Friday, August 21, 2020

ரகஸியம்

ரகஸியம்

(season 3 again) #ganeshamarkalam

இந்த சிதம்பரத்துக்காரா கிட்டே சித்தே ஜாக்கிரதையா இருந்துடறது நல்லது. அழுத்தமான மனுஷா. எல்லாத்துலேயும் ரகஸியம். சீக்ரெஸி. ஒரு வெளிப்படைத் தன்மை இல்லை. நெறுங்கிப் பழக முடியாது.

ஆனா பாருங்கோ என் நெறுங்கிய சொந்தக்காரா பூரா அங்கேதான். சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதுன்னு போயிண்டும் வந்துண்டும் இருக்க வேண்டியிருக்கு. என்ன பண்ணட்டும். இல்லைன்னா நான் பாட்டுக்கு பாண்டிச்சேரி உண்டு, என் வேலையுண்டுன்னு தேமேன்னு கிடப்பேன். அவாளும் நான் வரேனேன்னு பர்த்திக்கு வந்துட்டுப் போரா. அதில் குறிப்பா என் மாமா பையன் ரகு பாண்டிச்சேரி வந்துட்டு போரத்துக்கு இன்னொரு நல்ல காரணமும் இருக்கு. இங்கேதான் ஈஸியா தண்ணீ கிடைக்கும். வந்தான்னா ஒரு மாசம் தாங்கரா மாதிரி ஸ்டாக் வாங்கிண்டு போவன்.

இவன் குடிப்பது எங்களில் பலருக்கு தெரிஞ்ச விஷயம். ரகஸியமில்லை. அவாத்தில் மட்டும் யாருக்கும் தெரியாது. “மை சன்” அப்படீன்னு மாமாவும் மாமியும் அவனை தாங்கோ தாங்குன்னு தாங்குவா!

“சொந்த பந்தங்களை அரவணைச்சுப் போணம், அப்போதான் கல்யாணம் கார்த்தீன்னா வருவா, வந்தாத்தான் ஃபங்க்ஷன் சிறக்கும்”னு என் ஆத்துக்காரி ஆர்க்யூ பண்ணுவா. சுந்தரிக்கு இளகிய மனசு. என்னைக் கல்யாணம் செஞ்சுண்டு வந்தன்னைக்கே புரிஞ்சிண்டேன். நாமக்கல்லில் கல்யாணம் நடந்தது. வெய்யல் தகிக்கர சீசன். சாந்தி முஹூர்த்தத்தின்போது “என்ன இது நமக்கு மட்டும் ஏஸி போட்டிருக்கு, சத்திரத்தில் எத்தனை பேர் கஷ்டப்பட்டுண்டு வெக்கையில் தூங்கரா, வேணும்னா இன்னும் சிலரை இங்கேயே கட்டில் கிட்டே வந்து படுத்துக்கச் சொல்லலாமா?” என்னை கேட்டா. இவள் வெகுளியா, இல்லை விளையாடராளா, என்னை புது மாப்பிள்ளைன்னுகூட மதிக்காமா லந்து பண்ணராளா, இல்லை முதல் ராத்திரி அன்னைக்கு என்ன பண்ணப்போரோம்னு தெரியலையா? குழம்பினேன். இப்போதைக்கு “இளகிய மனசு”ன்னு வச்சுக்கலாம்னு பட்டது. அன்னைக்கு ஒண்ணும் சாதிச்சுக்க முடியலை.

இவளுக்கு அப்புரமா விவரங்கள் கத்துக்கொடுத்து தாம்பத்யம் செஞ்சு ஒருவழியா ஒரு பொண்ணையும் பெத்துண்டதை எழுத ஆரம்பிச்சா ஒரு குறுநாவலா பரிமளிக்கும். 18+ இருக்கிர திண்ணை மெம்பர்ஸ் மட்டும் படிக்கலாம். அது இப்போ வேண்டாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலிலேயே ரகஸியமாம். அந்த ரகஸியத்தை புரிஞ்சுண்டா நமக்கு எல்லாமே விளங்கிடும். இது யூட்யூப் பாத்து தெரிஞ்சுக்கர விஷயமில்லை. ஆழ்ந்து அனுபவிச்சு புரிஞ்சுக்கர ஆன்மீக ரகஸியம். ஆனா, அங்கே ஆரம்பிச்சு சிதம்பரத்தில் எல்லாராத்துலேயும் ஏதாவது ஒரு சீக்ரெட் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. அடுத்த வாரம் போரச்சே கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்கணும். அது என்னமோ தெரியலை இன்னொருத்தர் ஆத்தில் இருக்கும் ரகஸியங்களை தெரிஞ்சுக்கரதில் ஆர்வம் கொப்பளிச்சிண்டு வரதே.

