ஆமருவி தேவநாதன்
‘தலைய சரியா காமிக்கல்லேன்னா திருகிப்புடுவேன் படவா’
இந்தக் குரலைத் தொடர்ந்து, ‘வலிக்கறதுப்பா’ என்று அழுகைக் குரல் கேட்டால், எண்ணெய் தேய்த்துக் குளியல் வைபவம் நடக்கிறது என்று நெய்வேலியில் அனேகமாக எல்லாருக்கும் தெரியும். மேற்சொன்னது அப்பாவின் டிரேட் மார்க் அச்சுறுத்தல்.
ஏதாவது சனிக்கிழமை ஸ்கூல் லீவு விட்டுவிட்டால் அன்று ‘எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்’ என்பது விதி. விதி என்பதை சற்று அழுத்தமாக வாசிக்கவும். ஏனெனில் அழுந்தித் தேய்த்து இருக்கும் கொஞ்சம் தலைமுடியும் கையோடு வந்துவிடும் அளவிற்கு நடக்கும் அந்த உற்சவத்தை நினைத்தால் இப்போதும் கழுத்து வலிக்கிறது.
சனிக்கிழமை லீவு விடாமல் ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ் என்று வைத்துத் தொலைக்க வேண்டுமே என்று ஸத் ஸங்கம் பிள்ளையாரிடம் வேண்டாத நாள் இல்லை. அனேகமாக லீவு வேண்டாம் என்று வேண்டிய ஒரே வீடு எங்கள் வீடுதான்.
வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே இந்த ‘எண்ணெய்ச் சாமி’ பிடித்துவிடும். ‘கார்த்தால எண்ணெயக் காய்ச்சி வெச்சுடு, அதுல கொஞ்சம் மிளகு, இஞ்சி போட்டு (இன்னும் விசேஷம்) புகை வர்ற அளவுக்கு காய்ச்சு’ என்று ஆணைகள் பறக்க, அம்மா கசாப்புக் கடையில் உள்ள ஆடுகளைப் போல் எங்களைப் பார்ப்பாள்.
நாளைக் காலையில் நரகம் தான். அது விதிப்படி நடக்கட்டும். அதற்காக முந்தின நாள் காலையில் இருந்தே அதைப் பிரஸ்தாபிப்பானேன் என்பது இன்று வரை புரியவில்லை.
எண்ணெய் தேய்க்கும் உற்சவத்தை வார்த்தைகளால் சொல்லி மாளாது. அனுபவித்தால் மட்டுமே அதன் முழு வீரியம் புரியும்.
காலை எழுந்ததில் இருந்தே ‘எண்ணெய் தேய்க்கணும், எண்ணெய் தேய்க்கணும்’ என்று நாம சங்கீர்த்தனம் போல் ஆலாபனை பண்ணியவாறே ஹிந்து பேப்பரை அடியும் முடியும் தெரியா ஆண்டவனை வியாக்யானம் செய்வது போல் முதல் பக்கம் இடது கோடி அட்வடைஸ்மெண்ட்ல் துவங்கி, கடைசிப் பக்கம் வலது கோடி ‘பிரிண்டட் அண்ட் பப்லிஷ்ட் பை கஸ்தூரி அண்ட் சன்ஸ்’ வரை கரதலபாடமாகும் வரை வாசிக்கும் அந்த ஒரு மணி நேரமும் மந்திர உச்சாடணம் போல் எத்தனை ஆவர்த்தி முடியோ அத்தனை ஆவர்த்தி நடக்கும் . வீடு முடிவதும் எண்ணெய் கொட்டினாற்போல், காலை வைத்தால் வழுக்கி விழுந்துவிடும் அளவிற்குப் பயத்துடன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி நானும் டெங்கும் அமர்ந்திருப்போம். ‘காலங்கார்த்தால எழுந்து இந்த எண்ணெய் தேய்க்கற கண்றாவிய முடிச்சுட்டு அப்பறம் ஹிந்துல ஆபிச்சுவரி தேட வேண்டியது தானே?’ என்கிற நியாமன, தர்க்கபூர்வமான எண்ணம் தோன்றினாலும் அதைச் சொல்ல / கேட்க வழியில்லாமல் வீராவேசமாக மனசிற்குள்ளேயே கோர்ட் ஸீன் போல் பேசிக்கொண்டிருப்பேன்.
