெத்தலை இருந்தா போறும். யாரு குடுப்பாங்க? தட்டு தட்டாக பழம், பூ…. பலபேர் கையில இருந்தாலும், ஒருத்தங்ககிட்டயும் வெத்தலை இருக்கற மாதிரி இல்லியே!… அப்டியே இருந்தாக்கூட, பெரியவாளுக்குன்னு குடுக்க வெச்சிருக்கறதை… எனக்கு குடுப்பாங்களா?…..”

உள்ளே உறையும் ஆத்மநாதனுக்கு இந்தக் குழந்தையின் அவலக்குரல், தவிப்பு எட்டாமலா போகும்? இன்னும் அதைவிட, அவலக்குரல் எழும்புவதற்கு முன்னமேயே…. பந்தோபஸ்து பண்ணும் தயாபரனும் அவன்தானே!

ப்ரஸவமே பார்க்க வந்த நம் தாயுமான ஸ்வாமிக்கு, வயற்று பிரட்டலுக்கு வெற்றிலை கொடுக்கத் தெரியாதா என்ன?

இப்பேர்ப்பட்ட தபோமணியை கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எத்தனை மஹத்வம் வாய்ந்தவர்!

‘ஸ்வய’ எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், பெரியவா சொன்னது, அவருக்கே எவ்வளவு அழகாக பொருந்துகிறது என்று பாப்போம்.



image

“அம்பாளோட பரம பக்தரா ஒரு மஹான் இருக்கார்னா….. அவர…. ஏன் வெச்ச கண் வாங்காம பாரு, பாருன்னு மனஸ் இழுக்கறது? ‘தாயை போல பிள்ளை’-ன்னு அவரோட ரூபத்ல உண்டாகி இருக்கும் ஸௌந்தர்யம்தானே… இப்டி பண்ணறது?

அம்பாளோட ஸ்வரூபத்ல ஒர்த்தன்… மனஸ் லயிச்சு போய், அவனோட ஹ்ருதயத்ல அவளோட சரணம் ப்ரதிஷ்டை ஆய்டுத்துன்னா……. வெளில பாக்கறதுக்கு அவன் எத்தனை கோணல், விகாரம், கறுப்பு தோல், நொள்ளை கண்ணு, தெத்துப்பல், சூணா வயிறா… இருந்தாலும், அவன் ஞானப்பால், ப்ரேமைப்பால் குடிச்ச கொழந்தையா, ஸர்வாங்கமும் பால் வழிய, கள்ளம் கபடு இல்லாம, அப்டியே…… ஆனந்தம் ஸ்புரிச்சு அல மோதிண்டு, அன்பு பொங்கிண்டு இருப்பான்னா… எத்தனை கூட்டமானாலும் குதி கால்ல நின்னுண்டு ‘பாக்கணும், பாக்கணும், இன்னும் பாத்துண்டே இருக்கணும்‘-னு…. அவனை அழகு ரூபியாக அனுபவிக்கறது!

ஒர்த்தன் அம்பாளோட கொழந்தைன்னா… அவன், நம்ம மாதிரி இல்லாம, அவன் ரூபமே வேற-ன்னு ஆய்டும். அவன் கண்ணே வேற, முகமே வேற, வார்த்தையே வேற, கை காலை அசைக்கறது எல்லாமே வேற-வேறன்னு அகத்தின் அழகு முகத்தில்-ன்னு மட்டும் இல்லாம, பாதாதி கேஶம்…. கொழந்தைக்கு கொழந்தையா, தாய்க்கு தாயா அவனே இருந்துண்டு, பல தினுஸ்ல தாபபட்டு வர ஜனங்களுக்கு ஆறுதலா இருந்து… ஆ…..த்தி குடுப்பான்…”

பெரியவாளுடைய கருணை பொங்கும் திருவுருவமே இதை படிக்கும் போது நம் மனக்கண் முன் வரும். அதுவும், ஸ்நானம், அனுஷ்டானம் முடிந்து, நீறு பூசிய நிர்மல நிமல மேனியும், காவியுடையும், தண்ட கமண்டலமுமாக தரும் திவ்ய தேஜோ தர்ஶனத்தில் ஸாக்ஷாத் பரமேஶ்வர ஸ்வரூபமாக நம் ஊனக் கண்களுக்கும் கூட தெரிவார். நம்மை தூய்மை படுத்திக்கொள்ள, அந்த மங்களரூப தர்ஶனத்துக்கு மிஞ்சி, ஒன்றுமே இல்லையே…!

இப்பேர்ப்பட்ட செழுந்தீயான யுகமஹாபுருஷனை குட்டிச்சுடராக இருக்கும் போதே, இதுதான் ஆதியின் ஜோதி என்பதை அப்போதே கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எத்தனை மஹத்வம் வாய்ந்தவர்!

கேரளாவிலிருந்து ஒரு பெரியவர் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.

“எங்க family-க்கான குலதெய்வம் எது-ன்னு எங்களுக்கு தெரியல பெரியவா….. ஒரு நம்பூத்ரிகிட்ட ப்ரஶ்னம் கேட்டேன். ஒரு பெண் தேவதைதான் எங்களுக்கு குலதெய்வம்-னு சொல்றார். அவரால, வேற வெவரமா எதுவும் சொல்ல முடியல…..”

“ஒங்களுக்கு பூர்வீகம்…. தமிழ்நாடு தஞ்சாவூர் ஜில்லா…. வடமா….?”

“ஆமா…. பெரியவா… நாங்க தஞ்சாவூர் வடமா…”

” அங்க…. கன்யாகுரிச்சின்னு ஒரு க்ராமம் இருக்கு. அங்க போயி…. அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை பண்ணுங்கோ!..”

கேரளாக்காரர் ஸந்தோஷத்தில் திக்குமுக்காடி நின்றார்.

“கன்யாகுரிச்சி” என்ற சொல் அவர் உள்ளுணர்வுகளை தட்டி எழுப்பிவிட்டது.

“ஒ! ஆமா பெரியவா! எங்க பாட்டி சொல்லி கேட்ருக்கேன்! ரொம்ப வருஷம் கழிச்சு, கன்யாகுரிச்சிங்கற பேரை இப்பத்தான் கேக்கறேன்! பெரியவா! என் தெய்வமே! நம்பூத்ரி உபாஸிக்கற தேவதைகளுக்கு தெரியாத விஷயத்தை, அரை க்ஷணத்ல பெரியவா சொல்லிட்டேளே..!..”

