46. சங்கீத ஞானமூ (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
படிப்பு வரலை. டேக்ஸி ஓட்டியாவது பிழைச்சுக்கோன்னு அப்பா வாங்கித்தந்த இன்னோவா காரை வச்சு சிலவுக்கு வருமானம் வந்துடறது. ஏகப்பட்ட போட்டிக்கு நடுவிலே தொழில் செய்யறது சுலபமில்லை. தெருவுக்கு ரெண்டு கேப் கம்பேனி. பல கார் வச்சிருக்கானுவ.
இது போதாதுன்னு அக்ரகேடராம். ஆப்ஸ் வச்சுண்டு கூப்பிட்ட இடத்துக்கு போய் ஆளை ஏத்திண்டு போரா. நான்தான் ஒரு காரை பளபளன்னு துடெச்சு நிறுத்தி வச்சு யாராவது கூப்பிடமாட்டாளான்னு.
நோட்டீஸெல்லாம் கார்த்தாலே தினசரி பேப்பருக்குள் வச்சு வினியோகம் செஞ்சிருக்கேன். அதைப் பாத்துட்டு தெரிஞ்சவா கூப்பிடரா. கைக்கடக்கமா ஒரு 20 கஸ்டமர். தினம் சவாரி கிடைக்காது. கல்யாணம் கார்த்தீன்னா, இல்லை பசங்களுக்கு லீவுன்னா வெளியூர் சவாரி வரும்.
சம்மர் ஹாலிடேஸ் பிஸி. லாங்க் போகப் பிடிக்கும்.
என்ன இவன் டாக்ஸி ஓட்டரவனோட கதை சொல்லுவான் போலேருக்கு, மின்னாடியே இப்படி ஒரு கதை சொன்னான், ஒரே மாதிரியேவா விவஸ்தை இல்லாம எழுதுவன்? கற்பனை வறண்டுடுத்தோ! கணேஷ் கல்யாண் கதைன்னா உடனே வரிஞ்சு கட்டிண்டு பேஷ்னு சொல்ல ஒரு கும்பல் இருக்குங்கிற தெகிரியம்னு சிலர் நினைக்கலாம். கதையை ஆரம்பிக்கரத்துக்குள்ளே இப்படித்தான் பயணிக்கும்னு ஏன் நினைக்கணும், படிச்சுத்தான் பாப்போம்னு சிலர் நினைப்பேள். எனக்கு பரவாயில்லை. சொல்லிண்டே போரேன்.
அன்னைக்கு அப்படித்தான் “திருச்சி போணம், கார்த்தாலே 5 மணிக்கே வந்துடு”ன்னு போன். ஆனா இவாத்தில் கிளம்பரத்துக்கே 630 ஆச்சு. வழீலே எந்த ஹோட்டலைப் பாத்தாலும் நிறுத்தி காபீ குடிச்சா? கூட அழைச்சிண்டு போய் எனக்கும் வாங்கிக் குடுக்கணும்னு தோணலை. கார்கிட்டேயே நின்னேன். திருச்சி போரத்துக்கே 12 ஆச்சு. ஏன்னா காபியைக் குடுச்சதும் பாத்ரூம் போணம். 7 இடத்தில் நின்னோம். சமயபுரம்னு பாத்ததும்தான் உயிர் வந்தது. அதுக்கப்புரம் ஹோட்டல் இல்லை. என்னத்துக்கு வந்தாளோ! அன்னைக்கே 4 மணிக்கு திரும்பப் போணம்னு சொன்னா.
இப்படி வித்யாசமான அனுபவங்கள் லாங்க் போரச்சே கிடைக்கும். ஒவ்வொண்ணையும் வச்சு ஒரு புஸ்தகமே எழுதலாம். இதெல்லாத்தையும் யார் கிட்டேயாவது சொல்லணும்னு ஆசை.
