Sunday, August 23, 2020

திருவிடவெந்தை (திருவடந்தை)

🙏 நமஸ்காரம்    

62. திருவிடவெந்தை (திருவடந்தை)

மூலவர் - லட்சுமி வராகப் பெருமாள்
தாயார் - கோமளவல்லி நாச்சியார்
உற்சவர் - நித்ய கல்யாணப் பெருமாள்
விமானம் - கல்யாண விமானம்
தீர்த்தம் - கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ கோமளவல்லீ ஸமேத ஸ்ரீ நித்யகல்யாணாய நமஹ

வழித்தடம்:

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. மிகச்சிறிய கிராமமாக இருந்தாலும் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல் நிறைந்திருப்பதாகும். மாமல்லபுரத்திலிருந்து சுமார் 12 மைல்.

பாசுரம்:

திவளும் வெண்மதி போல் திருமுகத் தரிவை செழுங்க டலமுதினிற் பிறந்த
அவளும், நின்னாகத் திருப்பது மறிந்தும் ஆகிலு மாசை விடாளால்
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை சொல்லு நின்தாள் நயந்திருந்த
இவளை உன் மணத்தா லென் நினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே
-  பெரியதிருமொழி (1108)

திருமங்கையாழ்வாரால் தன்னையே குழந்தையாகவும், தாயாகவும் பாவித்துக்கொண்டு காதல் கொண்ட தன் மகள் படும் பாட்டை தாய் கூறுவது போல், பாடலில் திருவாய் மலர்ந்தருளுகிறார். செழிப்பான கடலில் பிறந்த அமுதத்தினின்று முதித்து, இளமை குன்றாது வெண்மதி போல் பிரகாசிக்கும் அழகு பொருந்திய பெரிய பிராட்டியை நின்
அகத்தில் வைத்திருப்பதை, அறிந்தும், கொல்லிமலைப் பதுமை போன்று குவளையொத்த கண்களைப் பெற்ற இப்பெண் (விஷயத்தை அறிந்திருந்தும்) நின்பால், வைத்திருக்கும் பிரேமையை மாற்றாது நினைத்துக் கொண்டே இருக்கிறாளே இவளைப்பற்றி நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய் இடவெந்தை எந்தை பிரானே என்கிறார். (கொல்லிப்பாவை கொல்லிமலையில் தேவ நிர்மாணமாய் காண்போரை மோகிக்கச் செய்து துன்புறுத்தி் வந்த ஒரு பெண்பதுமை) இவ்வாறு திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம்

பாசுரம் பதவுரை:

இடவெந்தை எந்தைபிரானே - திருவிடவெந்தையி லெழுந்தருளி  யிருக்கிற எம்பெருமானே!,
திவளும் வெண்மதி போல் திருமுகத்து - ஒளிவிடாநின்ற வெளுத்த சந்திரனைப்போன்று அழகிய முகத்தை யுடையளாய்
அரிவை - நித்ய யௌவனமுடையளாய்
செழு கடல் அமுதினில் பிறந்த - செழுமை தங்கிய கடலில் அமுதத்தோடு கூடப் பிறந்தவளான
அவளும் - அந்த பெரியபிராட்டியாரும்
நின் ஆகத்து - உனது திருமார்பிலே
இருப்பதும் - எழுந்தருளியிருப்பதை
அறிந்தும் ஆகிலும் - (இப்பரகாலநாயகி) அறிந்திருக்கச்செய்தேயும்
ஆசை விடாள் - (உன்னிடத்தில்) ஆசையை விடுகின்றிலள்;
குவளை அம்கண்ணி - கருநெய்தல்போன்று அழகிய கண்ணையுடையவளும்
கொல்லி அம்பாவை - கொல்லி மலையிலுள்ள அழகிய பதுமை போன்றவளும்
நின் தாள் நயந்திருந்த - உனது திருவடிகளையே ஆசைபட்டுக் கொண்டிருப்பவளுமான
இவளை - இப்பெண் விஷயத்திலே
உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் - என்ன செய்வதாக நீ நினைத்திருக்கிறாய்!
சொல்லு - அதை வெளியிட்டருள்.