குரு மாதா; குரு பிதா மட்டுமில்லை…. குரு அம்சி குலதேவதா….. இல்லையா?

இப்பேர்ப்பட்ட தபோமணியை கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எத்தனை மஹத்வம் வாய்ந்தவர்!

பெரியவாளுடைய சென்னை விஜயத்தின் போது நடந்த ஸம்பவம்….

சந்த்ரமௌலீஶ்வரர் பூஜையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், ஒரு பெண் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருந்தாள்.

கெட்டதும் கூட, நல்லதாக வேஷம் போடும் கலி அல்லவா? பக்தர்களோடு பக்தர்களாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அந்த குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை திருடி விட்டார்கள்.

அம்மாக்காரியோ பெரியவாளையும் தர்ஶனம் பண்ணமுடியாமல், தங்கத்தையும் விடமுடியாமல் அல்லாடியபடி, அங்குமிங்கும் தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை…

கீழே விழுந்திருந்தால்தானே…. கிடைப்பதற்கு!

பூஜை முடிந்து தீர்த்தப்ரஸாதம் வாங்கிக்கொள்ள எல்லோரும் வரிஸையாக வந்தனர். சங்கிலியை இழந்த பெண்ணும் வந்தாள். அழுததால் கண்கள் சிறிது சிவந்திருந்தது. அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண் தீர்த்ததிற்காக பெரியவாளிடம் கையை நீட்டினாள்.

பெரியவா பட்டென்று உத்ரணியை தீர்த்தப் பாத்ரத்துக்குள் போட்டுவிட்டு……

” இங்க புண்யம் தேட வந்தியா? இல்ல….. பாபத்தை ஸம்பாதிச்சுக்க வந்தியா?…”

கிடுகிடுவென்று அவளுடைய மனஸும், ஶரீரமும் ஆடியது…. பயத்தால்!

“ம்ம்! ஒம்பொடவைல ஒளிச்சு வெச்சிருக்கற சங்கிலிய…. மர்யாதையா இந்த அம்மாட்ட குடுத்துட்டு, அப்றமா தீர்த்தம் வாங்கிக்கோ”

“மன்னிச்சிடுங்கோ பெரியவா…..”

உடனே புடவைத் தலைப்பில் ஒளித்திருந்த சங்கிலியை தன் பின்னால் மலங்க மலங்க முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த குழந்தைக்காரியிடம் கொடுத்தாள்.

பெரியவா அந்தப் பெண்ணின் கைகளில் தீர்த்தம் தந்து, அவளது கையையும், மனஸையும் சேர்த்து ஶுத்தப்படுத்தினார்.

இது அங்கிருந்த சிலருக்குத்தான் தெரியும். இதனால் திருடியவளுக்கு ஏற்பட்ட அவமானம் அங்கிருந்த பலருக்கு தெரியாமல் போனது.

தனக்கு நேர இருந்த பெரிய அவமானத்திலிருந்து பெரியவா காப்பாத்தினார், இனி தப்பே செய்வதில்லை என்று திருடியவளுக்கும் நிம்மதி; சங்கிலி கிடைத்ததே என்று தொலைத்தவளுக்கும் நிம்மதி.

இத்தனை நெரிசலில், ஸர்வாந்தர்யாமியான பெரியவாளை தவிர, வேறு யாரால் இந்த திருட்டை கண்டுபிடிக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட ஸர்வாந்தர்யாமியை கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எத்தனை மஹத்வம் வாய்ந்தவர்!

ஏதோ ஒரு க்ராமத்திலிருந்து சில முக்யஸ்தர்கள் பெரியவாளை தர்ஶனம் பண்ண காஞ்சிபுரம் வந்தார்கள். பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்கள்.

“ஸாமிகிட்ட ஒரு விசயத்தை கேட்டுக்கிடணும்… எங்க க்ராமத்துல பிள்ளையார் கோயில் ஒண்ணு இருக்குதுங்க ஸாமி…. எவனோ களவாணி, காலிப்பஸங்க…. ஸாமி சிலைய திருடிட்டாங்க ! இப்போ நம்ம கோயில்ல ஸாமியே இல்லீங்க..! ஸாமிதான் வேற ஒரு பிள்ளையார் சிலை குடுத்து அருள் செய்யணுங்க …”

பவ்யத்துடன் வேண்டினர். ஒரு க்ஷணம் கூட யோஜிக்காமல், திருவாய் மலர்ந்தார் நம் பெரியவா!

“ஒங்க க்ராமத்ல ஏரி இருக்கோ?.….”

“இருக்குங்க ஸாமி”

“அதுல ஜலம் இருக்கோ?”

“பஞ்சாயத்துல தூர் வாரலீங்க ஸாமி, தண்ணி ரொம்ப கொறைவாத்தான் இருக்குங்க ஸாமி”

“ஏரில நெறைய ஜலம் இருந்தா, எல்லாருக்குமே ஸௌகர்யம் இல்லியோ?….. ஒங்களுக்கெல்லாம் குடிக்க-கொள்ள, மேய்ச்சலுக்கு போற கன்னு-காலிகளுக்கும் ஒபயோகபடுத்திக்கலாம் இல்லியோ?”

“ஆமாங்க….ஸாமி ”

“மொதல்ல, எல்லாருமா சேந்து… ஒங்க ஊர் ஏரியை ஆழப்படுத்துங்கோ! ….”

“அப்போ……பிள்ளயார் சிலை…….”

ஊர் தலைவர் இழுத்தார்……

“மொதல்ல ஏரியை ஆழப்படுத்துங்கோ!….”

ப்ரஸாதம் கொடுத்து அனுப்பிவிட்டார்.

வந்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம் !

பஞ்சாயத்து கூடி விவாதித்தது…..

“என்னண்ணே? ஸாமி இப்டி திருப்பி அனுப்பிட்டாரு? பிள்ளையார் செலை கைவஸம் இல்லேன்னு சொல்லியிருந்தா கூட பரவாயில்ல…… அதப்பத்தி ஒண்ணுமே சொல்லக் காணோமே ! அத்தோட, ஏரியை ஆழப்படுத்தறது, நம்ம வேலையாண்ணே? அது நம்ம அரஸாங்கத்தோட வேலையில்ல! அத போயி…. நாம செய்யணும்னா….எப்பிடிங்கப்பா?………

ஆனால் க்ராமத்தில் இருந்த சில வயோதிகர்கள்…..

