52. குளத்தங்கரை (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
மின்னெல்லாம் குளத்தங்கரையில் போய் உக்காந்துண்டா அத்தனை சுகமா இருக்கும். குளத்து நீர் மேலே தவழ்ந்து வரும் காத்து உடலுக்கும் மனசுக்கும் ஹிதமா. தட்டையா கல் கிடெச்சா தவளை விடலாம். பொழுது போரதே தெரியாது.
இப்போ குளங்களைக் காணலை. தண்ணீரை விடுங்கோ, இங்கேயா குளம் இருந்ததுன்னு கேக்கத் தோணும். ஆத்தங்கரையும் அப்படியே. தண்ணிக்கு பதிலா மணல்தான். பாலத்துக்கு பக்கத்துலேயே ஆத்துக்குள் இறங்கி மணலை வாகா அள்ளிண்டு போக ரோடே போட்டுக் கொடுத்து லாரியும் விட்டிருக்கு அரசாங்கம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு, சீக்கிரமா அள்ளிக்கோன்னு. குளமும் ஆறும் வத்திப்போன ஊர்கள் எப்படி இருக்கும்?
இது என்ன கிராமத்து விவசாயிக் கதையோ!.
காரில் ஆதி திருவரங்கம் போயிண்டிருக்கேன். வழீலே பாத்த காட்சிகள் இப்படி குமுற வச்சுடுத்துன்னா பாத்துக்கோங்கோ. அது என்ன ஆதிதிருவரங்கம்னு தெரியாதவாளுக்கு நான் போர இடத்தை முதல்ல சொல்லணுமோன்னோ! சொல்ரேன்.
சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் கிட்டே போனதும் ஊருக்குள் போய் அப்புரம் அங்கேந்து திருக்கோவிலூர் போர ரோட்டில் பைபாஸுக்கு அடியாலே மேற்கே போணம். 40 கிமீயில் தென்பெண்ணை ஆத்துப்பாலம் வரும். தெற்கே கிராஸ் செஞ்சா திருக்கோவிலூர். உளகளந்த பெருமாள் கோவில். போணம்னா போலாம், வேண்டாம்னா பாலத்தில் திரும்பாம மேற்கே போனா திருவண்ணாமலைக்கு வடக்கே திரும்பாம 16 கிமீயில் மணலூர்பேட்டை வரும். அங்கே தென்பெண்ணை ஆத்தை கிராஸ் செஞ்சா வரதுதான் ஆதி திருவரங்கம். திருக்கோவிலூருக்கு உள்ளேயே ஒரு சின்ன கோவில் அதே பேரில், ஏமாந்துடப்பிடாது. என்னது பெரீசு. பெருமாள் ஸ்ரீரங்கநாதரைவிட பலமடங்கு ஆகுருதியோட.
இந்தக் கோவில் ஸ்ரீரங்கத்துக்கே முந்தயது. இன்னொரு விசேஷம், பெருமாளை பகல் பூரா தரிசனம் செய்யலாம், யாரும் போபோன்னு விரட்ட மாட்டா, நோ க்யூ, பெருமாள் முன்னாடி உக்காந்துண்டு ஆசைதீர பிரார்த்தனை பண்ணிக்கோங்கோன்னு அர்ச்சகர் கிளம்பிப்போயிடுவர். அத்தனை ஏகாந்தம் கிடைக்கும். அங்கேதான் போயிண்டிருக்கேனாக்கும்.
வரச்சேயே பாத்தேன் தென்பெண்ணை வறண்டு கிடந்தது. கோவில்லேந்து 100 அடி தூரத்தில் நதி. படித்துறை இல்லை. நதியில் இறங்கி கால் அலம்பிக்கலாம். தண்ணிதான் இல்லை. போர் போட்டு குழாய். காரை நிறுத்திட்டு கூட வந்த பத்ரியை “வா உள்ளே போலாம், துளசி மாலை வேணும்னா வாங்கிக்கோ!”
அப்போதான் கவனிக்கரேன், ராஜ கோபுர வாசப்படீலே அடுப்பு மூட்டி எண்ணை காயறது, பஜ்ஜிக்கு மாவு குழைச்சிண்டிருக்கான். அன்னைக்குன்னு ஒரு சின்ன வேனில் வந்த ஆந்திராவாடுகள் மொட்டைபோட்டு ரெண்டுநா கேசத்தோட பஜ்ஜி எப்போ ரெடியாகும்னு காத்துண்டிருக்கா.