அன்னைக்கு அப்படித்தான் புதுசா கல்யாணமான தம்பதி தனுஷ்கோடி போணம்னு சைதாப்பேட்டைலேந்து புக்கிங்க். ராமேஸ்வரத்தில் ஹனிமூன் மாதிரியாம். அங்கே என்ன ஹனிமூனோ? ஆனா கார்த்தாலேயே தனுஷ்கோடிக்கு போய் அங்கேயே சுத்திண்டிருந்தா. திரும்பரச்சே “கார் ஓட்டறப்போ ஏற்பட்ட அனுபவங்களை சொல்லுங்களேன்?” கேட்டா. “நிறைய இருக்கு ஆனால் ஒரு சவாரி பத்தி இன்னொரு சவாரிக்கு சொல்லப்பிடாது, அப்படி சொன்னா நாளைக்கு உங்களைப் பத்தியும் சொல்லத் தோணும்”. இதுகள் பின்சீட்டில் உக்காந்துண்டே செஞ்சதை சொல்லவா முடியும்? அவா மனசில் ஒரு கிலி ஏற்படுத்திட்டேன். மதுரை வரைக்கும் தள்ளீ உக்காந்துண்டே வந்தா.
எனக்கு காரை படு நீட்டா வச்சுக்கறது பிடிக்கும். சில சவாரி இறங்கினப்புரம் பினாயில் விட்டு கழுவத் தோணும். வாங்கித் தின்னது எல்லாம் கிடக்கும். எங்கெல்லாம் சொறுக முடியுமோ அங்கேல்லாம் எத்தையாவது சொறுகி வைப்பா. சிலபேராத்து குழந்தைகள் கூட வரான்னா எனக்கு பதபதைப்பா இருக்கும் எனக்கு நேர் பின்னாடி உக்காந்துண்டு காலால் உதெச்சுண்டே வரும். டோல்கேட்டில் நான்தான் பணம் கொடுப்பேன்னு தலையை பிடிச்சு இழுக்கும். அடிக்கடி மூச்சா போணம்னு நாராயணன் பேத்தி. எனெக்கென்னமோ அவர் ஆத்துக்காரிக்கு ஷுகர், அவருக்கு போணம்னா பேத்தியை தூண்டிவிட்டு கத்தச் சொல்லுவாளோன்னு சந்தேகம்.
எல்லாரத்துலேயும் புறப்பாடு நன்னா அமையும். வெளியூருக்குப் போரோம், பல இடங்களை பாக்கணும், கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் வேண்டுதல்கள்னு ஜாலியாக் கிளம்புவா. 3 நா கழிச்சு திரும்பரச்சே கடுமையான வாக்குவாதம் பண்ணிண்டே வருவா. என் காரிலேந்து இறங்கரத்துக்குள்ளே குடும்பப் பிர்ச்சனையெல்லாம் தீத்துண்டுதான் இறங்கணுமா! சத்தமா பாட்டுப் போடுவேன். அதுக்கு மேலே அவா குரல். அவாளை இறக்கிவிட்டு பணம் செட்டில் பண்ணி கிளம்பரச்சே மயான அமைதீம்பாளே அதை அனுபவிக்கலாம்.
சங்கீதத்துக்கும் என் கதைக்கும் என்ன சம்பந்தம்? என்ன அவசரம்? அதுக்கும் வரேன்.
அன்னைக்கு சித்தே ஜுரம் அடிக்கராப்போலே இருந்தது. குரோஸின் போட்டுண்டு ஆத்தில் தூங்கிட்டேன். அப்பா வெளீலே போயிருந்தர், அம்மா மட்டும் சமையல் பண்ணிட்டு பசிச்சா சாப்டுக்கோன்னு சுலோகம் படிச்சா. நண்பன் போன் செஞ்சான். “சிதம்பரம் போறயா?”. “ஏண்டா அப்படிக் கேக்கராய்? போலாம், ஆனா எப்போ?” நாளைக்குன்னா அதுக்குள்ளே ஜுரம் விட்டுடும். “நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பணும், மத்தாநாள் கச்சேரி, இருந்துட்டு அதுக்கடுத்தநா கிளம்பி அங்கேந்து திருவாரூர். அங்கேயும் கச்சேரி, அப்புரம் ஜாக்கிரதையா அழைச்சிண்டு வந்து மயிலாப்பூரில் விட்டுடணும்”.