பாசுரம் விளக்க உரை:

திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியையும், காதலின்படியே அநுபவம் கைகூடாமையாலே பலவகை விகாரங்களை அடைந்திருக்கிறபடியையும் ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப்பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்னே பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது.  உண்மையில், ஆழ்வாரைக்காட்டிலும் வேறுபட்ட ‘தாய்’ என்பவளொருத்தி இல்லாமையாலே ஆழ்வார் தாமே தம்முடைய காதலின் கிளர்த்தியை அந்யாபதேசத்தாலே பேசி ‘இப்படிப்பட்ட ப்ராவண்யமுடைய என்விஷயத்திலே உபேiக்ஷசெய்திடத் திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டிலொன்றைச் சோதிவாய்திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறாராயிருக்கிறது.

திருமகளை நீ ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாகக் கொண்டிருக்கின்றாய்;  இதனால் திருமகளிடத்து உனக்குள்ள அன்பு அளவற்றதென்பது நன்கு விளங்கும்;  இங்ஙனே அந்யாஸக்தனானவுன்னை என் பெண்பிள்ளை ஆசைப்படுவது தகுதியன்றுதான்;  ஆயினும் கொண்ட ஆசையைக் குறைத்துக் கொள்ளுகின்றாளில்லை;  தன்னுடைய வைலக்ஷணத்தை நோக்கி ‘திருமகளிடத்திற் காட்டிலும்  நம்மிடத்தில்தான்  எம்பெருமான் அதிகமாகக் காதல் கொள்ளுவான்’ என்றெண்ணி இவள் உன்னையே விரும்பாநின்றாள்.  யார் எது விரும்பினாலும் உனது திருவுள்ளம் உவந்தாலன்றிப் பலன் கைபுகமாட்டா தாகையால் இப்பெண்பிள்ளை திறத்திலே நீ செய்ய நினைத்தருப்பது யாதோ? அறிகின்றிலேன்;  அறியச் சொல்லவேணுமென்று பரகால நாயகியின் திருத்தாயார் சொன்னாளாயிற்று.

அரிவை என்னுஞ் சொல் - இருபத்தைந்து வயதுப் பெண்ணையும் தெய்வப் பெண்ணையும் சொல்லும்;  பெண்கட்குப் பொதுப் பெயராக வழங்குதலுமுண்டு.

உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்? = இக் கேள்வியினால் ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுகிறா ராழ்வார் என்று குறிக்கொண்மின்; சேதநனுடைய க்ரியாகாலாபமொன்றும் பேற்றுக்கு ஸாதநமன்று,  பரமபுருஷனுடய திருவுள்ளத்தி லிரக்கமே பலனைப் பெறுவிக்கவல்லது என்க.

