80. மாவடு (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
நான் இருப்பது இன்னைக்கு வண்டீலே வந்திறங்கிய மூட்டையில். அப்படியே இதை மூலையில் சாச்சு வச்சுட்டு மத்த மூட்டைகைளை பிரிச்சு கூடைகளில் கொட்டி கடைக்கு முன்னாடி வைக்கரான். சித்தே போனா வியாபாரம் களை கட்டிடும்.
மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கி, ஒவர் ப்ரிட்ஜ்லேந்து ரங்கநாதன் தெருப்பக்கம் வரணும். இறங்கினா சோத்துக் கைப் பக்கம் காய்கறி மார்க்கெட். குருடா இருந்தாலொழிய மிஸ் பண்ண மாட்டேள். இப்பவே கூட்டம். 12 மணிவாக்கில் கிராமங்கள்லேந்தும் கோயம்பேடு மார்க்கெட்லேந்தும் ட்ரக்கில் வந்து ஹோல்சேலா காய் இறங்கும். அப்போ ஜன நடமாட்டமும் சேர்ந்துண்டு, ஆம்பிளை பொம்பளைன்னு பாக்காம மூட்டை தூக்கரவன் வழி விடலைன்னா இடிச்சுட்டு திட்டிட்டும் போவன்.
இங்கே எல்லாமே சீப்பு. கூர் போட்டும் விப்பா.
சீசனாச்சோன்னோ, மாவடு வந்தாச்சு. ஆத்தில் வருஷாந்திர வடு மாங்காய் ஊறுகாய் போட்டுடணம்னு வெறி பிடிச்சா மாதிரி என்ன விலைன்னாலும் பெரீய பிராம்ணாக் கூட்டமே வந்து விழும். வரவா போரவா கடைக்காரனோட பேரம் பெசறது, தெருவில் நடந்து போரவா, பக்கத்துக் கடைகளையும் கவனிச்சிண்டிருந்தா சுவாரஸ்யமா பொழுது போகும். நான் இருந்த மூட்டையில் ஒரு சின்ன ஓட்டை. அது வழியா எல்லாம் தெரிஞ்சது.
ஒரு மாமி. ரெண்டு கட்டைப்பை உள்ளே இன்னொரு துணிப்பையும். மாமி வாங்கர சாமானை தூக்க பின்னாடி ஒரு மாமா. அவாத்து மாமாதான்! பின்னே? பக்காத்தாத்து மாமாவையா மாவடு வாங்க கூட்டிண்டு வருவா?
பாவம், 65 இருக்கும், வதங்க ஆரம்பிக்கர பெங்களூர் கத்திரிக்காய் மாதிரி முகம் சித்தே வாட ஆரம்பிச்சிருக்கு. அகண்ட நேத்தி. நல்ல படிப்போ!, பெரீய வேலையில் இருந்துட்டு ஓய்வு கிடெச்சிருக்கும். இப்போதைக்கு ஆத்துக்காரிக்கு சேவகம் செஞ்சுண்டு பொழுதைப் போக்கராரோ?. மாமி தன்னை நன்னாவே மெயின்டைன் செஞ்சு வச்சிருக்கா. தலை கருக்கு போகலை. டை அடிச்சுக்கலை. வைரத்தோடு, மூக்குத்தி. சிக்குன்னு. வரமஹாலக்ஷ்மியில் வாங்கின புடவை.
“அன்னைக்கு மாவடு தந்தாய், நன்னாவேயில்லை. உப்பில் ஊறரச்சேயே கருத்துப் போச்சு”. கம்ப்ளைன்ட். “நீங்க கிலோ 130க்கு வாங்கியிருப்பீங்க”. தீர்ப்பு சொல்லிட்டான். மாமி விடலை. “அன்னைக்கு 20ரூபாய்க்கு 200ரூவாய்த் தாளை தந்துட்டேன்னு நினைக்கரேன், நீயாவது பாத்து திருப்பியிருக்க வேண்டாமா?” “அப்படி நம்ப கடையில் நடக்காது மேடம், 20 வருஷமா வியாபாரம். யாரும் இப்படி சொல்லலை”. “சரி அது போகட்டும், இன்னைக்கு என்ன விலை?”