“த்தா.!….சும்மா இருங்கவே!…எல்லாந்தெரிஞ்சவங்க மாதிரி ஆளாளுக்கு ஏன் கொளப்புறீங்க? நம்ம ஸாமி… பெரியவங்க சொன்னா….. அதுல பொருள் இருக்கும்லா.!….அவரு தெய்வம்பா…! அவரு சொன்னபடிக்கா செஞ்சு போடுவோம்…இல்லன்னா தெய்வ குத்தம் வந்துரும் !”

“மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்காயும் முன் துவர்க்கும்; பின் இனிக்கும்” என்ற பழமொழிப்படி, பெரியவர்களான, அனுபவஶாலிகளான அவர்கள் சொல்வதில் இருந்த நன்மையை எல்லாருமே மதித்து ஏற்றுக் கொண்டார்கள்.

ஒரு நல்ல நாளில் வாட்டசாட்டமான ஆட்கள் ஏரியில் கடப்பாரை, மண்வெட்டியோடு இறங்கி தோண்டி, ஏரியை ‘தூர்’ வார ஆரம்பித்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரே குப்பையும் செத்தையுமாக அள்ளிப் போட்டனர்.

அப்புறம், ஏதோ பேசிக்கொண்டே கடப்பாறையை ஏரிக்குள் குத்தினர்.

……………”டங்“.

“அண்ணே! என்னமோ சத்தம் கேக்குதுண்ணே !”

“ஏ….!! இர்ரா..! இர்ரா.!….எதாச்சும் பொதையலா இருக்கப்போவுது!…”

ஜாக்ரதையாக கையை விட்டு துழாவினால்…………..

” ஆஹா! பிள்ளையார்”

[தொலைந்து போன சிலை இல்லை! இவர் இன்னும்…மிக மிக பழமையானவர்]

அடுத்து கொஞ்சம் தள்ளி, இன்னொரு மண்வெட்டி பட்டதும்….

இன்னொரு “டங் “!

…..ஶிவலிங்கம்!

அடுத்தடுத்து பல “டங், டங்-குகள்!

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தங்கள்!

…………..அம்பாள், நந்தி, முருகன், பலிபீடம், துர்க்கை…சண்டிகேஶ்வரர்!

மண்வெட்டி, கடப்பாரை எல்லாவற்றையும் ஒரே கடாஸாக கடாஸிவிட்டு, அடுத்த பஸ்ஸைப் பிடித்து, ஒரே ஓட்டமாக காஞ்சிபுரம் ஓடி வந்தார்கள். குதூகலமாக பெரியவாளிடம்,

“ஸாமீ! தெய்வமே! ஸாமிட்ட, ஒரு பிள்ளையார் செலையத்தான் கேட்டோம், இப்போ ஒரு கோயிலே கெடைக்க அருள் செஞ்சிட்டீங்களே ஸாமி”

அவர்களைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தார்.

“ஸாமி…இப்போ இத்தன ஸாமி சிலைங்களயும்… எங்க வெக்கறதுன்னு சொல்லி, எங்களுக்கு அருள் செய்யணும்…”

“ஏரி கரைல ஒரு கீத்து கொட்டகை போட்டு எல்லா ஸ்வாமியையும் வெச்சு, தெனோமும் வெளக்கேத்தி, ஏதாவுது…. பழங்கள் நைவேத்யம் பண்ணுங்கோ”

“ஸாமி…..அப்போ……..கோயில் ?”

“அதான்……..பிள்ளையார் வந்துட்டாரே!…….அவர் பாத்துப்பார்!”

உண்மைதான். முட்டுசந்தோ, ப்ளாட்ஃபார்மோ, புழுதி அடிக்கும் ரோடோ, தான், எங்கே இருந்தாலும், இருக்கும் இடத்தை பற்றி கவலை படாமல், செருப்பை கழற்றிவிட்டு ஒரு கும்பிடு போட கூட நேரமில்லாத நம்மை போன்றவர்களுக்கும், எந்த விக்னமும் இல்லாமல் நம் வாழ்வை நடத்தி செல்லும் அந்த ஶிவபாலன், தன் பரிவாரத்துக்கு ஒரு கோயில் அமைத்துக்கொடுக்க மாட்டாரா என்ன?

இப்பேர்ப்பட்ட தீர்க்கதர்ஶியான மஹாபுருஷனை அன்றே கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எப்பேர்ப்பட்ட தபோஶீலர்!

காஞ்சீபுரத்துக்கு முன்பு,  நம்முடைய ஸ்ரீமடம், கும்பகோணத்தில் இருந்தது.

ஒரு நாள் பெரியவா… சில பண்டிதர்களுக்கு ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யபாடம் நடத்திக் கொண்டிருந்தார். நடுவில் ஒரு பண்டிதர், அதில் ஏதோ ஸந்தேஹம் கேட்டார்.

” இப்போ…..நீங்க கேட்டதுக்கு…. பாமதி-லயோ, பரிமளத்து-லயோ, இதுக்கு விஸ்தாரமா பதில் இருக்கு. அத படிச்சா போறும்….! மடத்து லைப்ரரி-ல அந்த பொஸ்தகம் இருக்கா பாக்கச் சொல்லலாம்.….”

ஶிஷ்யரை அனுப்பி, லைப்ரரி பொறுப்பாளரிடம் பாமதி, பரிமளம் புஸ்தகத்தை கொண்டு வரச் சொன்னார். பொறுப்பாளர் உடனே ஓடிவந்தார்.

“அந்த ரெண்டு புஸ்தகத்தையும், ரொம்ப நாள் முன்னாடி, இன்னார் [பெயரைச் சொன்னார்] எடுத்துண்டு போனார்…! இன்னும் திருப்பித்தரல….”

“ரொம்ப நாளாச்சுன்னா….. அவர்கிட்டயே இப்போ அது, இருக்கோ என்னவோ?…..”

பெரியவா சொல்லி முடிக்கவில்லை……

“பேரீச்சம்பலம்….பேரீச்சம்பலம்…”

தெருக்கோடியில் பேரீச்சம்பழக்காரன் குரல் கேட்டது!

பெரியவா லேஸாக புன்னகைத்தார்….

