Friday, August 21, 2020

திண்ணையின் நினைவோடு

திண்ணையின் நினைவோடு...

கும்பகோணத்தில் பல வீடுகளில் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது திண்ணைகள் தான் 

இரண்டு திண்ணைகள் ஒன்று சிறியதாகவும் மற்றொன்று மிக நீளமானதாக இருக்கும்

 திண்ணையின் ஓரங்களில் ஒரு தலையணை உயரத்திற்கு சிமெண்டால் ஒரு மேடான பகுதி கட்டியிருப்பார்கள் அதாவது வீட்டிற்கு ஒரு மாப்பிள்ளை யானவர் தலையணி கேட்க சங்கோஜப்படாமல் படுப்பதற்காக அதை செல்லமாக மாப்பிள்ளை தலையணை என்று சொல்வது உண்டு 

பொதுவாக காலையிலிருந்து மதியம் வரை அது வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கு உருவாக்கப்பட்டிருக்கும் 

மாலை நேரங்களில் வீட்டு தலைவர்களோ அல்லது பெண்மணிகளோ அமர்ந்து ஊர்க்கதை பேசுவார்கள் 

திண்ணையின் மேலே வாசற்படிக்கு இருபுறமும் அகல் விளக்கு வைக்க பிறைகள் இருக்கும் 

நீளமான திண்ணை மூலையில் ஒரு மூங்கில் தட்டியோ சிறிது வசதியானவர்கள் என்றால் ஒரு சிறிய அறை போன்ற அமைப்போ கட்டப்பட்டிருக்கும் அது பிரத்தியேகமாக "அந்த " நாட்களுக்கு மட்டும் 

விடுமுறை நாட்களில் குழந்தைகள் பாண்டி விளையாட்டு விளையாட பெரிய திண்ணைதான் 

அதை தவிர பரமபதம் சோழி மற்றும் விழாக்காலங்களில் இரவு நேரங்களில் பெரியவர்களின் சீட்டுக் கச்சேரி பன்னீர்ப் புகையிலை நெய் சீவல் மற்றும் தாம்பூலத்துடன் களைகட்டும் 

திண்ணையில் உள்ள கம்பங்களை பிடித்துக்கொண்டு மியூசிக்கல் சேர் போல நான்கு தூண் விளையாட்டு அமர்க்களமாக இருக்கும் 

வெயில் காலங்களில் சிலர் வெட்டிவேர் வைத்து தைக்கப்பட்ட திரைச்சீலையை தொங்க விடுவது உண்டு 

அதேபோல குளிர்காலங்களில் கத கதப்பாக கித்தான் என்று அழைக்கப்படும் கோணி சாக்கால். ஒரு மூங்கில் கழியில் சுருட்டி வைக்கப்பட்ட படுதாவும் உண்டு

பெரும்பாலும் ஒற்றை ஆள் படுக்கக் கூடிய சிறிய திண்ணை அந்த வீட்டு தாத்தாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 

சினிமாவிற்கு இரவு காட்சி சென்று திரும்பும்போது வீட்டில் உள்ளவர்களை சிரமப் படுத்தாமல் இருக்க திண்ணை யிலேயே எங்களுடைய படுக்கைகளை சுருட்டி போட்டுவிட்டு சத்தமில்லாமல் பாதி இரவில் வந்து படுத்துக் கொள்வோம் 

ஆக எந்த ஒரு மின்விசிறியோ அல்லது குளிர்சாதனமோ இல்லாத திண்ணையில் படுக்க உள்ளம் ஏங்கினாலும் உடல் ஒத்துழைக்குமா என்கிற சந்தேகத்துடன் 

துக்கமாக தூங்க செல்கிறேன்

No comments:

Post a Comment