‘தோ பார், எனக்கு நாழியாறது. ஒடனே வந்து எண்ணெய் தேய்ச்சுண்டா மணமா இருக்கலாம். இல்லேன்னா வீறு வீறுன்னு வீறீப்புடுவேன்’ - இதற்கு மேலும் பம்மிக்கொண்டிருந்தால் பலன் கொரோனா வருஷத்துப் பலன் போல் ஆகிவிடும் என்பதால் வரிசையாக நடக்கும் எண்ணெய்ப்படி உற்சவத்தின் அனுபவம் பின்வறுமாறு.
ஸ்டூலின் மேல் உட்கார்ந்திருக்கும் அப்பா, அவர் கையில் சுடச்சுட எண்ணெய், தரையில் குந்தியவாக்கில் நான். ‘நர நர’ என்று மாவு மிஷின் அரிசி அறைப்பது போல் எண்ணெய் தலையில் தேய்க்கப்படும் ( அறைக்கப்படும் என்பதுமே சரி என்றே தோன்றுகிறது). கழுத்தைத் திருப்பி, ஒடித்து, திருகி, தலை மயிரைப் பிடித்து உலுக்கி, கொத்தாகத் திருகி, சுழற்றி, அதனால் குந்திய நிலையிலேயே நானும் திருகுண்டு, மித்தத்தில் உள்ள கரையான் பொந்து, எலி வளை, பாம்பு புத்து, எண்ணெய்க் கிண்ணம், சோப்பு டப்பா, வென்னீர்த் தவலை என்று மாறி மாறி கண்ணில் படும் படி, பூமி தன்னைத் தானே சுற்றுவது போல் 360 டிகிரி சுற்றுவதைப் போலச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் ‘இந்த உலகில் நம் சக்தியினால் ஆவது ஒன்றும் இல்லை. எல்லாம் தேவநாதன் (அப்பா) செயல். நடக்கும் நடப்பதை ஒரு மவுன சாட்சியாகப் பார்ப்பது மட்டுமே நம்மால் முடியும்’ என்கிற உயரிய வேதாந்தக் கருத்துகள் புரியத்துவங்கின இடம் நெய்வேலியில் திருநெல்வேலி சாலை வீட்டின் முற்றம். அதுவே என் போதி மரம். ஞான ஸ்நான கேந்திரம்.
இப்படியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று இடி விழுந்தாற்போல் முதுகில் ‘வீர்’ என்று தாளப்பயிற்சியும் நடக்கும். காரணம் என்னவென்று கேட்டு, அதற்கு இன்னும் இரண்டு அனுக்ரஹங்கள் முதுகில் வேண்டாம் என்று ‘இதுவும் கடந்து போகும்’ என்ற ‘ஸ்திதப் பிரக்ஞ’ அனுபவத்துக்கான பயிற்சியாகவே அந்த எண்ணெய் தேய்த்தலை அனுபவித்துள்ளேன்.