கொல்லியம்பாவை = ‘வல்வில் ஓரி' என்னும் சிற்றரசனுக்கு உரியதாய்க் கொல்லியெனும் பெயர்கொண்டதான மலையின்கணுள்ள ஒரு பெண்பாற் பிரதிமை.  இது தேவசிற்பியால் அமைக்கப்பட்ட அழகிற் சிறந்த பதுமையாம்.  அம்மலையிலுள்ள தேவரையும் முனிவரையும் துன்புறுத்த வருகின்ற அசுரரும் அரக்கரும் இப்பதுமையின் சிரிப்பைக்கண்டு மயங்கி உயிர் துறப்பர்களாம். அசுரருமரக்கரும் அங்கு அணுகும்போது அவர்களது வாடை பட்டவுடன் இது தானே நகைசெய்யுமாறு பொறியுள் வைக்கப்பட்டதென்பர்.  இது நகைத்துக் கொல்லுமென்பது, “திரிபுரத்தைச், செற்றவனும் கொல்லிச் செழும் பாவையும் நகைக்கக், கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ!” என்ற சித்திரமடற் பாடலினால் விளங்குகின்றது.  இப்பாவை, கண்டாருள்ளமும் விழியும் கவர்ந்து பெருங்காம வேட்கை யுறவித்து இறுதியில் கொல்லுமென்றுங் கூறுவர். இது தெய்வ நிர்மாணமென்ப, ஒரு காலத்தில் திருமகள் தன்முன் போர்க்கெழுந்த அவுணர் ;மோஹித்து விழும்படி இக்கொல்லியம்பாவை யுருங்கொண்டு ஆடினன் என்று சிலப்பதிகாரம் கூறும்.  (“செருவெங் கோலமவுணர் நீங்கத், திருவின் செய்யோளாடிய பாவையும்” (கடலாடு காதை 60, 61.) என்றது காண்க.) இக் கொல்லிப்பாவை கொல்லி மலையிலுள்ள தென்பதும்  தெய்வத்தால் செய்து வைக்கப்பட்ட தென்பதும் அழகில் மிக்கதென்பதும், காற்றினாலும் மழையினாலும் மற்றெவ்வகை ஊறுபாடுகளாலும் தன் அழகிய நல்வடிவம் கெடாதென்பதும் நற்றினை முதலிய நூல்களிற் காணத்தகும்.  185,  192, 201- ஆம் பாடல்கள் காண்க.  இப்பாவையின் அழகைத் தலைவியின் நலத்திற்கு உவமை கூறுதல் அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலும் விசேஷமாகவுண்டு,  (அகநானூறில் 62, 209- ஆம் பாடல்களும், புறநானூறில் 251-ஆம் பாடலும் காண்க.)  சீவக சிந்தாமணி 197, 667- ஆம் பாடல்களிலும், குறுந்தொகை 89, 100- ஆம் பாடல்களிலும் இக் கொல்லிப்பாவையின் ப்ரஸ்தாவம் காணத்தக்கது.  ஆகவே, தமிழ்க்கவிகள் கொல்லிப்பாவையை ஒப்புயர்வற்ற அழகிற் சிறந்த மாதர்க்கு உவமை கூறுதல் மரபு என்றுணர்க. இப்பாசுரத்தில் “கொல்லியம்பாவை போன்றவள்” என்று சொல்லாமல் “கொல்லியம்பாவை” என்றே, சொல்லி வைத்தது முற்றுமை.  “தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே” (திருவாய்மொழி 6, 9. 9.) என்றதுபோல.
-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

இத்தலத்தைப்பற்றி வராஹ புராணத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர் கௌசிக ரிஷிக்கு கூறியதாக உள்ளது. முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர். அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள் தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.  இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம் செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு  தவஞ் செய்து கொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார். அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ் செய்து கொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய பிராட்டியார் அம்சமாக) பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே என்று எண்ணி அத்தனை பேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார். பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச யாத்திரை சென்ற சிலர்  இவ்விரந்தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதியென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்கு வந்த வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார்.  இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்ய தேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்.  கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் திரு+இட+எந்தை திருவிட வெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று. 

"வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு" என்று பெரியாழ்வார் போற்றிப் பாடியுள்ளார். அத்தகைய திருமகளை வலப்பக்கம் தாங்காமல் இடப்பக்கம் தாங்கி நிற்கும் ஒரே தலம் என்பதால் இத்தலம் அமைவிடத்திற்கு "திருஇடவெந்தை" (திரு+இட+எந்தை) என்று பெயர். காலப்போக்கில் அப்பெயர் மருவி திருவிடந்தை என்றானது.

சிறப்பு:

தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு.

இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்றிலங்குகிறார்.

வருடத்தில் 365 நாட்களும் (ஆண்டில் எல்லா நாட்களும்) திருமணம் நடைபெறும் சிறப்பான திவ்யதேசம்.

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார். இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர். இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம.

எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி. (தனிக் கோவில் நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர் திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம் நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை ஈண்டு நோக்கத்தக்கது)

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டுவேண்டிச் செல்வர் அவர்கட்கு திருமணம் நடைபெறுவதும் கண்கூடு.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/DYFwRegXHtY

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/126138285853274/?sfnsn=wiwspmo&extid=xZcf4IMR0S22C2za

No comments:

Post a Comment