இதுலே வேடிக்கை என்னன்னா, ரகஸியங்கள் காப்பாத்தப் படணும். விழயம் வெளீலே தெரிஞ்சுடுத்துன்னா அது அப்புரம் ரகஸியமா இருக்காதே! இருந்தாலும் சிலர் தங்களுக்கு தெரியும், கண்டு பிடிச்சுட்டோம்னு பினாத்திண்டு திரிவா. அது அவா பீராப்ளம்.

“ஏன்னா, நாம எப்போ சிதம்பரம் போரோம்?” சுந்தரி கேட்டா. “ஆபீஸில் லீவுக்குச் சொல்லியிருக்கேன், நாளைக்குத் தெரியும், சித்தே பொறுமையா இருடீ!” “ராமகிருஷ்ணன், நீங்க அடிக்கடி லீவெடுப்பது நன்னாயில்லைன்னும், நாளைக்கு வந்து பேசுங்கோ, பாக்கலாம்.” மானேஜர் சொன்னது எனக்குத்தான் தெரியும். சொன்னா இவள் லீவு கிடைக்கலைன்னு முடிவுக்கு வந்துடுவா. பொண் ஜிப்மெரில் படிக்கரா, அவள் இங்கேயே இருக்கட்டும். வயசுப்பொண்ணை அழைச்சிண்டு போய் எல்லா விசேஷங்கள்லேயும் காமிச்சுட்டு வரணுமா என்ன? நாங்க போரது ஒரு சீமந்தத்துக்கு. என் மாமாவோட மச்சினன் பையனுக்கு. அதாவது ட்ரிங்க்ஸ் வாங்க பாண்டி வருவான்னு சொன்னேனே, என் மாமா பையன் ரகு, அவனோட மாமா பையனுக்கு சீமந்தம்.

போயிட்டு அன்னைக்கு ராத்திரி அங்கேயே தங்கிட்டு, கார்த்தாலே நடராஜரையும், தில்லைக் காளி அம்மனையும் தரிசனம் செஞ்சுட்டு வரலாம்னு பிளான். பஸ்ஸில் போக ஒண்ணரை மணிநேரம் ஆரது. எனக்கு சித்தே இந்த பஸ் பிரயாணம் ஒத்துக்கலை. இதே சீமந்தம் இன்னும் தள்ளி, மாயவரம், கும்மோணம்னு வச்சிருந்தாள்னா விடு கழுதை வேண்டாம்னு இருந்திருப்பேன். சுந்தரி அப்படி இல்லை. போலாமான்னா, புடவையை மாத்திண்டு வந்து நிப்பள். எங்காத்து மனுஷா கிட்டேயே அத்தனை ஒட்டுதல்னா மத்ததை புரிஞ்சுக்கணும். அவாத்து ஜனம், இன்னும் பெரீய கும்பல். கரூர், திருச்சி பக்கம்.

சிதம்பரத்துலேந்து திரும்பி வந்ததும் அங்கேயும் ஒரு நடை போயிட்டு வந்துடலாம்பள். இப்போவே ஏதாவது நல்ல எக்ஸ்க்யூஸ் யோசிச்சு வச்சுக்கணும். “நான் வரமுடியலை, நீ போய்க்கோ”ன்னு சொல்ல.