தன்னைச் சுற்றுவது நின்றுவிட்டது எனில் எண்ணெய் தேய்த்தாகிவிட்டது என்று உணர்ந்து மித்தத்தின் ஓரத்தில், கரையானுக்கு மிக அருகில் அமர்ந்தவாறு பாம்பு ஏதாகிலும் வருகிறதா என்று பார்க்கும் அந்த நேரத்தில் கண்ணில் எண்ணெய் இறங்கும். ‘குளிக்கலாம்பா’ என்று ஆலாபனை செய்யத் துவங்க, ‘இரு இரு, எண்ணெய் இன்னும் ஊறல்ல’ என்று ‘ஞான ஸ்நானத்திற்கு இன்னும் வேளை வரவில்லை. இன்னும் பக்குவம் போதாது’ என்கிற மாதிரியான அனுக்ரஹ பாஷணங்கள் ஒலிக்கப்பெறும் வேளையில், கண்ணில் எண்ணெய் முழுவதும் இறங்கி, வெளி உலகில் என்ன நடக்கிறதென்றே தெரியாத அந்த ‘உள்ளோளி’ தேடும் வேளையில், அருகில் சின்னதாகச் சலசலப்பு கேட்க, ‘அம்மா பாம்பு’ என்று அலறியாவாறு எழுந்து, வென்னீர்த் தவலையைச் சாய்த்து, வென்னீர் அடுப்பில் கொட்டி, நெருப்பு அணைந்து, அதற்கான ருத்ர தாண்டவப் பலனாய் முதுகில் இன்னும் சில ‘வீர்’ கள் உணரும் வேளையில் யம லோகம் என்று ஒன்று ஆகாசத்தில் எங்கும் இல்லை, எல்லாமே வீட்டிற்குள்ளே தான் உள்ளது என்கிற அந்த ஞானப் பிரகாஸ மந்தகாசத்தில் ஒளிரும் நிலையே சுத்தாத்வைத சச்சிதானந்த நிலை என்பது என் அன்னாளைய தியரி. அந்த ஞான ஸ்நான தருணம் உணரவேண்டிய ஒன்று. எழுத்தில் வடிப்பது இயலாது.
ஒருவழியாக வென்னீர் அடுப்புக் குருக்ஷேத்திரங்கள் முடிந்து, ஓரளவு அமைதி திரும்பிய எல்.ஓ.சி. போல மித்தம் தனது பழைய நிலைக்குத் திரும்பும் வேளையில், வென்னீர் மீண்டும் தனது வென்னீர் நிலையை அடையும் வரை அமர்ந்த நிலையில், கண்களை மூடி ‘நமக்கு மட்டும் இப்படிக் கஷ்டங்கள் வருகிறதா, இல்லை, தாசரதிக்கும் இப்படித்தானா?’ என்று கேட்கவேண்டும் என்று மனதில் டைரி எழுதிக்கொண்டிருக்கும் போது, ‘உள் அடுப்புல வென்னீர் போட்டிருக்கேன். குளிக்க வரலாம்’ என்ற அம்மாவின் வார்த்தைகள் சற்று ஆறுதல் தந்தாலும், ‘சீயக்காய் மானுட வதைப் படலம்’ துவங்க இருப்பதை நினைத்து நெக்குறுகி ‘எல்லாம் விதி. பேசாம சித்தப்பவாத்துக்குப் போயிருந்தா கணக்கு போட்டு குட்டு வாங்கி அந்தக் கஷ்டம் அரை மணி நேரத்துல முடிஞ்சிருக்கும். இப்ப ஒரு முடிவே இல்லாத துவந்த யுத்தமா நடக்கற இந்த எண்ணெய் தேய்க்கற ஹிம்ஸைலேர்ந்து தப்பிச்சிருக்கலாம். அடுத்த தடவைலேர்ந்து வெள்ளிக் கிழமை சாயந்திரமே சித்தப்பாவாத்துக்குப் போயிடணும்’ என்ற ஞானம் உதிக்கத் துவங்கும் நேரம் தலையில் சீயக்காய் விழும்.
சீயக்காய் கூட பரவாயில்லை. அரப்பு என்றொரு வஸ்து உண்டு. அதை எதனால் செய்தார்கள் என்று இன்று வரை தெரியவில்லை. நம் கழுத்தை அறுப்பதால் ‘அரப்பு’ என்று பெயர் வைத்தார்களோ என்று அப்போது தோன்றியது. ‘கரக் கரக்’ என்று தேய்த்து, அரப்பு முகத்தில் வழிந்து, கண்ணில் நிறைந்து, நெருப்பாய் எரிந்து, குளித்து முடிந்து வருகையில் விஜயகாந்த கண் போல் ஆகி, ‘என்னடா மெட்றாஸ் ஐ’ வந்திருக்கா என்று கார்த்தி மாலையில் கேட்கும் வரை நீடீத்திருக்கும் அந்தப் பரமானந்த நிலையைச் சொல்ல வார்த்தையில்லை.
