பாண்டிய நாட்டுத்திருப்பதிகள்பகுதி 17
ஸ்ரீவில்லிப்புத்தூர்....
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை நிச்சயம் உலக அதிசயங்களுக்கு ஈடாகச் சொல்லலாம். வானளாவ நிற்கும் அந்தக் கோபுரம் தமிழர் பண்பாட்டிற்கும் கலை நயத்துக்கும் ஒரு சான்று. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது.
கோவில் வெளிப்பிராகாரத்தில் இருந்தே பெரிய பெரிய சிற்பங்கள் தூண்களை அலங்கரிக்கின்றன. கையெட்டும் தூரம் வரை எண்ணெய் பிசுக்கை நம்மவர்கள் தூண்களில் துடைத்து வைத்திருக்கின்றனர். அதற்கு மேல் பகுதி கெடாமல் அழகாக உள்ளன. எத்தனையோ வருடப் பழைமையானக் கோவிலாக இருந்தாலும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள சுவரில் உள்ள சிற்பங்கள் மெருகு குலையாமல் உள்ளன. அவ்விடங்களில் கம்பி வேலி போட்டு பாதுகாப்பதும் ஒரு காரணமாக இருக்கும். உட் பிராகாரத்தில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் ஆண்டாள், பெரியாழ்வாரின் கதைகளை சொல்கின்றன.
கர்ப்பக்கிரகத்தில் ஆண்டாள் ரங்கமன்னார் மற்றும் கருடன் சேவை சாதிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்....
எங்கும் கருடாழ்வார் பெருமாளுக்கு நேரெதிர் சன்னதியில் தான் இருப்பார். ரங்கமன்னாரை ஆண்டாளுடன் இணைக்க விரைந்து கருடன் கொண்டு சேரப்பித்ததால் அவருக்குப் பெருமாளுடன் நிற்கும் ஏற்றம் இங்கே கிடைத்திருக்கிறது.
கோவிலைச் சுற்றியும் கோவிலுக்குப் போகும் அந்த வெளிப் பிராகாரத்திலும் பால்கோவா, வாசனைப் பொடி, தாழம்பூ குங்குமம், மர பொம்மைகள், ஓலைக் கூடைகள் எனக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இரு புறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. வெளியே வந்தவுடன் இடது புறத்தில் ஆண்டாள் அவதரித்த துளசி வனம் உள்ளது. மிகவும் அழகான நந்தவனம். அங்கேயே ஒரு சின்ன சன்னதியில் சிறுமியாக ஆண்டாள் சேவை சாதிக்கிறாள். சின்னக் கோவிலானாலும் மிகவும் சுத்தமாகவும் சுவர்களில் அழகிய சித்திரங்களும் நிறைந்துள்ளன.
*மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத்தூருறை..*.
என்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்
*விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்*
என்று பெரியாழ்வாரும் அறிமுகப்படுத்தும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவில் இந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று. பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர் கோயில்.
அடுத்து வடபத்ரசாயி கோவில் பெரிய கோவில், இரண்டு நிலைகள். கீழ் நிலையில் லட்சுமி நரசிம்மர் சுதையால ஆன பெரிய சிலை. வண்ணப் பூச்சுக்களுடன் கன கம்பீரமாகக் காட்சித் தருகிறார். அழகோ அழகு. மாடியில் வடபத்ர சாயி. அவரும் சுதை வடிவில், நீண்ட சயனத் திருக்கோலம்.
பெருமாளை படுத்திருக்கும் நிலையிலிருந்து பார்ப்பதற்காக கருவறையில் மூன்று கதவு நிலைகள் உள்ளன. மேலேறும் மாடிப்படிகள் கருவறைக்கு செல்கிறது. அதன் கீழுள்ளவை புராணங்களின் நிகழ்ச்சிகளை அலங்கரிக்கும் விதமாக விவரமான மரச்சிற்பங்கள் அடங்கிய, வியக்கத்தக்க பெரிய மண்டபத்திற்கு செல்கிறது. இம்மரச்சிற்பங்கள் மேற்கூரைக்கு அலங்காரமாகவும், உறுதுணையாகவும் உள்ளது. இக்கோயிலில் ‘தென்கலை’ வழிபாடு முறையை பின்பற்றுகிறது.
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை இவ்வளவு அருகிலும் விரட்டப்படாமலும் சேவிக்க முடியாது. இங்கே அருமையான சேவை. தீர்த்தம், துளசிப் பிரசாதம். அந்தக் காலத்தில் எப்படித்தான் இவ்வளவு பிரம்மாண்டமானக் கோவில்களை அரசர்கள் கட்டினார்களோ தெரியவில்லை. கோவில்கள் முழுவதுமே சிற்பங்கள் கண்ணைக் கவர்ந்தன. இந்த மூன்று கோவில்களும், அடுத்து நாங்கள் தரிசித்த நவ திருப்பதியும் வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது ஒரு பெரிய ஆறுதல்.
ஆண்டாளையும் பெருமாளையும் சேவிச்சுட்டுவெளில வரோம். ஊரை சுத்திப்பார்க்க பக்கத்துல ஒரு திருவண்ணாமலை ,(இது வேற),சதுரகிரி,எல்லாம் இருப்பதாக தெரிந்து கிளம்பறோம்....(படங்கள் கோயில் சிற்பங்கள்)
தொடரும்
No comments:
Post a Comment