நேர மாமாவாத்தில் போய் இறங்கியாச்சு. அடிக்கடி வரதுனாலே வழக்கமா அவா எனக்குன்னு ஒதுக்கின மூலையில் பொட்டியை வச்சுட்டு, சுவாதீனமா மித்தத்தில் கால் அலம்பிண்டு, மாமி காபி போட்டுத்தாங்கோன்னு அடுக்களைக்குள் நுழைஞ்சாச்சு. வடக்குப் புதுத்தெருவில் இவாம். கிழக்கு வீதியில் சரவணா கல்யாண மண்டபத்தில் சீமந்தம் வச்சிருக்கா. விடிகாலை எழுந்து போயிக்கலாம்தான். பரிஜாரகன் மட்டும் ராத்திரியே போய் ஏற்பாடெல்லாம் பாத்துப்பானாம். காபியைக் கொடுத்த மாமி, “நீ வேணா ராத்திரியே போய்க்கோ, அங்கே ரூம் வசதியா வச்சிருக்கான்னு ஆசை காட்டினா. மாமா பையன் ரகு “நீயும் வாரும், நாங்கெல்லாம் ராத்திரியே போரோம்.” சொல்லிக் கூட்டிண்டு கிளம்பினான். “நான் ஆத்துலேயே குளிச்சுட்டு கார்த்தாலே வந்துடரேன்.” சுந்தரி சொல்லிட்டா.

ரகு கையில் சின்னதா மாத்துத்துணிப்பை எடுத்து தோளில் மாட்டிண்டான். களங்க்னு கண்ணாடி முட்டிக்கரா மாதிரி சத்தம் கேட்டதும் அந்த சத்தத்தை நான் கவனிச்சுட்டேன்னு என்னை பார்த்து நாக்கால் “உளலாயீ”ன்னு சொல்ல நான் புரிஞ்சிண்டேன். எனக்குத் தெரியும் அவன் போனவாட்டி பாண்டி வந்தப்போ வாங்கிண்டு வந்த ஸ்டாக் இன்னும் தீந்திருக்காதுன்னு.

11 மணிக்கு மண்டபத்துக்கு வந்தாச்சு. மாடில்லே 8 ரூம்ஸ். அதில் எங்களொடதைத் தொறந்து உள்ளே போய் கதவைச் சாத்தினதும் பாத்தா உள் கதவில் எழுதி ஒட்டியிருக்கா: “இங்கே மதுபானம் அருந்தக் கூடாது. மீறினால் வெளியேற்றப்படுவீர்கள்”. “சரியாத்தான் போட்டிருக்கான். ரகு ஜாக்கிரதை!” வார்ன் செஞ்சேன். “அதெல்லாம் அப்படித்தான் போட்டிருப்பான், ஒண்ணும் கவலைப்படத் தேவையில்லை. அப்படியே மாட்டிண்டாலும் வெளீலே போம்பான், அவ்ளோதானே? என் மாமா பையன் சீமந்தத்தை பாக்கலைன்னா ஒண்ணும் குடி முழுகீடாது”. தெளிவா இருக்கன். “ஏண்டா உன் ஆத்துக்காரி உன்னை கண்டிக்க மாட்டாளா?” “அவளுக்குத் தெரியாது, ரகஸியமா குடிக்கரேன்”. “அப்படீன்னா போன மாசம் வாங்கிண்டு வந்ததை இப்போதான் தொறக்கராயோ?” “அமாம், எப்படா சீமந்தக் கல்யாணம் நிச்சயம் பண்ணுவா, இப்படி நிம்மதியா குடிக்க தனிமை கிடைக்கும்னு காத்துண்டிருந்தேன்”.

