🙏 நமஸ்காரம்
64. சோளசிம்மபுரம் என்னும் திருக்கடிகை
மூலவர் - யோக நரசிம்மர், அக்காரக்கனி (வீற்றிருந்த திருக்கோலம்)
தாயார் - அம்ருதபலவல்லி
உற்சவர் - பக்தோசித பெருமாள்
விமானம் - ஸிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம், தக்கான் குளம், பாண்டவ தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ
வழித்தடம்:
அரக்கோணம் புகைவண்டி நிலையத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சோளசிம்மபுரம் எனவும், சோளிங்கர் எனவும் கடிகாசலம் எனவும் வழங்கப்பெறும்.
பாசுரம்:
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே
- பெரிய திருமொழி (1731)
முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
பாசுரம் பதவுரை:
மிக்கானை - சிறந்தவனும்
மறை ஆய் விரிந்த விளக்கை - வேதமாக விரிவுபெற்ற விளக்குப் போன்றவனும்
என்னுள் புக்கானை - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனும்
புகழ் சேர் - கீர்த்தி வாய்ந்தவனும்
பொலிகின்ற பொன்மலையை - ஜ்வலிக்கின்ற பொன் மலை போன்றவனும்,
தக்கானை - தகவுடையவனும்
கடிகை தட குன்றின் மிசை இருந்த - கடிகை யென்னும் பெரிய திருமலையின் மீது எழுந்தருளியிருக்கின்ற
அக்காரக் கனியை - அக்காரக் கனியுமான திருக்கண்ணபுரத்தெம்பெருமானை
அடைந்து உய்ந்து போனேன்-.
பாசுரம் விளக்க உரை:
மிக்கான் - மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. “மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு; “வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது; ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. (எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகாரவாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்; வாச்யவாசகபாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன.
பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும்.
தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம். பரமதயாளு என்றபடி.
கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.
-ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். இவர்கள் இங்கு வந்து தவம் இருந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் உடனடியாக வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர்கள் இங்கு தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதை போக்கி வை,” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், “”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என்பக்தர்களின் குறைகளை போக்கி வா,”என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் “யோக ஆஞ்சநேயராக’ சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.
பெரிய மலைக் கோவில்:
பெரிய மலையில் திருக்கோவில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 1305 படிகள் ஏறிச் சென்று தான், யோக நரசிம்மர் அருளைப் பெற முடியும். வடக்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டு மிக அழகாக கோவில் அமைந்துள்ளது.
பொதுவாக பெருமாள் கோவில்களில் கருவறையிலேயே மூலவர், உற்சவர் ஆகிய திருமேனிகளை வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கியபடி, நமக்கு சேவை சாதிக்கிறார். மூலவர் அருள்மிகு நரசிம்மசுவாமி நான்கு கரங்களுடன், சங்கு சக்கராதாரியாக, இரு கால்களும் மடித்து யோகாசனத்தில் அமர்ந்தபடி யோக தவத்தில் வீற்றிருக்கிறார். இதன் காரணமாகவே யோக நரசிம்மர் என்ற திருநாமம் பெற்றார். திருமகள் தாயாரான அருள்மிகு அமிர்தபலவல்லி தாயார், பெரிய மலையில் பெருமாளுக்கு அருகில் கிழக்கு முகமாகத் தனிச் சன்னதியில் காட்சி தந்து அருள்கிறார்.
சிறிய மலைக் கோவில்:
சிறிய மலையில் அஞ்சனையின் மைந்தனான அருள்மிகு ஆஞ்சநநர் சுவாமி திருக்கோவில் கொண்டுள்ளார். இம்மலை 350 அடி உயரமும், 406 படிகளைக் கொண்ட மலைக் கோவிலாகும். மலையின் மீது அரங்கநாதர், இராமர், சக்கரத்தாழ்வார்ஆகியோர் சன்னதிகளும், தக்கான் தீர்த்தக்குளமும் அமைந்துள்ளது. இராம பக்தரான அருள்மிகு ஆஞ்சநேயப் பெருமாள் யோகாசனத்தில் யோக ஆஞ்சநேயராக நான்கு கரங்களில், சங்கு சக்கரங்களுடன் மேற்கு நோக்கி யோக நரசிம்ம சுவாமியை சேவித்தவாறு அருள்கின்ற காட்சியானது வேறு எங்குமே காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
சிறப்பு:
பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். முதலில் பெருமாளை தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (24நிமிடம்) இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். சுவாமி ஸ்ரீ சாளக் கிராம மாலை அணிந்துள்ளார். இவரது வடிவத்தை சிலா வடிவம் என்கின்றனர். தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.