இவன் மூணு கூடையைக் காட்டி “130, 160 220” சொல்ரான். எனக்கே தெரிஞ்சதே, கம்மின்னா பழசு. அடிச்ச வெய்யலில் வதகியிருக்கும். அதை உப்பு கண்டம் போட்டு மிளகாய் அரைச்சு விட்டா அழுகிடும். 220 ரூபாய்னானே அது 3 நா மின்னாடி வந்தது. வடு காம்போட, கடுக்குன்னு. மாமி அதை வாங்கமாட்டா.
ஆனா சேம்பிள் காமீன்னு ரெண்டு வாங்கித் தின்னா. மாமாவுக்கு தரலை.
பின்னாடி சாச்சு வச்சிருந்த மூட்டையை காட்டரா. விரல் நுணி என்னைப் பாத்தது. “அந்த மூட்டையில் இருப்பது வேணும். விலை சொல்லு”. “உங்களுக்காக அதையே 220க்கு தரேன்”. 5 கிலோ வாங்கிண்டா. கட்டைப் பையில் போய்ச் சேர்ந்தேன். இந்த ஜன்மத்தில் இவாத்தில் வசிச்சுட்டு போய்ச் சேரணும். எங்கே இருக்காளோ? காசு தந்ததும் மாமா பையை வாங்கிண்டர். அவர் வலது தோள்பட்டை 3 இன்ச் சரிஞ்சது. இன்னும் என்னென்னவோ வாங்கிண்டு படீலே ஏறி தாம்பரம் போகும் ட்ரைனில் ஏறிண்டா. ரயில் அப்புரம் ஷேர் ஆட்டோ. குரோம்பேட்டையில் இவாத்துக்கு வந்தாச்சு.
அத்தனை காசு கொடுத்து வாங்கின எங்களை ஆத்துக்குள் நுழைஞ்சதும் கவனிக்கணும். “ஏன்னா? சித்தே மாவடுவை காம்பைக் கிள்ளிடாம நன்னா அலம்பி வெள்ளைத் துணியால் துடச்சு ஃபேனுக்கு அடீலே காமிச்சு அடுக்கில் போடுங்கோ, போய் கல்லுப்பு வாங்கிண்டு வரேன்.” “ஏன் அதையும் வழீலேயே செஞ்சிருக்கப் பிடாதா?” “பாவம், எத்தனைதான் தூக்குவேள்?” அவர் பதிலே பெசலை. ஆத்துக்காரிக்கு தன்மேல் எத்தனை கரிசனம்னு நினைக்கராரா, இல்லை இன்னும் வெளீலே சுத்திட்டு வர கல்லுப்பை சாக்கு வச்சிண்டு கிளம்பராளான்னு தெரியாம முழிக்கரர்?
மாமி கிளம்பிப் போனதும் எங்களை டைனிங்க் டேபிளில் கொட்டிட்டு லூக் விட்டர். அவர் மைண்ட் வாயிஸ் நன்னாவே கேட்டது. ஒவ்வொரு தடவையும் மாவடு பொடறேன்னு யாரோ சொன்னா இப்படி செஞ்சு பாக்கலாம்னு செஞ்சேன்னு பண்டங்களை குட்டிச்சுவரா ஆக்கிடுவள், அத்தனை காசும் வீண், இந்த வருஷம் என்ன களெபரம் செய்யப் போராளோன்னு தலையில் அடிச்சுக்கரர். எங்களை கிச்சன் சிங்குக்கு அழைச்சிண்டு போய் கொஞ்சமா எடுத்து வடிதட்டில் வச்சு செல்லமா குளுப்பாட்டி எடுத்து வைக்கரர். வாய் ஏதோ பாட்டை முணுமுணுத்தது.
மாமி இருந்தப்போ வெளிறிக்கிடந்த முகம் சித்தே பிரகாஸமாய்.