அரப்புப் படலம் முடிந்தால் பிரச்னை முடிந்தது என்று அர்த்தம் இல்லை. ‘தலையைத் துவட்டுகிறேன் பேர்வழி’ என்று சலூன் போக வேண்டிய வேலையே இல்லாமல் ஒரு வறட்டுத் துண்டினால் தலையை அரைத்து, கொஞ்ச நஞ்சம் உள்ள மயிரையும் பிய்த்து எறியும் ஜைனத் துறவி போன்ற செயலால் ’வாழ்க்கையில் நம் கையில் எதுவும் இல்லை’ என்னும் உயரிய வேதாந்தக் கருத்தை மனதில் ஆழப் பதிய வைப்பதாக அமையும். ‘இதுக்குத்தான் வள்ளுவர் ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ என்றாரோ என்று தத்துவ விசாரம் எல்லாம் உதிக்கும் தருணம் அது. பின்னாட்களில் ஷாம்பூ என்கிற அதியத்புத வஸ்து அன்னாட்களில் இல்லை. இருந்தாலும் அவற்றை நடிகைகள் மட்டுமே உபயோகிப்பர் என்கிற எண்ணம் இருந்தது என்று நினைக்கிறேன்.
எண்ணெய் தேய்க்கும் யுத்த நாழிகை முடிந்து, அரை கிலோ மீட்டர் ஓடிய ராமுவைப் போல் மூச்சு வாங்கி, உடம்பெல்லாம் ஓய்ந்து அமர்ந்தவுடன் அம்மாகையால் ‘ஶ்ரீராம் சாத்துமுது சாதம்’ என்னும் அமுதத்தை நினைத்தால் மீண்டும் இன்னொரு எண்ணெய்ப் படலத்திற்குத் தயாராக மனம் விழையும்.
அதிலும் ஒரு வில்லங்கமாய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் உருளைக்கிழங்கு பண்ணக்கூடாது என்று அன்னாளைய மங்கையர் மலரில் யாரோ வில்லி மாமி எழுதியதை வாசித்திருந்த பாட்டி, சரியாக எண்ணெய் தேய்க்கும் சனிக்கிழமைகளில் ஞாபகமூட்டி அன்று உருளைக்கிழங்கிற்கு வேட்டு வைத்தாள். பின்னர் அதுவே நடைமுறை ஆனது. ‘உருளைக்கிழங்கு பண்றயானா எண்ணெய் தேய்ச்சுக்கறேன்’ என்ற அமைதி ஒப்பந்தங்கள் பலிக்கவில்லை. வெட்டும் முன் ஆட்டைக் கேட்டா வெட்டுகிறார்கள்? எண்ணெய் தேய்ப்பதும் அப்படித்தான்.
‘ஶ்ரீராம் சாத்துமுது’ - பின்குறிப்பு வரைக:
‘சீரகம் மிளகு சாற்றமுது’ என்று பழைய காலத்தில் துவங்கி, அன்னியப் படையெடுப்பில் ‘சீராமொளகு சாத்துந்து’ வாகி, நெய்வேலியில் ‘ஶ்ரீராம் சாத்துமுது’ என்று எங்கள் விட்டில் அழைக்கப்பட்ட வஸ்து ‘சீரக மிளகு ரஸம்’ என்று தற்போது பொது ஜனங்களால் அழைக்கப்படுவதாகும்.
ஆனால், இந்த எண்ணெய் தேய்த்துக் கொல்லும் படலம் சில ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவில்லை. காரணம் டாக்டர். கிருஷ்ணன்.. ‘பையனுக்கு சைனஸ் ப்ராப்ளம் இருக்கு. அது சரியாகற வரைக்கும் கொஞ்ச நாளைக்கி எண்ணெய் தேச்சுக் குளிக்க வேண்டாம்’ என்றார்.
இன்று வரை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில்லை.
டாக்டர்.கிருஷ்ணன் - நீவிர் இன்னுமொரு நூற்றாண்டிரும்.😂
No comments:
Post a Comment