யோக நரசிம்மரின் உற்சவரான அருள்மிகு பக்தோசித சுவாமி மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் இவருக்கே சிறப்பான முறையில் நடைபெறுகிறது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். இது 1500 படிகள் கொண்டது. இவரைத் தரிசித்துவிட்டுத்தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.
சிறிய மலை : பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது எழில்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு கைகள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இருகைகளில் ஜபமாலை உள்ளது.சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து எண்ணிய வரம் பெறலாம்.
தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்ய புருஷர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை இடைவிடாது தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே தக்கான் குளக்கரையிலமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த கருட வாகனத்தில் காஞ்சிப் பெருமாள் இவருக்குக் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாசர் சுவாமிகள் சேவை சாதிப்பதாய்க் கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.
இதனைச் சோழசிங்கபுரம் என்று சைவர்கள் அழைப்பர். ஏனெனில் முன்பு இத்தலத்தில் பெருமாளோடு சிவனும் சேர்ந்து கோயில் கொண்டிருந்தாராம். இப்போது சிவனுக்கு தனிக்கோவில் உள்ளது. தொட்டாச்சார்யார் தான் ஒரே கோவிலில் இருந்த சிவனைப் பிரித்து தனிக்கோவில் அமைத்தவர் என்று கூறுவர். தொட்டையாசார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.
இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு மகிழ்ச்சியுடன் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாகும்.
ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து இப்பெருமாளை வணங்கி நரசிம்மனின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கட்டத்தில் தானும் ஒருவனாக நின்ற புதன் (நவக்கிரகங்களில் ஒருவன்) துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இக்கடிகாசலத்தில் பாண்டவதீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபந்தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணங்கூறும்.
அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒருமுறை முனிவர்க்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால். தமிழகத்தில் எம்பெருமான் அமர்ந்துள்ள மலைகளிலேயே இது மிகச் சிறப்பானதாகும்.
ஏகசிலா பர்வதமென்றும் இதற்கு பெயர். பிரிவுகளும் சேர்க்கைகளுமின்றி ஒரே கல்லில் அமைந்த சிலைபோல் ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் ஏகசிலா பர்வதம்.
பெருமாளுக்கு ஒவ்வொரு திவ்ய தேசத்திலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு நியமம் உள்ளது. சில தலங்களில் உண்டியல் போடுவது. சில தலங்களில் மொட்டை. ஆனால் இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது)
மலைமேல் இருக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு பக்தோசித ஸ்வாமி என்ற பெயருண்டு. பக்தர்கள் உசிதப்படி அருள்பவர் என்பது பொருள். அடிவாரத்தில் உள்ள பக்தோசித சுவாமிக்கு தக்கான் எனப் பெயர். தீர்த்தத்திற்கும் தக்கான் குளம் என்பதே பெயர். திருமங்கையாழ்வார் இச்சொல்லை எடுத்தாண்டுள்ளார்.
அக்காரக் கனி என்றால் என்ன? இனிப்பே உருவான வெல்லமே மரமாகப் பூத்துக் காயாகி கனியாகி நமக்கு கிடைக்கப்பெற்றது போல் சுவைமிக்க கனியாகும். அது போன்றவராம் இப்பெருமாள் (அதாவது வேண்டிய மாதிரியே வரம் கொடுப்பவர் என்பதுதான்)
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/zcs5gUS3_0U
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/127116492422120/?sfnsn=wiwspmo&extid=ChNgJZy6zYCrsh5E
No comments:
Post a Comment