சரியாப் போச்சுன்னு நினெச்சேன். இவனோட ஜமா சேர்ந்துண்டு வந்தது இன்னும் 3 பேர். மாமாவோட தூரத்து உறவு, கடலூரில் இருக்கர், சக்ரபாணி, சோமபான பிரியர். குடிக்கவே இன்னும் ஆரம்பிக்கலை இப்பவே ஆர்வத்தில் கண் சிவந்துப்போய். அப்புரம் ரகுவோட பால்ய சிநேகிதனாம், கிருஷ்ணமூர்த்தி இவன் கல்யாணத்தில் பார்த்திருக்கேன். அவன்தான் ஸ்னேக்ஸுக்கு இன்சார்ஜாம். தனியா ரெண்டு பாக்கெட் மிக்சரும் நேந்திரங்காய் சிப்ஸும் வச்சிருக்கேன்னு சொல்ரான். அப்புரம் ராஜா, யாருக்கு சீமந்தமோ அவனோட மச்சினன். சரிதான் பொண்ணாத்துலேந்தும் பார்டிசிபேஷன்னு நினெச்சேன். இந்த கூட்டத்தில் நான் என்ன செய்யரேன்? ரகு பாண்டிச்சேரியில் கடைக்குப் போனப்போ நான்தான் ஸ்கூட்டரில் அழைச்சிண்டு போய் தெருமுனையில் இறக்கிவிட்டுட்டு இவன் வாங்கிண்டு வர வரைக்கும் தள்ளி எதுவும் தெரியாத மாதிரி நின்னிண்டிருந்தவன். அப்புரம் வாங்கிண்டு வந்ததை சேஃபா பங்கிடு பண்ணி அவன் பையில் உடைஞ்சுடாம வச்சுக்கர வரைக்கும் என் ஆத்துக்காரிக்கு தெரிஞ்சுடப் பிடாதுன்னு அவளொட பெச்சுக்கொடுத்து டைவெர்ட் செஞ்சு உதவினவன்.

எனக்கு குடிக்கர பழக்கம் கிடையாது. ஆனால் இன்னைக்கு ஒரு மாதிரி, இவாளொட வந்தது தப்போன்னும் இன்னைக்கு எனக்கும் ஊத்திக்கொடுக்க மாட்டாளான்னு லேசா கடுகத்தனை எதிர்பார்ப்பு நெஞ்சோரத்தில் வந்து ஒட்டிண்டது வாஸ்த்தவம். இவாள்லாம் ஒரு ரவுண்ட் போட்டப்புரம், தள்ளி சுவத்தில் சாஞ்சிண்டு ஆனந்தவிகடன் படிச்சிண்டிருந்தவன் மொள்ள “அந்த சிப்ஸ் எனக்கும் தா”ன்னு வாங்கி மெல்ல ஆரம்பிக்கவே, அந்த ராஜாதான் ஒரு கிளாஸ் எனக்குன்னு ரொப்பி எங்கிட்டே நகத்தி வைக்கரான்.

வாயில் போட்ட ஒரே ஒரு நேந்திரங்காய் விள்ளலை எத்தனை நேரம் மெல்ரது. இன்னொண்ணு எட்டுத்துக்கலாம்னு கையை நீட்டப்போக, அந்த கிளாசை எடுத்துண்டுட்டேன்.

நீங்கெல்லாம் நான் பெரீய மஹாபாதகமான தப்பு செஞ்சுட்டாப் போலேயும், எனக்கு நரகம்தான்னும் தீர்மானம் செஞ்சுடலாம். ஆனா அப்போ எனக்குத் தோணித்து ரொம்ப நாள் முன்னாடி எலிமென்டரி ஸ்கூலில் படிச்சது. “களவும் கற்று மற!” இன்னைக்கு கத்துண்டுட்டு நாளைக்கு மறந்துடலாம்னு சமாதனமானேன்.

“இந்த மாதிரி குடும்பத்துக்குள் குடிக்கரச்சே சும்மா உம்முன்னு குடிக்கப்பிடாது வாங்கோ எங்ககிட்டே உக்காந்துண்டு எங்களோட வம்பில் சேர்ந்துக்கோங்கோ!” சக்ரபாணி கூப்பிட கிட்டக்கே போயிட்டேன். அன்னைக்கு நாங்க நாலு பேரும் பேசின சப்ஜெக்ட், யூஸ் செஞ்ச வார்த்தைகளை கதையில் அப்படியே விவரிச்சா திண்ணையில் படிக்கரவா என்னை ஏறி மிதிப்பா. சுருக்கமா சொல்லணும்னா கல்யாண மண்டபமே நாறித்து. மணி 2க்கு தூங்கப்போனோம்.

