Sunday, August 23, 2020

திருவல்லிக்கேணி

🙏 நமஸ்காரம்    

60. திருவல்லிக்கேணி

மூலவர் - வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - வேதவல்லி
உற்சவர் - பார்த்தசாரதி
விமானம் - ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம்.
தீர்த்தம் - கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீஹம். கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம். 
நாமாவளி - ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடேகிருஷ்ணாய நமஹ

வழித்தடம்:

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் இரயில் பாதையில் திருவல்லிக்கேணி இரயில் நிலையத்தில் இறங்கி சிறிதோ நிமிட நடைபயணத்தில் இக்கோவிலை அடையலாம்.

பாசுரம்:

விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும் வேழமும்பாகனும்வீழ * 
செற்றவன்தன்னை * புரமெரிசெய்த  சிவனுறுதுயர்களைதேவை * 
பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு பார்த்தன்றன் தேர்முன் நின்றானை * 
சிற்றவைபணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே
பெரியதிருமொழி (1068)

பேயாழ்வார் -1,  திருமழிசை ஆழ்வார் - 1,   திருமங்கையாழ்வார் - 10 என 12 பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

பாசுரம் பதவுரை:

பெரு வில் விழவும் - சிறந்ததான தநுர்யாகமென்கிற உத்ஸவமும்
கஞ்சனும் - (அந்த உத்ஸவத்தை நடத்தின) கம்ஸனும்
மல்லும் - (அந்த கம்ஸனாலே ஏவி நிறுத்தப்பட்ட) மல்லர்களும்
வேழமும்பாகனும் - (குவலயாபீடமென்கிற) யானையும் அதன் பாகனும் (ஆகிய எல்லாம்)
வீழ செற்றவன் தன்னை - பங்கமடையும்படி த்வம்ஸம் பண்ணினவனும்,
புரம் எரி செய்த சிவன் உறு துயர் - திரிபுரமெரித்த சிவபெருமானடைந்த ப்ரஹ்மஹத்தி சாபத்தை
களை - களைந்தொழிந்த
தேவை - தேவனும்,
பற்றலர் வீய - சத்துருக்கள் மாளும்படியாக
கோல் கையில் கொண்டு - சாட்டையைத் திருக்கையிலே பற்றிக்கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை - பார்த்தசாரதியாய் நின்றவனும்
சிறு அவை பணியால் - சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லாலே
முடி துறந்தானை - உபேக்ஷித்தவனுமான பெருமானை
திருவல்லிக்கேணி - திருவல்லிக்கேணி யென்னும் க்ஷேத்ரத்திலே
கண்டேன் - ஸேவிக்கப்பெற்றேன்.

பாசுரம் விளக்க உரை:

இத்தலத்திலே ஸேவைஸாதிக்கின்ற எம்பெருமான் பார்ததஸாரதியாகையால், அப்பெருமானுடைய சிறுச்சேவகங்களைச் சொல்லியேத்துகிறார்.

விற்பெருவிழவு = கம்ஸன் தனது வில்லுக்குப் பெரிய பூஜை நடத்துவதாகச் செய்த மஹோத்ஸவம். வேழமும் பாகனும் மல்லர்களும் கஞ்சனும் மடியவே வில்விழவும் முடிந்ததாயிற்று.  வீழ என்றது- நாசமடைய என்றபடி; உபசாரவழக்கு.

கண்ணபிரானாகவும் இராமபிரானாகவும் திருவவதரித்து அக்காலத்து மஹான்களை வாழ்வித்தருளின எம்பெருமான், பிற்பட்டவர்களையும் வாழ்விக்கத் திருவல்லிக்கேணியிலே நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கிறபடியை அடியேன் ஸேவிக்கப்பெற்றே னென்றாராயிற்று.

ஸ்தல வரலாறு:

பிருந்தம் என்றால் துளசி ஆரண்யம் என்றால் காடு. எனவே பிருந்தாரண்யம் துளசி வனம் என்று பொருள் கொள்ளப்படும்.