அதென்ன கச்சேரி? அதென்ன திரும்ப வரப்போ மட்டும் ஜாக்கிரதையா அழைச்சிண்டு வந்து விடறது? போரச்சே எங்கேயாவது தள்ளிவிடலாமா? இப்படி விதண்டாவாதம் தோணித்துன்னா அடக்கி வாசிக்கணும். இல்லைன்னா சவாரி கிடைக்காது.
“சரி போலாம், எத்தனை பேர்?” வழக்கமா இன்னொவான்னு 10 பேர் வருவா. பெரீய கார்னாலும் ட்ரைவெர் தவிற 7 பேர் சுகமா பிரயாணம் செய்யலாம். பட்டாளமா கிளம்பினா? கேட்டு முடியாதுன்னு சொல்லிடறது நல்லது. சிலதுகள் நாங்கதானே காசு தரோம், நீ ஓட்டும்பா. “ஒரு நபர்தான், ஆனா வாத்தியங்கள் வச்சு உடையாம எடுத்துண்டு போணம். ரெண்டு பெரீய பொட்டி”. கச்சேரின்னது புரிஞ்சுடுத்து. ஒருத்தர்தானேன்னு பிக்கப் பாயின்ட் டயம் வாங்கிண்டு “ரேட்டெல்லாம் சொல்லிடு.” ஒத்துண்டேன்.
மயிலாப்பூர் பிக்கப் செஞ்சுண்டு ECR பிடிக்கவே 630 ஆச்சு. அடையாறு, திருவான்மியூர் கடந்து மாயாஜால் வரத்துக்கே நாழியாச்சு. ஏறிண்டவர் வேற மொள்ளப் போனாப் போதும்னு. வேகமா ஓட்டினா அவர் தலை சுத்தறதாம்.
நல்ல கனபாடிகள். வேஷ்டி, பட்டுச் சட்டை, அங்கவஸ்திரம். நிறைய நெத்திக்கு இட்ட்ண்டு டைட்டா குடுமி முடிஞ்சிண்டு. அவர் துணிமணிக்கு ட்ராலிபேக் தவிர ரெண்டு பெரீய மரப்பொட்டி. அதை அழகா வைக்க பின்னாடி சீட்டை மடிச்சு இடம் செஞ்சு தந்தேன். இவர் நன்னா காலை அகட்டிண்டு பின் சீட்டில். பொட்டீலே என்னன்னு தெரிஞ்சுக்க முடியாம சதுராமா. டைகர் குகை தாண்டினதுமே கேட்டுட்டேன், “என்ன வாதியம் வாசிப்பேள்?”
“நீ நம்படவனா? பிராம்ணா பாஷை பெசாராய்!” மனுஷர் முகத்தில் சொல்லொண்ணா சந்தோஷம். “பேர் என்ன?” “அமாம் சார், எனக்கு சிதம்பரம்தான். கமலக்கண்ணன். அத்தனை படிப்பில் நட்டமில்லை, அதான். சொந்தக்கார்தான். சொல்லுங்கோ பொட்டியில் என்ன?”. “கடம் தெரியும்மோன்னோ! பத்திரமாப் போணம்”. “ஓ கட வித்வானா! பாட்டும் பாடுவேளா?” அடுத்த கேள்வி
“வாய்ப் பாட்டு கத்துக்காம எதையும் நன்னா பண்ண முடியாதுடா கண்ணா. பாடட்டுமா? “பேஷா பாடுங்கோ மாமா!”
“சங்கீத ஞானமு பக்திவீனா சன்மார்கமு கலதே மனசா” பாடினர். ஆஹா, நல்ல குரல், ஆனா ஒண்ணும் புரியலை. பாடி முடிக்கட்டும், அப்புரமா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு பேசாம வண்டியை ஓட்டினேன். இன்னும் அஞ்சாறு வரி பாடி அவர் முடிக்க நான் போர ஸ்பீடில் 50 கிமீ போயாச்சு. நிரவல்னு சொல்லுவாளே அதெல்லாம் செஞ்சர். சீட்டில் தாளம்.