கார்த்தாலே பரிஜாரகன் சொல்லி வச்சா மாதிரி யாரும் சொந்தக்காரா வரத்துக்கு மின்னாடி வந்து கதவைத் தட்டி எழுப்பி விட்டுட்டுப் போனான். டக்குன்னு எழுந்துண்டு போர்வை தலைகாணியெல்லாம் தட்டி மடிச்சு ரூமை க்ளீன் செஞ்சு, பாட்டில் டம்ப்ளர் எல்லாத்தையும் கொண்டு போய் குப்பையில் வச்சுட்டு பல் தேச்சு குளிச்சுட்டு உக்காந்துண்டோம். வேஷ்டி உடுத்திண்டு சாத்வீகமா நெத்திக்கு இட்டுண்டு உள்ளே வரச்சே எங்களை பார்த்தவா யாரும் ராத்திரி நாங்க அடிச்ச கொட்டத்தை கெஸ் பண்ண முடியாது.

முதல்ல வந்த இன்னோவாலேந்து என் ஆத்துக்காரி இறங்கினா. பின்னாடியே சொச்ச பேர் ரெண்டு 16 சீட்டர் வேனில். சாஸ்த்ரிகளும் வந்ததும் மண்டபம் களை கட்டித்து. என் ஆத்துக்காரியைப் பாத்ததுமே எனக்கு லேசா தலை வலி ஆரம்பிச்சா மாதிரி பட்டது. என்னதான் ஆனாலும் நேத்து குடிச்சது அவளுக்குத் தெரியப்பிடாது. இனிமேல் இந்த ட்ரிங்க்ஸ் பக்கம் போப்பிடாது. வயசுக்கு வந்த பொண் டாக்டருக்கு படிக்க நமக்கு இத்தனை நாள் கழிச்சு இந்த வயசில் இந்த கருமாந்திர பழக்கம் தேவையா? இனிமேல் ரகு பாண்டிச்சேரி வந்தாலும் உன் காரியத்தை நீயே பாத்துக்கோடான்னு சொல்லிடணும். அவனுக்கு வைன் ஷப்புக்கு லிஃப்ட் தரது கூடவே கூடாது.

ஃபங்க்ஷண் நல்லபடியா முடிய, சாயங்காலமே கோவிலுக்குப் போனம். கோவிந்தராஜ பெருமாளைப் பாத்து சேவிச்சுண்டு பிரதக்ஷணமா வரச்சே “சிதம்பர ரகஸியம்னு சொல்ராளே அது உங்களுக்கு தெரியுமா?” சுந்தரி மொள்ள கேக்கரா. இதை நடராஜர் சன்னிதியில் நிக்கரச்சேதானே கேக்கணும். “வா, அந்தண்டை இருக்கு, நடை தொறந்து மேலே ஏறிப்போக அனுமதிச்சா குருக்களை காமிக்கச் சொல்ரேன்.” சட்டையை கழட்டிண்டேன்.

“நான் அதைச் சொல்லலை. எனக்குத் தெரிஞ்ச ரகஸியம் ஒண்ணு உங்களுக்கும் தெரியுமான்னு கேட்டேன்? அப்படியா என்ன, சொல்லேன்?” “வாங்கோ சொல்ரேன். தன் தலையில் ஆசீர்வாதம் செய்யரா மாதிரி என் வலது கையை பிடிச்சு வச்சிண்டா. “இனிமேல் ட்ரிங்க்ஸை தொட மாட்டேன்னு நடராஜர் மின்னாடி சத்தியம் செய்யுங்கோ!” அதிர்ந்துதான் போயிட்டேன்.

சத்தியம் செஞ்சேன்னும் அதுக்கப்புரம் தப்பு செய்யலைன்னும் சொல்லவா வேணும். நான் குடிச்சது இவளுக்கு எப்படி தெரிஞ்சதுன்னு இன்னி வரைக்கும் ரகசியமா வச்சிண்டிருக்கா. அன்னைக்கு அவள் சத்தியம் செய்னு சொல்ரப்போ அவள் முகம் அத்தனை தீர்மானமா, இவன் கெட்டுப் போயிடப்பிடாதுன்னு அத்தனை இளகிய மனசை பிரதிபலிச்சுண்டு சாந்திமுஹூர்த்தம் நடந்த அன்னைக்கு எப்படி இவள் மூஞ்சி இருந்ததோ அப்படியே காட்சி தந்தது இன்னும் மனசை விட்டு அகலலை.

No comments:

Post a Comment