“நல்லதாப் போச்சு! பழய பொஸ்தகத்தை போட்டுட்டு செலபேர் பேரீச்சம்பழம் வாங்கியிருப்பா…! ஒடனே போயி… அவன்ட்ட இருக்கற அத்தன பொஸ்தகங்களையும் வெலைக்கு வாங்கிண்டு வா”

ஶிஷ்யரை அனுப்பினார். கொஞ்ச நேரத்தில் அவர் ஒரு கட்டு புஸ்தகத்தோடு வந்தார். பெரியவா முன்னால் அத்தனையையும் வைத்தார்.

எல்லாம் அபூர்வமான ஸம்ஸ்க்ருத புஸ்தகங்கள்! பழுப்பேறின காகிதம்!

“ஶாஸ்த்ரிகளே! என்னென்ன புஸ்தகம் இருக்குன்னு பாருங்கோ!”

வரிசையாக படித்துக்கொண்டே வந்தார். ……….

“பாமதி………..!”

“பரிமளம்………! ”

எல்லாரும் ஆஶ்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டனர்!

பாஷ்ய பாடம் நடக்கும் போது ‘பாமதியும், பரிமளமும்’ தேடப்படுவானேன்! ஸரியாக அந்த நேரத்தில் பேரீச்சம்பழக்காரன் வருவானேன்? தேடிய புஸ்தகங்களோடு அபூர்வமான புஸ்தகங்களும் அவனிடம் இருப்பானேன்?

கவிச்சக்ரவர்த்தி கம்பருடைய மகன் அம்பிகாபதியும், குலோத்துங்க சோழனின் மகள் அமராவதியும் ஒருவரையொருவர் விரும்புவதைத் தெரிந்து கொண்ட ஒட்டக்கூத்தர், சோழனிடம் இதைப்பற்றி கொளுத்தி விட்டார். அரசன் நம்புவதற்காக, கம்பரையும் அம்பிகாபதியையும் மட்டும் தனியான விருந்துக்கு அழைக்கச் சொல்லி, அவர்களுக்கு அன்னம் பரிமாறும் வேலையை இளவரசியான அமராவதி செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு பண்ணினார்.

விருந்துக்கு அம்பிகாபதி வரப்போவதை அமராவதிக்கும், அமராவதி அன்னம் பரிமாறப் போவதை அம்பிகாபதிக்கும் சொல்லக் கூடாது என்று கூறினார். அப்போதுதான் அவர்களுடைய அன்பை கண்கூடாக அரசனால் காண முடியும் என்றும் கூறினார்.

அதன்படியே ஒட்டக்கூத்தர், அரசன், கம்பர், அம்பிகாபதி நால்வரும் விருந்துண்ண அமரவும், அமராவதி அன்னவட்டிலைத் தூக்கிக் கொண்டு வந்ததும், இருவருக்குமே பெருத்த ஆஶ்சர்யமும், ஆனந்தமும் உண்டானது!

அம்பிகாபதியும் பெரிய கவியில்லையா? அமராவதியை எதிர்பாராமல் அங்கு பார்த்த ஆனந்தத்தில், கவிதையும் துள்ளிக் கொண்டு வந்தது! தான் எங்கு இருக்கிறோம், என்ன பின்விளைவு என்பதெல்லாம் மறந்தது இருவருக்கும்!

“இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க…. வட்டில் சுமந்த மருங்கசைய.……”

என்று அம்பிகாபதி ஆரம்பித்ததும், அமராவதியின் பாதம் கொப்பளித்ததோ இல்லையோ….அரசனின் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது! கம்பரும், மைந்தனின் தகுதியில்லா அன்பால், நிலைகுலைந்து போனார்!

இனியும் விட்டால்…. பிள்ளை இன்னும் எதையாவது பாடி, மன்னன் அவனுக்கு அங்கேயே ஸமாதி கட்டி விடுவானோ? என்ற பயத்தில், வாக்தேவியான வாணியை ஶரணடைந்தார்! பிள்ளை ஆரம்பித்த கவிதையை, தான் முடித்து வைத்து, அவனையும், இளவரசியையும் ஸுதாரித்துக் கொள்ள வைத்தார்.

“இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்த மருங்கசைய…….

கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாய் நாவில் வழங்கோசை வையம் பெறும்…!”

என்று தானே பாடி முடித்தார்.

ஒட்டக்கூத்தரோ, மன்னருக்கு தூபம் போட்டு, அம்பிகாபதி பாடியது அமராவதியைப் பார்த்துதான், என்றதும்,

“கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியின் குரல் கேட்டுத்தான் என் மகன் பாடினான்” என்று கம்பர் சொன்னதும், அரசன் ஆட்களை அனுப்பி, வீதியில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண் யாராவது இருந்தால் உடனே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.

ஸதா தமிழ் என்னும் அழகால் தன்னை மேலும் அழகு படுத்தும் தன்னுடைய பக்தனான கவிச்சக்ரவர்த்தியை, கலைமகளான ஸரஸ்வதி தன் அனுக்ரஹ அழகால், அக்ஷணமே காப்பாற்றினாள்.

ஆம்! கொட்டிக்கிழங்கு விற்கும் கிழவியாக ஸாக்ஷாத் ஜகன்மாதாவான ஸரஸ்வதியே வந்துவிட்டாள் !

காவலர்கள் அவளை அழைத்து வந்து, மன்னன் முன் நிறுத்தியதும்,

“கம்பனின் கவிதைக்கு எதைத்தான் தரக்கூடாது? கொட்டிக்கிழங்கு தரட்டுமா?” என்று அவள் கூறியதும், மன்னன் ஒட்டக்கூத்தரை ஓரங்கட்டி விட்டுவிட்டு, தன் ஸந்தேஹம் ஆதாரமற்றது என்று அப்போதைக்கு நம்பினான்.

வாக்தேவியை நாவில் நர்த்தனமாடவிட்ட கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி கொட்டிக்கிழங்கு விற்க வரும்போது, ஸாக்ஷாத் ‘இந்த்ர ஸரஸ்வதி’ யான நம் பெரியவா ஸங்கல்பித்தால், அம்பிகை ஏன் பாமதி, பரிமளத்துக்காக, பேரீச்சம்பழம் விற்க மாட்டாள்?