பகவான் கண்ணன் துவாபரயுகத்தின்முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார். அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன. கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த, "ஆத்ரேய மகரிசி" தனது குருவான வியாச மகிரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார். அப்போது வியாசர், அதுவரை தாம் ஆராதித்து வந்த பார்த்தசாரதி பெருமாளின் திருமேனி உருவத்தைத் தந்து தென்பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் "விருந்தாரண்யம்" என்று அழைக்கப்பட்டது. அதன்படியே ஆத்ரேய மகரிசியும், விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார். கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால்அன்று முதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:

பிற்காலத்தில் "துண்டீரம்" என்ற நாட்டை "சுமதி" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி, அதுவே திரிந்து பிற்காலத்தில் "தொண்டை மண்டலம்" ஆயிற்று என்பர்.  அரசன் "சுமதி" திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள "திருவேங்கடமுடையான்" மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான். இந்த அரசனுக்கு, பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) சாரதியாக (தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தைத்தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே, சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான். அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார். அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான். திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப் போல் உணர்ந்தான். எனவே, "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோவில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.

தாயார் தரிசனம்:

முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக அடைய வேண்டி பிருகு மகரிசி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது அங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் தோன்றினார். பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு திருமணப்பருவம் வந்த போது, திருமால் அரங்கநாதராக இத்தலம் வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டார். குளத்திலுள்ள அல்லி மலரில் தோன்றிய தாயார் என்பதால் "திரு + அல்லிக்கேணி - திருவல்லிக்கேணி" என்று ஊர் பெயர் உண்டானது. திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே மந்நாதர் (என் கணவர்) என்றுரைத்ததால் மந்நாதர் என்ற பெயரும் உண்டு. எனவே திருமணக் கோலத்திலான ரங்கநாதராக (மந்நாதர்) இத்தலத்து எழுந்தருளினார்

ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளியுள்ள ஸ்தலம்:

ஐந்து மூலவர்கள்: 1) அருள்மிகு வேங்கடகிருஷ்ணர்(பார்த்தசாரதி) 2) அருள்மிகு மந்நாதர் (அரங்கநாதர்) 3) அருள்மிகு இராமபிரான் 4) அருள்மிகு கஜேந்திரவரதர் 5) அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்). இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தில் எழுந்தருளிருக்கும் 5 எம்பெருமானையும் மங்களாசாசனம் செய்துள்ளார்

அருள்மிகு மந்நாதர் ஸ்வாமி:

பிருகு முனிவர் பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருக்கோலத்தில் வேதவல்லித் தாயாரோடு இத்தலத்திலேயே நிரந்திரமாகக் காட்சி கொடுக்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வாறே செய்ய திருவுள்ளம் கொண்டார். இதைக் கண்டு மனம் மகிழ்ந்த அன்னை வேதவல்லித் தாயார் திருமாலை "மந்நாதர்" என்று அழைத்ததால் சுவாமிக்கு இந்த திருநாமமே உண்டானது.  
மந்நாதர் ஸ்வாமி சன்னதியில், ஸ்வாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர் ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்து கொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும்

திருமங்கையாழ்வார் பாசுரம்:
வேதத்தைவேதத்தின் சுவைப்பயனை விழுமியமுனிவர்விழுங்கும் * 
கோதிலின்கனியை நந்தனார்களிற்றைக்  குவலயத்தோர்தொழுதேத்தும் * 
ஆதியைஅமுதைஎன்னையாளுடையப்பனை ஒப்பவரில்லா 
மாதர்கள்வாழும் * மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே 
 பெரியதிருமொழி (1069)

அருள்மிகு இராமபிரான் ஸ்வாமி:

ஒரு சமயம் "கார்க்கியர்" என்ற மகரிசி மதுமானின் குடிலுக்கு வந்து, திருமாலின் இராமவதாரத்தைப் பற்றி உபதேசித்தார். அதைக் கேட்ட மதுமானுக்கு ராமபிரானையும், சீதா பிராட்டியையும் தம்பிகள் புடைசூழ சேவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரின் கனவில் தோன்றிய பரந்தாமன், விருந்தாரண்யம் சென்று தவம் செய்தால் ஆசை நிறைவேறும் என்றார். அவன் தவத்திற்கு மனமிறங்கிய திருமால் சீதாபிராட்டியுடன், தம்பிகள் புடைசூழ காட்சி தந்தார். மதுமானும் நிரந்தமாக இங்கு அருள்புரியும் படிக் கேட்க பெருமாளும் இராமக் கோலத்தில் அருள்புரிவதாக ஐதீகம்.

திருமங்கையாழ்வார் பாசுரம்:
பரதனும் தம்பிசத்துருக்கனனும் இலக்குமனோடுமைதிலியும் * 
இரவுநன்பகலும் துதிசெய்யநின்ற இராவணாந்தகனைஎம்மானை * 
குரவமேகமழும் குளிர்ப்பொழிலூடு குயிலொடுமயில்கள் நின்றால * 
இரவியின்கதிர்கள் நுழைதல்செய்தறியாத் திருவல்லிக்கேணிக்கண்டேனே. 
பெரியதிருமொழி (1074)

அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி:

ஒரு முறை விருந்தாரண்யம் என்கிற அல்லிக்கேணி அருகே பிருகு, அத்திரி, மரீசி, மார்க்கண்டேயர், சப்தரோமா, சாலி ஆகிய ஏழு முனிவர்கள் தவம் செய்தனர். அதில் சப்தரோமாவுக்கு ஒருசமயம் திருமால் கஜேந்திர மோட்சம் அளித்த திருக்கோலத்தைக் காண வேண்டும் என்ற ஆசை பிறந்ததாம். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானை, தாமரை மலரைக் கொய்வதற்காக பொய்கை புட்கரணி குளத்தில் கால் வைத்த போது, ஒரு முதலை அதன், காலைக் கவ்வியது. அப்போது யானை பெருமாளை நினைத்து குரல் கொடுத்து அலறியது. அப்போது பகவான் யானையின் துயரத்தைத் தீர்ப்பதற்காக தனது வாகனமான கருடன் மீது அவதரித்து, கஜேந்திரனைப் பிடித்திருந்த முதலையைத் தனது சக்ராயுதத்தினால் கொன்று, கஜேந்திர மோட்சம் அளித்தார். கஜேந்திரனுக்கு வரமளிக்க வந்த பரந்தாமன் என்பதால் கஜேந்திர வரதர் என்ற திருநாமம் பெற்றார். அந்த திருக்கோலத்தை நிரந்தரமாகக் காண வேண்டி சப்தரோமா விருந்தாரண்யத்தில் தவம் செய்த போது, அத்தவத்திற்கு மனமிறங்கிய பெருமாள் "அருள்மிகு வரதராசன் என்னும் தேவப்பெருமாள்" என்ற திருநாமத்தில் அவதரித்ததாக ஐதீகம்

திருமங்கையாழ்வார் பாசுரம்:
மீனமர்பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த * 
கானமர்வேழம் கையெடுத்தலறக்  கராஅதன்காலினைக்கதுவ * 
ஆனையின்துயரம் தீரப்புள்ளூர்ந்து சென்றுநின்றுஆழிதொட்டானை * 
தேனமர்சோலை மாடமாமயிலைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே. 
பெரியதிருமொழி (1078)

தெள்ளிய சிங்கர் (அழகிய சிங்கர்):