“வெள்ளைத் துணிக்கு எங்கேபோரது?” முணுமுணுத்துண்டே பீரோலேந்து மேல் அங்கவஸ்திரத்தை எடுத்து ஈரம் போகத் துடைக்கரர். கை வேகமா வேலை செஞ்சதே! மாமி வரத்துக்குள் முடிக்கணுமோ? இல்லைன்னா திட்டுவாளோ? எதிர்பாத்தாப்பலே கிடுகிடுன்னு உள்ளே நுழைஞ்ச மாமி “இன்னும் ஆகலையா என்ன?” வெய்யலில் ரெண்டுபேருமே அலைஞ்சுட்டு வந்திருக்கா. மாமா பாவம், இந்த வயசில் டிஹைட்ரேஷன் ரிஸ்க். சித்தே உக்கார விடப்பிடாதோ! விடலை.
இவா நடந்துக்கறதை வச்சு இவா தாம்பத்தியம் எப்படி சிறப்பா போயிண்டிருக்குன்னு லெசா ஹின்ட் கிடெச்சது. மாமா பெரீய வேலையில் அதுவும் ஓய்வுக்கு முன்னாடி 10 வருஷம் வெளியூர், வெளிநாடுன்னு ஹாய்யா சுத்திண்டிருந்திருப்பர். இப்போ போக்கிடமில்லாம மாமி கிட்டே வசம்மா மாட்டிண்டு. யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் வருமோனோ? இன்னும் 5 வருஷம், மனுஷன் கருவாடா ஆகப்போரர். நான் என்ன செய்ய முடியும்?
எங்களையெல்லாம் பெரீய ஜாடியில் கொட்டி, கல்லுப்பை தூசி போக சுத்தம் பண்ணி எங்க மேலே கொட்டிட்டா. வாசல்லே காத்தோட்டமா இருக்குன்னு போனவரை “அதுக்குள்ளே போய் போய் உக்காந்துண்டா எப்படி, நாளைக்கு தட்டில் பருப்பு வச்சதுமே மாவடு எங்கேன்னு கேக்க மட்டும் தெரியும்! இந்த ஜாடியை நன்னா 7 தடவை குலுக்கி விட்டுட்டு மூஞ்சி கைகால் அலம்பிண்டு வந்தா சூடா காபி கிடைக்கும்”.
அதாவது முதல்லே ஜாடியைக் குலுக்கணும். மூஞ்சி பாக்க சகிக்கலை, அலம்பிண்டு வந்தா காபி, இல்லைன்னா அதுவுமில்லைன்னு அர்த்தம்.
ஜாடி மேலே வெள்ளைத் துணியை கட்டினதும் ஆத்தில் நடப்பது எதுவும் தெரியலை. சரீன்னு நானும் என்கூட குரோம்பேட்டைக்கு வந்த மாவடுகள் எல்லாரும் தூங்கிட்டோம். உப்பு அப்பப்போ அரிக்க உடம்புக்குள்ளே லேசா கரிக்கரா மாதிரி ஃபீல்.
மறுநா கார்த்தாலே “கிருஷ்ணா நகரில் கம்யூனிடி சென்டரில் நாராயணீயம் படிக்கரோம்” மாமி கிளம்பினதும் வாசல்லே போய் மாமி 4 வீடு தள்ளிப் போரவரைக்கும் கவனமா பாத்துண்டிருந்துட்டு ஓடி வந்து ஜாடி வாயில் கட்டின துணியை விலக்கரர் மாமா. கண்களில் ஒரு பிரகாசம் டார்ச் லைட் மாதிரி எங்க மேலே அடிக்க, ரெண்டு நுணி விரலால் காம்பைப் பிடிக்க ஒட்டுக்க என் தோழர்கள் 3 பேர் அவர் கையோட கிளம்பிப் போனா. ஹாய்யா சோபாவில் உக்காந்துண்டு அனுபவிச்சு கடிச்சு மெல்லரர்.