வெளீலே இப்படி நடக்கறது பெருமாளுக்குத் தெரியுமா? அவருக்கு மட்டும் எப்போவும் வெண்பொங்கலும், புளிசாதமுமா, அவருக்கும் வாழைக்கா பஜ்ஜின்னா நாக்கில் ஜலம் ஊறாதா? பெருமாளாச்சே வெணும்னா மடப்பள்ளியை கவனிச்சுக்கரவனோட கனவில் பஜ்ஜி போட்டுக் கொடுன்னு கேக்கட்டுமே! உள்ளே போரோம்.
திவ்யமா தரிசனம் கிடெச்சது. ஆசை தீர கண்குளிர சேவிச்சுட்டு பிரஸாதம் எங்கே கிடைக்கும்னு பாத்தா அர்ச்சகரைக் காணோம். ஆத்துக்கு போயிட்டர், இன்னொரு கார் வரச்சே வந்துடுவர்னு சொல்லிட்டா.
கோவிலுக்குன்னு போனா என் கண் குளத்தைத் தேடும். ஏகாம்பரேஸ்வரர், உப்பிலியப்பன் கோவில்னு போனா அங்கே குளத்து படீலே சித்தே உக்காந்துக்கறது. ஊருக்குள் குளம் எங்கே பாக்க முடியறது? அதான். மதுரை பொற்றாமரைக் குளம் சொல்லவே வேண்டாம். கோவில் குளக்கரையில் உக்காந்துண்டு கேட்டாத்தான் ஸ்தலபுராணம் புரியும், மனசில் நிக்கும்னு ஒரு ஐதீகம்.
“உனக்கு இந்த ஐதீகம் தெரியுமா?” பத்ரீயை கேக்கரேன். “தெரியாது மாதவா! உனக்கெப்படி இவ்வளவு தெரிஞ்சிருக்கு? அதுவும் நான் இதுவரை கேள்விப்படாத இத்தனை திவ்யமான க்ஷேத்திரத்துக்கு அழைச்சிண்டு வந்திருக்காய், அதுவே என்னை பிரமிப்பில் ஆழ்திடுத்து!”
கோவில் குளத்துக்கே புராணம் இருக்கும், குளம் எப்படி உருவாச்சு, அதைச் சுத்தி என்னென்ன நிகழ்வுகள் நடந்தது அதெல்லாம் தெரிஞ்சுக்காம கோவில்லேந்து கிளம்பப் பிடாதுன்னு நினைப்பேன். ஆனால் போர இடத்துலெல்லாம் இது சாத்தியமில்லை. குளமே இல்லாத இந்த ஊரில் நிச்சயமா முடியாது. அர்ச்சகர் தீபம் காமிச்சு தீர்த்தம் தரச்சே இந்த பெருமாள் ஏற்பட்ட விதத்தையும் பெண்ணையாத்தங்கரையில் அமைஞ்சதையும் நெட்ரூ பண்ணி வச்சுண்டா மாதிரி சொல்லிட்டர்.
இங்கே வரவா படிப்பு நன்னா வரத்துக்கும் அறிவுவளர்வதுக்கும் புத்திர பாக்கியத்துக்கும் வேண்டிப்பாளாம். சொல்லிட்டு நாங்க கவனிக்காதபோது ஆத்துக்கு போயிட்டர்.
நான் நினெச்சுண்டேன் இத்தனை கிட்டக்க ஆறு இருக்கச்சே குளம் தேவையில்லைன்னு வெட்டலையோ!. இல்லை இருந்ததை தூர் வாராம மூடிண்டுடுத்தா? கண்டு பிடிச்சுடணும்.
நான் இந்தக் கோவிலைப் பத்தி படிச்சவரைக்கும் சந்திரன் வரம் வேண்டி பெருமாளை சேவிச்சுட்டு வரம் கிடெச்ச சந்தோஷத்தில் ஒரு புஷ்கரணி வெட்டியதா கதை. கோவில் ஆபீஸில் கேட்டதுக்கு “குளம் இல்லை”ன்னுட்டா. “சந்திரனால் நிறுவப்பட்ட புஷ்கரணி ஒண்ணு இருக்கணுமே?” “சார் இந்த கோவில் எத்தனை புராதனமான கோவில்னு தெரியுமா? சிலர் 7000 வருஷம்கரா சிலர் 2000 வருஷம்கரா, நான் இங்கே வேலைக்கு சேர்ந்து 8 வருஷம்தான் ஆரது, சந்திரன் வெட்டினது எனக்கு எப்படி தெரியும்?”