“நன்னா இருக்கு மாமா, நீங்க ஏன் பாட்டு பாடாம, கடம் வாசிக்கரேள்?” “தெரிஞ்சிண்டு என்ன செய்யப்போராய்?” சட்டுன்னு என்னை அவர் வெறும் ட்ரைவர்னு நினெச்சுட்டர்னு பட்டது. பிராம்ணன்னு ஆசையாப் பேசிட்டு, வாய்ப்பாட்டு பாடுவேளான்னதை சேலஞ்சா எடுத்து இவனுக்கு பாடிக் காமிச்சுடணும்னு செஞ்சுட்டு அப்புரம் இவனோட என்ன பேச்சு வேண்டியிருக்குன்னு தோணித்தோ?
“உனக்கு சங்கீதத்தோட அருமை பெருமை தெரியுமாடா? என்ன படிச்சிருக்காய்?” “சார் நான் +2 பாஸ். காலேஜ் டிராப் அவுட். அதைச் சொல்லிக்கறதில் ஒண்ணும் வெக்கமில்லை. என்கூட படிச்சு முடிச்சுட்டு வேலையில்லாம நிறையபேர். அவாளொட கம்பேர் செஞ்சா நான் சோடை போகலையாக்கும். எங்கம்மா ஆத்தில் பாடுவா. முறையா கத்துக்கலை. கேள்வி ஞானம். அதான் நீங்க பாடினதும் கேக்கணும்னு தோணினதை கேட்டுட்டேன்”.
“சரி சொல்ரேன் கேளு. எங்கப்பா மிக பிரஸித்தமான கட வித்வான். திருவாரூரில். நானும் கடம் வாசிச்சுடணும்னு ஆசை. அதான். குரல்வளம் அத்தனை இல்லைன்னு பட்டது”. “சரி அது என்ன ரெண்டு பொட்டி? ஒரு கடம் பத்தாதோ”. “எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டு. சில சமையம் தாளம் விழாது. ஏதாவது கண்ணுக்கு புலப்படாத டேமேஜ் ஆகிடும். உள்ளூர்னா ஏற்பாடு செஞ்சுண்டுடலாம். வெளியூரில் தெரியாத இடத்தில்? ரெண்டு நா கச்சேரி, ரெண்டு ஊரில்”.
“சரி நான் பாடினேனே அதுக்கு அர்த்தம் சொல்லு?” “அதான் தெரியாது, நானே கேக்கணும்னு இருந்தேன்”. “என்ன நீ ஒண்ணுமே தெரியாதவனா இருக்காய்? உங்காத்தில் சரியா வளர்க்கலையோ? எல்லா பிராம்ணா குழந்தையும் சங்கீதம் தெரிஞ்சுக்கணும். இந்த பாட்டு என்ன சொல்றதுன்னா, பக்தி இல்லாத வெறும் சங்கீத ஞானம் நம்பளை சரியான பாதையை காமிக்காதுன்னு சொல்ரா. அவ்வளவு தெரிஞ்சுக்கோ போதும். இப்போ பேசாம வண்டியை ஓட்டு.”.
“ஒரெ ஒரு கேள்வி மாமா”ன்னேன். “என்ன?” “உங்களுக்கு குழந்தைகள் இருக்காளா?” “இருக்காளே, ஒரு பையன் ஒரு பொண். ரெண்டுபேரும் லைஃபில் செட்டில்”. “எங்கே?” ஒருத்தன் ந்யூஜெர்சியில் டாக்டர். பொண் கல்யாணம் செஞ்சிண்டு சிங்கப்பூரில்.” “பையன் ஏன் கடம் வாசிக்கலை?” “அவனைத்தான் கேக்கணும்”. “உங்க பொண் பாடுவாளா?” “இல்லை அவளுக்கு பிரியம் இல்லை. லவ் மேர்ரேஜ் செஞ்சுண்டுட்டா”.