கூட இருந்த 4 மாவடை பிடிச்சுக்கோன்னு சொல்லீட்டு அவா மேலே ஏறி ஜாடி விளிம்புலேந்து பாக்கரேன். டிவீயில் மோடியை அக்ஷய்குமார் பேட்டி எடுக்கரான். ஆனா மாமா கண் மூடிண்டு, நாக்கை சப்புக் கொட்டிண்டு. இந்த க்ஷணத்தில் உலகமே மறந்துபோய். எலெக்ஷன் ரிஸல்ட் என்னவானா என்னன்னு.
மூணு நாள் எங்களை ஊறவைப்பாளாம். அப்புரம் காரம் அரைச்சு விட்டுட்டு திரும்ப ஊறணும். மாமாவைப் பாத்தா அதுக்குள்ளே பாதி ஜாடியைக் காலி செஞ்சுடுவர் போலேருக்கு. இவர் கையில் அகப்பட்டுக்காம சித்தே ரெண்டு லேயர் கீழே போய் ஒளிஞ்சுக்கரேன். அதே சமயத்தில் இவாத்தில் பெசிக்கறதை காதில் விழரா மாதிரி வச்சிண்டு. எத்தனை நாள் இவாகிட்டேந்து தப்பிக்க முடியும். அதுவரைக்கும் இவாத்து தமாஷ் ஜாலியா பொழுதைப் போக்குமே!
ரெண்டு நா கழிச்சு மாமா “ஃபிக்ஸட் மெச்யூர் ஆரதுடீ, என்ட்ரீ போட்டூண்டு வந்துடரேன் எடுத்து வை, குளிச்சுட்டு கப்பு பேங்க் போணம்” “போயிட்டு வாங்கோ!” பெர்மிஷன் தந்தா. “வரச்சே சில மளிகை சாமானெல்லாம் வாங்கிண்டு வரணும்.” கட்டளை. மாமா குளிக்கரச்சே கோயமுத்தூருக்கு போன்.
அம்மாக்கு, “அரைச்சுவிடற சாமான் கணக்கு சொல்லு”. எத்தனை கிலோ மாவடு, காம்போடவா இல்லையா, சைஸ் என்ன, என்னைக்கு உப்பில் போட்டாய்? அம்மா கிராஸ் கொஸ்ச்சீன் செஞ்சுட்டு “எழுதிக்கோ!” இவ எழுதிக்கரா. “போன வருஷம் அளவு தப்பாச் சொல்லிட்டேண்டி, இப்போ சொன்னதுதான் சரி!” மாமா சொன்னது சரிதான், போன வருஷம் மாவடு அழுகினதுக்கு இவர் மாமியார்தான் காரணம்னு புரிஞ்சது. இந்தத் தடவை ஏதாவது ஆனாலும் மாமியார்தான். இதை எப்படி அவருக்கு தெரியப் படுத்தறது?
குளிச்சுட்டு வரத்துக்குள் இவள் சாமர்த்தியமா போனை வச்சுட்டு ஒண்ணுமே செய்யாத பூனை மாதிரி கொயட்டா சாஞ்சு உக்காந்துண்டா.
உள்ளே சமைக்கப் போக, மாமா பையை எடுத்துண்டு கிளம்பரர்.
அவர் வந்ததும், “இந்தத் தடவை நானே அரைச்சு விட்டுக்கரேன், நீங்க கை வைக்கவேண்டாம் கேட்டேளா?”. ஆஹா! போன வருஷம் இவரை அரைக்கச் சொன்னாளோ! அதுவும் ஒரு ட்ரிக்தான். நாளைக்கு மாவடு நன்னா இல்லைன்னா சுத்தபத்தமா அரைக்கலைன்னு சொல்லி அரைச்சவாளை குத்தம் சொல்லிட்டு போயிண்டே இருக்கலாம். சரியா வந்துடுத்துன்னா தன் கை மணம், எக்ஸ்பீரியன்ஸ். இல்லைன்னா ஜாடியை குலுக்கி விட்டவன், மாவடு வித்தவன், திரும்பி வரச்சே எலெக்ட்ரிக் ட்ரைனை ஓட்டிண்டு வந்த ட்ரைவெர் யாரை வேணும்னாலும் குத்தம் சொல்லலாம்.