ஒருமுறை விருந்தாரண்யத்தில் தவம் செய்து வந்த அத்திரி மகரிக்கு திருமாலின் தரிசனம் கிட்டப்போகும் செய்தியை வசிட்டரின் மூலம் அறிந்து கொண்ட "விகட முனிவர்" விருந்தாரண்யம் வந்து அத்திரி மகரிசியுடன் சேர்ந்து வந்து தவம் செய்தார். இருவரும் திருமாலின் நரசிம்ம அவதாரத்தை மனதில் எண்ணியவாரே பல காலம் தவம் செய்தனர். அவரது தவத்திற்கு மனமிறங்கிய நரசிம்ம மூர்த்தி ஒருநாள் காட்சி தந்தார். அருள்மிகு நரசிம்ம சுவாமியின் உக்கிரமான கோலத்தைக் கண்டு நடுங்கிப்போன ரிசிகள் சாந்தமான நிலையில் காட்சி தரும்படி வேண்டினர். அதற்கு மனமிறங்கிய நரசிம்ம சுவாமி யோக நிலையில் யோக நரசிம்மராகக் காட்சி தந்து அருளினார். எம்பெருமானைக் கண்ட ரிசிகள் ஆனந்தம் பொங்க தரிசித்து, பிரம்ம கல்பம் முடியும் வரை திருவல்லிக்கேணி தலத்திலேயே தங்கியிருந்து, ஆணவம் கொண்ட அசுரனான இரணியனை கொல்ல இப்படி ஒரு அதிசய வடிவமாகவும், உக்கிர கோலமாகவும் அவதாரம் எடுத்ததைப் போல, அதர்மம் செய்யும் எவரையும், எவ்வடிவிலும் தோன்றி அழிப்பேன் என்பதை உணர்த்தும் வகையில் கோவில் கொண்டு அருளும்படி வேண்டினார்கள். மேலும், நாடி வரும் அடியவர்களின் குறைகளையும் தீர்க்கும்படி வேண்டினார்கள். பெருமாளும் அவ்வண்ணமே "தெள்ளிய சிங்கர்" என்ற திருநாமத்தில் யோக நரசிம்மராகக் குடிகொண்டார் என்பது வரலாறு.

திருமங்கையாழ்வார் பாசுரம்:
பள்ளியிலோதிவந்ததன்சிறுவன் வாயில்ஓராயிரநாமம் * 
ஒள்ளியவாகிப்போத ஆங்குஅதனுக்கு ஒன்றுமோர்பொறுப்பிலனாகி * 
பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப்  பிறையெயிற்றனல் விழிபேழ்வாய் * 
தெள்ளியசிங்கமாகியதேவைத்  திருவல்லிக்கேணிக்கண்டேனே.
பெரியதிருமொழி (1075)

இவ்விதம் ஐந்து மூர்த்திகளும் ஒருங்கே எழுந்தருளியிருப்பது. இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும்தான்.

சிறப்பு:

மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணன் 9 அடி உயரத்துடன் சாரதிக்குரிய மீசையுடன், அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள் அர்ச்சுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் ருக்மணி தாயார் இருக்கிறார். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் குடும்ப சமேதராக அருள்புரியும் அற்புதத் திவ்யதேசம்.

தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் முகத்தில் இன்றும் தரிசிக்கலாம். திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை உணர்வர்.

ஆதிகாலத்தில், மூன்றுமுறை இந்த பார்த்தசாரதி ஸ்வாமியை உலோகத்தில் வார்த்தும், முகம் மட்டும் பருக்கள் நிறைந்து காணப்பட்டது. என்ன இப்படி ஆகிவிட்டதே என்று சிற்பி கவலைப்பட, ‘பாரதப் போரில் என் முகம் அம்பால் காயப்பட்டது. அதை நினைவுறுத்தும் வண்ணமாகவே இந்த இடத்தில் நான் இப்படி எழுந்தருளியிருக்கிறேன்’ என்று சிற்பிக்கு, வேங்கடகிருஷ்ணன் கனவில் ஆறுதல் சொன்னதாக செய்தி உண்டு.  இடதுகால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் நகம் இருக்காது. பாரதப் போரில் பீஷ்மர் சரணாகதிக்காக அம்புவிட, அந்த அம்பு கிருஷ்ணரின் அந்த விரல் நகத்தைக் கீறியது என்றும் சொல்கிறார்கள். பார்த்தசாரதியின் இடுப்பில் யசோதையால் கயிறு கட்டப்பட்ட தழும்பு. 

கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.

இராமாநுஜர் திருஅவதாரம்:

பெரிய திருமலை நம்பிகள் (ஸ்ரீசைலபூரணர்) என்பவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். மூத்த காந்திமதி அம்மையார் (பூமிபிராட்டி), ஸ்ரீபெரும்பந்தூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாளுக்கும், இளையவரான பெரியபிராட்டியை மதுரமங்கலம், கமலநயன பட்டர் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார். திருக்கச்சி நம்பிகள் ஸ்ரீபெரும்பூதூரில் வாழ்ந்த கேஸவப்பெருமாள், இல்லத்தில் இளைப்பாறி வருவது வழக்கம். சிலகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருந்த கேஸவப்பெருமாள் ஒருநாள் தன் மனக்குறையை நம்பிகளிடம் பகிர்ந்துகொண்டர்.  நம்பிகள் வரதராஜ பெருமாளிடம் விண்ணபிக்க, பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வேதவல்லித்தாயார் திருதலத்தில் புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்ய பணித்தார். கேஸவப்பெருமான் காந்திமதி அம்மையார் தம்பதிகள் பல திவ்யதேஸங்களுக்குச் சென்று சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வேதவல்லித்தாயாரை தரிசித்து தங்களுக்கு புத்ர பாக்யம் வேண்டி புத்ர காமேட்டி யாகம் செய்து ஸ்ரீபெரும்பூதூர் திரும்பினர். வேங்கட கிஷ்ணன் அருளால், காந்திமதி அம்மையார் கருவுற்றாள். கி.பி. 1017, பிங்கள ஆண்டு சித்திரை மாதம், சுக்ல பக்ஷ பஞ்சமி, திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் வியாழக்கிழமை அந்த தம்பதிகளுக்கு யதிராஜவல்லி சமேத ஆதிகேசவப்பெருமாள் சேவை சாதிக்கும் ஸ்ரீபெரும்மந்துரில் இராமாநுஜர் மகனாகப் பிறந்தார்.

பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார் பாரதியார் 

இத்திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமிக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. "யோக நரசிம்மர்" யோக பீடத்தில் வீற்றிருந்தவாறு சேவை சாதிக்கிறார். தினந்தோறும் அதிகாலையில் இவருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. இவரது சன்னிதிகளில் உள்ள மணிகளில் ஒலி எழுப்பும் நாக்குகள் இல்லை. அருள்மிகு நரசிம்ம சுவாமி யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்பது ஐதீகம். ஆகவே, இச்சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் பொருத்தப்பட்டுள்ள மணிகளில் கூட ஒலி எழுப்பும் நாக்குககள் இல்லை.

வைணவத் தலங்களில் முக்கிய மூன்றான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற முத்தலத்துப் பெருமாள்களும் இங்குள்ளது ஒரு சிறப்பு.

பார்த்தசாரதி பெருமாள் சாரதிக்கே உண்டான மீசையுடன் காணப்படுகிறார். மீசை வைத்த பெருமாளை நாம் வேறு எங்கும் காண முடியாது. தேரோட்டிக்கு கம்பீரத்தை உணர்த்துவது மீசை. இவருக்கு "மீசை பெருமாள்" என்றும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசிக்கு முன் ஆரம்பிக்கும் பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.