பாமதியும் பரிமளமுமாக விளங்கும் இந்த குழந்தை ஸ்வாமிநாதன்தான், ஆறாவது சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதியாக பரிமளிக்கப் போகிறார் என்பதை அன்றே கண்டுகொண்ட 66-வது பீடாதிபதி எப்பேர்ப்பட்ட மஹா அறிவானவர்!

மாந்தோட்டம் வைத்திருக்கும் ஒரு விவஸாயி பெரியவாளை தர்ஶிக்க வந்தான்.

“என்ன..? வெவஸாயமெல்லாம் நன்னா நடக்கறதா?”…

வெளைச்சலுக்கு கொறைவில்ல ஸாமி… ஆனா, மாங்கன்னு நட்டு வளக்கறேன் ஸாமி…. அது நல்லா… பூக்குது, அப்புறம் உதுந்து போறதுங்க…! காய்க்கவே இல்லீங்க ஸாமி”

கவலையோடு கூறினான்.

மாண்டூக்ய உபநிஷத்திலிருந்து, மாமர வளர்ப்பையும் தாண்டி, நம் பெரியவாளிடம் பதில் இருக்கும். அதிலும் இயற்கை ப்ரியரான பெரியவாளுக்கு, மரம், செடி, கொடிகளிடம் உள்ள ப்ரேமையே அலாதிதான்!

“பாரு….. நீ என்ன பண்ணு….. காய்க்காத மாமரத்துக்கு பக்கத்ல, இன்னும் கொஞ்சம் மாங்கன்னுகளை நட்டு வை! அதுகளும் வளர்ந்து பூக்க தொடங்கித்துன்னா…. எல்லா மரமும் காய்க்க ஆரம்பிச்சுடும்”

பக்கத்தில் நின்று கொண்டிருந்த விவஸாயத்துறை அதிகாரி அதிர்ந்தே போனார்…!

“சில மாமரங்கள்ள பெண் பூ நெறைய இருக்கும். ஆண் பூ அதிகம் இருக்காது. அதுனால… மகரந்த சேர்க்கை உண்டாகாம, அதோட பூவெல்லாம் கருகி போய்டும். அதே ஸமயம்…. பல மரங்கள் இருந்தா, தேனீக்கள் எல்லா மரத்திலும் மொய்க்கறதால மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, நல்லா காய்க்க ஆரம்பிக்கும். அம்மாடீ! இது பெரியவங்களுக்கு எப்படி தெரியும்?”

ஒரு மரம் தோப்பாகாது! என்ற பழமொழிக்கு ஆதிமொழியானவனுக்கு இது தெரியாதா என்ன?

இப்பேர்ப்பட்ட ஆதிமொழிநாதனை, கிணிமொழி பேசும் வயஸிலேயே அடையாளம் கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எப்பேர்ப்பட்ட ஞானஸ்வரூபமாக இருந்திருப்பார்!

எங்கள் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்… பெரிய ஜீவன் முக்தர்…! தன் சிறு வயது முதலே, நம் பெரியவாளிடம் ஆத்மார்த்தமான ப்ரேமையும் பக்தியும் கொண்டவர்.

ஒரு தடவை பெரியவாளை தர்ஶனம் பண்ண காஞ்சீபுரம் போகும்போது, ஶ்ரீ குருஜிக்கு ஒரு ஸந்தேஹம் உதித்தது.

“நாம என்ன பண்ணிண்டிருக்கோம்? எந்த எடத்ல இருக்கோம்?…ங்கறது மாதிரியான விஷயங்கள்ளாம்…. என்னோட குருநாதருக்கு தெரியுமா? அடடா! இதெல்லாம் கூடவா அவரோட வேலை?-ன்னு நெனச்சு ஒதுக்கவும் முடியாது. ஏன்னா…. அவர் ஸகலத்தையும் அறியற அறிவுக்கெல்லாம் அறிவானவர் !”……….

இப்படியாக ஶ்ரீ குருஜியின் மனஸில் ஓடியது.

காஞ்சிக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில், வழியில் ஒரு ஆந்த்ரபக்தர் குடும்பத்தை ஸ்ரீ குருஜி ஸந்தித்தார். அவர்கள் ஏற்கனவே அவருக்குத் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசினார்.

ஶ்ரீ குருஜிக்கோ…. தெலுங்கு தெரியாது. அவர்களுக்கோ… தமிழ் தெரியாது. எனவே பரஸ்பரம் English-ல் பேசினார்கள்.

காஞ்சீபுரத்தில் பெரியவாளை வந்து தர்ஶனம் பண்ணினார் ஶ்ரீ குருஜி.

அவரைப் பார்த்ததுமே….. பெரியவா முகத்தில் ஒரு குஸும்பான சிரிப்பு!

“ஒனக்கு தெலுங்கு தெரியுமோ?”

“தெரியாது”

“அவாளுக்கெல்லாம் தமிழ் தெரியுமோ?”

“தெரியாது”

“அப்போ…. அவாகிட்ட நீ…. English-லியா பேசினே?”

குஸும்பு சிரிப்பு….. அவருடைய ஸந்தேஹத்தை கெல்லி எறிந்து விட்டது! ஶ்ரீ குருஜி தன் ஸந்தேஹத்தை கேட்க அவஶ்யமே அங்கு இல்லை! ப்ரஹ்மத்துக்கு திஸையெல்லாம் காதுகள்!

நம்முடைய பெரியவாளும், ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ சந்த்ரஶேகர பாரதி ஸ்வாமிகளும் contemporary.

ஸ்ருங்கேரி பெரியவா, ஸ்ரீ ஸதாஶிவ ப்ரஹ்மேந்த்ராள் மாதிரி ஸதா ப்ரஹ்ம ஸ்பர்ஶத்தில் திளைத்துக் கொண்டிருந்ததால், லோகாவஸ்தைக்கு வருவதே மிகவும் துர்லபம்.

நம் பெரியவா முக்யமான எந்த ஒரு விஷயத்துக்கும் ஸ்ருங்கேரி பெரியவாளை கலந்தாலோஸித்துத்தான் செய்வார். ஸர்வஜ்ஞராக இருந்தாலும், தன்னை மஹா ஸாதாரணமானவராகத்தான் பெரியவா எண்ணுவார். அதே போல், ‘தான் எடுப்பதே முடிவான முடிவு’ என்று பெரியவா எந்த விஷயத்திலும் எண்ணியது இல்லை. உரியவர்களுக்கு உரிய மர்யாதையை பெரியவா குடுக்கத் தவறியதே இல்லை.