சரிதான். நம்பளை மாதிரித்தான் அவாளுக்கும் சங்கீத ஞானம் கிடையாது. அப்புரம் பக்தியை எதில் குழைச்சுப் பூசிக்கறதுன்னு மனசுக்குள் நினைச்சிண்டேன். வயசில் பெரியவர் இவரை ஏன் கலாய்க்கணும்? ஆனா ஒண்ணு சொல்லணும். மாமா வசதியாத்தான் இருக்கர். கையில் 4 விரலில் மோதிரம். காதில் வைரக் கடுக்கன். சட்டையை கழட்டினா செயினை எண்ண முடியும். நினெச்சுண்டே ஓட்டரச்சே அவர் தூங்கிட்டர்.
சரியா 9 இருக்கும் கடலூர்லேந்து சிதம்பரம் போர சாலையில் கவனமா ஓட்டரச்சே டம்முன்னு கண்ணாடியில் ஏதோ வந்து விழுந்தது. அழுகின முட்டை. விழுந்து சிதறி கண்ணாடி பூரா பரவி எதுக்கே ரோட் தெரியாமப் பண்ணித்து. வைபரைப் போட்டு தண்ணீரை பீச்ச இன்னும் மோசமாச்சே தவிர க்ளியராகலை. ஓரம் கட்டிட்டு இறங்கித் தொடைக்கலாம்னு வண்டியை நிற்பாட்டினேன்.
இறங்கி துணியை எடுக்கலை எங்கேந்தோ 4 பேர் கம்போட சூழ்ந்துண்டா. “டாய், இருக்கறதை தந்துட்டு போ, விட்டுடரோம்”. மாமா முழுச்சுண்டு “அய்யய்யோ”ன்னு கையால் வாயைப் பொத்திண்டு கத்தரர். ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. இவர் கையில் மோதிரம் டாலடிக்க ரெண்டு பேர் பின்னாடிக் கதவ தொறந்து இவரை வெளீலே இழுத்தா. “டேய் இங்கே வாடா இதைப் பார்!” இவரைக் காமிச்சுட்டு உள்ளேயும் எட்டிப் பாத்தவன் “வித்யாசமா ரெண்டு பொட்டி இருக்குடோய்!” அன்னவுன்ஸ் செய்யரான்.
எல்லாரும் உள்ளே எட்டிப்பாக்க அதை சமயமா நினெச்சு ஒருத்தன் மண்டையில் ஓங்கி அடிக்கரேன். அவன் கிழே விழ அவன் கையில் இருந்த கட்டை என் கையில். அதால் மத்த ரெண்டுபேரை சட சடன்னு விளாசரேன். நாலாமவன் இன்னும் வண்டிக்குள் தலையை விட்டுண்டு நான் செஞ்சதைப் பாக்கலை. அவன் பின்பக்கம் ஓங்கி ஒரு உதை, அப்படியே சரிஞ்சு விழரான். என்ன நினெச்சாளோ எல்லாரும் ஓடிப்போரா. இதுவரைக்கும் இப்படி கொள்ளை அடிக்கரச்சே திருப்பி யாரும் அடிச்சிருக்க மாட்டாளோ!
ஸித்தே சுதாரிச்சப்புரம், மாமா வியர்வையை துடெச்சுண்டு ஏறி உக்காந்துக்கரர். நானும் கண்னாடியை நன்னா துடெச்சு சரிபாத்துட்டு கிளம்பரேன்.
“கமலக்கண்ணன்?” முழுப்பெயரை பயபக்தியோட, கீர்த்தனையை பாடினப்போ இருந்த பவ்யத்தை அப்படியே குரலில் கொண்டுவந்து கூப்பிடரர். “என்ன மாமா?” “இப்படி சண்டை போட எங்கே கத்துண்டாய்? அப்பா சொல்லித் தந்தாரா?”
“இல்லை மாமா, சண்டையெல்லாம் அவருக்கு வராது. எந்த சந்தர்பத்துலேயும் தைரியமா இருன்னுதான் சொன்னர்”.
No comments:
Post a Comment