பெருமாளின் பஞ்சாயுதங்களில்சங்கும், சக்கரமும் பிரதானமானவை. ஆனால், இக்கோவிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. மகாபாரத போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி கொடுத்திருந்தார் கிருஷ்ண பரமாத்மா. எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி கொடுக்கிறார். போரை அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். இத்தகைய பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களில் காட்சி தரும் பெருமாள், இங்கே கிருஷ்ணராகிய மானிட ரூபத்தில் இருப்பதால் இரண்டு கரங்களே உள்ளன
.
திருமயிலை எனப்படும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் ஒரு காலத்தில் ஒரே ஊராகக் குறிக்கப்பட்டன. மயிலை சிவஸ்தலம். அல்லிக்கேணி விஷ்ணு ஸ்தலம். மயிலைத் திருவல்லிக்கேணி என்பதே திருமங்கையின் அமுதவாக்கு அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை உடையமையால் திருவல்லிக்கேணி என்ற பெயருண்டாயிற்றென்பர்.

திருமலை வெங்கடேசனே வேங்கட கிருஷ்ணனாக எழுந்தருளியிருப்பதால் இரண்டாவது திருப்பதி என்றழைக்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள் திருப்பதியைப் போல் இங்கும் விசேடம்.

தெள்ளிய சிங்க பெருமாள் கோவில் தெரு என்று ஒரு தெரு திருவல்லிக்கேணியில் உள்ளது. அது நாள் அளவில் மருவி துளசிங்க பெருமாள்  கோவில் தெரு என்று என்று ஆகிவிட்டது.

இத்திருக்கோவிலில் அருள்மிகு யோக நரசிம்மர் யோகாசனத்தில் யோக நிலையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்தியான தெள்ளிய சிங்கர் (அழகிய சிங்கர்) ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம், அபய, ஆஹ்வான அஸ்தத்துடன் சேவை புரிகிறார். இத்திருக்கோவிலில் தன்னை சேவிக்க வரும் பக்தர்கள் நரசிம்மர் என்று அஞ்ச வேண்டாம். தானே பக்தர்களை இடது திருக்கரத்தால் அழைத்து அபயம் கொடுப்பதாக அழகிய சிங்கர் காட்சி தருகிறார். அது என்ன இடது கையில் விசேஷம்? இடது கையில் ஆஹ்வானம் அஸ்தத்துடன் காட்சி கொடுக்கிறார். ஆஹ்வானம் என்றால் அழைப்பது என்றும் பொருள். என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம், நானே உன்னை அழைத்து அபயம் அளிக்கிறேன் என்ற திருக்கோலத்தில்காட்சி கொடுக்கிறார் யோக நரசிம்மர். பக்தர்கள் இவர் சன்னதியை வலம் வந்து பிரார்த்தனை செய்வது இத்தல மகிமை. வலம் வரும்போது சன்னதி பின்புற மேடையில் உப்பு, மிளகு சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. இதன் ஐதீகம் பக்தர்களுக்குத் துன்பம் உப்பு போல் கரைந்து, நோய் மிளகு போல் உதிர்ந்து விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு செலுத்துகின்றனர். "தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே" என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட  இப்பெருமாள் நோய் தீர்க்கும் பெருமாள். இவரை வழிபட்டால் நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, மன நிம்மதியுடன், பகைவர்கள் பயமில்லாமல் ஆனந்தமாக வாழ்வார்கள் என்பது கண்கூடான உண்மையாகும்.

இங்கு எழுந்தருளியிருக்கும் ஐந்து எம்பெருமான்களுக்கும் தெப்ப உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும்.

இந்த திருத்தலத்தில் பேயாழ்வார் திருவீதி என்று ஒன்று உள்ளது.  அந்த வீதியில் ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு பேயாழ்வார்க்கு தனி உற்சவம் உண்டு.

திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர்,  கோயில் தோசை, காஞ்சிபுரம் இட்லி ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/WLdQnumOhgI

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/125343399266096/?sfnsn=wiwspmo&extid=l0lU3NmYaccUyu1F

No comments:

Post a Comment