ஸனாதன தர்மபரிபாலனத்துக்காக, வேதரக்ஷணத்துக்காக, ஸமூஹ நலன்களுக்காக பெரியவா மற்றவர்களுடன் கலந்தாலோஸித்துவிட்டு, ஸ்ரீ ஸ்ருங்கேரி பெரியவாளுடைய அபிப்ராயத்தையும் கேட்டுவிட்டே முடிவு செய்வார்.

அப்படி தன்னுடைய ப்ரதிநிதிகளை ஸ்ரீ ஸ்ருங்கேரி பெரியவாளிடம் அனுப்பி ‘இன்ன விஷயத்தில், பெரியவா என்ன நினைக்கிறார்’ என்பதை கேட்டுக் கொண்டு வர சொல்லுவார்…

“அவரை பாக்கறதே…. ரொம்ப கஷ்டம்..ன்னு சொல்றாளே பெரியவா! ஒரே அந்தர்முகமாவே இருக்காராம்..! ”

ப்ரதிநிதிகள் தயங்கியபடி இழுப்பார்கள்.

“போய்த்தான் பாருங்கோளேன்..!”

எப்போது பெரியவா ‘போய்த்தான் பாருங்கோளேன்’ என்று சொல்லிவிட்டாரோ, அப்புறம் அது ப்ரதிநிதிகள் நினைத்த மாதிரியா இருக்கும்?

அதி ஆஶ்சர்யமாக இவர்கள் போன ஸமயம், ஸ்ருங்கேரி பெரியவாளும் ரொம்ப ஸஹஜமாக இவர்களோடு உரையாடுவாராம்!

உன்மத்த அவஸ்தையில், வஸ்த்ரதாரணம் கூட இல்லாமல் சில ஸமயங்களில் ப்ரஹ்மேந்த்ராள் போல இருந்தாலும், பெரியவாளிடமிருந்து செய்தி கொண்டு யாராவது வருகிறார்கள் என்றால், அந்த மஹாதேவனே மானுஷ ரூபம் தாங்கி வந்தது போல், ஶரீரம் முழுதும் அழகாக விபூதி தாரணம் செய்து கொண்டு, ருத்ராக்ஷங்கள் தரித்துக் கொண்டு, காவியுடைக்கே அழகு சேர்ப்பது போல், காவி தரித்துக் கொண்டு, சிரித்தபடி வெளியே வந்து, தர்ஶனம் தருவார்.

இவர்கள் பெரியவா சொல்லி அனுப்பிய விஷயத்தை சொன்னதும், அத்வைத அவதாரபுருஷர்கள் ஒன்றாகத்தானே இருப்பார்கள்! ஒன்றாகத்தானே பேசுவார்கள்!

“அவாளால மட்டுந்தான்… ஆத்ம நிஷ்டாளாவும் இருந்துண்டு, வெளி லோகத்துக்கும் எதெது எப்டி பண்ணணுமோ, அப்டி பக்வமா யோஜனை பண்ணி கார்யம் பண்ண முடியறது! ஶாஸ்த்ர தர்மத்தை விட்டே குடுக்காம, அதே ஸமயம் நவீனர்களையும் ஆகர்ஷிக்கறா மாதிரி, ஸமுதாயத்தோட மனஸை ஸூக்ஷ்மமா புரிஞ்சிண்டு திட்டங்கள் போடறா…..! இங்க? [தன்னை சுட்டிக்காட்டி] ஆச்சார்ய ஸ்தானம் இருக்கே! லோகத்துக்கு செய்யணுமே!-ன்னாலும், வேற மாதிரி போறது…! அவாதான், தேடிண்டு போய் நல்லது பண்றா…..! எங்களுக்காகவும் சேர்த்து அவாளே பண்றா…! அதுனால, எங்களோட அபிப்ராயம் என்ன-ன்னு அவா கேக்கணும்னே இல்ல! அவாளுக்கே என்ன செய்யணும்னு தெரியும்…..அதுக்கு பூர்ண ஸம்மதம் தவிர, இங்க… சொல்ல வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்…. க்ருதஜ்ஞ்யதை ![நன்றி]” ……. என்று சொல்வாராம்.

என்ன ஒரு அழகான பதில்! ஸத்யமான ஞானியால் மட்டுமே இப்படியொரு அமுதான பதிலை அளிக்க முடியும்!

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஶ்ரீ முரளீதர ஸ்வாமிகள், ஸ்ருங்கேரி மஹாஸன்னிதானம் ஶ்ரீ சந்த்ரஶேகர பாரதி ஸ்வாமிகள், பகவான் ஶ்ரீ யோகி ராம்ஸுரத்குமார், பகவான் ரமணர் போன்ற அவதாரபுருஷர்களும, இன்னும் எண்ணிலடங்கா அவதார புருஷர்களையும், ஞானிகளையும், ஜீவன் முக்தர்களையும் தன்னிடத்தே கொண்டு, செழித்தோங்கியிருக்கும் அத்வைத ஆலவ்ருக்ஷத்தின் ஒரு வேரை, அது முளைக்கும் போதே கண்டு கொண்ட 66-வது பீடாதிபதி எப்பேர்ப்பட்ட அத்வைதபுருஷர்!

ஒருவர், மந்த்ராலயம் செல்வதற்காக பாம்பே மெயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

ரயில் தாலாட்டிய ஸுகத்தில் தூங்கிவிட்டார்! இரவு அகாலத்தில், தூக்கக் கலக்கத்தில், மந்த்ராலயம் வந்துவிட்டது என்றெண்ணி, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.

Train கிளம்பியதும் பார்த்தால்… குண்டக்கல்! என்ற தெலுங்கு, ஆங்கில எழுத்து கண்களில் பளிச்சென்று தெரிந்தது!

“அட, தேவுடா! எங்கியோ போய் எறங்கிட்டேனே!”

தன்னையே நொந்து கொண்டார். அதே platform-ல் மற்றொரு கோஷ்டி, தமிழ் பேசிக் கொண்டு நின்றது.