ஒரு நாலு நா கழிச்சு ஜாடீலேந்து 30வடுவை எடுத்து சின்ன பாட்டிலில் போட்டு வாகா செர்வ் செய்ய டைனிங்க் டேபிளில் வச்சுட்டா. அதில் நானும். சரீ இன்னைக்கு நாம ஜன்மம் எடுத்ததோட பலன் இவ்வுலகுக்கு, குறிப்பா இந்த கஷ்டப்படும் பீராம்ணனுக்கு வீருந்தாகப் போரோம்னு மனசைத் தேத்திண்டு தோழர்களொட மிதந்திண்டிருக்கேன்.
“தாத்தா”ன்னு பெரீய சத்தம்!
வாசலில் கார்லேந்து இறங்கி இவர் பேரப் பசங்க ஓடி வரா. சாப்பிட உக்காந்தவர் எல்லாத்தையும் மறந்துட்டு ஓடிப்போய் ரெண்டு பசங்களையும் கவ்விக்கரர். முகத்தில் அத்தனை சந்தோஷம். இனிமேல் இவரைப் பிடிக்க முடியாது போலேருக்கு. “தாத்தா நாங்களும் உங்களொட இன்னைக்கு லன்ச். அம்மா A2Bலேந்து உனக்கு பாதாம் மில்க் வாங்கிண்டு வந்திருக்கா. பன்னீர் மட்டர் சப்ஜீ., ஃப்ரைட் ரைஸ் வா சாபிடலாம்.”
எல்லாரும் உக்காந்துக்க, “குழந்தைகளுக்கு மாவடு பிடிக்கும் முதல்ல அதைப் பொடு. அப்புரம் இவள் ஆத்துக்கு போரச்சே பெரீய பாட்டிலா ஒண்ணு எடுத்து மாவடு ரொப்பி கொடுத்தனுப்பு.” இவர் சொல்ல “அப்படியே செய்யரேன்.” மாமி ஆமோதிக்க, அட சில விஷயங்களில் ஒத்துமையா இருக்காளென்னு பட்டது. பெத்த குழந்தையும் அவள் பெத்த குழந்தைகளும் வந்திருக்கச்சே இவாளும் அத்தனை சௌஜன்யமா ஆகிட்டது பாக்க குளுகுளுப்பா, பரவசமா.
எல்லாரும் உக்காந்து மாமி சமைச்சதையும் வாங்கீண்டு வந்ததையும் ஒரு கை பாக்க, தயிர் சாதத்துக்கு வரத்துக்குள் நான் இருந்த பாட்டில் பாதி காலி. கடைசீயா இவர் கடைசீ பெரன் தட்டில் நான் போய்ச் சேர்ந்தேன். சமுத்து குழந்தை அவன். தாத்தான்னா உசிரு. என்னைக் கையில் எடுத்தவன் “உனக்கு வேணுமா தாத்தா?” இல்லைடா செல்லம், நீ எடுத்துக்கோ. நிறைய இருக்கு. வேணும்னா நான் ஜாடீலேந்து எடுத்துக்கரேன்”. “அப்படீன்னா சரீ”ன்னு என்னை கடிச்சுட்டான். இவன் என்னை விழுங்கரத்துக்குள் மாமி சொன்னது ஸ்பஷ்டமா காதில் கேட்டுத்து.
மாமி சொல்லிண்டிருக்கா. “வர சனிக்கிழமை மாம்பலம் திரும்பப் போணம்” “எதுக்கு?” மாமா கிலி பிடிச்சப்போலே கேக்கரர். “ஆவக்காய்க்கு மாங்கா வாங்கி அங்கேயே வெட்டி கொடுப்பான், எடுத்துண்டு வரணும். கனக்கும். நீங்களும் வந்தாத்தான் ஆச்சு.”
No comments:
Post a Comment