யாருமே போகாத வெளிப் பிரகாரத்தையும் சுத்தி வந்தேன் காணலை. ஒரு வேளை மதில் சுவத்துக்கு வெளீலே இருந்ததா?. வெளீலேதான் ஆறே ஓடறதேன்னு பட்டது. முன்னாடி எப்படி கரை புறண்டு ஓடியிருக்கும்?
எனெக்கென்னமோ குளம் பாக்காததும் கரையில் உக்காராம திரும்பினதும் மனசுக்கு பாரமாச்சு. “இதெ பெருசு பண்ணாதே, அத்தனை திவ்யமா பெருமாளைப் பாத்தோமே!” பத்ரீ சொல்லிண்டே வந்தான். “நீ மூட் அவுட்டா இருக்காய், நான் வண்டியை ஓட்டரேன்!” உக்காந்துண்டான். “மணி 10தான் ஆரது, வா, 40 நிமிஷத்தில் திருவண்ணாமலை போயிடலாம்”னேன். அங்கே போர பிளான் கிடையாது, ஆனா அங்கே குளம் இருக்கே!
அங்கே போயாச்சு. அதுக்குள்ளே வெய்யில் ஏறிட்டது. சுவாமி தரிசனம் முடிஞ்சது. பெரீய குளம், ஆனா ஜனங்களை விட்டா அசிங்கப் படுத்திடுவான்னு சுத்தி இரும்பில் தடுப்பும் கேட்டில் பூட்டும் தொங்கித்து. எப்படிப் படியில் உக்கார முடியும்? “ஐ ஏம் மாதவன் சென்னையிலேந்து வந்திருக்கேன் தொறந்து விடுங்கோ”ன்னா கேக்கவா போரா? உஹூம்.
சரி வாடா ஆத்துக்குப் போலாம்னு கிளம்பிட்டோம். திருவண்ணாமலைலேந்து நேரா திண்டிவனம் போய் சென்னைக்குப் போலாம்தான். இப்போ போனா 3 மணிக்கு போயிடலாம். சீக்கிரம் போய் என்னத்தை சாதிக்கப் போரோம்? ஊர் சுத்தன்னு வந்தா நன்னா சுத்திப்பிடணும். அதுலேயும் இன்னும் ஒரு குளக்கரை கிட்டலை. “வாடா இங்கேயே ஏதாவது ஹோட்டலில் சாப்டூட்டு வந்தவாசி கிட்டே தென்னாங்கூர்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு, போலாம் போரச்சே 4 ஆகிடும் பாண்டுரங்கனை தரிசனம் செஞ்சுட்டு அங்கேந்து செங்கல்பட்டு போய் சென்னை போயிடலாம்”.
நிதானமா சாப்டூட்டு, காரிலேயே மொள்ள கிரிவலமும் செஞ்சுண்டு வழி கேட்டுண்டு 40கிமீ வேகத்தில் பாத்த மரத்தடீலேயெல்லாம் வண்டியை நிறுத்தி இளநீர் வாங்கிக் குடுச்சிண்டு தென்னாங்கூர் பொரச்சே சரியா மணி 330. நடை தொறக்க இன்னும் ஒரு மணியிருக்குன்னுட்டா. பாண்டுரங்கப் பெருமாள் கோவில் வடக்கத்தி ஸ்டைலில் கம்பீரமா.
வாசல்லே கடைகளில் இங்கேயும் அங்கேயும் சித்தே உலாத்திண்டிருக்கச்சே, இங்கே குளம் இருக்கான்னு கடைக்காரனை கேட்டுட்டேன். “குளம் என்ன சார் ஏரியே மூணு இருக்கு. ஆனா தண்ணீதான் இல்லை. அப்படி அந்தப்பக்கம் ஒண்ணு இந்தண்டை ஒண்ணு இன்னும் தள்ளிப்போனா இன்னொண்ணு. கை காமிக்கரான்”
“பத்ரீ வாடா போய்ப் பாக்கலாம்”னு கிளம்பினேன்.
கோவிலுக்கு வடக்கே ஒரு ஏரி. ரொம்பப் பெரீசுன்னு சொல்லமுடியாது. ஆழமாப் பட்டது ஆனா தண்ணி இல்லை. தெற்கே உள்ளதில் பலபேர் நின்னுண்டு வேலை நடந்திண்டிருந்தது. ஒரு 25பேர் இருக்கும், உள்ளே இறங்கி மண்ணை வெட்டி அள்ளிண்டு வந்து கரையை உசத்தரா. கால்வாசி வேலை ஆயிட்டதா பட்டது. சிரமம்தான். இவா வேகத்தை பாத்தா இன்னும் ரெண்டுமாசம் ஆகும். இன்னும் ஆட்கள் சேர்ந்துண்டா சீக்கிரம்.