“ஸார்…. நீங்கள்ளாம் எங்க போறேள்?…… நா…. மந்த்ராலயம் போகணும். தப்பா குண்டக்கல்-ல எறங்கிட்டேன். அடுத்த train எப்போன்னு தெரியுமா?…”

“கவலப்படாதீங்கோ ஸார்! நாங்க…. பெரியவாளை தர்ஶனம் பண்றதுக்காக ஹகரி போறோம்…. பெரியவா ஸங்கல்பம்… ஒங்கள… இங்க எறக்கி விட்ருக்கு! எங்களோட வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு அப்றமா…. மந்த்ராலயம் போகலாமே!…”

பெரியவாளை.. இவர் தர்ஶிப்பது, இதுவே முதல் முறை! எல்லோரும் வரிஸையாக நமஸ்காரம் பண்ணியதும், மந்த்ராலயத்தின் முறை வந்தது.

“இவர்….. இங்க வரதா இல்லியே? நீங்க அழைச்சிண்டு வந்தேளா?”

“நா… பெரியவாளைப் பாக்காம மந்த்ராலயம் போகணும்னு நெனைச்சேன்…! அதான், நேர அங்க போக முடியாமப் போய்டுத்து”

பெரியவா அவரை அருகில் அழைத்து மெல்லிய குரலில் ஏதோ பேசினார். மயக்கம் போடாத குறையாய் அஸந்து போய் நின்றார் மந்த்ராலயம்…!

“என்ன ஸார்? என்னாச்சு? பெரியவா என்ன சொன்னா?…”

பெரியவா கேட்டது இதுதான்…………..

“ஒங்கம்மா கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டாளா?”

முதல் தடவை பார்த்து, முதல் முதலாக கேட்ட கேள்வியிலேயே மந்த்ராலயம் அதிர்ச்சி அடைந்தார். ஒப்புக்கொண்டார்.

“எவ்ளோ ஸீக்ரமா முடியுமோ, அவ்ளோ ஸீக்ரமா, கயா-க்குப் போயி… ஒங்கம்மாக்கு ஶ்ராத்தம் பண்ணு..! அவளுக்கு ஸத்கதி கெடைக்கும்”

என்ன ஒரு தீர்மானமான அனுக்ரஹம்!

“கெணத்துல விழுந்து உஸுரை விட்ட அவர் அம்மாவோட ஆவி, தான் நிர்கதியாத் தவிச்சுண்டு இருக்கறதை சொல்லி, தனக்கு விமோச்சனம் கேட்டுப் பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணியிருக்கும்.! அதான், மந்த்ராலயம் போக இருந்த பிள்ளையாண்டானை குண்டக்கல்-ல எறங்கப் பண்ணி, தங்கிட்ட வரவழைச்சிண்டா… பெரியவா”

ஒரு பரம பக்தர், நெகிழ்ச்சியோடு கூறினார்.

ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளுடைய பூர்வாஶ்ரம மனைவி, அவருடைய பிரிவைத் தாங்காமல் ப்ராணஹத்தி பண்ணிக்கொண்டு, ஸ்வாமிகள் முன்னால் ஆவி ரூபத்தில் வந்து அரற்றியதும், ஸ்வாமிகள் அவள் மேல் தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்து நல்ல கதியை அளித்தாரே!

வேறு வேறு காலங்களில், வேறு வேறு மகான்களின் ரூபத்தில் தெய்வம் தோன்றினாலும், அந்த தெய்வத்தன்மை எக்காலத்திலும் மாறாது. தெய்வம் தெய்வமே!

ஏராளமான ஸம்பவங்கள் இருந்தாலும், இப்போது நம் பெரியவாளை அந்த சின்ன வயஸிலும் ‘இனம் கண்டு கொண்ட’ 66-வது பீடாதிபதியைப் பற்றி பெரியவா விவரிப்பதை ரஸிப்போம் ……

“என்னோட ப்ரியம் என்னவோ தெரியாது. அவர் எங்கிட்ட காட்டின ப்ரியந்தான் ப்ரியம்! அத்தனாம் பெரியவர்…! வெவரமே தெரியாத சின்னப் பையன் எங்கிட்ட, ஒரு காரணமும் இல்லாம.. பாக்கறது, பேசறது, சொல்றதைக் கேட்டுக்கறது, நடத்தறது….ன்னு எல்லாத்துலயும், அவரோட அந்த ப்ரியம் தெரிஞ்சுது. அதுனாலே எனக்கு ப்ரியம் ஜாஸ்தியாச்சு!….

[ரா.கணபதியிடம்] Spritual-லா… என்ன ஆச்சு-ன்னு திரும்பத் திரும்ப கேட்டுண்டிருக்கே! நா… பதில் சொல்லாம க்ராக்கி பண்ணிக்கறேன்னு ஒனக்கு தோணலாம். ஆனா, நடக்காத விஷயத்தப் பத்தி என்ன சொல்றது! எனக்கு அப்போ spirit-டே தெரியாது! [சிரிக்கிறார்] ஆனா, spiritual-லா ஒண்ணு நடக்கறதுக்கு, குருக்ருபை அப்டி நடத்தி வெக்கறதுக்கு, யாருக்குமே…. அதை தெரிஞ்சுக்கணும்னோ, நெனைக்கணும்னோ இல்ல-தான்!

எனக்கு ஒண்ணும் சொல்லத் தெரியல…! பெரியவா சொல்ல மாட்டேங்கறாளே!..ன்னு தாபப்படாதே! எனக்கே தெரியாதப்போ, என்ன சொல்றது?….

…இன்னதுதா….ன்னு சொல்லத் தெரியாத ஏதோ ஒண்ணு, மனஸ்ல ஆழப் பதிஞ்சுது! ரெண்டு நாளும் ஸ்வாமிகள் என்னை, நெறைய தடவை கூப்டு கூப்டு பேசினப்போ, ஆத்ம ஸம்பந்தமா எதுவும் பேசல-ன்னுதான் நெனக்கறேன். முக்யமா புத்திஶாலித்தனத்தை டெஸ்ட் பண்ணிப் பாக்கற மாதிரி கேட்டார்…! பதில் சொன்னேன்னு தோண்றது.

ஆத்ம ஸம்பந்தமா எதாவுது சொல்லலாம்-னா…. மொத வர்ஷந்தான் எனக்கு பூணல் கல்யாணமாயிருந்தது. அதப்பத்திக் கேட்டார். ரெகுலரா ஸந்த்யாவந்தனம் பண்றேங்கறதுல ரொம்ப ஸந்தோஷப்பட்டார். பூணலானதும், வழக்கமா கத்துக்கறதெல்லாம் கத்துண்டு வரேன்; அதுக்காகவே அப்பா எனக்கு ஸம்ஸ்க்ருதத்ல tution வெச்சிருக்கார்-ங்கறதுலயும், ஸந்தோஷப்பட்டார்.

ஸம்ஸ்க்ருதம், பாராயண ஸூக்தங்கள், ஸ்தோத்ரங்கள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த சில மாஸங்களிலேயே, ஸ்வாமிநாதன் நன்றாக மனப்பாடமாக்கிக் கொண்டுவிட்டான். ஸ்கூல் படிப்பிலும், ஸ்கூலில் பேச்சுப்போட்டி, நாடக வஸனம் ஒப்பிப்பது என்று எல்லாவற்றிலும் முதலாவதாக இருந்து கொண்டு, இதிலும் நன்றாக பரிமளித்திருக்கிறான் என்பதில், பரமகுரு ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஸந்தோஷம்.

பின்னால் ஸ்ரீமடத்தை நிர்வாகம் பண்ணப் போகிற குழந்தையிடம், பரமகுரு கேட்டாராம்…….

“class-ல மானிட்டரா இருந்தேனா-ன்னு கேட்டார். அதுல மத்த பஸங்கள மேச்சுக் கட்ற ஸாமர்த்யம் இருக்கோல்லியோ? அதுனால கேட்டிருக்கலாம்?”

ஸ்வாமிநாதனுக்கு 11-வது வயஸில் ப்ரஹ்மோபதேஸம் ஆகும்வரை, ஸம்ஸ்க்ருதத்தில் ஆனா-ஆவன்னா கூட எழுதப்படிக்கத் தெரியாது. சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் இங்கு அவன் படித்த ஸ்கூல்களில், ஸம்ஸ்க்ருதம் சொல்லித்தரப்படவில்லை. உபநயனத்துக்கு பிறகுதான் திண்டிவனத்தில் ஸம்ஸ்க்ருத பண்டிதரிடம், tution வைத்தார்கள்.

இதில் மிக மிக முக்யமான விஷயம், “ஸ்வாமிநாதன்தான் வருங்கால பீடாதிபதி” என்று பெருமுக்கல் வாஸத்தின் போதே, பரமகுரு ஸ்வாமிகள் தீர்மானம் செய்து, அதை அணுக்கமான சிலருக்கு தெரிவித்தும் இருக்கிறார்! தாமே நேராக அப்போதைய ஸ்ரீமடத்து முக்ய நிர்வாகியான மணக்கால் ஸ்ரீ கந்தஸ்வாமி ஐயர், மஹா வித்வான் திருவிஸைநல்லூர் ப்ரஹ்மஸ்ரீ வேங்கடஸுப்பா ஶாஸ்த்ரிகள் ஆகியோரிடம் சொல்லியிருக்கிறார்.

ஸ்வாமிநாதனுடைய அப்பாவிடம், அவனுடைய மிஷனரி ஸ்கூல் படிப்பை நிறுத்திவிட்டு, அவனுக்கு ஶாஸ்த்ர படிப்பு படிக்க வைக்கச் சொல்லவில்லை.

காரணம்…?

அதற்கான தகுந்த நேரம் வரவேண்டுமே!

பெற்றவர்களிடம், பானையை பட்-டென்று கீழே போட்டு உடைப்பது போல், “உங்கள் மகன்தான் அடுத்த ஶங்கராச்சார்யார் ஸ்வாமிகள்! அவனுக்கு ஸன்யாஸ தீக்ஷை குடுக்கப்போகிறோம்!” என்று சொல்லிவிட முடியுமா?

[அதிலும் இதுவோ, மஹா செல்லமான கிணி வேற ஆச்சே ! ]

எல்லாவற்றையும் அழகாக முடிவு செய்யும் மேலிடத்து தம்பதிகளே, இதையும் செய்வார்கள் என்ற நம்பிக்கை… ஸ்வாமிகளுக்கு!


மொத்தத்தில் பரமகுரு ஸ்வாமிகள் அங்கிருந்தோரிடம், “இந்தப் பிள்ளைய பாத்தேளோ! என்ன ஒரு மேதாவிலாஸம்! இவன் ரொம்ப பெரியவனா விளங்குவான்!…” என்று கம்பீரமான மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

அப்போதும் கூட ஸ்வாமிநாதனோ, அவனுடைய தாய், தந்தையோ அந்தப் பெரியவன்-தான், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது ‘பெரியவாளா’கவும், பின்னால் கோடானுகோடி பேரால், அன்போடு ‘மஹாபெரியவா‘ என்று அழைக்கப்படப் போகிறான் என்று துளிகூட யூகம் செய்யவில்லை…!

ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் குடும்ப ஸஹிதம் திண்டிவனம் கிளம்பினார். பெரியவாளிடம் உத்தரவு வாங்கும்போது, ஸ்வாமிநாதனை அடிக்கடி மடத்து முகாமுக்கு அழைத்துவரும்படி ஸ்வாமிகள் சொன்னார்.

அதன்பின் ஸ்வாமிகளின் பெருமுக்கல் முகாமில், தன்னுடைய ப்ரியமான காந்தண்ணா வேறு இருந்ததால், ஸ்வாமிநாதன் அடிக்கடி அங்கு வந்து, அண்ணா செய்யும் குரு கைங்கர்யம், பூஜைக்கட்டு கைங்கர்யம், நைவேத்யம், ஸ்ரீமடம் இயங்கும் முறை, ஸ்ரீசந்த்ரமௌலீஶ்வர பூஜா விதிமுறை எல்லாவற்றையும் அருகிலிருந்து கவனித்துக்கொண்டதால், வருங்காலத்துக்கு தேவையான பயிற்சியும், அனுபவமும் [குரு]ஸ்வாமிகள் அருளால் கிடைத்தது.

தன்னுடைய செல்லக்கிணி அடிக்கடி ஸ்ரீமடத்துக்குப் போய் நேரத்தை செலவிடுவதைக் கண்டு, ஒருபக்கம் ஸுப்ரஹ்மண்ய ஶாஸ்த்ரிகள் ஸந்தோஷப்பட்டார் என்றாலும், பெற்ற மனஸில் உள்ளூர ஏதோ இனம்புரியாத பயமும் லேஸாக துளிர்விட ஆரம்பித்தது…..

No comments:

Post a Comment