சித்தே தள்ளி குடை பிடிச்சிண்டு ஒருத்தர். அவர்கிட்டே போய் இதை யார் செய்யரா, கோவில் நிர்வாகமா, அராசாங்கமான்னு கேக்க, “இல்லை பொதுமக்கள்தான் அடுத்த வருஷம் மழை ஆரம்பிக்கரத்துக்குள் தூர் வாரி நல்லா ஆழப்படுத்தி கரையையும் செம்மைப் படுத்திடணும்னு சிரமதானம். முதல்ல 50பேர் வந்தாங்க, அப்புரம் குறைஞ்சுகிட்டே வந்து இப்போ பாதிப்பேர்தான் தினம் காலை 8 மணிக்கு வராங்க 100பேர் கிடெச்சா ஒரே மாசத்தில் முடிச்சிடலாம்”.
“நீங்க?” லேசா இழுக்க, “நானும் இவங்க மாதிரிதான், நான் மண்வெட்டி, மண் அள்ளிப்போட வண்டிகள் அப்புரம் இவங்களுக்கு காபீ டீ மத்தியான சாப்பாடுக்கு என் சிலவில் ஏற்பாடு செஞ்சு தருவேன். எனக்கும் இறங்கி வெட்டணும், மண் அள்ளணும்னு ஆசை, ஆனா வலதுகை இளம்பிள்ளை வாதத்தில் இப்படி ஆகிடுத்து!” அப்போதான் குடை பிடிச்சிண்டிருந்த கையைக் காமிச்சர். வருத்தமா இருந்தது. சிலவும் செஞ்சுட்டு தானும் வேஷ்டியை மடிச்சுக் கட்டிண்டு இறங்கத் தயாரா இருக்கும் இவரைப் பார்த்ததும் “பத்ரீ வாடா நாமளும் வெயிட் செய்யர நேரத்தில் சித்தே உதவி செய்யலாம்.” திரும்பினா அவனைக் காணோம்.
பாத்தா மண் ரொம்பின வண்டியை மேட்டில் ரெண்டு பேரோட தள்ளிண்டுன்னா இருக்கன்! நானும் ஒரு மண்வெட்டியை எடுத்துண்டு இறங்கினேன்.
சாயங்காலம் 5 மணிக்கு எல்லாத்தையும் வச்சுட்டு, அந்தண்டை இருந்த குழாயில் கை கால் அலம்பிண்டு, சட்டையை கழட்டி உதறி மாட்டிண்டு கோவிலுக்குப் போலாம்னு கிளம்பரச்சே “இந்தாங்க!” ரெண்டு கிளாஸ் டீ எடுத்துண்டு வந்து தரர் அந்த மஹானுபாவன். “சார்! தினப்படி என்ன சிலவாகும்?” “ஒண்ணுமில்லை, இந்த உபகரணங்களெல்லாம் வாங்க 1 லக்ஷம் ஆச்சு, ஆனா இன்வெஸ்ட்மென்டா எடுத்துக்கணும், இன்னும் பல ஏரி குளங்கள் பராமரிக்க உதவும், அதைத் தவிர உணவுச் சிலவு நூறு பேருக்கு தினம் 6000. சாமான் வாங்கித் தந்தா போதும், சமைச்சுத்தர ரெடியா ஜனங்கள் இருக்கா”.
“சார் உங்க பேர் அட்ரெஸ் சொல்லுங்கோ என்னால் முடிந்த உதவி செய்யரேன்!” கேக்க “என் பேர் சந்திரன்”னு விஸிடிங்க் கார்ட் எடுத்துத் தந்தர்.
சந்திரனா? பொட்டில் அடிச்சாப்புலே பட்டது.
ஆதி திருவரங்கத்தில் புஷ்கரணி வெட்டின சந்திரன் இவர்தானோ! சந்திரனே இப்படி கைங்கர்யம் செய்யரப்போ நாம மாதவனாச்சே, பெருமாள் பேரையே வச்சிண்டு அராசாங்கத்தையும் மத்தவாளையும் குத்தம் சொல்லிண்டு திரியரேன்? கரையில் உக்காந்து காத்து வாங்க, தவளை விட குளம் தேவைப்பாட்டா இருக்கர குளத்தை நாமதான் தூர்வாரணும்.
சென்னைக்குப் போனதும் ஆகவேண்டியதை பண்ணணும்னு தோணித்து.
No comments:
Post a Comment